http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 181

இதழ் 181
[ செப்டம்பர் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 3
நாங்கூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 90 (ரத்தக்கண்ணீர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 89 (ரகசியமானது காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 88 (குறுங்கூடலின் நெடுநினைவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 87 (தூவானமும் வெண்வானமும்)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்- 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில் முனைவோர் - 6
கம்பர் காட்டும் நல்லடக்கம்
இதழ் எண். 181 > கலையும் ஆய்வும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி

மகளிர்

வலஞ்சுழிக் கல்வெட்டுகளுள் ஏறத்தாழ இருபத்தைந்து விழுக்காடு கல்வெட்டுகள் அக்காலகட்டப் பெண்கள் சமுதாயத்தின் சில கூறுகளைப் படம்பிடிக்கின்றன. இப்பெண்களுள் அரசமரபினர், உயர் அரசு அலுவலர் அல்லது வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், அந்தணப் பெண்கள், தேவரடியார்கள், பெண் தவசியர்கள் ஆகியோர் அடக்கம்.

கண்டராதித்தர் தேவியாரும் உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்தவருமான செம்பியன்மாதேவி, சுந்தரசோழரின் தேவியார் நக்கன் சிங்கமான வளவன் மகாதேவி, முதல் இராஜராஜரின் பட்டத்தரசி உலகமாதேவி, முதல் இராஜராஜரின் தேவியாரும் முதல் இராஜேந்திரரைத் திருவயிறு வாய்த்தவருமான திரிபுவனமாதேவி, முதல் இராஜேந்திரரின் தேவியர் வளவன்மாதேவி, கிழாநடிகள், முதல் இராஜராஜரின் திருமகளும் வேங்கி அரசர் விமலாதித்தரின் தேவியுமான குந்தவை நங்கை, முதல் இராஜராஜரின் மற்றொரு மகள் நங்கை மாதேவடிகள், முதல் குலோத்துங்கரின் தேவி நாராயணன் தீனசிந்தாமணி, உலகமாதேவியின் அன்னை குந்தணன் அமுதவல்லி ஆகியோர் அரசமரபுப் பெண்களாக வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் வெளிப்படுகின்றனர்.

இவர்களுள் சுந்தரசோழரின் தேவியும் உலகமாதேவியின் அன்னையும் இராஜேந்திரரின் தேவியான வளவன்மாதேவியும் இவ்வூர்க் கல்வெட்டுகளின் வழிதான் முதன்முதலாக வரலாற்று வெளிச்சத்திற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இராஜராஜரின், ‘நடுவில் பிள்ளையான’ மாதேவடிகள் கொடையாளராக அறிமுகமாகும் தமிழ்நாட்டின் இரண்டே கல்வெட்டுகளுள் வலஞ்சுழிக் கல்வெட்டும் ஒன்றாகும்.

இந்த அரசமரபுப் பெண்கள் அனைவரும் தங்களுக்கெனச் சொத்தும், சொத்தைத் தங்கள் விரும்பம் போல் செலவிடும் உரிமையும் பெற்றிருந்தனர். அவர்தம் பணிகளை மேற்கொள்ளத் தனிநிலை அலுவலர்கள் இருந்தமையை, ‘நம்பிராட்டியார்க்காய் ஆராய்கின்ற கன்மி கட்டி அருமொழியும் கண்காணிக் கணக்குப் பாச்சயன் உதயமார்த்தாண்டனும்’, ‘நம்பிராட்டியார் கன்மிகளுக்கு நான் விற்றுக் குடுத்த நிலமாவது’, ‘நம்பிராட்டியார் பெண்டாட்டி சுப்பிரண் வீராணி’ எனும் கல்வெட்டுத் தொடர்கள் வெளிச்சப்படுத்துகின்றன.12 பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுத் திருமுகம் அனுப்பும் உரிமையும் இவ்வரசியர்க்கு இருந்தமையை, ‘இப்பரிசு கல்லில் வெட்டுவித்து பொருகவென்று இந்நம்பிராட்டியார் வேளான் இலங்க விச்சாதிரியை அருளிச் செய்து ஸ்ரீமுகம் வர ஸ்ரீமுகப்படி இவ்வேளான் இலங்க விச்சாதிரியும்’ எனும் கல்வெட்டுத் தொடர் முன்வைக்கிறது.13 இவர்தம் ஆணைகளை நிர்வாகக் குழுக்களும் ஏற்றுப் போற்றியதை முதல் இராஜேந்திர சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று நிறுவுகிறது.

அரசு உயர்அலுவலர்களாக விளங்கிய சிற்றரர் வீட்டுப் பெண்களும் தங்கட்கெனச் சொத்துக்களும் அவற்றை விழைவு போல் செலவிடும் உரிமையும் பெற்றிருந்தனர். முதல் இராஜராஜரின் பெருந்தன அலுவலர்களுள் ஒருவராக விளங்கிய தந்தி திட்டையான சோழேந்திரசிங்க விழுப்பரையரின் அரசியார் ஆச்சணன் வெம்பாவை சேத்ரபாலர் கோயில் கொடையாளர்களுள் ஒருவராக வெளிப்படுகிறார். வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களைத் தந்த இவ்வம்மை போலவே, இறுமுக்கரையர் மகளார் செம்பியன் மாதேவியார் மதுராந்தக ஈசுவரமுடைய மகாதேவருக்கு திருநந்தாவிளக்கு ஏற்றுவதற்காக நிலத்துண்டு ஒன்றை விலைக்குப் பெற்றுக் கோயிலுக்கு அளித்துள்ளார்.

வலஞ்சுழியில் கிடைத்துள்ள பெண்கள் தொடர்பான பிற கல்வெட்டுகளில் ஐந்தில் நான்கு பங்கு அந்தணப் பெண்களைப் பற்றியும் மூன்று கல்வெட்டுகள் பிற இனப் பெண்கள் பற்றியும் கூறுகின்றன. அந்தணப் பெண்களைப் பற்றிய பத்துக் கல்வெட்டுகளும் அவர்களை நிலஉரிமையாளர்களாகவே அறிமுகப்படுத்துகின்றன. சேத்ரபாலருக்கு விற்கப்பட்ட நிலமொன்றின் முந்து உரிமையாளராக ஒரு கல்வெட்டிலும் சேத்ரபாலருக்கு விற்பனையான நிலத்தின் எல்லைப் பகுதி நிலத்துண்டுகளுள் ஒன்றின் உரிமையாளராக மற்றொரு கல்வெட்டிலும் இரண்டு பெண்கள் அறிமுகமாக ஏனைய அனைவரும் மூன்றாம் இராஜராஜர் காலத்தில் வாழ்ந்து, வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு நிலவிற்பனை செய்தவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இப்பெண்களுள் பெரும்பாலோர் தங்கள் பெயரின் பின்னொட்டாகச் சாணி எனுஞ் சொல்லைக் கொண்டுள்ளனர்.

நிலஉரிமையைக் கணவன், மாமனார், தந்தை ஆகியோர் மறைவிற்குப் பின் பெற்றவர்களாகவும் சீதனத்தின் வழி பெற்றவர் களாகவும் இவை இரண்டும் அன்றி வேறுவகையில் அடைந்தவர் களாகவும் காட்சிதரும் இப்பெண்கள், பெரும்பாலான கல்வெட்டு களில் தந்தை, கணவன், சகோதரன், மகன், பொது ஆள் என யாரேனும் ஒருவரைக் காப்பாளராகக் கொண்டே, அவர்கள் மூலமாகவே நில விற்பனையை மேற்கொண்டுள்ளமை பல கல்வெட்டுகளால் நிறுவப்படும் உண்மையாகும். அல்லியங்கோதை, உமையாண்டாள், உய்யக்கொண்டாள், கிழக்கடைய நின்றாள், திருமாலிடங்கொண்டாள், மாங்கொண்டி, மாறன் பெருமாநங்கை, ஆதித்தன் மாறி எனும் பெயர்களில் அறிமுகமாகும் இப்பெண்களுள் இறுதி இருவர் இன்னார் மனைவியர் என்று கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிக்கப்படுவதால் அவர்தம் பெயர்களின் முன்னொட்டாக உள்ள மாறனும் ஆதித்தனும் அவர்தம் தந்தையர் பெயர்களாகலாம் எனக் கருத வேண்டியுள்ளது.14

வேளாளப் பெண்களை அறிமுகப்படுத்தும் ஆவணங்களும் அவர்களை இன்னார் மனைவி என்றே அறிமுகப்படுத்துகின்றன. ஒருதாயின் இரண்டு மகள்களை முன்னிறுத்தும்போது, முதல் மகளை, ‘இவள் மகள்’ என்று தாயின் பெண்ணாகக் குறிப்பிடும் ஆவணம், இரண்டாவது பெண்ணை, ‘இவள் தங்கை’ என்று முதல் மகளுக்கு இளையவளாகவே முன்னிலைப்படுத்துகிறது.15 எந்த உறவு முறையும் சுட்டாமலும் பெண்களின் பெயர்கள் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளமையைத் துண்டுக் கல்வெட்டொன்று வெளிச்சப்படுத்துகிறது. நில உரிமையாளர்களாக விளங்கிய இவ்வேளாளப் பெண்கள், காப்பாளர் ஒருவரைக் கொண்டு நிலவிற்பனை மேற் கொண்டதை மூன்றாம் இராஜராஜரின் இருபத்துநான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வெளிப்படுத்த, நேரிடை விற்பனை செய்தமையை மூன்றாம் குலோத்துங்கரின் முப்பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.16

நூற்றுப் பதினான்கு கல்வெட்டுகளை வழங்கியுள்ள இக்கோயிலில் தேவரடியார்களைப் பற்றிப் பேசும் கல்வெட்டு ஒன்றே ஒன்றுதான். இரண்டாம் இராஜராஜரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, வலஞ்சுழிக் கோயில் திருமடைவளாகத்திருந்த உடன்பிறப்புகளான தேவரடியார் இருவரை வெளிப்படுத்துகிறது. தேவும் திருவும் உடையாள், கிழக்கடைய நின்றாள் எனும் பெயர்களைக் கொண்டிருந்த இவ்விருவரின் தமையனான தண்பரிசுடையானே இவர்தம் கொடை ஆவணத்தை எழுதியவர். ஆட்கொண்டான் என்பவரின் பிள்ளைகளாக அறிமுகமாகும் இம்மூவரும் இரண்டாம் இராஜராஜர் காலத் தேவரடியார்களின் குடும்ப வாழ்க்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.17

மகன் பெயரால் தாய் வாங்கிய நிலம், அவர் மரணத்திற்குப் பிறகு மகள்களுக்குத் தரப்பட, வரிச்செலவு போக எஞ்சிய விளைவை, வலஞ்சுழிக் கோயிலில் இருந்த திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருக்கண்ணப்பதேவர் திருமேனிகளுக்கான வழிபாட்டுச் செலவினங்களுக்குக் கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அந்நிலத்தின் உரிமையைக் கோயிலுக்களித்தனர் சகோதரியர் இருவரும். ஆவணத்தில் இத்தேவரடியார் குறிப்பிடும் மூவருள் கண்ணப்பதேவரைக் கோயிலில் காணமுடியவில்லை.

தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் ஆண் தவசியரைப் பற்றிய குறிப்புகளைப் பரவலாகக் காணமுடிகிறது. ஆனால், பெண் தவசியரைப் பற்றிய கல்வெட்டுகள் அருகியே கிடைக்கின்றன. வலஞ்சுழியிலுள்ள இரண்டாம் இராஜேந்திரர் கல்வெட்டுகள் இரண்டுமே ஆண், பெண் தவசியரைச் சுட்டுவனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்குடமூக்கு, ஆவூர், முடிகொண்ட சோழபுரம், அகரம் இராஜராஜபுரம், பஞ்சவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலம், கற்பகமாணிக்கநல்லூர், பரகேசரிச் சதுர்வேதிமங்கலம், கொட்டையூர், ஆதனூர், நங்கத்தார் தளி முதலிய சிவத்தலங்களில் இத்தவசியர் வாழ்ந்தமையும் இவர்களுக்கு உணவிடக் கார், பசான விளைவுகளில் நெல் அளிக்கப்பட்டமையும் இராஜேந்திரரின் ஆணைக் கல்வெட்டால் வெளிவரும் தரவுகளாகும்.

இரண்டாம் இராஜேந்திரரின் தவசியர் பற்றிய மற்றொரு ஆணைக் கல்வெட்டு, தவசியர் வாழும் சிவத்தலங்களில், அக் கோயில் நிர்வாகிகள் திருவாதிரை, தைப்பூசம் ஆகிய கோயில் திருவிழாக்களின்போது தவசியர் பெயரால் திருவிளக்குச்சிலை இட வேண்டும் என அறிவுறுத்துமாறு அமைந்துள்ளது.18

உறவுமுறைகள்

வலஞ்சுழிக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் குடும்பஞ் சார்ந்து விளங்கிய உறவு முறைகளையும் அழைப்பு முறைகளையும் நன்கு பதிவுசெய்துள்ளன. சோழ அரசகுடும்பக் கல்வெட்டுகளில் தாயை, ‘திருவயிறு வாய்த்த’ எனச் சிறப்பித்தும் மனைவியரை, ‘நம்பிராட்டியார்’, ‘நம் பெண்டு’, ‘மகாதேவியார்’, ‘தேவியார்’, ‘உடைய பிராட்டியார்’ எனப் பல்வேறு சொற்களால் சுட்டியும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசகுமாரிகளை, திருமணமானவர்களாக இருந்தால் கணவர் பெயர் சொல்லியும் மணமாகாதவர்களாக இருந்தால் தந்தை பெயர் சொல்லியும் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அரசர்களைச் சுட்டும்போது, ‘உடையார்’ எனச் சிறப்பிப்பதையும் அரிதாகத் தந்தையின் பெயரை முன்கூறித் தொடங்குவதையும் காணமுடிகிறது.19

அரசமரபு சாராத பிற குடும்பங்களில் தாயை, ‘மாதா’ என்றும் தந்தையை, ‘பிதா’ என்றும் அழைத்தனர். மனைவியைக் குறிக்கப் பாரியை என்ற சொல்லைப் பயன்படுத்தினர். அந்தணர், வேளாளர், தேவரடியார் என அனைத்து இனங்களிலுமே இச்சொற்கள் வழக்கி லிருந்தன. தாயை, ‘ஆச்சியார்’ என்றழைக்கும் பழக்கமும் இருந்தது. அகமுடையான், மாமனார், மாமியார், தம்பி, தமையனார், மகன், மகள், பேரன்மார் எனும் உறவுமுறைச் சொற்கள் நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தின் இரண்டல்லது மூன்று உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும்போது, முதல் உறுப்பினரை மட்டும் தந்தை பெயர் சொல்லி அறிமுகப்படுத்தி, மற்றவர்களை முதலாமவரின் தங்கையராகவோ, தம்பியராகவோ முன்னிலைப்படுத்தும் முறையே பரவலாக வழக்கில் இருந்தது. பெண்கள் தங்கள் சகோதரர்களைத் தமையனார், தம்பி என்று குறிப்பிட்டிருந்த போதும், ஆண்கள் தங்கள் சகோதரிகளை உடன்பிறந்தாள் என்றே சுட்டியுள்ளனர். தங்கை, அக்கன் முதலிய உறவுமுறைச் சொற்களை வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் காணக்கூடவில்லை.

தாயையும் தந்தையையும் குறிக்கும்போது, ‘எங்கள் மாதாக்கள், எங்கள் பிதாக்கள்’ என்று ‘கள்’ விகுதி தந்து சிறப்பிப்பதைக் காண முடிகிறது. இச்சிறப்பு விகுதி வேறெந்த உறவுமுறைக்கும் தரப்படா மையும் கவனிக்கத்தக்கது.

ஊரமைப்பு

வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் சில அக்காலத்திருந்த ஸ்ரீபிராந்தகப் பெருவழி, பரமாங்கப் பெருவழி ஆகியவற்றைச் சுட்டுவதுடன், சில ஊர்களின் தெருப்பெயர்களையும் தருகின்றன. அவை அகிலநாயகச் சேரியிலிருந்த கீழை மங்கலவீதி, குலோத்துங்க சோழச் சேரியிலிருந்த வடக்கில் மங்கலவீதி, பிள்ளையார் கோயில் வடக்கில் தெரு, பழந்தெரு, திருவீதி ஆகும். தெருவிலிருந்த குடியிருப்புகள் தென்சிறகு, வடசிறகு, கீழ்ச்சிறகு எனத் திசைச் சுட்டிச் சொல்லப்பட்டன. மக்கள் வாழ்ந்த பகுதி ஊரிருக்கையென்றும் நத்தமென்றும் அழைக்கப்பட்டது. வீட்டு நிலங்கள் நத்தமனை எனக் குறிக்கப்பட்டன. பெரும்பாலான வீடுகள் புழைக்கடையும் படப்பையும் கொண்டிருந்தன. வீட்டுப் புழைக்கடைகளில் பயன்தரு மரங்கள் வளர்க்கப்பட்டமையை அறியமுடிகிறது.

அளவைகள்

முந்திரிகை, குழி, காணி, மா, வேலி, தடி எனும் அளவுகளில் நிலப்பரப்புக் கணக்கிடப்பட்டது. நூறு குழி நிலம் ஒரு மாவாகவும், இருபது மா நிலம் ஒரு வேலியாகவும் அமைந்தன. முதல் இராஜ ராஜர் காலக் கல்வெட்டொன்று, ‘நிலம் தடியிரண்டாய் நிலம் மும் மாவரை’ என்றும், ‘தடி பதிbனட்டாய் வந்த நிலம் இரண்டே முக்காலே நான்கு மாக்காணி’ என்றும் குறிப்பது இவ்வளவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக உள்ளமையைக் காட்டு கின்றது.20 இங்குள்ள பிற்சோழர் கல்வெட்டுகளில் இந்தத் தடி அளவையைக் காணமுடியவில்லை. அதற்குப் பதிலாகக் கோல்களின் பயன்பாட்டைக் காணமுடிகிறது. மனை நிலங்களை அளக்கத் தனிக்கோலும் நிலங்களை அளக்க அதற்கென நீட்டலளவைகளும் இருந்தன எனக் கொள்ளுமாறு கல்வெட்டுத் தொடர்கள் அமைந்துள்ளன. ஒரு வேலி நிலத்திலிருந்து பொதுவாக நூறு கலம் நெல் பெறப்பட்டது.

மரக்கால், கலம், குறுணி, தூணி, பதக்கு, ஆழாக்கு, உழக்கு, நாழி, உரி, செவிடு என்பன முகத்தல் அளவைகளாக இருந்தன. அவற்றுள் நாழி, உரி, செவிடு என்பன பொதுவாக நெய், எண்ணெய் முதலியவற்றை அளக்கவும், பிற முகத்தல் அளவைகள் தானியங்களை அளக்கவும் பயன்பட்டன. நாழி தானிய அளவைக்கும் பயன்பட்டமையை இரண்டு கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. நெய்யளக்க வலஞ்சுழிக் கோயிலில், ‘தனிநாயகன்’ என்ற பெயரிலும், சேத்ரபாலர் கோயிலில், ‘சேத்ரபாலன்’ என்ற பெயரிலும் அளவு நிர்ணயம் செய்யப்பட்ட முகத்தலளவைகள் இருந்தன.21 முதல் இராஜராஜர் காலத்தில், ‘செல்வி இராஜகேசரி, வலஞ்சுழியன்’ எனும் பெயர்களில் விளங்கிய மரக்கால்கள் கோயில் காணியாக வந்த நெல்லை அளக்க உதவின.22

நிறுத்தல் அளவைகளாகப் பலம், கழஞ்சு, மஞ்சாடி, மா என்பன வழக்கிலிருந்தன. வெண்கலம், செப்பு, பித்தளை, தரா முதலிய உலோகங்களாலான பாத்திரங்களை அளக்கப் பலம் பயன்பட்டது. நிறை கண்டறியப் பழையாற்றுத் திலாக்கோல் ஆயிரவன் எனப் பெயரிடப்பட்டிருந்த துலாக்கோலைப் பயன்படுத்தினர். இது பழையாற்றுக் கோல் என்றும் அழைக்கப்பட்டது.23 ‘மலையாண் விளக்கு ஒந்று உசரம் நாற் சாணரை இதில் பாத . . . . . . . . மேல் தலை அகலம் முச்சாணேய் நால் விரல்’ எனும் தொடர் கொண்டு, உயரத்தை அளக்க சாண், விரல் எனும் அளவுகள் வழக்கிலிருந்தமையை அறியமுடிகிறது. கழஞ்சும் மஞ்சாடியும் பொன், வெள்ளியாலான நகைகளையும் பாத்திரங்களையும் நிறை காண உதவின. அதற்குக் குடிஞைக்கல் ஆதாரமாய் அமைந்தது.

விலை உயர்ந்த கற்களான வயிரம், பச்சை, மாணிக்கம், பவளம், பளிங்கு ஆகியனவும் முத்துக்களும் எண்ணிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளன. வயிரம், பச்சை இரண்டும் பொத்தி என்ற முன்னொட்டுடனும் மாணிக்கம் சப்பிரயோகம் என்ற முன்னொட்டுனும் கூறப்பட்டுள்ளன. இவ்வொட்டுகள் கற்களின் தரத்தைக் குறிக்கப் பயன்பட்ட சொற்களாகலாம்.

காசுகள்

பொருட்களை வாங்கவும் விற்கவும் தங்கமும் காசுகளும் பயன்பட்டன. சோழர் காலத்தில் வழக்கிலிருந்த இக்காசு வகைகளின் மதிப்பை நிர்ணயம் செய்யக்கூடவில்லை. அறக்கட்டளைகள் சிலவற்றிற்குக் காசுகளே வைப்பு நிதியாகத் தரப்பட்டுள்ளன. அவற்றின் வட்டி கொண்டு அறக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன. வட்டி விகிதங்கள் காசின் மதிப்பிற்கேற்ப இடத்திற்கிடம் வேறுபட்டிருந்தன.

காசு, குற்றமற்ற காசு, அன்றாடு நற்காசு, ஈழக்காசு அன்றாடு நற்காசு எனும் நால்வகைக் காசுகள் சோழர் காலத்தில் புழக்கத்தில் இருந்தன. இடைச்சோழர் காலம்வரை இக்காசுகளின் எண்ணிக்கை பத்தின் மடங்குகளிலேயே பெரும்பாலும் இருந்தன. ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே இருநூற்று முப்பத்தெட்டேகால் ஈழக்காசு அன்றாடு நற்காசை இரண்டே முக்கால் வேலி நான்கு மாகாணி அளவு நிலத்தின் விலைப்பொருளாகக் குறிக்கிறது. இடைச்சோழர் காலம் வரையிலான விற்பனைகளில், கொடைகளில் உயர் அளவினதாகத் தரப்பட்ட தொகை இதுதான்.

குற்றமற்ற காசு நாற்பது கொண்டே உலகமாதேவியின் அன்னை குந்தணன் அமுதுவல்லியார் இக்கோயில் வளாகத்துள்ள பிடாரி ஏகவீரிக்கு அவபலஅஞ்சனை அமைத்தார். அன்றாடு நற்காசு இரு பத்திரண்டுக்கு நங்கத்தார் தளி நகரத்தார் சேத்ரபாலர் கோயிலுக்கு நிலம் விற்றுள்ளனர். ஈழக்காசு அன்றாடு நற்காசு நான்கினுக்கு மலைப்பந்திச் சட்டன் நாராயணன் வாசுதேவன் ஒரு மா நிலத்தை சேத்ரபாலர் கோயிலுக்கு விற்றுத்தந்தார். ஆனால், இரண்டாம் இராஜராஜர் காலத்தில் கோனிலத்து ஊரார் விற்ற இருமாவரை நிலத்தின் விலை முந்நூறு காசு. பிற்சோழர் காலத் தொடக்கத்திலேயே காசின் மதிப்புக் குறைவதைக் காணமுடிகிறது. மூன்றாம் இராஜராஜர் காலத்தில் நான்கு இலக்க, ஐந்து இலக்க எண்களிலேயே நிலவிலைகள் அமைந்திருந்தன. மிக எளிதாக அறுபதாயிரம் காசுக்கு நிலத்துண்டுகள் விற்கப்பட்டன. திம்மப்ப நாயக்கர் காலக் கல்வெட்டுப் பணம் பற்றிக் குறிப்பிடுகிறது.

குறிப்புகள்
12. பு.க. 1, 6.
13. வரலாறு 14 - 15, பக். 48 - 50.
14. பு.க. 8.
15. வரலாறு 14 - 15, பக். 26 - 27.
16. வரலாறு 14 - 15, பக். 26 - 27; SII 8 : 215.
17. SII 8 : 228.
18. SII 8 : 224, 225.
19. SII 8 : 234; பு.க. 4.
20. பு.க. 8.
21. SII 8 : 218; பு.க. 4.
22. வரலாறு 14 - 15, பக். 17 - 19; பு.க. 12.
23. பு.க. 1, 4.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.