![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 12
![]() இதழ் 12 [ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
வலஞ்சுழிப் பயணங்கள்
அன்புள்ள வாருணி, வரலாறு.காம் மின்னிதழ் வெளியிடப்பட்டதும் படிக்கும் மிகச் சிலருள் சுந்தர் பரத்வாஜும் ஒருவர். யாவரே எழுதுவாரே படித்துச் சற்று நாணியவராய் என்னிடம் பேசினார். 'தேவைதானா?' என்று தவித்தவரிடம், 'குறைகளை, தவறுகளைச் சுட்டுவதினும் இன்றைக்கு மிகத் தேவையாய் இருப்பது நல்லவற்றைப் பாராட்டும் பண்புதான். நான் அனுபவித்த நல்லவற்றை எழுதியுள்ளேன். விடுத்திருக்கலாமே என்று கருதின், பொறுத்துக் கொள்ளுங்கள், இது விதைக்க வேண்டியதென்று நான் கருதுகிறேன்' என்று உறுதியாய்க் கூறினேன்.
'படித்தே தீரவேண்டும்' என்ற நிலையில் உள்ள கல்வியாளர்களும் ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் கூடப் படிப்பது பாவமென்று நூல்களினின்று விலகி நிற்கும் இந்தக் கலியுகத்தில், ஈர்த்திருக்கும் ஒரு துறைக்காகத் தயங்காது தம் காலத்தையும் அரும்பாடுபட்டுத் தாம் ஈட்டும் பொருளையும் தரத்துணியும் உயர்ந்தோரை அடையாளப்படுத்துவது அத்தகு நல்லோரை நாணப்படுத்துமெனினும் மிகத் தேவையன்றோ? இது போன்ற அடையாளப் படுத்தல்கள்தானே வரலாறாய் வடிவெடுக்கின்றன. வாருணி, அண்மைப் பார்வைக்குறைவிற்காகக் கண்ணாடி அணிய என்னிடம் வரும் அனைவரிடமும் நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். ஒன்று அவர்தம் தொழில், மற்றொன்று அவர் படிக்கும் பழக்கம் உள்ளவரா என்பது. தொழிலுக்கான மறுமொழியைத் தயங்காது கூறுமாறு போலவே சற்றும் நாணமின்றிப் 'படிக்கும் பழக்கமில்லை' என்று கூறுவாரே மிகுதி. படிக்கும் பழக்கமுண்டு என்பாரும், 'சும்மா, நேரம் கிடைக்கும்போது ஓரளவு படிப்பேன்' என்றுதான் புகன்றுள்ளனர். 'படிப்பது என் தொழில்', 'படிக்காமல் இருக்கமுடியாது', 'நிறைய படிப்பேன்' என மொழிந்தாரைக் கடந்த பத்தாண்டுகளில் நான் மிகக் குறைவாகவே சந்தித்திருக்கிறேன். படிக்கும் பழக்கம் அருகிவிட்டது. தேவை உள்ளவர்களே படிக்க மறுக்கும் இந்தக் காலத்தில் தேவைக்கு மேலும் படிக்கும் ஒருவர் இருந்தால் அவரை விதந்து போற்றுவது என் தலையாய கடமை என்றே கருதுகிறேன். 'வலஞ்சுழிப்பயண அனுபவங்களை விரிவாக எழுதுங்களேன்' என்று நீ கேட்டிருப்பது நினைவிற்கு வருகிறது. 'திரும்பிப் பார்க்கிறோம்' எனுந் தலைப்பில் எங்கள் வரலாற்றாய்வு அனுபவங்களையெல்லாம் விரிவாகப் பதிவுசெய்ய வேண்டுமென்று நான் கருதிய காலம் ஒன்றுண்டு. எப்படியோ அது கூடாமற் போயிற்று. வலஞ்சுழிப் பதிவுகளையாவது வரலாறு பெறட்டும். முதல் ஆறு பயணங்களின் போது சேத்ரபாலர் கோயில் கல்வெட்டுகளைப் படித்துப் படியெடுப்பதிலேயே காலம் சென்றது. ஏழாம் பயணத்தின் போதுதான் வெளிச்சுற்றில் அமைந்துள்ள தெற்குக் கோபுரத்தில் கண்களைப் பதித்தோம். பாதபந்தத் தாங்குதளம் பெற்றிருந்த அந்தக் கோபுரம், முந்து திருப்பணியாளர்களின் கருணையற்ற கைகளில் சீர்குலைந்திருந்தது. ஒரு கட்டுமானத்தின் காலத்தை நிர்ணயிக்க அதன் போதிகைகள் பேரளவிற்கு உதவும். இந்தக் கோபுரம் அதற்கு விதிவிலக்கு. 'காலந்தோறும் போதிகை' என்று ஒரு கட்டுரை எழுதுவார், போதிகை எனும் உறுப்பு வெவ்வேறு காலகட்டங்களில் எத்தகு மாறுதல்களைப் பெற்று வளர்ந்தது என்று கடுரையெழுதினால், எத்தனை விதமான போதிகை அமைப்புகளைச் சான்றுகளாக முன்வைப்பார்களோ அவற்றுள் பெரும்பான்மையான போதிகைகளை இந்தக் கோபுரத்தில் காணமுடிகிறது. உயர்வு நவிற்சியாக இப்படிக் கூறுகிறேனோ என்று நினைத்துவிடாதே. உருக்குலைந்த அந்தக் கோபுரத்தின் மருட்சியூட்டும் கட்டமைப்புக் கண்டு கலங்கிப்போய்த்தான் இப்படிக் கூறுகிறேன். மகேந்திரவர்மர் கால எளிய போதிகை, இறுதிப் பல்லவர், தொடக்கச் சோழர் காலக் குளவுப் போதிகை, முதலாம் இராஜராஜர் வெளிப்படுத்திய வெட்டுப் போதிகை, பிற்பாண்டியர் வடிவமைத்த வெட்டுத்தரங்கக் கலப்புப் போதிகை என இக்கோபுரம் பெற்றிராத போதிகை அமைப்புகள் ஒன்றிரண்டே. கோபுரத்தின் வடமுக தரிசனத்தை முதலில் பெற்றவர்கள் ம. இராமச்சந்திரனும் மா. இலாவண்யாவும். வேதிக் கண்டபாதத்தில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள் சிலவற்றை அடையாளம் காணமுடிந்த மகிழ்வில் ம. இராமச்சந்திரன், அனைத்துச் சிற்பங்களையும் விளக்க வேண்டினார். அவற்றைப் பற்றி எழுதுகிறேன். இந்தக் கோபுரத்தின் வடமுகத் தாங்குதளப் பட்டிகையிலும் குமுதத்திலும் சோழர் கால எழுத்தமைதியில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. வரலாற்று நோக்கற்ற முந்து திருப்பணியாளர்களின் வரம்பற்ற திருவிளையாடல்களால் இக்கல்வெட்டுகள் துணுக்குகளாய்ச் சிதறியுள்ளன. நளினி முயன்று அவற்றைப் படித்தார். கோபுரத்தைச் சூழ்ந்திருந்த மண்மேடுகளில் இட்ட கால் நழுவ எடுத்த கால் வழுக்கிய போதும் கவலுறாது அவர் கல்வெட்டுப் படித்த வித்தையைக் காணக் கண்கோடி வேண்டும் வாருணி. செப்பேட்டுத் தொடர்கள் போலச் சில துணுக்குகளின் தொடர்களிருந்தமை எங்களை வியப்பிலாழ்த்தியது. துணுக்குகள் அனைத்தையும் படியெடுத்தபோதுதான் அவை குறைந்தது மூன்று கல்வெட்டுகளின் தொடரான பகுதிகள் என்பதை அறியமுடிந்தது. இதே கோபுரத்தின் தென்முகம், அருகிலுள்ள குடியிருப்புகளின் கழிவுக் கூடமாக மாறியுள்ளது. கோபுரத்தின் ஜகதி வரை குப்பைகளின் குவியல். இன்றைக்கிருக்கும் பக்தி பூகம்பத்திலும் 'கோயிலாவது, கோபுரமாவது' என்று மக்கள் அவற்றைத் தங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் பெருமைக்குரிய ஊர்களுள் திருவலஞ்சுழியும் ஒன்று. தயங்கித் தயங்கியே கோபுரத்தை நெருங்க முடிந்தது. இங்கும் கல்வெட்டுத் துணுக்குகள். குப்பைமேட்டை அகழ்ந்தால்தான் நின்று படிக்கமுடியுமென்ற நிலை. சேத்ரபாலர் கோயிலைச் சுற்றிலும் அகழப்பட்டிருந்த நான்கடி உயரப் பள்ளத்தைத் தேவைப்பட்டபோதெல்லாம் ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் உதவிய இருவரை இங்குக் குறிப்பிடவேண்டும். ஒருவர் கோபி; மற்றொருவர் ரவி. இந்த இருவரும் சுந்தரின் திருவிடைமருதூர்க் கட்டுமானப் பணிக்குப் பொறுப்பாளராய் அமைந்திருக்கும் திரு. சீதாராமனின் உதவியாளர்கள். சீதாராமனை ஓராண்டிற்கும் மேலாக நான் அறிவேன். புள்ளமங்கைப் பயணத்தில் அவர் கலந்துகொண்டபோதும், கங்கைகொண்ட சோழபுரப் பயணத்தின்போதுதான் அவரை நெருக்கமாக அறியமுடிந்தது. வரலாற்றார்வம் உந்தித் தள்ளத் திருவிடைமருதூரிலிருந்து இருசக்கர ஊர்தியில் கங்ககொண்ட சோழபுரம் வந்து விமானமும் ஏறி எங்களோடு அமர்ந்து பதிகம் பாடிய 'புன்சிரிப்பாளர்' அவர். எது கேட்டாலும் 'செய்திடலாம் சார்' என்று உற்சாகத்தோடு ஒத்துழைக்கும் இனிய நண்பர். அவர் கால வரலாற்றுப் புதினங்களில் அழுத்தமாகக் கருத்துப் பதித்திருக்கிறார். வேங்கையின் மைந்தன் ரோகிணி, மணிபல்லவம் சுரமஞ்சரி பற்றியெல்லாம் ஒரு முறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்தமுறை அவரைச் சந்தித்தபோது மணிபல்லவம் அவர் நூலகத்தில் இடம்பெற்றுவிட்டதை அறிந்தேன். வேங்கையின் மைந்தனை நானே தந்து படிக்கச் செய்தேன். கலந்துரைகளும், கதை அலசல்களும் அவருக்குப் பிடித்தமானவை. வலஞ்சுழியில் கடும்வெயிலில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நேரங்களில் அவர் தரும் இளநிர், குளிர்நீர், நுங்கு இவற்றோடு அந்த 'மந்திரப் புன்னகை' பெரும் உற்சாகம் தரும். ICICI விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரப் படத்தில் கணக்குத் தொடங்கும்போது நெஞ்சில் கைவைத்து உத்தரவாதம் தருவது போல், ஒருவரைக் காட்டுகிறார்களே, அவருக்கு மாறாக சீதாராமனைக் கொண்டால் நான்கூட ICICIல் ஒரு கணக்கு தொடங்கத் தயார். அத்தனை நம்பிக்கையூட்டும் நயமான சிரிப்பு. நானும் இந்த எட்டுத் தடவையாகப் பார்த்துவிட்டேன், நாளின் முடிவில் நாங்களெல்லாம் களைத்தும் வியர்வையில் குளித்தும் காற்றில் அலைகழிக்கப்பட்ட தாளெனக் கசங்கியிருப்போம். அவர் மட்டும் காலையில் பார்த்த அதே புத்துணர்வுடன், மடிப்புக் கலையாமல் நின்றிருப்பார். இப்படிச் சொல்வதால் அவர் எங்களோடு உழைக்கவில்லை என்று கருதிவிடாதே. இளநீர் வாங்கச் சுவாமிமலை, இஞ்சித் தேநீருக்குச் சுவாமிமலை என்று வேண்டிய பொருட்கள் அனைத்திற்குமாகப் பறந்து பறந்து போய் வருபவர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது பள்ளத்தருகே வந்து, 'வேலை செய்கிறோமா' என்பதை உறுதிப்படுத்திக் கொள்பவர்; தேவை கேட்கவும் அடிக்கடி வருவார். இதற்கெல்லாம் மேலே, அவர் 'கைபேசி' பெரும்பாலும் அவர் செவியருகேதான் இருக்கும். அழைப்புகள்! அழைப்புகள்! அழைப்புகள்! சீதாராமனின் ரவி ராமனுக்கேற்ற சூரியமகன்! என் இருபத்தைந்தாண்டுக் களப் பணியில் அவரைப் போல் அறிவார்ந்து உதவக் கூடியவர்கள் மிகச் சிலரையே கண்டிருக்கிறேன். களப்பணியில் நோக்கறிந்து நிலையறிந்து உதவுவதில் நளினிக்கு இணை நளினிதான். அந்த நுட்பம்தான் அவரை இணையற்ற கள ஆய்வாளராக்கியிருக்கிறது. 'விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவர் சொல்லிவிட்டால் நான் மரியாதையுடன் ஒதுங்கிவிடுவேன். இரவி, நளினி ரகம். எது தேவையென்று சொல்கிறோமோ அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்வார். அதை எப்படிச் செய்தால் சரியாக வருமோ அப்படிச் 'சட்'டென்று செய்துவிடுவார். முதல் பயணத்திலேயே அவருக்கு எங்கள் தேவைகள் புரிந்துவிட்டது. இரண்டாம் பயணத்திலிருந்து நாங்கள் கேட்பதற்கு முன்பே தேவையான அனைத்தும் செய்து தந்தார். வெற்றிலைக் காவிபடிந்த சிரிப்புடன் கையில் கடப்பாரையோ, மண்வெட்டியோ, அரிவாளோ, குச்சியோ, துடைப்பமோ ஏதோ ஒன்றைக் கையில் பிடித்தபடி அவர் உடன் நிற்கும்போது நகரத்தார் படைப்புத் தெய்வங்கள்தான் என் நினைவிற்கு வரும். சீதாராமனைப் போல பத்மனாபனும் குடந்தைவாசி. இவர் இந்து அறநிலையத்துறையின் குடந்தை அலுவலகக் கணக்காளர் பிரிவில் பணியாற்றுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மடல் வழி அறிமுகம் ஆனவர். என் நூல்களைப் பெறப் பிப்ருவரியில் சிராப்பள்ளி வந்திருந்தார். வலஞ்சுழிப் பணி அறிந்ததும் அங்கு வந்து சந்திக்கத் தொடங்கினார். அவரும் அவர் நண்பர் ஒருவரும் சேர்ந்து பரப்பாய்வுப் பணி, கல்வெட்டாய்வுப் பணி செய்து, பல பொருட்களைச் சேகரித்துள்ளனர். மேத்திங்கள் சனியன்று நானும் நளினியும் வலஞ்சுழிப் பயணம் மேற்கொள்ள விழைந்தபோது, சீதாராமன் வரமுடியாத சூழலிருந்தது. அதனால் பத்மனாபனுக்குத் தொலைபேசி செய்து, 'வரமுடியுமா?' என்று கேட்டேன். உடன், 'சரி' என்று சொன்னவர் உணவும் தம் பொறுப்பு என்றார். சனிக்கிழமை களத்திற்குச் சென்றபோதுதான் பத்மனாபனின் உழைப்பும் வரலாற்றில் அவருக்கிருந்த ஆர்வமும் நன்கு புலனாகின. நெருங்கவும் அஞ்சக்கூடிய அந்தக் கழிவுமேட்டை, இனியவர் பத்மனாபன் தம் உறவினருடன் அகழ்ந்து நானும் நளினியும் இறங்கிப் படிக்குமாறு வழியமைத்திருந்தார். அவர் செய்திருந்த அருமையான ஏற்பாடால் இரண்டு மணி நேரத்தில் தென்முகப் பட்டிகை, குமுத உறுப்புகளில் சிதறிக் கிடந்த அத்தனை துணுக்குகளையும் படியெடுத்தோம். 'வர வாய்பில்லை' என்று கூறியிருந்த சீதாராமனும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு வந்திருந்தார். இரவி அதே புன்னகையுடன் சேத்ரபாலர் கோயிலில் எஞ்சியிருந்த கற்குவியலில் கல்வெட்டுகள் சிலவற்றின் தொடக்க வரிகளைத் தேடிக்கொண்டிருந்தார். எங்களுக்கு நேரமிருந்தது. அதனால் கோயிலின் இரண்டாம் சுற்றுக்குச் சென்று கல்வெட்டுப் படிக்க முடிவெடுத்தோம். வலஞ்சுழிக் கோயில் வளாகம் மூன்று பெருஞ்சுற்றுக்களை மிக உயரமான மதில்களுடன் பெற்றுள்ளது. நாங்கள் பணிசெய்த கோபுரம் வெளிச்சுற்றின் தெற்கு வழி. சேத்ரபாலர் கோயில் அதே வெளிச்சுற்றின் கிழக்குக் கோபுரத்தை அடுத்துத் தென்பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிச்சுற்றின் மேற்குப்பகுதி ஆளரவமற்ற காடாய் உருவாகியுள்ளது. இந்தக் காட்டுப்பகுதியில் இடிந்து சிதைந்த கோயிலொன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஊர்வனவற்றிற்கு அஞ்சியபடியே இந்தப்பகுதி முழுவதையும் கல்வெட்டுகளுக்காய்க் காண்ணாய்வு செய்த அந்தச் சில மணித்துளிகள் மறக்க முடியாதவை. நல்லவேளை, பாதிப் பகுதியில் இருக்கும்போதே கையில் அரிவாளுடன் ரவி வந்துவிட்டார். இரண்டாம் சுற்று காடாயில்லை என்றாலும், கேட்பாரற்ற பகுதிதான். இதை மூன்றாம் சுற்றிலிருந்து பிரிக்கும் நெடுஞ்சுவர் தென்மேற்கு மூலையில் நீளவிரிசல் விட்டிருந்தும் ஏதோ ஓர் அதிசய சக்தியால் விழுந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் சுற்றுக்குள் நானும் நளினியும் தடம் பதித்தபோது கோயில் மூடப்பட்டுவிட்டது. அதனால் ஆளரவமில்லை. இச்சுற்றின் தெற்குச் சுவர் கீழ்ப்பகுதி முழுவதும் கல்வெட்டுகள்தான். தென்மேற்கு மூலையில் தொடங்கிச் சுவரின் தென்கிழக்கு விளிம்புவரை வெள்ளைப் பிள்ளையாருக்கு மூன்றாம் இராஜராஜர், பிற்பாண்டியர் காலச் சமுதாயம் வழங்கிய கொடைகளின் பதிவுகள் தொடர்களாய் வெட்டப்பட்டுள்ளன. இலேசான பசி! மணி ஒன்றாகிவிட்டது. பத்மனாபன் உணவு கொணரக் குடந்தை சென்றிருந்தார். நெடுக நடந்தபடி நளினி மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டைப் படித்துச் சொல்ல நான் ஆசிரியர் பின் மாணவனாய் அப்படியே எழுதிக்கொண்டு தொடர்ந்தேன். அப்போதுதான் என் கண்களில் சிக்கியது அந்த ஆந்தை. இரண்டாம் சுற்றின் நெடிய தென்சுவரின் மேற்புறத்தே அமைந்திருந்த பொந்தின் விளிம்பில் கால்களை இருத்தியபடி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த ஆந்தை. எனக்குச் சங்கப் பாடல்கள்தான் நினைவிற்கு வந்தன. நளினி திருவாய் மொழிந்தருளியவற்றை எல்லாம் காகித நாயகமாய் என் கைகள் எழுதிக்கொண்டிருந்த போதும், நினைவுகள் சங்கக் குகைகளிடம் திசைமாறியிருந்தன. நளினி கல்வெட்டின் தென்கிழக்கு மூலைச் சொல்லைப் படித்துவிட்டுச் சுவரின் தென்மேற்குப் பகுதிக்கு வந்தார். நானும் ஆந்தையைப் பார்த்தபடியே அவரைப் பின் தொடர்ந்தேன். 'மேற்குச் சுவரில் கல்வெட்டிருக்கிறதா பார்ப்போம்' என்றபடி நளினி மேற்கில் மறைந்தார். 'ஏதோ சொல்கிறாரே' என்று ஆந்தையிடமிருந்து பார்வையைப் பறித்துத் திருச்சுற்றில் பதித்தபோதுதான் நளினி மேற்கில் சென்றுவிட்டது தெரிந்தது. விரைவாக நானும் மேற்குப் பகுதிக்கு வந்தேன். அங்கேயும் கல்வெட்டுகள் இருப்பதை இருவரும் பார்த்துக்கொண்டிருந்த போது எனக்கு சட்டென்று ஆந்தையின் நினைவு வந்தது. தென்மேற்கு மூலைக்கு வந்து எட்டிப் பார்த்தேன். பொந்து காலியாக இருந்தது. ஆந்தை உள்ளே போய்விட்டதென்று நினைத்தபடி சுவரைக் கண்களால் அளாவினேன். என்ன வியப்பு வாருணி, சுவரின் உச்சியைத் தாண்டிக் கிளைத்து வளைந்திருந்த மூன்றாம் சுற்றின் மரக்கிளையொன்றில் மேற்குச் சுற்றில் பார்வை பரவக்கூடிய நிலையில் அமர்ந்தவாறு அந்த ஆந்தை எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது. எனக்குக் கபிலரின் குறுந்தொகைப் பாடல்தான் நினைவிற்கு வந்தது. 'யாரும் இல்லை தானே கள்வன் தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ தினைத்தாள் அன்னசிறுபசுங் காஅல ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே' (குறுந். 25) 'மணந்ததை மறுக்கும் காதலன், களவு மணம் செய்தபோது அங்கு யாருமில்லை, அந்தக் கொக்கைத் தவிர. நான் என் செய்வேன்?' என்று தோழியிடம் குமுறிய இந்த சங்கத் தலைவியைப் போல் வெள்ளைப் பிள்ளையாருக்குரிய பதின்மூன்றாம் நூற்றாண்டு கொடைக் கல்வெட்டுகளை இரக்கமற்ற திருப்பணியாளர்களின் சிதறடிப்புகளுக்கிடையே இடமறிந்து, வரியறிந்து, தேடித்தேடி மேற்கிலிருந்து கிழக்கிற்கும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் நடையாய் நடந்து கத்திரி வெயிலில் காய்ந்தபடியே படித்தோமே, எங்கள் துன்பத்தைப் பார்த்தவர் யார்? அந்த ஆந்தையைத் தவிர என்று கூறத் தோன்றியது எனக்கு! நல்லவேளை வாருணி, இந்த வெயில் சிந்தனைகள் வளர்வதற்குள் உணவு வந்து விட்டதை அறிவிக்குமாறு போல் பத்மனாபனின் 'முறுவல் முகம்' கிழக்கில் உதயமானது. அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |