http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 177

இதழ் 177
[ மே 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 4
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 1
கீழ்வேளூர் மாடக்கோயில் - 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 70 (உள்ளும் புறத்தும் தனிமையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 69 (கரையோர மேப்பிள்கள்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 68 (விழியிலிருந்து நினைவுக்கு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 67 (அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு)
இதழ் எண். 177 > கலையும் ஆய்வும்
கீழ்வேளூர் மாடக்கோயில் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி

சிவபெருமானின் அர்த்தஸ்வஸ்திகக் கரணம்
வேறெந்தத் திருக்கோயிலிலும் காணமுடியாத அரிய வகை ஆடல்நிலையில் அமைந்த சிவபெருமானின் செப்புத் திருமேனியைக் கேடிலியப்பர் கோயில் கொண்டுள்ளது. குப்புறப் படுத்திருக்கும் முயலகன் மீது இடக்காலைத் திரயச்ரத்தில் ஊன்றி, வலக்காலை இடக்காலுக்கு முன், பாதம் அக்ரதல சஞ்சாரத்தில் அமையுமாறு ஸ்வஸ்திகமாக்கி, பத்துத் திருக்கை களுடன் கரணம் நிகழ்த்தும் இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை வேழ முத்திரையில் உள்ளது. வலப் பின் கைகளில் கீழிருந்து மேலாகக் கத்தி, மழு, முத்தலை ஈட்டி, உடுக்கை அமைய, இடப் பின் கைகளில் கேடயம், மாட்டுக் கொம்பு வடிவில் அமைந்த தடி, பாசம், தீச்சுடர் இவை உள்ளன.

கொக்கிறகும் மண்டையோடும் பொருந்திய சடைமகுடம், சவடி, கண்டிகை, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கடக, கை வளைகள், மரமேறியாடை அணிந்து ஆடும் இறைவனின் வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம். விரிசடையின் வலப்புறம் கங்கை, இடப்புறம் பிறை.

இந்நெற்றிக்கண்ணரின் இடப்புறமுள்ள இறைவி, சமபங்கத்தில் மகரகுண்டலங்கள், அரும்புச்சரம், ஸ்கந்தமாலை, தோள், கடக, கை வளைகள், பட்டாடை அணிந்து தலைச்சக்கரம் பொருந்திய சடைமகுடராய் வலக்கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

இவ்விணைக்கு முன்னால் இறைவனின் ஆடலுக்கு இசை தருபவர்களாய் நான்முகனும் விஷ்ணுவும் தத்தம் தேவியருடன் காட்சிதருகின்றனர். முன்கைகள் வீணை வாசிக்க, பின்கை களில் அக்கமாலை, குண்டிகை ஏந்தி நிற்கும் கலைமகளுடன், செண்டு தாளம் ஏந்தியவராய்ப் பின்கைகளில் அதே கருவிகளுடன் காட்சிதருகிறார் நான்முகன். பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்கைகளால் மத்தளம் வாசிக்கும் விஷ்ணுவுடன், பின்கைகளில் மலர் மொட்டுகள் கொண்டு முன்கைகளால் தாளம் எழுப்பும் நட்டுவாங்க நாயகியாய்த் திருமகள் இயங்குகிறார். தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் காணமுடியாத இந்த ஆடற்கூட்டம் கீவளூரின் தனிப்பெருமையாகும்.

பெருமண்டபம்

வெற்றுத்தளத்தின் மீது தெற்கில் சோமாஸ்கந்தர் திருமுன்னும் அதற்குச் சற்றுத் தள்ளி மேற்கில் கேடிலியப்பர் திருமுன்னும் இவற்றின் முன் இரண்டையும் இணைக்கும் பெருமண்டபமும் உள்ளன. சுற்றின் தென்கிழக்கில் அமைந்துள்ள பதிbனட்டுப் படிகளின் வழியே இம்மண்டபத்தை அடையலாம். இப்படிகளின் முகப்பில் சிற்றுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. படிகளின் முன்னுள்ள நடை, நாகபந்தங்கள் கொண்ட சதுர பாதங்களின் மீதெழும் நாற்சதுர, முக்கட்டுத் தூண்களும் நான்முகத் தூண்களும் பெற்றுள்ளது. நான்முகத் தூண்களின் கீழ்ப்பகுதியில் அமர்சிம்மமும் நடைப்பகுதியின் கூரையில் பிற்கால ஓவியங்களும் உள்ளன.

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் தாங்கும் மண்டபக் கூரை யுறுப்புகளில் வலபிக்கு மேலே உள்ள கற்பலகையில் சிற்றுருவச் சிற்பங்கள் தொடராகக் காணப்படுகின்றன. வடபுறத்தே அர்த்தஸ்வஸ்திக சிவபெருமானின் செப்புத்திருமேனி அறை அமைந்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் சோமாஸ்கந்தர் திருமுன். அதன் முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறை யில் காணப்படும் கபோதபந்தத் தாங்குதள மேடையில் தேவநாயகர் என்ற பெயருடன் சோமாஸ்கந்தர் தொகுதி இருத்தப்பட்டுள்ளது.

சோமாஸ்கந்தர்

இடப்புறம் பிறை பெற்ற சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்து சுகாசனத்தில் உள்ள சோமாஸ்கந்த சிவபெருமானின் பின்கைகள் மான், மழு கொள்ள, வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை கடகத்திலும் உள்ளன. இறைவனின் இடப்புறமுள்ள உமை, கரண்டமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், பட்டாடை அணிந்து வலக்கையில் கடகமுத்திரை காட்டி, இடக்கையைத் தளத்தின் மீது ஊன்றியுள்ளார். தனி இணைப்பாய் நின்றகோலத்தில் உள்ள முருகன் இருகைகளிலும் மலரேந்தி, பனையோலைக் குண்டலங்கள், ஸ்வர்ணவைகாக்ஷம் இவற்றுடன் காட்சிதருகிறார். இந்தத் தொகுதியின் அருகிலுள்ள தனி உமை கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், மெல்லிய கழுத்தணிகள், கடக, கை வளைகள், முப்புரிநூல், பட்டாடை, குறங்குசெறி, பாதசரம் அணிந்து, இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையைக் கடகத்தில் இருத்திக் காட்சிதருகிறார். சோமாஸ்கந்தர் திருமுன்னின் தென்புறமுள்ள வாயில் அத்திருமுன்னை வலம் வரவும் கேடியலியப்பர் விமானத்தை வலம் வரவும் வாய்ப்பளிக்கும் வெளிச்சுற்றுக்கு வழிவிடுகிறது.

இறைவன் திருமுன்

பெருமண்டபத்தின் வடமேற்கிலுள்ள இறைவன் திருமுன் முன்மண்டபம், முகமண்டபம், கருவறை பெற்றமைந்துள்ளது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள், பூமொட்டுப் போதிகைகளால் கூரை தாங்கும் முன்மண்டபத்தில் சூரியபிரபை, நந்தி உள்ளன. மண்டப நுழைவாயிலின் இருபுறத்தும் வண்ணப்பூச்சுப் பெற்ற பேரளவிலான சுதைக் காவலர்கள். முகமண்டப வாயிலின் இருபுறத்தும் உள்ள கோட்டங்களில் வலப்புறம் பிள்ளையா ரும் இடப்புறம் முருகனும் உள்ளனர். வாயில் நிலைகளில் வீணைப் பெண்கள்.

மண்டபத்தின் வடமேற்கில் சடைமகுடம், மகரகுண்டலங்கள், செவிப்பூக்கள், சவடி, அரும்புச்சரம், தோள்மாலை, தோள், கடக, கை வளைகள், பட்டாடை, குறங்குசெறி அணிந்து இன்பவல்லி அம்மை உத்குடியில் உள்ளார். வலக்கை கடகத்தில் இருக்க, இடக்கை தளத்தின்மீது இருத்தப்பட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறத்தும் குடப்பஞ்சரங்கள் உள்ளன. கருவறையில் இறைவன் சதுர ஆவுடையாரின் மேல் உருளைப் பாணத்துடன் இலிங்கத்திருமேனியராய்க் காட்சிதருகிறார்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.3 அவற்றுள் இரண்டாம் இராஜராஜ சோழரின் பதினெட்டாம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1163) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, கேயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்து உடையார் திருவாரூர் இறைவனைப் பூசிக்கும் குரவசேரி ஸ்ரீமூலத்தானம் உடையான் பட்டரும் அவரை முதுகண்ணாக உடைய பெரும்பற்றப்புலியூர் விநாயகபட்டன் பிராமணி ஆவுடையாள் சானியும் கேடிலிநாயனாருக்கு நந்தவனம் அமைக்கப் புன்செய் நிலம் அளித்ததைக் கூறுகிறது. பெரியாலத்தூரான சத்ரியசிகாமணிச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை சாத்தன்குடிக் கட்டளையில் மாத்தூர் கிழவன் காணியைப் பெருவிலைக்குக் கொண்ட குரவசேரி சிவலோகநாயக பட்டன், தூயவாமன பட்டன் மகன் கோனைபட்டன் இவர்களிடம் விலைக்குக் கொண்ட செந்தாமரைக்கண்ணன் கொல்லை, நந்தவனம் அமைக்க வழங்கப்பட்டது. நந்தவனப் பணி செய்யும் ஆண்டார்கள் குடியிருக்க இருபத்தைந்து குழி மனையும் அளிக்கப்பட்டது. இம்மனை கோட்டூருடையான் ஆளும் அரையன் ஊற்றுக்கேணிக்கு வடக்கில் இருந்தது.

இரண்டாம் இராஜராஜரின் பத்தாம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1155) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இறைவனுக்குக் கிழக்கில் சன்னதித் திருவீதி இல்லாமையால் அது அமைக்கக் கேடிலிநாயனார் தேவகன்மிகளான கீழக்குடி அரையன் சிங்க பிரானும் நாராயணதேவன் செளரிப்பெருமாளும் ஏற்பாடு செய்தமையைப் பகிர்ந்துகொள்கிறது. இவ்வீதியை ஏற்கனவே இறைவன் தெற்கு நோக்கி முன்பு எழுந்தருளின திருவீதியுடன் இணைக்கவும் முடிவானது.

