http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 110

இதழ் 110
[ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

பத்தாம் ஆண்டு நிறைவு
கதை 13 - எருக்காட்டூர் பெருந்தச்சன்
தோழி
Kudumiyanmalai - 4
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
சிக்கல் மாடக்கோயில்
தேடலில் தெறித்தவை - 15
ஆத்தி சூடிய சோழ வீரமே!
இதழ் எண். 110 > கலையும் ஆய்வும்
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
பெருமை மிக்க சோழர் வரலாற்றில் எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.

முதலாம் இராஜேந்திரசோழனால் வெளியிடப்பட்ட 'எசாலம் செப்பேடும்' முன்பு அக்கோயிலில் வழிபாட்டில் இருந்த செப்புத் திருமேனிகளும் இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணியின்போது (11-1-1987 அன்று) கிடைத்தன.



சோழர் வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் தமிழக வரலாறுக்கும் முக்கியச் சான்றாக விளங்கும் 'எசாலம் செப்பேடு' கிடைத்த இக்கோயில் பெருமைக்குரியதாய் விளங்குகிறது.

இருப்பிடம்

சென்னை - விழுப்புரம் சாலையில் திண்டிவனத்தை அடுத்து வீடூர் அணை அமைந்துள்ளது. அங்கிருந்து மேற்கே பேரணி, பெரிய தச்சூர் என்ற ஊர்களின் வழியே சென்றால் 6 கி.மீ தொலைவில் எசாலம் ஊர் அமைந்துள்ளது. மேலும் விழுப்புரம் - செஞ்சி செல்லும் சாலையில் நேமூர் என்ற ஊரிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவு பயணித்தாலும் இவ்வூரை அடையலாம்.



இருப்பிடப் பெருமை

இயற்கைச் சூழல் நிறைந்த எசாலம் ஊர் அருகே எண்ணாயிரம், பிரம்மதேசம் என்ற ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூர்களிலுள்ள திருக்கோயில்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும். மேலும் எசாலம் அருகில் மண்டகப்பட்டு, தளவானூர் என்ற ஊர்களில் பல்லவர்காலக் குடைவரைக் கோயில்களும் பல்லவர்காலக் கட்டடக்கலை, ஓவியக்கலைக்குச் சான்றாக விளங்கும் பனைமலை தாளகிரீசுவரர் கோயில் அமைந்து, தொன்மைச் சிறப்புமிக்க பகுதியாக விளங்குகிறது.

இராமநாதீசுவரர் திருக்கோயில்

ஊரின் நடுவே திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இன்று இராமநாதீசுவரர் திருக்கோயில் என்று அழைக்கப்பெற்றாலும் கல்வெட்டுகளில் இக்கோயில் "திருவிராமீசுவரமுடைய மகாதேவர் கோயில்" என்றே குறிப்பிடப்படுகிறது. அதேபோன்று 'எசாலம்' என்று இன்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் "எய்தார்" எனவும் "எதார்" எனவும் குறிக்கப்படுவதைக் காணலாம். "ஜெயங்கொண்ட சோழமண்டலத்துப் பனையூர் நாட்டுத் தனியூர்" என்று இவ்வூர் சிறப்புப் பெற்று விளங்கியிருக்கிறது. மேலும் இவ்வூர், "ஶ்ரீராஜராஜசதுர்வேதி மங்கலம்" எனவும் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படும் முதலாம் இராஜேந்திரசோழன், இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்துக் கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றதையும் போற்றிப் பராமரிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. இனிக் கோயிலைக் காண்போம்!



திருக்கோயில் நுழைவுவாயிலின் மேல் கயிலையில் இறைவன் இறைவியுடன் அமர்ந்திருக்கும் கோலத்தில் சுதைச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய முகப்புக்கு அது அழகு செய்கிறது.



திருக்கோயில் ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. மேலும் கருவறை, அர்த்தமண்டபம், அம்மன் சந்நிதி, முகமண்டபம் மற்றும் பரிவார ஆலயங்களுடன் அமைந்துள்ளது. கோயிலின் வடகிழக்கு மூலையில் தலவிருட்சமாகப் பனைமரம் காணப்படுகிறது.

கருவறை

கருவறை விமானம் முழுவதும் கற்களாலேயே அமைந்து கற்றளியாகக் காட்சி தருகிறது. கருவறையில் இலிங்க வடிவில் இராமநாதீசுவரர் காட்சி தருகிறார். மேலும் கருவறை, உபபீடம், அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், சிகரம், ஸ்தூபி என்ற கட்டடக்கலை அமைப்பினைக் கொண்டு காட்சியளிக்கிறது. விமானம் ஒருதள விமானமாக வட்ட வடிவமாக அமைந்துள்ளது. கிரீவக் கோட்டத்தின் நான்கு திசைகளில், தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் மேற்கில் அமர்ந்த நிலையில் திருமாலும், வடக்கில் நான்முகனும், கிழக்கில் இந்திரன் வடிவத்தையும் காணலாம். கிரீவக் கோட்டத்தின் மேல் உள்ள நாசிக்கூடுகளில் தெற்கில் ஆடவல்லாம், மேற்கில் யோகநரசிம்மர், வடக்கில் நான்முகன், கிழக்கில் உமாசகிதமூர்த்தியின் வடிவங்களைக் காணமுடிகிறது. விமானத்தின் மேலே உச்சிப்பகுதியில் மகாபத்மம் விரிந்த தாமரை மலராக அழகு செய்யும் அற்புதச் சிற்ப வேலைப்பாட்டினைக் காணலாம். அதற்கு மேலே உள்ள கலசம் செம்பினால் ஆனது.



கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், நான்முகன், துர்க்கை ஆகிய தெய்வவடிவங்களைக் கண்டு வழிபடலாம். தேவகோட்டங்களின் மேல் அமைந்துள்ள மகரதோரணம் சிற்ப வேலைப்பாடு இன்றிக் காணப்படுகிறது. கருவறையின் வலபிப் பகுதியில் காணப்படும் பூதகணங்களின் சிற்பவரிசை அழகுடன் காட்சி தருகிறது.

கருவறை அர்த்த மண்டபத்தூண்கள், உருளை வடிவத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் சோழர்காலக் கலைப்படைப்பாய் மிளிர்கின்றன. அர்த்தமண்டப நுழைவு வாயிலில் அமைந்துள்ள துவாரபாலகர்களின் சிற்பங்கள் சோழர்காலச் சிற்பச் செழுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.



இதனை அடுத்து மகாமண்டபம் 16 தூண்களுடன் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கற்சாளரம் அமைந்துள்ளது. சாளரத்தின் சட்டத்தில் நடனமாடும் கலைஞர்கள் இருவரும், மத்தளம் கொட்டும் இருவரும் சிற்பவேலைப்பாடுகளில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் தைமாதம் முதல்நாள் சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த ஜன்னல் வழியே பரவி இறைவன்மீது படிவதைக் காணலாம்.



மகாமண்டபம் முன்பாக நந்தியெம்பெருமானின் மண்டபமும் அதனை அடுத்து அழகிய சிற்பவேலைப்பாடு மிக்க பலிபீடமும் அமைந்துள்ளது. உபானம், பத்மவரி, ஜகதி, விருத்தகுமுதம், கண்டம், கபோதம், பூமிதேசம் ஆகிய கட்டடக்கலை உறுப்புகள் கொண்டு விரிந்த தாமரையின் மேல் அமைந்து கலையழகுடன் பலிபீடம் காட்சி தருகிறது. இதன் கண்டப்பகுதியில் (கழுத்து) சங்கு ஊதும் பூதகணங்கள் நான்கு திசைகளிலும் காட்சி தருகின்றன.

கருவறைக் கூரையின்மேல் நான்கு மூலைகளிலும் நான்கு நந்திகள் சிற்பங்களாக அழகு செய்கின்றன. அர்த்த மண்டபக் கூரையின் மேற்பகுதியில் விளிம்பில் இரு பூதகணங்கள் தவழ்ந்த நிலையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் கூரையில் தேங்கும் மழைநீர், பூதகணத்தின் வாய்வழியே வெளியேறும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடு அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இதேபோன்று பூதகணத்தின் வாய்வழியே நீர் வரும் வழியாகக் கோமுகம், தாராசுரம் அம்மன் கோயிலிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறிய கோயிலானாலும் அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்கதாக எசாலம் கோயில் விளங்குகிறது.

அம்மன் சந்நிதி

இக்கோயிலின் மகாமண்டபத்தின் வடதிசையில் தெற்குநோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி திரிபுரசுந்தரி என்ற பெயர்கொண்டு அருள்புரிகிறார். தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத முத்திரை தாங்கியும் அருள் வழங்கும் அற்புதக் கோலத்தைக் கண்டு தரிசிக்கலாம்.

இறைவன் - இறைவி சந்நிதிகளுக்குச் செல்லப் படிகள், மகாமண்டபத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. இதற்கு அருகேதான் தென்கிழக்குப் பகுதியில் சோழர்காலச் செப்பேடும் செப்புத் திருமேனிகளும் பூமிக்கடியிலிருந்து கிடைக்கப்பெற்றன. இச்செய்தியை அங்குச் சுவரில் எழுதி வைத்திருப்பதையும் காணமுடிகிறது.

எசாலம் செப்பேடு

எசாலம் திருக்கோயிலை இராஜேந்திரசோழனின் குருவான சர்வசிவ பண்டிதர் என்பவர் எடுப்பித்தார். இக்கோயிலுக்கு விக்கிரமசோழநல்லூர் என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டது. நிலதானம் அளித்த செய்தியை விரிவாக, துல்லியமாகக் குறிப்பிட்டாலும் அதில் காணப்படும் வரலாற்று, சமூகச் செய்திகள் தமிழக வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் அரிய சான்றாக இச்செப்பேடு அமைகிறது.

இச்செப்பேடு முதலாம் இராஜேந்திரசோழனால் வெளியிடப்பட்டதாகும். இதில் 15 இதழ்கள் (பக்கங்கள்) உள்ளன. அவை ஒரு வளையத்தில் கோக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழமன்னரின் அரசமுத்திரை காணப்படுகிறது. முத்திரையின் விளிம்பில்,

"ராஜத்ராஜஸ்ய மகுடஸ்ரேணிரத்னேஷுஸாஸனம்
ஏதத் ராஜேந்திர சோளஸ்ய பரகேசரிவர்ம்மனஹ"


என்று கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அரசர்களின் திருமுடிவரிசைகளின் ரத்தினங்களில் திகழ்வதான இது பரகேசரிவர்மனான இராஜேந்திரசோழனின் சாசனம் என்பது பொருள் ஆகும்.



செப்பேட்டில், முதல் நான்கு இதழ்களில் (ஏடுகளில்) வடமொழியிலும் மீதம் உள்ள 11 ஏடுகளில் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இது இராஜேந்திரசோழனின் 25-வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளதால் இதன் காலம் கி.பி. 1036-37 ஆண்டு எனக்கொள்ளலாம். வடமொழி சுலோகங்களை (கவிதைகளை) எழுதித் தந்தவர் நாராயணக்கவி என்ற வடமொழி வித்தகர் ஆவார். இவரே திருவாலங்காடு, கரந்தைச் செப்பேடுகளில் காணப்படும் வடமொழிப் பகுதிகளையும் எழுதித் தந்தவர் ஆவார். இச்செப்பேட்டில் செய்திகளைப் பொறித்தவர் உலகளந்த சோழ ஆச்சாரி என்பவர் ஆவார்.

வடமொழிப் பகுதியில் சோழ அரசர்களின் மரபுப் பட்டியல் காணப்படுகிறது. சங்ககாலச் சோழமன்னர்களில் கரிகாலச்சோழன் இடம்பெற்றுள்ளான். பிற்காலச் சோழர்களில் விஜயாலயன், ஆதித்தன், முதலாம் பராந்தகன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன், ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜராஜன், மதுராந்தகன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற முதலாம் இராஜேந்திரசோழன் ஆகியோரது பெயர்கள் காணப்படுகின்றன.

இராஜேந்திரசோழனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது பகீரதன் ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல் கங்கைநீரைச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்து பேரேரியை உருவாக்கியதுடன் (சோழகங்கம்) கங்கைகொண்ட சோழபுரியையும் உருவாக்கினான். சிவபெருமானுக்குப் பெரிய கோயிலையும் இராஜேந்திரன் கட்டினான் எனக் குறிப்பிடுவதால் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை இராஜேந்திரசோழன் எடுப்பித்தான் என்பது உறுதியாகிறது. இதற்கு எசாலம் செப்பேடு பெரிதும் உதவுகிறது.

சர்வசிவபண்டிதர்

இராஜேந்திரசோழனின் குருவான சர்வசிவபண்டிதரால் கட்டப்பட்டது எசாலம் திருக்கோயில்! இக்கோயிலில் கிடைத்த செப்புத் திருமேனிகளில் ஒன்று துறவிக்கோலத்தில் ஓர் அடியவர் திருமேனியாகும். அவரது வலக்கரம் சின்முத்திரை காட்டி உபதேசிக்கும் நிலையில் அமைந்துள்ளது. இடது தோளிலிருந்து கீழ்வயிற்றை நோக்கி முப்புரிநூல் உள்ளது. மழித்த தலையில் உச்சிக்குடுமி சேர்ந்த தலையலங்காரம் அணி செய்கிறது. இடக்கரம் சிம்மகரண முத்திரையில் அமைந்துள்ளது. அமைதியான முகப்பொலிவும் அருள் பொங்கும் கண்களின் அமைப்பும் கொண்ட இத்திருமேனி இராஜேந்திரசோழனுடைய குருவான சர்வசிவபண்டிதராக இருக்க வாய்ப்புள்ளது. சிற்பத்தின் கீழே கல்வெட்டுப் பொறிப்பு எதுவும் காணப்படவில்லையாதலால் இதனை உறுதி செய்ய இயலவில்லை.



சோழர் வரலாற்றை அறிந்து கொள்ள அரிய எசாலம் செப்பேட்டினைத் தந்த கோயிலாகவும் சோழர்காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கும் எசாலம் திருவிராமீசுவரர் திருக்கோயிலைக் கண்டு பெருமை கொள்வோம்! மகிழ்ச்சி அடைவோம்!

மேலும் படிக்க:

1. Middle Chola Temples - S.R. Balasubramaniam, Pages 147 to 163.
2. Bulletin De I'ecole Francaise - Tome LXXVI, Paris - 1987, Archaeological finds in south india - Esalam Bronzes and Copper Plates - Dr. R. Nagaswamy
3. Esalam Copper Plates - Collected Papers in Tamil Culture, PP 1-38, 1994.
4. எசாலம் வரலாற்றுப் புதையல் - மா.சந்திரமூர்த்தி, ச.கிருஷ்ணமூர்த்தி - 1995
5. தமிழ்நாட்டுச் செப்பேடுகள் - முதல் தொகுதி, ச.கிருஷ்ணமூர்த்தி
6. கல்வெட்டு : எசாலம் உள்ளும் புறமும் - கி.ஶ்ரீதரன்
7. கல்வெட்டு (37,38): எசாலம் செப்பேடுகள் - நடன காசிநாதன்
8. கல்வெட்டு : இராஜேந்திரசோழனின் இராஜகுரு - நா. மார்க்சியகாந்தி
9. இராஜேந்திரசோழன் வெளியிட்ட எசாலம் செப்பேடுகள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2010, ச. கிருஷ்ணமூர்த்தி
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.