![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 177
![]() இதழ் 177 [ மே 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 春の夜の 夢ばかりなる 手枕に かひなく立たむ 名こそ惜しけれ கனா எழுத்துருக்களில் はるのよの ゆめばかりなる たまくらに かひなくたたむ なこそをしけれ ஆசிரியர் குறிப்பு: பெயர்: சேடிப்பெண் சுவோ காலம்: பிறப்பு தெரியவில்லை. கி.பி 1110ல் இறந்தார். இவரது இயற்பெயர் நகாக்கோ. இவரது கணவர் சுவோ மாகாணத்தின் ஆளுநராக இருந்ததால் இப்பெயர் பெற்றார். அறிவிற் சிறந்து விளங்கிய பெண்களை அந்தப்புரத்தில் பட்டத்தரசிகளின் அந்தரங்க உதவியாளர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்தது எனப் பார்த்தோமல்லவா? இவர் தொடர்ச்சியாக கோரெய்சோ (1045-1068), சான் ஜோ (1068-1073), ஷிராகவா (1073-1087), ஹொரிகவா (1087-1107) ஆகிய நான்கு பேரரசர்களின் அரசியருக்கு உதவியாளராக 68 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். கி.பி 1108ல் புத்தமதத் துறவியாக மாறினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 35 பாடல்களும் இவர் பெயரிலேயே தனிப்பாடல் திரட்டு ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். பாடுபொருள்: அலருக்கு ஆளாக விரும்பாமை பாடலின் பொருள்: உங்கள் வேண்டுகோளை ஏற்று வசந்தகால இரவில் வரும் குறுங்கனவு போன்ற காதல் வாழ்க்கையை வாழ்ந்தால் நீங்கள் பிரிந்தபிறகு ஊர் என்னைத்தான் தூற்றும். ஜப்பானிய அரசவைக் காதல்களின் வாழ்வு குறுகியது என்று உணர்த்தும் இன்னொரு பாடல். இப்பாடல் இயற்றப்பட்ட பின்னணியை சென்சாய்ஷூ என்ற இலக்கியம் கூறுகிறது. பிப்ரவரி மாத முழுநிலவின்போது தலைநகர் கியோத்தோவில் இருக்கும் நிஜோ-இன் என்ற கோயிலில் மக்கள் கூடுவார்கள். ஆடல், பாடல், விருந்து எனத் தடபுடலான ஏற்பாடுகளில் மகிழ்ச்சிக்கடலில் திளைத்து இரவு முழுவதும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். நள்ளிரவு தாண்டி அதிகாலை விடியும் முன்பு களைத்துப் போயிருந்த இப்பாடலாசிரியர் ஒரு திரைச்சீலை அருகில் ஒதுங்கிப் பணிப்பெண் ஒருவரிடம் ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறுகிறார். திரைச்சீலைக்குப் பின்னால் இருந்த ததாய்யே என்றோர் அதிகாரி, "நீங்கள் உறங்கத் தயார் என்றால் என் கையையே தங்களுக்குத் தலையணையாகத் தரத்தயார்" என்கிறார். இதன் உட்பொருள் தன்னை மணந்துகொள்ளத் தயாரா என்பதாகும். அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டதுதான் இப்பாடல். அரசவைக் காதல்கள் எல்லாம் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடும் என முந்தைய பாடல்களில் பார்த்தோமல்லவா? அது இப்பாடலிலும் உறுதிப்படுகிறது. அவசியம் ஏற்பட்டாலன்றிப் பெண்கள் காதலை நிராகரித்திருக்கிறார்கள். இப்பாடலில் அலருக்கு அஞ்சிய ஜப்பானிய மகளிரின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வெண்பா: காதலும் தோன்றிடில் மாயும் விரைவினில் ஆதலின் தோன்றிடும் பேரலர் - சேதமில் வாழ்வது வேண்டியே வேண்டேன் இனியிவ் வசந்த இரவுக் கனவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |