http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 174

இதழ் 174
[ ஜனவரி 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமடத்துக் குடைவரைகள்
Gajendra Moksham - A Miniature panel from Thiruvalanchuzhi
The dance of Shiva in Thiruvalangadu and karana Vishnukrantam
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 2
எலவானசூர்க்கோட்டை மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 58 (மறந்ததைக் காற்றும் மறைக்காதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 57 (நிலவென மறைந்தது நீயா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 56 (ஒருமுறை வந்து பாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 55 (நெஞ்சம் மறப்பதில்லை)
இதழ் எண். 174 > கலையும் ஆய்வும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

அரசு

பேரரசர்கள், சிற்றரசர்கள், அவர்தம் கீழிருந்த அரசமைப்புகள், நாட்டுப் பிரிவுகள், அவற்றை நிர்வகித்தவர்கள், ஊர்கள், ஊராட்சி அமைப்புகள் என அரசு பல்முனை நிர்வாகத்தில் இயங்கியது.

சோழப் பேரரசர்கள் அரசியர்

வலஞ்சுழிக் கல்வெட்டுகளுள் பெரும்பான்மையன சோழர் காலத்தவை. துணுக்குக் கல்வெட்டுகளும் பேரளவில் சோழர் எழுத் தமைதியிலும் அவர்தம் மெய்க்கீர்த்திகளின் சில வரிகளைச் சுமந்தபடியும் உள்ளன. விஜயாலயர், ஆதித்தர், கண்டராதித்தர், முதல் இராஜாதிராஜர், அதிராஜேந்திரர், இரண்டாம் குலோத்துங்கர் ஆகிய ஆறு சோழ வேந்தர்களே வலஞ்சுழியுடன் எவ்விதத் தொடர்புமின்றிக் கல்வெட்டுகளில் இடம்பெறாதுள்ளனர். அரிஞ்சயர், சுந்தரசோழர் பெயர்கள் சேத்ரபாலர் வளாகக் கல்வெட்டொன்றில் உள்ளன.

இரண்டாம் பராந்தகரான சுந்தரசோழரின் தேவியார் நக்கன் சிங்கமான வளவன் மகாதேவி, உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த செம்பியன் மாதேவி, முதல் இராஜராஜரின் பட்டத்தரசி தந்திசத்தி விடங்கியான உலகமாதேவி, முதல் இராஜேந்திர சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் திரிபுவனமாதேவி, முதல் இராஜேந்திரரின் தேவியரான வளவன் மாதேவி, கிழாநடிகள், முதல் குலோத்துங்கரின் தேவி நாராயணனான தீனசிந்தாமணி, உலக மாதேவியின் அண்னையார் குந்தணன் அமுதவல்லியார் ஆகியோர் வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் இடம்பெறும் அரசகுலப் பெண்கள் ஆவர். இவர்களுள் நக்கன் சிங்கமான வளவன் மகாதேவியும் குந்தணன் அமுதவல்லியும் இராஜேந்திரரின் தேவி வளவன் மாதேவியும் வலஞ்சுழிக் கல்வெட்டுகளின் வழிதான் முதன்முறையாக வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிற்றரசர்கள்

சோழப் பேரரசர்கள் தவிர, சேரமான் இராமபன்மர், வத்தராயர், வாணாதராயர், திருமலைதேவ மகாராயர், ஆற்காடு கிழார் சேதியராயர், திப்பரசர், தேவராய உடையார், வீரமராசர் ஆகியோர் பெயர்கள் வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவர்களுள் சேரமான் இராமபன்மர் விக்கிரமசோழரின் காலத்தவர். இவருடைய நலத்திற்காக வலஞ்சுழி இறைவனுக்குத் திருமுழுக்காட்டுச் செய்து மலர்மாலை சூட்டப்பெற்றது. செஞ்சியைச் சேர்ந்த ஞங்கொற்றன் பெற்ற நாயன் வலஞ்சுழி இறைவனுக்களித்த மனை, மனைப் புழைக்கடை தொடர்பான ஓலையில் கையெழுத்திட்டவராக வீரவிருப்பாக்ஷர் காலத் திருமலைதேவ மகாராயர் அறிமுகமாகிறார். வீரமராசர் திக்விஜயம் செய்த தகவலை, அவர் வெற்றிக்காக வேண்டி இக்கோயிலில் மண்டபம் ஒன்று எடுத்த ஊழியரின் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. திப்பரசரும் தேவராய உடையாரும் சேதியராயரும் இரண்டு சிதைந்த கல்வெட்டுகளின் வழி இக்கோயில் மதில்களை மீள உருவாக்கியவர்களாக அறிமுகமாகின்றனர்.

அரசு அலுவலர்கள்

அரசர்களின் நேரடி ஆணைகளாகப் பல கல்வெட்டுகள் அமைந் திருப்பதால் சோழப் பேரரசில் அந்நாளில் பொறுப்பில் இருந்த பல உயர் அலுவலர்களின் பெயர்களும் அவர்கள் வகித்த பொறுப்புகளும் தெரியவந்திருப்பதுடன், ஓர் அரசஆணை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும் அறியவாய்த்துள்ளது.

பேரரசரின் வாய்மொழி உத்தரவுகளைக் கேட்டு, அவற்றை ஓலையில் எழுதிய அலுவலர் திருமந்திர ஓலை என்றழைக்கப்பட்டார். முதலாம் இராஜராஜரின் இருபத்தொன்று, இருபத்து நான்காம் ஆட்சியாண்டுகளில் முறையே பட்டன் கூத்தாடி, காறாயில் பத்மநாபன் ஆகியோர் இப்பொறுப்பில் இருந்தனர். இவ்வோலையை ஒப்பிட்டு ஆராய்ந்து நடைமுறைப்படுத்த உத்தரவிட்டவர்கள் திருமந்திர ஓலைநாயகங்களாய் அறியப்பட்டனர். மும்மடி சோழ பிரமமாராயன், மும்மடிசோழப் போசன், மதுராந்த மூவேந்தவேளான் ஆகிய மூவரும் இராஜராஜரின் திருமந்திர ஓலைநாயகங்களாய் இரண்டு கல்வெட்டுகள் வழி அறிமுகமாகின்றனர்.

ஓலைநாயகத்திற்கு அடுத்தநிலையில் அதிகாரிகளும் நடுவிருக்கை அலுவலர்களும் இருந்தனர். முதல் இராஜராஜரின் இருபத்தொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் மீனவன் மூவேந்த வேளார், ஆற்றூருடையார், கணிச்சைப்பாக்கமுடையார், பராக்கிரம சோழ மூவேந்தவேளார், செம்பியன் மூவேந்த வேளார், சோழ வேளார், முந்நானை சாத்தனூருடையார், அரசூருடையார் ஆகிய எண்மர் அதிகாரிகளாக அறியப்படுகின்றனர். இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவர்களில் சிலருடன் கழுமலமுடையார், மாலங்குடையார், பரகேசரி மூவேந்தவேளார், நீடூர் கிழவன், தேவன்குடையார், திருநல்லூருடையார் ஆகிய அறுவரை அதிகாரிகளாக வெளிப்படுத்துகிறது.

இப்பேரரசர் கால நடுவிருக்கைகளாக கொட்டையூர் பூவத்த பட்டர், பசலைத் தியம்பகபட்டர், புள்ளமங்கலத்துப் பரமேசுவர பட்ட சர்வகிருதயாÍயார், கடலங்குடி தாமோதிர பட்டர் ஆகியோர் இருந்தனர். புரவுவரித் திணைக்களம் என்றழைக்கப்பட்ட நிலவரு வாய்த்துறையின் உயர் அலுவலர்களும் அதே பெயரில் புரவுவரித் திணைக்களமென்றே அழைக்கப்பட்டனர். புதிதாகக் கண்டறியப்பட்ட முதல் இராஜராஜரின் கல்வெட்டில் புரவரித் திணைக்களமாகத் திருஇந்தளூர் நாட்டு மூவேந்தவேளார் அறிமுகமாகிறார்.

புரவுவரி அல்லது புரவுவரிக் கிழவர்களாகக் கொற்றன் பொற் காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன், ஆலங்குடையான் கோதண்டன் சேந்தன், கணபதி, காமன் பழைய வேளான், சேந்தன் மல்லன், பித்திரம பூஷணன் ராமன் ஆகியோர் இருந்தனர். வரித் தரவுகளை ஓலைகளில் குறித்துப் புத்தகங்களாகத் தொகுத்துப் பாதுகாத்தவர்கள் அடுத்தநிலை அலுவலர்களாயினர். வரிப்பொத்தகம் என்றழைக்கப்பட்ட இவர்கள் வருவாய்த் துறையின் இடைநிலை அலுவலர்களாகலாம். பருத்தியூர்க் கிழவன் சிங்கன் வெண்காடன், பகவதி அங்கி ஆகியோர் இராஜராஜர் கால வரிப்பொத்தகங்களாகத் திகழ்ந்தனர்.1

முதல் இராஜேந்திரர் காலத்தில் திருமந்திர ஓலையாக இருந்தவர் இறையான்சேரி உடையார். திருமந்திர ஓலைநாயகங்களாகச் செயற்பட்டவர்கள் தீர்த்தகரனான வில்லவன் மூவேந்த வேளான், கண்டன் கண்ணன், கிருஷ்ணன் இராமனான இராஜேந்திர சோழ பிரமமாராயன், உத்தமசோழப் பல்லவரையன் ஆகியோர். உதைய திவாகரன் தில்லையாளியாரான இராஜராஜ மூவேந்த வேளார், வேளான் கூத்தபிரானான பிராந்தக மூவேந்த வேளார், தத்தன் சேந்தன், மாணிக்கன் எடுத்தபாதம் ஆகியோர் அதிகாரிகளாக அமைந்தனர். புரவுவரித் திணைக்களமாக மணற்குடையான், தலைமகன், சாக்கூரு டையான் ஆகியோர் அமைய, வரிப்பொத்தகமாகச் சிறிஞாற் கிழவன், நிலனூருடையான், செம்புறை உடையான், புன்றைக் கிழான் ஆகியோர் இருந்து அரச உத்தரவுகளை நிறைவேற்றினர்.2

இரண்டாம் இராஜேந்திரரின் திருமந்திர ஓலைகளாக இராஜராஜ பிரமமாராயரும் அபிமானமேரு பல்லவரையரும் பொறுப்பு வகித்தனர்.3 வீரராஜேந்திரர் காலத்தில் திருமந்திர ஓலையாக இருமடி சோழ விழுப்பரையர் இருந்தார். வீரபத்திரன் தில்லைவிடங்கன் வில்லவராஜன், அமலன் கருமாணிக்கப் பல்லவராஜன், இராஜேந்திர பிரமாதிராஜர் திருமந்திர ஓலைநாயகங்களாக அமைந்தனர்.4

நம்பன் பகையடக்கியான இராஜேந்திர சோழ மூவேந்த வேளார், வேளான் சீயாரூரரான மும்மடிசோழ விழுப்பரையர், வளவன் மூவேந்தவேளார், உதயதிவாகர கூத்தாடியாரான வீரராஜேந்திர மழவராயர், ஏமப்பேரூர் திருநீலகண்ட பட்டர், இராஜேந்திர கலிங்கராயர், ஆந்தையூரர் வெண்காடர், வீரராஜேந்திர மூவேந்த வேளார், இராஜராஜ கனகராஜர், இரட்டபாடி கொண்ட சோழ மூவேந்த வேளார், குன்றூர்க் கிழார் உலகநாதர் ஆகியோர் அரசு அதிகாரிகளாகச் சுட்டப் பெறுகின்றனர். நடுவிருக்கை அலுவலராகப் பணி வகித்தவர் உறுப்புட்டூர் யக்ஷஞனபட்டர். முதல் குலோத்துங்கர் கால திருமந்திர ஓலையாக சரணாலய மூவேந்த வேளார் பணிபுரிந்தார்.

மதுராந்தக ஈசுவரம் தொடர்பான உத்தமசோழருடைய வாய்மொழி ஆணையைப் பெற்ற பவ்வத்திரி கிழவன் அடிகள் நக்கனும் பேரரசூருடையான் ஆருரன் உதயதிவாகரனும் புரவுவரி அலுவலர்களாவர். இவ்வாய்மொழி ஆணையை எழுத்திட்டு திருமந்திர ஓலையாக்கியவர் செம்பன் அருளன் உத்தமநிதியான உத்தம மூவேந்த வேளார். இவ்வாணையை ஒப்பிட்டுப் பார்த்து ஒப்புதல் அளித்தவர்களாய் இருமடிசோழ மூவேந்த வேளாரும் மற்றொருவரும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளனர். இம்மற்றொரு ஓலைநாயகத்தின் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. அரசரின் செயலராகப் பருத்திக்குடையான் கோதுகுலவன் சாத்தனான பரகேசரி மூவேந்த வேளாரும் நடுவிருக்கையாகப் பசலைத் தியம்பகபட்டரும் இருந்தனர். இவர்கள் இருவரும் இந்த ஆணைக்கு ஆணத்திகளாக விளங்கினர்.

அரசாணையின் பிறப்பும் செயலாக்கமும்

வலஞ்சுழிக் கல்வெட்டுகளாய் மலர்ந்துள்ள அரசாணைகளுள் முதல் இராஜராஜருடையன மூன்று. அவற்றுள் இரண்டு, வடதமிழ் நாட்டுப் பகுதியிலுள்ள தீக்காலிவல்லம் எனும் ஊரின் தென்புறத்திருந்த அரண்மனையின் உள்மாளிகை மேற்குக் கல்மேடையில் இராஜராஜர் பரிவட்டம் சார்த்தி இருந்தபோது பிறப்பிக்கப்பட்டவை.5 மூன்றாவது அரசாணை மன்னரின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டின் இருநூற்று எண்பத்தைந்தாம் நாள் பேரரசர், தொண்டைமான் ஆற்றூர் உள்ளிருக்கைக் காவணத்தில் இருந்தபோது பிறப்பிக் கப்பட்டதாகும்.6 இவைதவிர, தஞ்சாவூர் அரண்மனையின் உட்பகுதியில் வெளியந்தப்புற வாயிலில் தெற்கில் மண்டபத்தில் இராஜராஜர் இருந்தபோது நிகழ்ந்த நிலவிற்பனைகள் பற்றிய தகவலாகவும் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது.7

முதல் இராஜேந்திரரின் ஆணை, அவர் வலஞ்சுழிக் கோயிலின் வியாள கஜமல்லன் நந்தவனத்திலிருந்த காவணத்தில் உணவருந்தியபோது பிறப்பிக்கப்பட்டதாகும்.8 இரண்டாம் இராஜேந்திரரின் அரசாணை அம்மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டின் இருநூறாவது நாளில், மன்னர் கங்கை கொண்ட சோழபுரத்துக் கங்கை கொண்ட சோழன் மாளிகைத் திருமஞ்சணசாலையில் பள்ளிப்பீடம் காலிங்க ராஜனில் எழுந்தருளியிருந்தபோது பிறப்பிக்கப்பட்டதாகும்.9 மதுராந்தக ஈசுவரத்திற்கான நிவந்த ஒதுக்கீடு பற்றிப் பேசும் உத்தமசோழரின் ஆணை மன்னர் காஞ்சிபுரத்து அரண்மனையில் இருந்தபோது பிறப்பிக்கப்பட்டதாகும்.

இவ்வாணைகள் தவிர, இரண்டாம் இராஜேந்திரர், முதல் குலோத்துங்கர், விக்கிரம சோழர், திருமலைதேவ மகாராஜர் திரு முகங்களும் இக்கோயிலாரால் பெறப்பட்டுள்ளன.10 இனி ஓர் அரசாணை எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதைக் கல்வெட்டுகளின் துணையுடன் விரிவாகக் காணலாம்.

முதல் இராஜராஜர் தம்முடைய இருபத்தொன்றாம் ஆட்சியாண்டின் முந்நூற்று நாற்பதாம் நாள் தீக்காலிவல்லம் அரண் மனையில் இருந்தபோது, இன்னம்பர் நாட்டு ஒதியன்குடி, தத்தன்குடி ஊர் நிலங்களிலிருந்து வரியாகக் கட்டப்பட்ட நானூற்று முப்பத்தொன்பது கலம் எழு குறுணி இருநாழி நெல்லை வலஞ்சுழி வாணர் கோயில் நிவந்தங்களுக்குத் தருவதாகவும் அதைத் தம் இருபத்தொன்றாம் ஆண்டு முதல் தேவதான இறையிலியாக வரியிலிட்டுக் கொள்ளலாம் என்றும் திருவாய் மொழிந்தருளினார். மன்னரின் இந்த வாய்மொழி உத்தரவைப் பெற்ற திருமந்திரஓலை அலுவலர் திரைமூருடையான் பட்டன் கூத்தாடி அதற்கு எழுத்து வடிவம் தந்தார். ஓலையில் எழுதப்பெற்ற இந்த அரசாணையைத் திருமந்திர ஓலைநாயகம் எனும் பொறுப்பிலிருந்த மூன்று உயர் அலுவலர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்து ஒப்புதலளித்தனர்.

அவர்கள் ஒப்புதல் வழங்கியவாறே நில வருவாய்த்துறையான புரவுவரித் திணைக்கள அலுவலர்கள் அவ்வாணையை நடைமுறைப்படுத்தலாம் என, 'அதிகாரிகள்' என்றழைக்கப்பட்ட அடுத்தநிலை அலுவலர்கள் அனுமதியளித்து உத்தரவிட்டனர். இத்தகு அதிகாரி களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆணைப்பதிவிலும் மாறுபட்டு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புரவுவரித் திணைக்களத்திற்கு உத்தரவிடும் இப்பணியை அதிகாரிகளுடன் நடுவிருக்கை அலுவலர்களும் பகிர்ந்துகொண்டனர். வலஞ்சுழி ஆணைகள் வழி வெளிப்படும் இராஜராஜர் கால நடுவிருக்கை அலுவலர்கள் அனைவருமே அந்தணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே அதிகாரிகளுள் பெரும்பான்மையோர் வேளாளர்களாக இருந்தமையும் இவ்வாணைக் கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

அதிகாரிகளாலும் நடுவிருக்கை அலுவலர்களாலும் உத்தர விடப்பட்ட நிலையில், புரவுவரி என்றும் புரவுவரிக் கிழவரென்றும் அறியப்பட்ட வருவாய்த்துறை இடைநிலை அலுவலர்கள் வருவாய்ப் பதிவேடுகளில் மன்னர் ஆணையை உரியவாறு பதிவுசெய்து அதன்படி வரியிலிட்டுக் கொள்ளுமாறு வரிப்பொத்தக அலுவலர்களுக்குக் கட்டளையிட்டனர். வரிப்பொத்தக அலுவலர்கள் அக்கட்டளையைத் தலைமேற்கொண்டு நிறைவேற்றினர். வாய்மொழிவிலிருந்து வரியிலிடுதல் வரையிலான இத்தகு ஆறு நிலைகளைக் கடந்து நடைமுறைக்கு வரும் அரசாணை, இப்படிநிலைகளைக் கடக்க எடுத்துக்கொண்ட கால இடைவெளி ஓராண்டும் இருநூற்றுப் பத்தொன்பது நாட்களுமாகும். நடைமுறைப்படுத்தலுக்கு இராஜராஜரின் மற்றோர் ஆணை எடுத்துக்கொண்ட கால இடைவெளி ஓராண்டும் இருநூற்று இருபத்து மூன்று நாட்களுமாகும். தொண்டைமான் ஆற்றூர்க் காவணத்திலிருந்து இராஜராஜர் மொழிந்த பிறிதொரு ஆணை பதிவுபெற எண்பது நாட்களே எடுத்துக்கொண்டமை, மேலிரண்டு நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது வியப்பூட்டும் குறுகிய கால இடைவெளியாகக் கண்முன் நிற்கிறது.

பிற அரசு அலுவலர்கள்

சோழர் கால நிர்வாக அடுக்குப் பல அலுவல் நிலைகளைக் கொண்டிருந்தது. புரவுவரித் திணைக்களம் எனும் அரசு நிலவரு வாய்த்துறை, அதன் தலைமைப் பொறுப்பாளர்களாகப் புரவுவரித் திணைக்களம் எனும் அலுவலர்களைக் கொண்டிருந்தது. நிலமளந்து வரி நிர்ணயிக்கும் பணியை மேற்கொண்டிருந்த இத்துறையில் அடுத்தடுத்த நிலைகளில் புரவுவரி, வரிப்பொத்தகம், முகவெட்டி எனப் பல அலுவலர்கள் பணியாற்றினர். முதல் இராஜராஜர் காலத்தில் புரவுவரித் திணைக்களமாக இருந்த தென்னவன் திருஇந்தளூர் நாட்டு மூவேந்த வேளாரும் சோபுரநாட்டு மூவேந்த வேளாரும் நிலமளந்து நிலவருவாயின் செலவினங்களை நிர்ணயம் செய்தமையை ஒரு கல்வெட்டு எடுத்துரைக்கிறது.11

கோயிலுக்கு அளிக்கப்பட்ட நெல் வருவாயைக் கோயில் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளுக்கு, ஒவ்வொன்றிற்கும் இவ்வளவு நெல் என அளவு நிர்ணயித்து ஒதுக்கீடு செய்து நிவந்தப்படுத்திய பணியையும் புரவுவரித் திணைக்களத்தாரே மேற்கொண்டிருந்தமையை புதிதாகக் கண்டறியப்பட்ட முதல் இராஜராஜர், முதல் இராஜேந்திரர் கல்வெட்டுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இந்நிவந்தஞ் செய்யும் பணியை அதிகாரிகளும் மேற்கொண்டிருந்தமைக்கு முதல் இராஜேந்திரரின் கல்வெட்டுச் சான்றாகிறது.12

'உடன்கூட்டம்' என்ற பெயரில் அரசர் ஆணைகளை நிறைவேற்றச் சோழர் காலத்தில் ஒரு நிர்வாக அமைப்புச் செயற்பட்டமையைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இவ்வுடன்கூட்டத்து அலுவல் நிலைகளுள் ஒன்றாய்க் கன்மி இருந்தமையை வலஞ்சுழிக் கல்வெட் டொன்று எடுத்துரைக்கிறது. பேரரசியார் தந்திசத்தி விடங்கியாரின் ஆணைக்கிணங்க சேத்ரபாலர் கோயில் தொடர்பான சொத்துத் தரவுகளை, அக்கோயிலில் கல்வெட்டாகப் பொறித்தவர் உடன்கூட்டத்துக் கன்மி கோவலூருடையான் காடன் நூற்றெண்மன். அவருடன் துணையிருந்து அப்பணி நிறைவேற்றியவர் கண்காணிக் கரணத்தான் நல்லுழான் ஏறன் இராயசிங்கன்.13

மற்றொரு இராஜராஜர் கல்வெட்டு, கட்டி அருமொழி என்பாரைப் பேரரசியார் தந்திசத்தி விடங்கியாரின் கன்மியாக அறிமுகப்படுத்துகிறது. இக்கல்வெட்டில், 'கண்காணிக் கணக்கு' என்ற அலுவலராய், கன்மியுடன் இருந்து செயற்பட்டவராகப் பாச்சயன் உதயமார்த்தாண்டன் வெளிப்படுகிறார். இவ்விருவரும் விடங்கியாரின் ஆணையேற்று சேத்ரபாலருக்கு அவ்வம்மை அளித்த பொன் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வெண்கலம், செம்பு, தராவால் ஆன பிற பாத்திரங்கள், பொருட்கள் ஆகியவற்றை நிறை பார்த்துக் கணக்கெடுத்து விரிவான தரவுகளைக் கோயிலில் கல்வெட்டாக்கியுள்ளனர்.14 இக்கன்மிகள் அரசமரபினருக்காக திருக்கோயில்களுக்கு நிலம் வாங்கும் பணியையும் செய்துவந்தமையை இராஜராஜரின் பதினொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று உணர்த்துகிறது.15

திருமதிள் நாயகம் என்றொரு அலுவல் நிலையை வீரராஜேந்திரர் கல்வெட்டுச் சுட்டுகிறது. இப்பொறுப்பிலிருந்தவர் மருதூருடையான். இவ்வலுவல் நிலையில் இருந்தவரின் பணி எத்தகையதாய் இருந்திருக்கும் என்பதை அறியக்கூடவில்லை.

பெருந்தனம், சிறுதனம் எனும் இரண்டு அலுவல்நிலைகள் சோழர் ஆட்சிமுறையில் இருந்தன. வலஞ்சுழிக் கல்வெட்டுகள் இரண்டு பெருந்தன அலுவலர்களைப் படம்பிடிக்கின்றன. அவர்களுள் ஒருவரான செம்பியன் மங்கலப் பேரரையர் சேத்ரபால தேவரின் திருவடிகளில் மலர்களிட்டுத் தொழுது மோதிரம் ஒன்றை வழங்கியுள்ளார். மற்றொரு பெருந்தன அலுவலராக அறிமுகமாகும் தந்திதிட்டையான சோழேந்திர சிங்க விழுப்பரையரின் அரசியார் ஆச்சணன் வெம்பாவையார் சேத்ரபாலருக்குப் பல வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களைக் கொடையளித்துள்ளார்.16 பெருந்தன அலுவலரின் மனைவி, 'அரசியார்' என்றழைக்கப்படுவது நோக்க, சிற்றரசர்களும் பெருந்தன அலுவலர்களாக இருந்தமை அறியப்படும்.

சோழர் காலத்தில், 'பெண்டாட்டி' எனுஞ் சொல் பணிப் பெண்களைக் குறிக்கப் பயன்பட்டது. முதல் இராஜராஜரின் பட்டத் தரசியார் உலமாதேவியாரின் பணிப்பெண்களாகச் சுப்பிரன் வீராணி, வேளான் இலங்கவிச்சாதிரி ஆகியோர் இருந்தனர். அவர்களுள் வீராணி கொடையாளியாக மட்டும் அறிமுகமாக, சேத்ரபாலருக்கான கொடைகளைக் கல்லில் வெட்டும் பொறுப்பளித்துப் பட்டத்தரசியே திருமுகம் அனுப்பிப் பெருமைப்படுத்தியவராக விச்சாதிரி திகழ்கிறார்.17 சேத்ரபாலருக்குத் தம் சார்பில் பொன் வழங்கியருளவும் விச்சாதிரியை இப்பேரரசி பணித்திருந்தமை கொண்டு அவ்வம் மையின் நம்பிக்கைக்குரியவராக இவர் விளங்கியமையை உணரலாம்.











குறிப்புகள்
1. SII 8 : 217, 222, 223.
2. பு.க. 12.
3. SII 8 : 224, 225.
4. பு.க. 13.
5. SII 8 : 217, 222.
6. SII 8 : 223.
7. பு.க. 5.
8. பு.க. 12.
9. SII 8 : 224, 225.
10. SII 8 : 224, 225; பு.க. 11; வரலாறு 14 - 15, பக். 2 - 4.
11. SII 8 : 217; தொகுதியில் சோபுரநாடு, சேரபுரநாடு எனப் பதிவாகி உள்ளது.
12. பு.க. 10.
13. SII 8 : 234.
14. பு.க. 1.
15. பு.க. 6.
16. வரலாறு 14 - 15, பக். 48 - 50.
17. பு.க. 1; வரலாறு 14 - 15, பக். 48 - 50.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.