![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 177
![]() இதழ் 177 [ மே 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 心にも あらでうき世に ながらへば 恋しかるべき 夜半の月かな கனா எழுத்துருக்களில் こころにも あらでうきよに ながらへば こひしかるべき よはのつきかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: பேரரசர் சான்ஜோ காலம்: கி.பி. 976-1017. இவரது இயற்பெயர் இயேசதா. பேரரசர் முராகமிக்கு ரெய்செய் மற்றும் என்யூ என இரண்டு மகன்கள். இப்பாடலாசிரியர் பேரரசர் ரெய்செய்யின் இரண்டாவது மகன். முதல் மகன் கசான் இரண்டு ஆண்டுகளிலேயே பதவியிறக்கம் செய்யப்படுகிறார். பின்னர் கி.பி. 986ல் இப்பாடலாசிரியருக்கு இளவரசுப்பட்டமும் என்யூவின் மகன் இச்சிஜோவுக்கு அரசபதவியும் வழங்கப்பட்டது. சான்ஜோவைவிட இச்சிஜோ வயதில் இளையவர். ஆறு வயதே நிரம்பியவர். இருப்பினும் சான்ஜோவைத் தவிர்த்துவிட்டு இச்சிஜோ அரசராக முடிசூடக் காரணம் அப்போது அரசவையில் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்த மிச்சிநாகா. மிச்சிநாகாவின் ஆறு மகள்களில் முதலாமவர் இச்சிஜோவை மணந்தார். இரண்டாமவர் சான் ஜோவை மணந்தார். நான்காமவரும் ஆறாமவரும் இச்சிஜோவின் இரு மகன்களையும் மணந்தனர். மூத்தமகள் மீது மிச்சிநாகா அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். எனவே அவரது கணவர் இச்சிஜோ முடிசூட்டிக்கொள்ளவேண்டி இரண்டே ஆண்டுகளில் கசானையும் அவரது மகன் கோஇச்சிஜோ அரசராக முடிசூட்டிக்கொள்ளவேண்டி ஐந்தே ஆண்டுகளில் சான்ஜோவையும் தனது பலத்தைப் பயன்படுத்திப் பதவியிறக்கம் செய்தார் மிச்சிநாகா. சான்ஜோவைப் பதவியிறக்கம் செய்ய மிச்சிநாகா கூறிய காரணம் சான்ஜோவுக்குப் பார்வைத்திறன் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான். அது உண்மைதான் என்றாலும் உண்மையான காரணம் மூத்தமகள் தந்த அழுத்தம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அரசராக இருந்த ஐந்து ஆண்டுகளும் இவருக்கு மிகவும் சோதனை மிகுந்ததாக இருந்தன. இருமுறை அடுத்தடுத்த ஆண்டுகளில் அரண்மனை தீவிபத்தில் அழிந்தது. பதவியிலிருந்து இறங்கிய பின்னர் புத்தமதத் துறவியாக மாறித் தனிமை வாழ்வை வாழ்கிறார். அப்போதுதான் இப்பாடலை இயற்றினார். அடுத்த ஆண்டிலேயே முழுமையாகப் பார்வைத் திறனை இழக்கிறார். அதே ஆண்டு தனது 42வது வயதில் இறந்தும் விடுகிறார். பாடுபொருள்: தனிமைக்குத் துணையாகும் நிலவை விரைவில் காணமுடியாமல் போய்விடுமே என வருந்துவது. பாடலின் பொருள்: ஒருவேளை இப்பூமியில் தொடர்ந்து வாழ்வேன் எனில் இன்று நான் காணும் இம்முழு நிலவின் அழகு என் உள்ளத்தில் மட்டுமே உறைந்திருக்கும். இவரது வாழ்வின் பிற்பகுதியில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் இவரை விரக்தியின் உச்சத்துக்குத் தள்ளுகின்றன. வாழ்வதைவிட இறப்பதே மேல் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கண்பார்வையும் குறைந்துகொண்டே வருவதால் வாழ்வு இனி நரகமாகத்தான் இருக்கும் என்று வருந்துகிறார். தனிமையில் வாழ்வதற்கு நிலவுதான் துணை என்றாலும் விரைவில் அந்நிலவையும் காணும் வாய்ப்பு பறிபோகுமே என்ற கவலையை வெளிப்படுத்தும் எளிய பாடல் இது. வெண்பா: வாழ்வதும் துன்பமே மாய்வதும் இன்பமென ஆழ்மனம் எண்ணிடில் கண்நிறை - கீழ்த்திசை தேய்ந்து நினைவில் உறைந்திடும் எந்தன் தனிமை விலக்கும் நிலவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |