http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 12
இதழ் 12 [ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டத்தைச் சேர்ந்த வளமான சிற்றூர் திருமணல்மேடு. இவ்வூரின் நடுவே, மேடையொன்றின் மீது பிற்சோழர் கட்டமைப்பில் ஒருதளத் திராவிட விமானமாக அமைந்துள்ளது பஞ்சநதீசுவரர் கோயில். விமானத்தின் முன் அதே கட்டமைப்பில் அம்மன் திருமுன்னும் அமைந்துள்ளன.
விமானம் துணைத்தளத்தின் மீது அமைந்துள்ள இறைக்கோயில் விமானத்தின் தாங்குதளம் உப உபானம், பத்ம உபானம், கம்பு, ஜகதி, எண்பட்டைக்குமுதம், கம்புகளால் அணைக்கப்பட்ட பாதங்களோடு கூடிய கண்டம், தாழ் தாமரை வரி, பட்டிகை, நிமிர் தாமரை வரி, மேற்கம்பு எனும் உறுப்புகளால் ஆக்கப்பட்ட பாதபந்தமாக உள்ளது. இத்தாங்குதளத்தை அடுத்த வேதிகைத்தொகுதி பாதங்களோடு கூடிய வேதிக்கண்டம், கம்பு, தாழ்தாமரைவரியால் அணைக்கப்பட்ட வேதிகை, துணைக்கம்பு எனும் சிற்றுறுப்புக்களைக் கொண்டுள்ளது. துணைக்கம்பிற்கு உள்ளடங்கி எழும் சுவர் பக்கத்திற்கு நான்கு எண்முக அரைத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைத் தூண்கள் பாதம், எண்முக உடல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பலகை, வீரகண்டம் கொண்டமைந்துள்ளன. இவற்றின் எளிய விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்க, மேலே வாஜனமும் தாமரையிதழ்களால் அலங்கரிக்கப்பட்ட வலபியும் உள்ளன. கூரையின் வெளியிழுப்பான கபோதம் பக்கத்திற்கு நான்கு கூடு வளைவுகளைப் பெற்றுள்ளது. இக்கூடுகள் வெறுமையாக உள்ளன. ஓர, நடுப்பகுதிகளில் கபோதம் கொடிக்கருக்குகளைப் பெற்றுள்ளது. விமானத்தின் சாலைப்பத்தி கர்ணபத்திகளைவிடச் சற்று முன் தள்ளலாய் அமைந்துள்ளது. இப்பத்திகளையும் எண்முக அரைத்தூண்களே அணைத்துள்ளன. பத்திகளின் நடுவே பட்டிகை வரை நீளும் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. இவற்றைச் சட்டத்தலையுடன் கூடிய உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ளன. இத்தூண்களின் வீரகண்டங்களின் மீதமரும் உத்திரம் கோட்டத்தின் மேல்நிலையாக, அதன்மீது வாஜனமும் வலபியும் காட்டப்பட்டுள்ளன. வலபியின் மேல் மகரதோரணம் அலங்கரிப்பின்றி அமைந்துள்ளது. விமானக் கூரையின் மீது ஆங்காங்கே பூமிதேசத்துடன் கூடிய உயரமான வேதிகையும் அதன்மீது உள்ளடங்கலான திராவிட கிரீவமும் சிகரமும் வேசரத்தூபியும் காட்டப்பட்டுள்ளன. பெருநாசிகைகளில், தென்புறம் ஆலமர் அண்ணலும் மேற்கில் பரமபத நாதரும் வடபுறம் நான்முகனும் கிழக்கில் சிவபெருமானும் சுதையுருவங்களாய் இடம்பெற்றுள்ளனர். சிறுநாசிகைகளிலும் அதன் பக்கங்களிலும் சுதையுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கருவறையில் இறைவன் இலிங்கத் திருமேனியராய்க் காட்சியளிக்கிறார். கருவறை நீர்வழி வடபுறத்தே தாங்குதளத்தின் பட்டிகை, கண்டப்பகுதிகளை ஊடறுத்து அமைந்துள்ளது. விமானத்தின் முன்னமைந்துள்ள முகமண்டபம் கட்டமைப்பில் விமானத்தை ஒத்தமைந்துள்ளது. இதன் சுவர்த்தூண்கள் நான்முக அரைத்தூண்களாய் அமைய, வட, தென்புறக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. மேடையின் வடபுறத்தே தென்பார்வையாய்ச் சிதைந்த நிலையிலுள்ள அம்மன் திருமுன் ஒருதள விமானமும் முகமண்டபமும் கொண்டமைந்துள்ளது. இறைவி நாற்கரத்தராய்ச் சமபங்கத்தில் எழுந்தருளியுள்ளார். கல்வெட்டுகள் பஞ்சநதீசுவரர் கோயில் விமானத்திலும் முகமண்டபத்திலுமிருந்து ஒன்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. கள ஆய்வின் போது டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்து ஆய்வர்கள் இதுவரையிலும் படியெடுக்கப்படாதிருந்த முதற்குலோத்துங்கரின் கல்வெட்டொன்றைக் கண்டறிந்து படியெடுத்தனர். இப்பத்துக் கல்வெட்டுகளும் இக்கோயிலின் வரலாற்றையும் அதன்வழி திருமணல்மேட்டின் வரலாற்றையும் விரித்துரைக்கின்றன. இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டவை முதற்குலோத்துங்கரின் கல்வெட்டுகளாகும். இவை தவிர விக்கிரமசோழர், இரண்டாம் இராஜராஜர், மூன்றாம் இராஜராஜர், மாறவர்மர் குலசேகரர் காலக் கல்வெட்டுகளும் உள்ளன. திருக்களீசுவரம் உடையார் இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள பத்துக் கல்வெட்டுகளுள் காலத்தால் பழமையான கல்வெட்டு கி.பி.1107ம் ஆண்டிற்குரியதாகும். முதற்குலோத்துங்கரின் முப்பத்தேழாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு உலகமுழுதுடை வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துப் பிரமதேயமான பெருங்காவிலைச் சேர்ந்த பெருங்குறி மகாசபையார், பாச்சில் கூற்றத்தைச் சேர்ந்த திருக்கள் திருக்கோயிலுக்குக் கொல்லை நிலமொன்றை விற்றுத் தந்த தகவலைத் தருகிறது. இந்நிலத்தின் எல்லைகளைக் குறிக்கும்போது, இராஜராஜ நாராயண நல்லூர் எனும் ஊர்ப் பெயரும் இராஜேந்திர சோழப் பேராறும் சுட்டப்பட்டுள்ளன. இதே மன்னருடைய மற்றொரு கல்வெட்டுக் கள ஆய்வின் போது டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வறிஞர்களால் கண்டறியப்பட்டது. இதுவும் முப்பத்தேழாம் ஆண்டிலேயே வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் திருக்களீசுவரமுடைய மகாதேவர் கோயிலில் காணியுடைய சிவபிராமணன் கௌசிகன் நக்கன் தாயனான நக்க பட்ட சொக்கன் பெயர் இடம்பெற்றுள்ளது. பெருங்காவில் பெருங்குறி மகாசபையார் அவ்வூரைச் சேர்ந்த திருமேற்கோயிலான காறை கற்பக விண்ணகராழ்வார் கோயிலில் கூடியிருந்து, அவர்தம் நிலமான கொல்லை நிலம் முக்கால் வேலியைத் திருக்களீசுவரத்து இறைவனுக்கு இறையிலியாக விற்றுத் தந்தனர். இந்தத் தகவல் வரிப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆவணத்தில் அரசு அதிகாரியான குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டுச் செம்பங்குடையானான காடன் சீயாளு தேவனான நீலகங்கன், சபை உறுப்பினர்கள் கூத்தன் சுந்தரத் தோளுடையான், நாராயணன் உதய திவாகரன், கிருஷ்ணன் திருவரங்க நாராயணன், நரசிங்க நாராயணன் ஆகிய சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சனி எண்ணைக்காப்பு இம்மன்னரின் நாற்பதாம் ஆட்சியாண்டில் திருமணல்மேடுடைய இறைவனுக்குச் சனி எண்ணைக் காப்பிற்காக எண்ணெய் உழக்கு, நெல்லி அரைப்பலம் தரப்பட்டது. அதுபோழ்து இறைவன் அமுது செய்ய, அரிசி நாநாழி, பருப்பு உழக்கு, கறியமுது, உப்பமுது, நெய்யமுது ஒருபிடி, தயிரமுது ஓர் உரி, பாக்கு, வெற்றிலை 20 படைக்கப்பட்டன, இதற்காக முத்தையில் வாதுளித் தகியன் மறைக்காடன் நான்கு அன்றாடு நற்காசுகள் கொடையளித்தார். இக்கொடையை ஏற்றுக்கொண்டு அறக்கட்டளையை நிறைவேற்றுவதாக இக்கோயில் காணியுடைய சிவபிராமணர்களான பாரத்துவாசிகள் கற்பக தட்சிணாமூர்த்தி தெற்றிக் கூத்தன் புற்றிடங்கொண்டான், ஈஸ்வரன் பாஸ்கரதேவன், சேந்தன் பட்டன் ஆகியோர் வாக்களித்தனர். முதற்குலோத்துங்கரின் மகனாரான விக்கிரம சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டில் நித்தவினோத வளநாட்டு ஆவூர் உடையான் வேளான் திரு அத்தீசுவரம் உடையானான சோழகோனார், இக்கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றப் பன்னிரண்டு காசுகள் தந்தார். நாச்சியார் திருமணம் விக்கிரமசோழரின் பதினேழாம் ஆட்சியாண்டில் இடையாற்று நாட்டைச் சேர்ந்த திருமணல்மேடு திருக்கோயிலைச் சேர்ந்த தேவரடியாரான அரியாள் இராமியான மாலையில் மாணிக்கம், முத்தையில் பிரமதேய மகாசபையாரிடமிருந்து அன்றாடு நற்காசுகள் பத்திற்கு நிலமொன்றை விலைக்குப் பெற்றார். இந்நிலம் முத்தையில் பிரமதேயத்தைச் சேர்ந்த வளவநல்லூரான விக்கிரமசோழ நல்லூரில், சபைப் பொதுவான நிலத்தில், தருணேந்து சேகரநல்லூர் உள்கிடையில் விளைநிலம் தடியும், நெடுங்கண் என்று பெயரமைந்த நிலம் இரண்டுமா முக்காணி அரைக்காணியும், வேறு நிலப்பகுதி இரண்டுமா அரைக்காணியும் ஆகக் கால் வேலியாக அமைந்தது. மாலையில் மாணிக்கம் திருமணல்மேடு கோயிலில் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்துக் கோயில் இறைவனுக்கு அந்நாச்சியாரைத் திருமணம் செய்வித்து, நாச்சியார்க்கான திருப்படிமாற்றுக்காக இந்நிலத்தை வழங்கினார். நிலத்தை இறையிலியாக்கும் பொருட்டு மேலும் பத்துக் காசுகளை சபைக்கு வழங்கினார் மாலையில் மாணிக்கம். இதே மன்னரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு இறைவனுக்கு திருஅர்த்தசாம அமுதிற்காகவும் விளக்குகளுக்காகவும் குடிநீங்காத் தேவதானமாக முத்தையில் பெருங்குறி மகாசபையார் நிலமளித்த தகவலைத் தருகிறது. திருமந்திரப் போனகம் இரண்டாம் இராஜராஜரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பாண்டியகுலாசனி வளநாட்டு பிரமதேயம் முத்தையில் பெருங்குறி மகாசபையார் திருமணல்மேடுடையார் கோயில் தேவரடியார் குலாவாளுடையார் அடியார் குலாவுக்கு நிலப்பகுதி ஒன்றை விற்பனை செய்த தகவலைத் தருகிறது. இந்நிலம் போனகவளவநல்லூரான விக்கிரமசோழ நல்லூரில் இருந்த சபைப் பொதுவான நிலத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. இந்நிலம் இருந்த இடம் தருணேந்துசேகரநல்லூரையும் சேர்ந்திருந்தது. மொத்த நிலம் முக்கால் வேலி மூன்று மா. இந்நிலம் திருமணல்மேடுடைய இறைவனின் திருமந்திரப் போனகத்துக்காக நூற்றுப்பதினைந்து அன்றாடு நற்காசுகளுக்கு விற்கப்பட்டது. நிலத்தை இறையிலியாக்க மேலும் அறுபத்தைந்து காசுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. நிலத்தின் எல்லைகளைக் கூறும்போது கங்கைகொண்டான் வாய்க்கால் குறிக்கப்படுகிறது. முத்தையில் கிராமத்தின் நடுவராக இருந்தவர் நாராயணன் மாறன். பல சபை உறுப்பினர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். திருமேனிகள் மூன்றாம் இராஜேந்திரசோழரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் பாண்டிகுலாசனி வளநாட்டு இடையாற்று நாட்டுத் திருமணல்மேடுடைய கோயிலில் வடகரை இராஜராஜ வளநாட்டுப் பாச்சில் கூற்றத்தைச் சேர்ந்த வியாபாரி நெல்வாயில் உடையான் சுப்பிரமணியர் திருமேனியையும் தேவார மூவர் திருமேனிகளையும் எழுந்தருளிவித்த தகவல் கிடைக்கிறது. இப்பெருமகனாரே இத்திருமேனிகளுக்குத் திருநாமத்துக்காணியாக முத்தையில் பிரமதேயமான திரிபுரதான சதுர்வேதிமங்கலத்து வாச்சியன் வாதுசெய் நாரணநம்பி மகன் சேனைப்பெருமாளிடம் நிலம் வாங்கிக் கொடையளித்தார். இதன் விலை 2854 காசுகள். இக்காலத்தில் இக்கோயில் சிவ அந்தணராக இருந்தவர் காக்க நாயகனான நாற்பத்தெண்ணாயிர நம்பி. கல்வெட்டில் எலுமிச்சைத் தோட்டம் ஒன்று குறிக்கப்படுகிறது. தன்மதாவளந்தம்பிரான் குலசேகர பாண்டியரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இரண்டு கரைநாட்டு பதிணென்பூமியின் வாணிபம் காத்த வணிகர்கள், திருமணல்மேடுடைய கோயில் இறைவனுக்கு வைகாசித் திருநாளில் திருக்காப்பு நாண் அகற்றி, இறைவன் திரு உலாப்புறம் திரு அனந்தலில் எழுந்தருளுமிடத்து, 'தன்மதாவளந்தம்பிரான் வந்தான்' என்று திருச்சின்னம் ஊதவும் இத்திருநாட்களின் போது செங்கழுநீர்ப் பூக்களால் மாலை அணிவிக்கவும் சாந்து பூசவும் பாவாடை அணிவிக்கவும் விளக்கு எரிக்கவும் அறுபது பணம் கொடையாகத் தந்தனர். மன்னர் பெயரற்ற துண்டுக் கல்வெட்டொன்று இறைவனுக்கு வழிபாட்டிற்கும் படையல்களுக்குமாய்த் தரப்பட்ட நிலக்கொடை ஒன்றைச் சுட்டுகிறது. முடிவுரை இக்கல்வெட்டுகளாலும் தற்போது உள்ள கட்டமைப்பாலும் திருமணல்மேடு இறைக்கோயில் ஏறத்தாழத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டுமானம் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலம் வரை சமுதாயத்தின் பல்வேறு தள மக்களுடைய கொடைகளைப் பெற்றுச் செழிப்புடன் திகழ்ந்த இக்கோயில் இன்றும் உள்ளூர் மக்களால் நன்கு புரக்கப்படுவது மகிழ்வு தரும் செய்தியாகும். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |