![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 12
![]() இதழ் 12 [ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
வலஞ்சுழிப் பயணங்கள்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் திருவலஞ்சுழி சேத்ரபாலர் கோயிலில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுள் மாமன்னர் முதலாம் இராஜராஜரின் பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் குறிப்பிடத்தக்கது. இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் இராஜராஜரின் சோழப் பேரரசு வடக்கில் கலிங்கந் தொட்டுத் (ஒரிஸ்ஸா) தெற்கில் இலங்கையை வளைத்திருந்தது. மேற்கில் கங்கபாடி, நுளம்பபாடி, தடகைபாடி, குடமலைநாடு எனக் கர்நாடகத்தின் பெரும்பகுதி அவராட்சியின் கீழ் அரவணைக்கப்பட்டிருந்தது. அரசுப் பொறுப்பேற்ற பதினெட்டு ஆண்டுகளுக்குள் ஏறத்தாழத் தென்னிந்தியா முழுமையையும் ஒரு குடைகீழ்க் கொணர்ந்திருந்தார் இராஜராஜர். அரசியல் காரணங்களுக்காகப் பலநாட்டு இளவரசிகளை மணந்திருந்த இப்பேரரசரின் பட்டத்தரசி உலகமாதேவி, காவிரியின் வடகரையில் குடமூக்கு என அந்நாளில் தமிழ் மணக்க அழைக்கப்பெற்ற இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் திகழும் வலஞ்சுழிக் கோயில் வளாகத்தின் தென்புறத்தே சேத்ரபாலருக்கென்று கற்களால் ஒருதள விமானமொன்றை எடுப்பித்தார்.
பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ள இவ்விமானத்தின் கிழக்கிலும் வடக்கிலும் வெட்டப்பட்டிருக்கும் இந்தப் பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுப் பதினான்கு வரிகளைக் கொண்டுள்ளது. இப்பதினான்கு வரிகளுள் ஒவ்வொரு வரியும் அச்சில் A4தாளில் ஆறுவரிகள் வருமளவு நீளமானவை. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கல்வெடுகள் போல் இக்கோயிலுக்குத் தரப்பட்ட பல்வேறு பொருள்களைப் பட்டியிலிடும் இக்கல்வெட்டு, இதுநாள்வரையிலும் படியெடுக்கப்பட்ட சோழர் கல்வெட்டுகளில் காணப்பெறாத சில புதிய தகவல்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையிலும் கிடைத்துள்ள சோழர் கல்வெடுகளுள் ஆணைப் பதிவுகளாக அமைந்தவை அரசர்களின் மொழிவுகளே. இதற்கு விதிவிலக்காக இருப்பது திருவையாற்று உலகமாதேவீசுவரத்தில் வெட்டப்பட்டிருக்கும் முதலாம் இராஜராஜரின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு எனலாம். பட்டத்தரசி உலகமாதேவியின் ஆணையைப் பதிவு செய்துள்ள இக்கல்வெட்டினும் காலத்தால் முற்பட்ட ஆணைப்பதிவாக அமைந்துள்ளது சேத்ரபாலர் கோயில் கல்வெட்டு. 'தந்தி சத்தி விடங்கியாரான நம்பிராட்டியார் ஒலோகமாதேவியார் எடுப்பித்தருளின சேத்ரபால தேவர்க்கு, இவர் குடுத்த பொன்னின் ஆபரணங்களும் வெள்ளியின் பரிகலமும் வெண்கலமும் செம்பும் தராவும் உள்ளனவெல்லாம் கல்லில் வெட்டுக என்று நம்பிராட்டியார் அருளிச் செய்ய' எனும் கல்வெட்டின் தொடக்க வரிகள் குறிப்பிடத்தக்கவை. சோழப் பேரரசில் அரசியர்தம் அலுவல்களைக் கவனிக்கவென்றே தனிச் செயலகம் இருந்தது. உலகமாதேவிக்கும் அத்தகு அலுவலர் அமைபிருந்ததைக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கட்டி அருமொழி என்பார் பட்டத்தரசிக்கான காரியங்களை ஆராய்கின்ற 'கன்மி'யாக இருந்தார். பாச்சயன் உதயமார்த்தாண்டன் தேவியின் கண்காணிக்கணக்காகப் பதவிவகித்தார். இவர்கள் இருவருடன் இணைந்து குடந்தை சபை வாரியர்கள் கவிணியன் சங்கர திவாகரன், கவிணியன் இளைய நக்கன், மாடலன் சோமன் வாமனன் ஆகியோர், பேரரசியார் சேத்ரபாலர் கோயிலுக்கு அளித்த பொருட்களை அவ்வவற்றின் நிறை பார்த்து உரியவாறு கல்வெட்டாகப் பதிவுசெய்தனர். பொன், வெள்ளி இவற்றின் நிறை பார்க்கக் குடிஞைக் கல்லும் பிற உலோகப் பொருட்களின் நிறை பார்க்கத் துலாக்கோலும் ப்யன்படுத்தப்பட்டன. உலகமாதேவியார் சேத்ரபாலருக்கு அளித்த அணிகலன்களை விவரைக்குமிடத்து அவை செய்யப்பட்டிருக்கும் பொன்னின் அளவுடன், அவற்றில் இடம்பெற்றிருக்கும் பிற விலையுயர்ந்த கற்களின் எண்ணிக்கை, தரம் ஆகியனவும் குறிக்கப் பெற்றுள்லன. நகையில் கற்கள் இடம்பெற்றிருப்பதைச் சுட்ட, 'ஏறின, கட்டின, கோட்த' எனும் சொற்கள் பெயப்பட்டுள்ளன. அணிகலனிலுள்ள முத்துக்களைக் குறிப்பிடும்போது 'கோத்த' எனுஞ்சொல்லே பெருவழக்காகப் பயின்றுவந்துள்ளது. 'கட்டின, ஏறின' எனுஞ்சொற்கள் பிறவகைக் கற்களின் இருபைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டில் முதல் அணிகலனாகக் குறிக்கப்படுவது திருமாலை. இதில் தாலிநாயகன் உட்படத் தாலி இருபத்தைந்து இருந்தனவெனத் தெரிகிறது. இதைச் செயப் பதினான்கு கழஞ்சுப் பொன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாலையில் 64 நன்முத்துக்களும், 66 மாணிக்கக் கற்களும் பச்சைக் கற்கள் 38ம், வைரக் கற்கள் 2ம் சேர்க்கப்பட்டிருந்தன. இது தவிர திருமுடி, நெற்றிப்பட்டம், முத்துக்குதம்பை, சாணம், தோள்வளை, திருக்காற்காறை (கால் கவசம்), முத்துச்சரி, வட்டமணி, பொற்பூ அகியனவும் வழங்கப்பெற்றுள்ளன. இவையனைத்துமே பொன்னால் செய்து விலையுயர்ந்த கற்கள் சேர்க்கப்பட்டவை. சேத்ரபாலருக்குச் சுடர்முடியாக அமைந்த அணிகலன் பத்தொன்பது கழஞ்சுப் பொன்னில், 182 முத்துக்கள், 8 மாணிக்கம் சேர்த்து உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வணிகலன்களுக்காகச் செலவழிக்கப்பட்ட மொத்தப் பொன்னின் அளவு 142 கழஞ்சு 6 மஞ்சாடி. இவ்வணிகலன்களில் கோக்கப்பட்ட முத்துக்களின் எண்ணிக்கை 3796. மாணிக்கம் 400. பச்சை 131. வைரம் 77. பவழம் 2. சேத்ரபாலர் கோயிலுக்கு உலகமாதேவி அளித்த வெள்ளியாலான் அபொருட்களாய்த் தளிகை ஒன்றையும் மடல் ஒன்றையும் சுட்டும் இக்கல்வெட்டு, வெண்கலப் பொருட்களை அடுத்த நிலையில் கூறுகிறது. இவ்வெண்கலப் பொருட்கள் அனைத்தும் பழையாற்றுத் துலாக்கோலால் நிறுக்கப்பட்டவை.
(செம்பின்மேல் பொன் கடிக்கின பாவைக் கண்ணாடி ஒன்று, இப்பேரரசியால் திருவையாற்று உலோகமாதேவீசுவரத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை இங்கு நினைவுகூரத் தக்கது SII 5:21) வெண்கலத்தை அடுத்துச் செப்பும் தராவும் கொண்டு செய்தளிக்கப் பெற்ற பொருட்களைப் பட்டியலிடும் கல்வெட்டு, முதல் நிலையில் செப்பு மூக்கு மத்தளியைக் குறிப்பிடுகிறது. இத்தகு செப்பு மூக்கு மத்தளி மிக அரிதாகவே தமிநாட்டுக் கோயில்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையிலுள்ள நெடுங்களநாதர் கோயிலில் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டொன்று அக்கோயிலில் இத்தகு செப்பு மூக்கு மத்தளிகள் பயன்பாட்டில் இருந்தமையைக் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.
செப்புக் கறிக்கால்கள் செம்பிலான முக்காலிகளே என்பதை, 'செப்புக் கறிக்காலில் தலை நிறை செப்பு ஐம்பத்தைம்பலம் இதில் கால் மூன்றினால் நிறை நூற்று நாற்பத்தைம்பலம்' எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. தலைபகுதி மட்டும் செம்பால் செயப்பட்டுக் கால்களை கலப்பு உலோகமான தராவால் (செம்பும் காரீயமும் கலந்த உலோகம்) செய்தும் பயன்படுத்தியுள்ளனர். முழுமையும் தராவால் செய்யப்பட்ட கறிக்கால்களும் பயன்பட்டுள்லன. தராவில் செய்தளிக்கப்பட்ட பொருட்களாகப் பதினான்கு உள்லன.
(இவற்றையும் சேர்த்துக் கி.பி. 1003ல் சேத்ரபாலர் கோயிலில் மட்டும் எட்டு முக்காலிகள் இருந்துள்ளன. ஆனால் இன்றோ வலஞ்சுழிப் பெருங்கோயில் வளாகம் முழுமைக்கும் ஒரு காலி (முக்காலி, நாற்காலி) கூட இல்லை என்பது வேதனையான உண்மை. செம்பில், தராவில் என்றில்லை, மரத்தாலான காலிகூட இல்லை.) சேத்ரபாலர் கோயிலுக்கு உலகமாதேவியால் அளிக்கப்பட்டிருக்கும் விளக்குகள் அனைத்துமே தனித்தன்மையன.
இவற்றுள் மலையான் விளக்கு, மலையாண் சியல் விளக்கு ஆகிய இரண்டும் கேரளத்து விளக்குகள். ஈழச்சியல் விளக்கு இலங்கை நாட்டு விளக்கு. விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே இத்தகு சிறப்பு விளக்குகள் பயன்பட்டுள்ளன (SII 5:521; 7:958) உலகமாதேவி சேத்ரபாலருக்கு அளித்த இவ்விளக்குகள் அனைத்திற்கும் அவற்றின் உயரம், பாதத்தின் சுற்றளவு, தலைப்பகுதியின் அகலம் ஆகிய அளவுகள் தரப்பட்டுள்லன. தமிழ்நாட்டுக் கல்வெட்டு வரலாற்றில், 'தோழி விளக்கு, பாவை விளக்கு' எனும் தொடர்கள் இடம்பெறும் முதற் கல்வெட்டாக இதைக் கருதலாம். பாவை விளக்கின் அளவுகளைச் சுட்டுமிடத்து, 'உயரம் முச்சாண் தோளும் முலையும் உட்படச் சுற்றுச் சாணே எழுவிரல்' என்று கல்வெட்டுக் குறிப்பிடுவது உவந்து கவனிக்கத்தக்கது. 'தோழி விளக்கு' எனும் தொடர் எந்த விளக்கைக் குறிபிடுகிறது என்பதை அறியக்கூடவில்லை. சோழியச்சியல் விளக்கென்ற பெயரில் ஒரு விளக்கைத் திருவையாற்றுக் கல்வெட்டுக் குறிப்பிடுவது (SII 5:521) இங்கு எண்ணத்தக்கது. விளக்குகளுடன் ஆர்குடத் தூபக்கால் ஒன்றும் உலகமாதேவியால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தரசியின் பெண்டாட்டியருள் (பணிமகள்) ஒருவராக இருந்த சுப்பிரண் வீராணி ஆர்குடத்தால் கலசப்பானை ஒன்று வழங்கியமையைக் கூறுவதுடன் இப்பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு முற்றுப்பெறுகிறது. ஆனால் இதஞ் தொடர்ச்சியாக இராஜராஜரின் இருபத்தெட்டாம் ஆட்சியாண்டில் உலகமாதேவி சேத்ரபாலருக்குத் தந்த அணிகலன்கள் சில பதிவு செய்யப்பட்டுள்லன. திருக்கால்காறை இரண்டும் (கால் கவசம்) திருக்கைக் காறை நான்கும் (கைக்கவசம்) கழுத்திற்கு மணிவடம் இரண்டும் தேவியால் வழங்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வழங்கப்பெற்ற பொருட்களை ஆவணப்படுத்தும் நோக்கிலேயே இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்லது. எனினும், இதன் வழி அறியப்படும் வரலாற்றுத் தரவுகள் ஒன்றிரண்டல்ல. தமிழர்தம் கனிம வளம், உலோகவியலில் அவர்கள் பெற்றிருந்த திறன், இறை வழிபாட்டுச் சிந்தனைகள், அழகியல் நோக்குகள், அயல்நாட்டுத் தொடர்புகள், பெண்ணரசியருக்கு இருந்த உரிமைகள், அவர்தம் ஆளுமை, தம்கொடைகளைச் சுட்டும் கல்வெட்டில் தம் பணிமகள் கொடையையும் சேர்த்தெழுத வைத்த பெருந்தன்மை என வெளிப்படும் செதித்திரள், ஒவ்வொரு கல்வெட்டிலும் தடுவார் திறனுக்கேற்பத் திறக்குமாறு கதவுகள் அமைத்த நம் முன்னோரின் மாண்புக்கு வெளிச்சமிடுவதை யாரே மறுக்க முடியும்?this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |