http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 12

இதழ் 12
[ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

இன்னல்களைக் களைவோம்
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பகவதஜ்ஜுகம் - 3
ஆந்தையும் உண்டுதான் படித்த ஞான்றே!
திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் திருக்கோயில்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
கோயில்களை நோக்கி - 1
தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்!
கல்வெட்டாய்வு -10
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம்
சங்கச்சாரல் - 11
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
இதழ் எண். 12 > நூல்முகம்
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
கோகுல் சேஷாத்ரி
நூல் - குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)

ஆசிரியர் - டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்

பதிப்பகம் - அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர் - வல்லம் சாலை தஞ்சாவூர் - 613 007

விலை - ரூ.80/=

(புத்தகத்தைப் பெற விழைவோர் பதிப்பகத்தை தொடர்பு கொள்க)


***********************************************************************************************



பண்டைய தமிழர்தம் வாழ்வில் ஆடலும் இசையும் பெற்றிருந்த பெருமையையும் ஏற்றத்தையும் பண்டைய திருக்கோயில்களின் சிற்பங்களும் கல்வெட்டுக்களும் தெளிவாக எடுத்தியம்புகின்றன. உவச்சப் பெருமக்கள், தலைப்பறைகள், அவர்தம் இசைக்கருவிகள், அவர்களுடைய பணிக்குக் கூலியாக அளிக்கப்பட்ட உவச்சக்காணி, நட்டுவம் புரிந்த பெருமக்கள், நடனமாடி இறைவனையும் மக்களையும் மகிழ்வித்த தளிப்பெண்டுகள், இசைகூட்டி தேவாரம் விண்ணப்பித்த பிடாரர்கள் என்று கல்வெட்டுக்களில் இந்த மனிதர்களின் வாழ்வும் வாக்கும் காலகாலத்திற்கும் நிற்கும் வண்ணம் பதிவாகியுள்ளன.

இத்தனை தரம்மிக்க செய்திகள் கொட்டிக்கிடந்தும் இந்தத் துறை உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லையென்பதே கசப்பான உண்மையாகும். எவரைக்கேட்டாலும் "விபுலானந்த அடிகளின் யாழ் நூல் இருக்கிறதே !" என்பார்கள். "விபுலானந்தரை விடுங்கள் - அந்த நூலைத்தவிர வேறு ஏதாவது நூல் இருக்கிறதா ?" என்று வினவினால் மெளனம்தான் பதிலாக வரும். யாழ் நூலுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றாலும் பெரிய - உரிய முறையில் பல்வேறு தரவுகளையும் தொகுத்து முழுமையாகச் செய்யப்பட்ட இசைநூல்கள் அரிதாகவே தென்படுகின்றன என்பதே நாம் சொல்லவரும் செய்தி.

இந்தப் பின்னணியில்தான் தஞ்சை சரஸ்வதி மகாலைச் சேர்ந்த வரலாற்றாய்வறிஞர் குடவாயில் அவர்களின் குடமுழா என்ற நூல் கைக்குக் கிடைத்தது.





ஆரூர்க்கோயிலின் கடைசித் தலைமுறை பஞ்ச வாத்திய முழவுக் கலைஞரை அட்டையில் தாங்கி நிற்கும் குடமுழா புத்தகம்


குடவாயில் அவர்கட்கு அறிமுகம் தேவையில்லை. தமிழுலகம் அவரை நன்கறியும். நமது குழுவின் மீது அவருக்குத் தனி ஈடுபாடு உண்டு. சிரமம் பார்க்காமல் பலமுறை எங்களை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குக் கூட்டிச் சென்று நேரில் விளக்கங்கள் வழங்கியிருக்கிறார் என்பதை இந்த இடத்தில் நன்றியுடன் பதிவு செய்கிறோம்.

குடமுழவம் பண்டைய இசைக்கருவிகளுள் மிக முக்கியமானதொன்றாக திகழ்ந்ததை பல்வேறு சிற்பங்களின் கண்கொண்டு தெளிவாக அறியலாம். குறிப்பாக ஆடவல்லான் திருமேனிக்கு அருகில் கண்டிப்பாக ஒரு குடமுழவத்தோடு நந்தி பகவானையோ பூத கணத்தையோ பார்த்துவிடலாம். ஆடவல்லானைத் தவிர விமானத்தின் வலபியில் அமைந்திருக்கும் பூதவரியில் குறைந்த பட்சம் ஒரு கணமாவது குடமுழவத்தோடு காட்சியளிப்பது திண்ணம். இவ்வாறாக சிற்பங்களில் குடமுழவத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக்கொண்டு பண்டைய தமிழகத்தில் அது ஒரு பிரதான இசைக்கருவியாகத் திகழ்ந்ததாகத் துணிகிறோம். இந்த இசைக்கருவியையே தன்னுடைய நூலின் கருப்பொருளாகக் கொண்டுள்ளார் ஆசிரியர்.





கங்கை கொண்ட சோழபுரத்தில் வர்ணனைகளுக்கெட்டாத ஆடவல்லாருக்கருகில் குடமுழவத்துடன் நந்திதேவர்


இலக்கியங்களில் குடமுழவம், சிற்பங்களில் குடமுழவம், செப்புப் படிமங்களில் குடமுழவம், ஓவியங்களில் குடமுழவம், கல்வெட்டில் குடமுழவம், செப்பேட்டில் குடமுழவம், ஓலைச்சுவடிகளில் குடமுழவம் என்று பல்வேறு தளங்களிலும், காலகட்டங்களிலும், துறைகளிலும் விரிந்து பரவும் இந்த நூலானது ஒரு இசைக்கருவியைப் பற்றிக்கூட இத்தனை சுவையான - விறுவிறுப்பான செய்திகளை தரமுடியுமா என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

முதல் அத்தியாயமான "இலக்கியங்களில் குடமுழவம்", குடமுழா சங்ககாலத்திலேயே தமிழர்தம் தோற்கருவியாய் திகழ்ந்ததை பதிவுசெய்கிறது. இதில் சுவையான செய்தி என்னவென்றால் சங்க இலக்கியங்கள் முழவம் என்னும் கருவியைப் பற்றிப் பேசுகின்றனவே தவிர குடமுழவம் என்னும் சொல்லாட்சி காணப்படுவதில்லை. ஆக சங்க காலத்துக் கருவி குடத்துடன் கூடிய முழவம்தானா என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதற்கு பல்வேறு சான்றுகள் காட்டி முழவம் குடமுழவமே என்னும் கருத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். மதுரைக் காஞ்சி புறநானுறு என்று பல்வேறு சான்றுகள் காணப்பட்டாலும் அதில் படித்தவுடன் மனதில் தைப்பது சிலப்பதிகாரமே. வரிக்கு வரி வரலாற்றுச் செய்திகளை அள்ளித் தெளித்து புதுப்புது நோக்கில் கவிதைகளை படைப்பதில் ஈடு இணையற்ற தமிழக் கவிஞரான இளங்கோவடிகளின் தெளிவுகள் அரங்கேறு காதையின் இந்த வரிகளிலும் தரிசனம் தருகின்றன.


"குழல் வழி நின்றது யாழே - யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே - தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்றிசைந்த தாமந்திரிகை....
"


"கொன்னுட்ட நைனா !" என்று விசிலடிக்கத் தோன்றும் வரிகள் இவை !

இன்றைக்கும் கூட இசைக்கருவிகளில் ஒன்றிற்கு முக்கியத்துவம் அளித்து அதற்குப் பின்னணியாக பல்வேறு இராகக் கருவிகளை கூட்டி பின் தாளத்திற்காக தாளவாத்தியங்களை இசைக்கும் மரபைக் காண்கிறோம். அந்தக் காலத்தில் எந்த வரிசையில் இந்த மரபு அமைந்திருந்தது என்னும் அரிய பெரிய செய்தியை அனாயசமாகப் பதிவு செய்திருக்கும் சிலப்பதிகாரத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இன்னும் ஒரு நூற்றாண்டுகூடத் தேவைப்படலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்ததாக ஆசிரியர் பதிவுசெய்திருக்கும் பேய்ப் பெருமாட்டி காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டுப் பதிகம், கல்லாடம், திருப்புகழ் என்று மனம் சென்றாலும் கட்டுரையின் நீளம் கருதி அடுத்த அத்தியாயத்திற்கு நகர்கிறோம்.

அடுத்த அத்தியாயமான "சிற்பங்களின் குடமுழவம்" அத்தியாயத்தில் தமிழகப் படைப்புக்கள் மட்டுமல்லாது வாகாடகர்கள், கீழைக் கங்கர், இராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர்கள் என்று பல்வேறு தென்னக மரபுகளின் பின்னணியில் குடமுழவத்தை ஆராய்ந்திருப்பது முழவ மரபின் வளர்ச்சியை அறிந்துகொள்ள நன்கு உதவுகிறது. அதிலும் ஒவ்வொரு சிற்பத் தொகுதியிலிருந்தும் குடமுழவத்தை மட்டும் தனியே எடுத்து வரைந்து காட்டி குடமுழவத்தின் பல்வேறு வகைகளையும் கால தேச வர்த்தமானங்களில் அது அடைந்த மாற்றங்களையும் படங்களோடு விளக்கிக் காட்டியிருக்கும் பாங்கானது "மெட்டிஒலி" மக்களைக்கூட புத்தகத்தின் பக்கத்தோடு பக்கமாக கட்டிக்போட்டுவிடும். எல்லோரா, எலிபண்டா, புவனேஸ்வரம், குவாலியர், பாதாமி - பத்தடக்கல் - அய்ஹொளே - ஆலம்பூர் என்று ஆசிரியர் பல்வேறு பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் பாங்கை படித்து அனுபவிக்கவேண்டுமேயொழிய ஒரு கட்டுரைக்குள் விளக்கிவிட முடியாது.

தமிழகத்துக்கு வெளியே ஒரு ரவுண்டு அழைத்துச் சென்றுவிட்டு நேராக பல்லவர், சோழர் காலத்தில் களமிறங்குகிறார் ஆசிரியர். இதில் பல்வேறு சிற்பங்களும் "ஆஹா! ஓஹோ!" இரகம் என்றாலும் குறிப்பாக நாக்கை சப்புக்கொட்ட வைப்பது கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் ஆடவல்லான் சிற்பத் தொகுதிதான். ஏற்கனவே கலைக்கோவன் அவர்களின் வரலாற்றுத் தொகுதியொன்றில் இந்த ஆடல் அழகரைப் பற்றிப் படித்து வைத்திருந்ததால் குடவாயிலின் அருமையான விளக்கங்களும் நல்லதொரு புகைப்படமும் சேர்ந்து "உன்னைநான் காண்பதெப்போது ?" என்று ஏங்க வைத்துவிட்டன. ஒரு ஆவேசத்தில் "இப்போதே இந்தியா கிளம்புகிறேன் !" என்று கிளம்பியவனை ஆற அமர அமர்த்தி நீர் மோர் கொடுத்து சென்ற வாரம்தான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்திருக்கிறீர்கள் ! என்று ஞாபகமூட்டி இகலோகத்திற்கு நம்மை இழுத்துக்கொண்டு வந்தது நமது மனைவிதான். அவர்கள் நிறுத்தினார்களோ - இந்தக் கட்டுரை மற்றுமொரு அரைகுரை கட்டுரையாகாமல் தப்பிப் பிழைத்ததோ !

சிற்பச் சான்றுகள் குடமுழவம் பஞ்சமுக முழவமாக 11-12ம் நுற்றாண்டில்தான் கருப்பெற்றது என்பதை ஐயந்திரிபற நிறுவுகிறார் ஆசிரியர். புத்தகத்திற்கே மணிமகுடமாக விளங்கும் இந்த அத்தியாயத்திலிருந்து பிரிய மனமின்றி மேற்செல்கிறோம்.

அடுத்த அத்தியாயமான செப்புப் படிமங்களில் குடமுழவம் அத்தியாயத்தை சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாகவே கொள்ள வேண்டும். இதிலும் மேலப் பெரும்பள்ளம், கீழ்க்காட்டூர், திருப்¨ஞ்ஞீலி, சீர்காழி, தென்திருவாலங்காடு என்று சகட்டு மேனிக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் "ஆடவல்லான் அழகை மட்டும் பார்த்து மதிமயங்கி நிற்காதீர்கள் ! ஆடவல்லான் கீழ் குட்டியாக வடிக்கப்பட்டுள்ள பூதகணங்களையும் சற்று நோக்குங்கள் !" என்கிறார். நாமும் பார்க்க - அதோ - அந்த தென்திருவாலங்காட்டு சிற்பத்தின் கீழ் - அட, நந்திதேவர் பஞ்சமுக வாத்தியத்தையல்லவா வைத்துக்கொண்டிருக்கிறார் ! அடடா - அதிலும் அவர் கரங்களை வைத்துக்கொண்டிருக்கும் பாங்கை சற்று உற்று நோக்கினால் அந்த வாத்தியத்தின் சப்தம்கூட மெலிதாகக் கேட்கும் போலிருக்கிறதே....ஐயோ - அந்த ஆடவல்லான் திருமேனிகூட சற்று உயிர் பெற்று நகர்வதாகத் தெரியவில்லை ? இந்த வம்பே வேண்டாம் - அடுத்த அத்தியாயத்திற்கு ஓடியே போய் விடுவோம் !

இதற்குப் பின் வரும் அத்தியாயங்களைப் பற்றிப் பேச மனம் விழைந்தாலம் "நீ கட்டுரைதான் எழுதுகிறாயா - அல்லது புத்தகத்தைப் பற்றியே ஒரு புத்தகம் எழுதுகிறாயா ?" என்று பின்னூட்டப் பகுதியில் விமர்சனம் வரும் என்பதால் ஒரே ஒரு செய்தியைச் சொல்லி நமது எழுத்துப் பிரசங்கத்தை முடித்துக்கொள்வோம். அந்தச் செய்தி வாணனைப் பற்றியது. "கொட்டுவான் முழவம் வாணனே!" என்று அத்தியாயமே படைக்கிறார் ஆசிரியர்.

வாணன் என்றதும் வந்தியத்தேவனுக்குச் சென்றுவிடாதீர்கள் - இந்த வாணன் ஒரு அசுரன் - வாணாசுரன் ! திரிபுர அசுரர்களில் ஒருவன். தனது புன்னகையால் திரிபுரங்களை பஸ்பமாக்கிய பெருமான் இரக்கம் மேலிட்டு இரு அசுரரை தன் வாயிற்காவலராகவும் கடைசி தம்பியான வாணாசுரனை தன் ஆடலுக்கு முழவு இசைக்கும் கலைஞனாகவும் மாற்றி அருளுகின்றார். இதனை தம்பிரான் தோழர் சுந்தரரின் வாய்வார்த்தையால் திருப்புன்கூர் திருப்பதிகத்தில் கேட்போம்.


மூஎயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை
ஒருவன் - நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ -
மணிமுழா முழக்க(வ்) அருள் செய்த
தேவதேவ ! நின் திருவடி அடைந்தேன்...
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே !



ஆயிரம் வருடங்கள் கழித்தும் அப்படியே புத்தம்புதுசாகத் தெரியும் பாடல் ! ஆக இனி நந்திதேவர் தவிர வாணனையும் சிற்பங்களில் ஞாபகமாக தேடவேண்டும்...

ஆசிரியர் பதிவுசெய்யும் வேதனைமிக்க செய்தி என்னவெனில் இந்த பஞ்சமுழவத்தை இயக்கும் கலைஞர்கள் அருகிக்கொண்டே இருப்பதுதான். கடைசியாக திருவாருரில் இருக்கும் கலைஞரை அடையாளம் காட்டி அவரை அட்டைப் படத்திலும் இடம்பெறச்செய்து அரிய உயர்வை அளித்துள்ளார் ஆசிரியர்.

தமிழர்களின் தனிக்குணாதிசயங்களில் ஒன்று என்னவென்றால் குடும்பத்தோடு சினிமா பார்ப்பதற்கு யோசிக்காமல் ஆயிரம் ரூபாய் கூட செலவழிக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நூறு ரூபாய் புத்தகம் புத்தகக் கடைகளிலோ இணையத்திலோ கண்களில் தென்பட்டால் "இப்போது வாங்கித்தான் ஆக வேண்டுமா ? அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே ? ஏற்கனவே வீட்டில் படிக்காமல் ஏகப்பட்ட புத்தகங்கள் கிடக்கின்றன - மேலும் ஒன்றா ? வாங்கிச் சென்றால் பெண்டாட்டி என்ன சொல்லுவாளோ ? நாம் வாங்குவதைவிட நூலகத்தில் அல்லது வேறு எவரிடமாவது கடன்வாங்கிப் படிக்க வழியுண்டா ?" என்று எண்ணிலடங்காத சிந்தனா அவஸ்தைகளுக்கு உள்ளாவார்கள் !

இந்தப் புத்தகத்தை பொறுத்த மட்டிலுமாவது இந்த அவஸ்தைகளை விட்டொழித்து எப்பாடு பட்டாவது இந்தப் புத்தகத்தை கைக்காசை செலவழித்து வாங்கி சந்தோஷமாகப் படித்து இன்புறும்படி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறோம். வியர்வை சிந்தி உழைக்கும் வரலாற்றாய்வாளர்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த சிறு அணில் உதவி ! this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.