பொ. கா. 1775ல் வெட்டப்பட்டுள்ள மராத்திய அரசர் துளஜா வின் கல்வெட்டு நாகரியில் எழுதப்பட்டுள்ள மராத்திக் கல்வெட்டாகும். வெளித்திருச்சுற்று மன்னரால் கட்டப்பட்ட தகவலை இக்கல்வெட்டால் பெறுகிறோம். இவை தவிர, கள ஆய்வின்போது சில புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.4 தெற்குக் கோபுரத்திற்கு எதிரில் சாளரத்திற்கு அருகில் காணப் படும் கல்வெட்டு, பொ. கா. 1715ல் வெட்டப்பட்டுள்ளது. மன்மத ஆண்டு வைகாசித்திங்கள், ஐந்தாம் நாள் துக்கோஜி அரசர் செய்த அறச்செயலைக் கூறும் இக்கல்வெட்டு தமிழில் உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலின் வடபுறக் கதவிலுள்ள பொறிப்பு பொ. கா. 1619 ஈசுவர ஆண்டு கார்த்திகைத்திங்கள் 20ம் நாள் அக்கதவு செய்யப்பட்ட தகலைத் தருகிறது.

கோயிலின் மேற்குக் கோபுரத்தில் காணப்படும் கல்வெட்டு களுள் ஒன்று வெங்கடபதியாப் பிள்ளையும் முத்தப்பப்பிள்ளை யின் தமையனார் வேங்கடபதிப்பிள்ளையும் இக்கோயில் இறைவனை நித்தமும் வழிபட்டதாகக் கூறுகிறது. கல்வெட்டின் அருகே நந்தியின் மேல் இறைவனும் இறைவியும் அமர்ந்திருக்க, ஆடவர் ஒருவர் கைக்கூப்பி அவர்களை வணங்கும் சிற்பம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு காரி சிவலிங்க பண்டாரத்தின் கோயில் ஈடுபாட்டைக் குறிக்கிறது.

இக்கோயிலின் தூண்கள் சிலவற்றில் அவற்றையோ, அல்லது அத்தூண்கள் இடம்பெற்றுள்ள மண்டபத்தையோ எடுக்க உதவிய அருளாளர்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பெருமண்டபத்தின் வலப்புறத்தூண்கள் ஒன்றில் வணங்கிய நிலையிலுள்ள அடியவரை அங்குள்ள கல்வெட்டு, ‘இவர் பதிப்பநார் பிள்ளை’ என்று அடையாளப்படுத்துவதுடன், அக்கோயிலில் அவர் நாளும் வழிபாடு செய்தமையைப் பகிர்ந்து கொள்கிறது.

மாடக்கோயிலுக்கு முன்னாலுள்ள தூணொன்றில் காணப்படும் கல்வெட்டு, பொ. கா. 1860ல் வெட்டப்பட்டுள்ளது. ரெளத்ரி ஆண்டுத் தைத்திங்களில் திருவோணமீன் அமைந்த நாளில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, வெங்கிடாபதியாபிள்ளை யின் மகன் வடமலையப்பப்பிள்ளையின் நிருவாகத்தில் இந்தக் கோயில் சபாநாயகர் சன்னதி மண்டபம் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. மற்றொரு தூணில் வணங்கிய நிலையில் காணப்படும் ஆடவர் சிற்பத்தின் கீழுள்ள கல்வெட்டு மலையப்பப் பிள்ளையின் மகன் வெங்கிடபதிபிள்ளையாக அவரை அடையாளப்படுத்துவதுடன், அவர் குடும்பத்தார் இக்கோயிலில் நிருவாகம் செய்த வகைமையைப் பகிர்ந்துகொள்கிறது. கேடிலியப்பர் கோயில் நிருவாகத்தை வேங்கடபதியாப்பிள்ளை ஐந்தாண்டுகளும் அவர் மகன் சேஷய்யா ராமலிங்கப்பிள்ளை முப்பது ஆண்டுகளும் கனிஷ்டா ஒந்தாச்சியாபிள்ளை இருபத்து மூன்று ஆண்டுகளும் ராமலிங்கப்பிள்ளையின் மகன் முத்துசாமிப் பிள்ளை முப்பது ஆண்டுகளும் அவர் தம்பி வடமலையப்பப் பிள்ளை நாற்பதாண்டுகளும் அவர் மகன் வேங்கடபதியா பிள்ளை நாற்பத்தெட்டு ஆண்டுகளும் மேற்கொண்டு ஏறத்தாழப் பத்து இலட்சம் ரூபாய் வரையில் செலவு செய்து கோயிலில் பல திருப்பணிகள் செய்தமையுடன் திருக்கோயிலுக்கு வேண்டிய நகைகளையும் செய்து வைத்தனர்.

குறிப்புகள்
3. SII 7 : 558, 559, 560.
4. இக்கல்வெட்டுகள் பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.