http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 12
இதழ் 12 [ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தமிழகத்துத் திருகோயில்கள் நம்முடைய வரலாற்றின் விடிவிளக்குகள். நம் முன்னோர் பின் வரும் தலைமுறைகளுக்காக வடித்து வைத்த கலைப் புதையல்கள். அளப்பரிய ஆர்வமும் நெஞ்சுநிறை நேயமும் கொண்டு நினைத்து நினைத்து அவர்கள் எழுப்பி வைத்த திருக்கோயில்களுள் பல இன்றும் மனித நடமாட்டமின்றி மருகிக்கிடக்கின்றன. எத்தனையோ கோயில்கள் பராமரிப்பின்றி அழிந்துவிட்டன. நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. வாழும் தலைமுறைகளும் வளரும் தலைமுறைகளும் வாழ்ந்த தலைமுறைகளின் அடையாளச் சின்னங்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது வேதனையூடுகிறது. கோயில்களை விட்டு நெடுந்தொலைவு நடந்துவிட்ட இன்றைய சமுதாயத்திற்கு அவை எப்படியெல்லாம் வாழ்க்கையோடு தொடர்புடையவை, எந்த அளவிற்கு நம்மை அடையாளம் காட்டவல்லவை என்பதை விளங்க வைக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் எளிய முயற்சிதான் கோயில்களை நோக்கி என்னும் இந்தத் தொடர். பத்துத் தலைப்புகளில் இதன் உள்ளீடு அமையும்.
அடையாளங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன தமிழகம் திருக்கோயில்களின் தாயகம். திரும்பிய திக்கெல்லாம் விண்ணை முட்டும் கோபுரங்களும், வானளாவிய விமானங்களுமாய் இறைக்கோயில்கள் தமிழர் தம் கலைத்திறமைகும் இறைப்பற்றுக்கும் இலகியங்களாகி இலங்க்குகின்றன. இத்திருக்கோயில்களை எடுப்பித்ததன் மூலம் காலத்தால் அழியாத புகழ் இமயத்தைத் தொட்டவர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்கள். இவர்கள் உருவாக்கிய எழிற்கோயில்களின் வகைகளும், வளங்களும் சுந்தரத் தமிழ்லும் சொல்லி விளக்கமுடியாத சுகந்த நினைவுகள். இறைக்கோயில்களை வகைவகையாய்க் கட்டி முடித்ததன் அடிப்படைக் காரணம் இறைப்பற்றை வளர்க்கவும் வாழ்க்கை நெறிகளை ஒழுங்குபடுத்தவும்தான் என்றாலும், கோயில்கள் அவற்றை மட்டும் செய்யும் களங்களாகவா இருந்து வந்தன? வரலாற்று வரிகள் கோயில்களைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் எப்படி வியந்து பேசுகின்றன! தமிழ்ப் பெருங்குடி மக்களின் தொலைநோக்குப் பார்வையையும், சீரான சிந்தனையாற்றலையும் ஒவ்வொரு கோயிலையும் ஒரு பல்கலைக்கழகமாக, பதிவகமாக, ஊர் கூடி உரையாடும் பொதுமன்றமாக, கலை பல வளர்க்கும் கவினுறு வளாகமாக அவர்கள் அமைத்துப் போற்றிய திறமைகளின் உச்சத்தையும், ஒவ்வொரு வரலாற்று ஆசிரியரின் பேனா முனையும் உற்சாகச் சொற்களால் மாலைதொடுட்த்ஹு, சிகரத்தின் உயரத்தில் சிறக்கத் தூக்கிவைத்தல்லவா பாராட்டிப் போற்றுகின்றன. கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள்தான் என்று எண்ணும் உள்லங்கள் இன்றும் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு கோயிலும் இந்த நாட்டின் ஆதார வேர் என்பதைத் திறந்த கண்களும் கருத்துக் கூர்மையும் உள்ளவர்கள் தெளிவாய்த் தெரிவார்கள். ஏறத்தாழ ஆயிரத்து முந்நூறு ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றை நமக்கு முறைப்படுத்தித் தருவதே கோயில்கள்தான். இந்தக் கோயில்களின் சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகள்தான் தமிழ்நாட்டு வரலாற்றின் தலைவிதியையே நிர்ணயிக்கின்றன. இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாய அமைப்பு, பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்று ஒரு நாடு பற்றிய அத்தனை செய்திகளையும் அடுக்கடுக்காய் வழங்கும் கல்வெட்டுகளைக்க்கோயில்கள்தான் கொண்டிருக்கின்றன. ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாய்த் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்து மலர்ந்த கலைகளின் வெளிப்பாடுகளை நமக்குச் சத்தியச் சான்றுகளாய் விளக்கி நிற்பவை இந்தத் திருக்கோயில்கள்தானே? காணும் போதெல்லாம் நெஞ்சில் ஓர் அளப்பரிய வியப்புணர்வை மலர்த்தி, கற்பனைக் கோடுகளில் காலகட்டங்களை நகர்த்தி எத்தனையோ எண்ண மாலைகளைத் தொடுத்துப் போடும் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் வானளாவிய விமானம் இல்லையென்றால் இராஜராஜன் காலத்துக்கட்டடக்கலை அற்புதங்களை அறியப்போவது எப்படி? அந்த விமானச் சுவர்களில் புதையலைப் போல் பொறித்தும், தீட்டியும் வைத்திருக்கிறார்களே ஆடற்கரணச் சிற்பங்களும் அழகழகான ஓவியங்களும்! அவற்றை வைத்துக் கொண்டுதானே மார்தட்டி மகிழ்கிறோம், 'பார் பார் பத்தாம் நூற்றாண்டில் தமிழன் வாழ்ந்த வாழ்க்கையை' என்று. பழங்கதைகள்தான்! என்றாலும் பெருமைக்குரியவைகள்தானே! இந்த மண்ணின் பாரம்பரியச் சுவடுகள்தானே. இவையெல்லாம் நம்மால் போற்றிக் காக்கப்பட வேண்டாமா? நாம் பார்த்து மகிழ்ந்த இந்த மகத்தான சாதனைகளை, மறக்கமுடியாத வரலாற்றுப் பேழைகளை நமக்கடுத்த வழியினருக்குப் போற்றிப் பாதுகாத்து வழங்க வேண்டியது நம் தலையாய கடமையல்லவா! இந்த கடமையின் ஆழத்தை நாம் எத்தனைச் சரியாக விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போதுதான் வேதனையால் விழிகள் குளமாகின்றன. சங்க காலத்திலிருந்து இற்றை நாள் வரை எத்தனையோ கோயில்களைப் பல்வேறு காரணங்களுக்காகப் பறிகொடுத்திருந்த போதும், இருக்கும் கோயில்களையவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்னம் ஏன் இந்த நாட்டில் தோன்றவேயில்லை என்பது துன்பம் தரும் வியப்பாகவே இருந்து வருகிறது. சுவடழிந்து போன கோயில்களைச் சுட்டிக்காட்டிச் சிந்தனையைத் தூண்டிய பிறகும் அழிந்துகொண்டிருக்கும் அழகுக் கோயில்களை அரவணைக்கலாம் அல்லவா. ஆர்வமும் வேகமுமாய் ஆயிரம் ஆயிரமாய் எழுந்த கோயில்களில் எத்தனை இன்று அழிவின் அச்சாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றன என்பதைக் கணக்கெடுத்துப் பார்க்கும்போது சமுதாயத்தின் கவனிப்பின்மையை எப்படி நோவதென்றே தெரியவில்லை. நம்மை நமக்கு அடையாளம் காட்டவல்ல இந்த வரலாற்றுச் சீதனங்கள், இன்று வாழ்க்கைப் போக்குகள் மாறிவிட்ட காரணத்தால் சீரழிந்துகொண்டிருக்கும் நிலைமைகளை ஒரு சான்று கொண்டாவது விளங்கிக் கொள்ள முயல்வோம். சோழர் கோநகரமாய் விளங்கிய பழையாற்றில், பஞ்சவன்மாதேவீசுவரம் என்றொரு கோயில்! கடல்கடந்து தமிழ் பரப்பிய முதலாம் இராஜேந்திர சோழர் தம் தாய்க்காக எழுப்பிய பள்ளிப்படைக் கோயில். முதலாம் இராஜராஜரின் மனைவியும் முதலாம் இராஜேந்திரரின் சிற்றன்னையுமான இப்பெருமாட்டி பழுவேட்டரையர் குலவிளக்கு. இவரது மறைவுக்குப் பிறகு இவரைப்பள்ளிப்படுத்திய இடத்தில் பாசத்தோடு இராஜேந்திரரால் எடுக்கப்பட்டதுதான் பஞ்சவன்மாதேவீசுவரம். தாய்க்காக மகன் எடுத்த இந்தப் பாசக் கோயிலின் இன்றைய நிலை என்ன? தமிழகத்திலேயே பெண்ணுக்காக எழுப்பப்பட்டு, இன்றளவும் நிலைத்து நிற்கும் ஒரே பள்ளிப்படைக் கோயில் இதுதான். தாய்மையைப் போற்றும் இந்த நாட்டில், ஒரு தாய்க்காக எழுந்த இந்த ஆலயம் எத்தனை பாராட்டையும் பரிவையும் பெற்றிருக்க வேண்டும்! எப்படிப்பட்ட அருஞ்சொத்தாய் இக்கோயில் போற்றிக் காக்கப்பட்டிருக்கவேண்டும்? ஆனால் நடந்து கொண்டிருப்பதென்ன? தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் நாணித் தலைகுனிய வேண்டிய நிலையில் அல்லவா இக்கோயில் ஆடுகளின் மேய்ச்சல் நிலமாய், அருவருக்கத்தக்க பழக்கமுள்ளோர்க்குப் புகலிடமாய், சுற்றிலும் வயல்கள் சூழ, ஒதுக்கப்பட்ட நிலையில், யாருக்கும் அக்கறையில்லாமல் போனதால் மதில்கள் சிதறி, மாடங்கள் இடிந்து, கட்டடம் கீறல்விட்டு, சிற்பங்கள் அழிந்து புயலடித்துவிட்டுப்போன பெருநகர் போல அழிவின் அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டு நிற்கிறது. இந்த மண்ணின் பண்புகளை வளர்க்கவும் கலையுணர்வைக் காக்கவும் சமயப் பேருண்மைகளை மக்களின் உள்ளங்களில் விதைக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கை நெறிகளை வளப்படுத்தவும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழகத்தையாண்ட பல மரபுப் பேரரசர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அத்தனையையும் சேர்த்தளித்து ஆக்கி வைத்த இது போன்ற அழகுக் கோயில்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம்? தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசிக்கொண்டு, அந்த தமிழ் நாகரிகச்சின்னங்களை அழிவென்னும் பெருந்தீயில் கூசாமல் தள்ளிவிடும் கொடிய மனம் எப்படி வந்தது? நம்மையும் மீறிய இறையுணர்வு எங்கே போய்விட்டது? கோயில்கள் இந்த மண்ணின் பண்பாட்டுக் களங்கள் என்பதும், அவை வரலாற்றுக் கலங்கரை விளக்கங்கள் என்பதும் ஏன் மறந்து போயிற்று? வெட்கமும் வேதனையும் தலைகுனிய வைக்கின்றன. எப்படி வாழ்ந்த கோயில்கள்! இன்று வௌவால்களின் விளையாட்டுக் கூட்டங்களாக, இயற்கையழைப்புக்கு மக்கள் இசையும் கழிப்பிடங்களாக, பிழைப்பற்றோர் படுத்துத் தூங்கும் திண்ணைகளாக இக்கோயில்கள் நிலைமாறிப் போனமை எத்தனை துன்பமானது! மண்ணில் வளரத் தயங்கும் செடி, கொடி, மரங்கள் கோயில்களில் எப்படிச் செழித்து வளர்கின்றன! கவனிப்பார் யாருமில்லாக் கொடுமையால் இவ்வளர்ச்சி கோயில்களின் அமைப்பையே சிதைத்துவிடுவதை என்றுதான் நாம் உணரப் போகிறோம்? இறையுணர்வும் கலையுணர்வும் கொண்டு இக்கோயில்களைக் காப்பற்ரப்போகிறோமா அல்லது சுவடழிந்து போன சிங்காரக் கோயில்களின் வரிசையில் இவற்றையும் சேர்க்கப் போகிறோமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |