![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 110
![]() இதழ் 110 [ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
வரலாறு டாட் காம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினொன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. பல்வேறு மாற்றங்களுக்கும் சூழல்களுக்குமிடையே இடையறாது தொடரும் இந்த வரலாற்றுப் பணி இனிவரும் காலங்களிலும் தடையின்றித் தொடர இறையருளை வேண்டி நிற்கிறோம். நமது இணைய இதழ் தொடங்கிய காலத்தில் இணையத் தொழில்நுட்பமும் தமிழ் இணையமும் துவக்க காலத்தைத் தாண்டித் தவழும் காலத்தில் இருந்தன. தற்போது அவை நடைபயிலும் காலத்தை முடித்துக்கொண்டு ஓடத் துவங்கியுள்ளன. இணையத் தொழில்நுட்பம் நம்பமுடியாத அளவிற்கு எப்படியெல்லாமோ வளர்ந்து விட்டது. இணையத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு மாபெரும் தகவல் களஞ்சியமாக இணையம் காட்சியளிக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை உள்ளது. இந்தத் தகவல் கிடங்கில் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை பல்வேறு சமயங்களில் கேள்விக்குரியதாகவே உள்ளன. குறிப்பாக வரலாறு சார்ந்த தகவல்களாக முன்வைக்கப்படும் பல தரவுகளின் உண்மைத்தன்மை மற்றும் நடுநிலைமை மெச்சத்தக்கதாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழக வரலாறு மற்றும் திருக்கோயில்கள் தொடர்பான தகவல்களையும் உண்மைகளையும் விருப்பு வெறுப்புமின்றி நேரில் கண்டு ஆராய்ந்து நோக்கி அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக பத்தாண்டுகளில் வரலாறு டாட் காம் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. உடனடியாக சில பரபரப்பான தகவல்களை முன்வைத்து அதன் மூலம் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முயற்சியில் வரலாறு டாட் காம் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதனால்தான் ஊடகங்களில் அடிபடும் வரலாறு சார்ந்த செய்திகள், தலைப்புக்கள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் உடனடியாக வரலாறு டாட் காமில் பேசப்படுவதில்லை. உண்மைகளை உராய்ந்து பார்த்துத் தேர்வு செய்யவும் அவதானிக்கவும் காலமும் நேரமும் உழைப்பும் தேவைப்படுகின்றன. பரபரப்புக்காக உண்மைக்கு மாறான தகவல்களை நாம் ஒருபோதும் முன்வைப்பதில்லை. நேரில் கண்டு தெளிவடையாத எதைப்பற்றியும் எழுதுவதில்லை என்று நமக்கு நாமே விதித்துக்கொண்ட ஒரு மிக முக்கியமான கட்டுப்பாடே இந்தத் தளத்தின் நம்பகத்தன்மையையும் தரத்தையும் இத்தனை காலமாக உயர்த்திப் பிடிக்கும் மிக முக்கியக் காரணிகள் என்பது கண்கூடு. இதற்காக நாம் கொடுத்த விலை சாதாரணமானதல்ல. வரலாறு டாட் காமின் ஒவ்வொரு கட்டுரையாளரும் தங்களின் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் இதற்காகச் செலவு செய்ய நேர்ந்தது. ஓய்வாகக் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் கழித்திருக்க வேண்டிய ஏராளமான விடுமுறை நாட்களை வரலாறுக்காக வரலாறு சார்ந்த பயணங்களில் கழிக்க நேர்ந்தது. இதனால் அவர்கள் மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தாரும் வலுக்கட்டாயமாக சில-பல தியாகங்களைச் செய்ய நேர்ந்தது. வரலாற்றை முறையாகக் கற்க வேண்டும் என்பதற்காக மீண்டும் பல்கலைகளின் வாயில்களை அணுக வேண்டி வந்தது. தேர்வுகளை எழுத வேண்டி நேர்ந்தது. பட்டங்களைப் பெறவேண்டி வந்தது. இவை அனைத்துமே எந்தவொரு பிரதிபலனையும் அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் வரலாற்றின் பால் கொண்ட காதலால் மட்டுமே மேற்கொண்ட பணிகள் என்பதை அடிக்கோடிட்டுச் சுட்டிக் காட்டியாக வேண்டும். ஏனெனில் சமுதாயத்தில் ஒரு சிலராவது லௌகீக வாழ்வின் எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி இத்தகைய மகத்தான பணிகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில் அது பிரபஞ்சத்தால் அவர்களுக்கு இடப்பட்ட கடன். பணி. கடமை. நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினள் தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனைத் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே! (5-19-1) என்று அப்பர் பெருமான் முழக்கத்திற்கு ஏற்ப ‘வரலாறு நமது வாழ்வைத் தாங்கும். நமது கடன் வரலாற்றுப் பணி செய்து கிடப்பதே!’ என்கிற உறுதியுடன் அடுத்த ஆண்டில் அடியினை எடுத்து வைக்கிறோம். வணக்கம். அன்புடன் ஆசிரியர் குழு.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |