http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 181
இதழ் 181 [ செப்டம்பர் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 難波江の 葦のかりねの ひとよゆゑ みをつくしてや 恋ひわたるべき கனா எழுத்துருக்களில் なにはえの あしのかりねの ひとよゆゑ みをつくしてや こひわたるべき ஆசிரியர் குறிப்பு: பெயர்: சேடிப்பெண் பெத்தோ காலம்: பிறப்பு, இறப்பு தெரியவில்லை. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பேரரசர் சுதொகுவின் பட்டத்தரசி கோகாமொன் அவர்களின் அந்தப்புரத்தில் முதன்மை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். பிறப்பும் இறப்பும் தெரியவில்லை எனினும் கி.பி. 1181ல் துறவறம் பூண்டார் என்ற தகவல் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. ஏராளமான கவிதைப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றிருந்தாலும் ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 9 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: முதல் சந்திப்பில் பறிகொடுக்கப்பட்ட மனது பாடலின் பொருள்: நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன. இருபொருள் தரும் மூன்று சொற்களை வைத்து இச்செய்யுளைச் சிலேடையாக்கி இருக்கிறார் ஆசிரியர். இத்தொடரின் 19வது பாடலிலும் (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?) 20வது பாடலிலும் (உயிரையும் தருவேன் உனைக்காண) இம்மூன்று சொற்களும் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 21ம் பாடலில் (மலைவளி வீழ்த்து தருக்கள்) கூறியதுபோல் ஜப்பானிய மொழியில் கான்ஜி எழுத்துருக்கள் ஒரே ஒலிப்பின் வெவ்வேறு பொருட்களை உணர்த்துமாறு பயன்படுத்தப்படுவதை வைத்துக் கவிதைகளில் சிலேடையைக் கையாண்டிருக்கிறார்கள். இப்பாடலில் கரினெ, ஹிதோயொ, மிவோட்சுகுஷி ஆகிய சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கரினெ(かりね) - கணுவின் வெட்டப்பட்ட சிறுபகுதி(刈り根) / மிகக் குறுகியகாலக் கூடல்(仮寝) ஹிதோயொ(ひとよ) - ஒரு கணு(一節) / ஓர் இரவு(一夜) மிவோட்சுகுஷி(みをつくし) - நீர்மட்டம் காட்டும் கோல்(澪標) / வாழ்க்கை(身を尽し) ஜப்பானிய மொழியில் இத்தகைய ஒலிப்பு ஒற்றுமைகள் சிலேடைக்கு உதவினாலும் தமிழில் சொற்கள் பொருந்தி வராததால் இருவேறு வெண்பாக்களாக இயற்றப்பட்டிருக்கின்றன. வெண்பா: கணுவது வெட்டிட வெட்டிட மீண்டும் மணுவென மாறிச் சிறிது - அணுவும் தளராது நீண்டு துளிர்த்தே பெருகிடச் சூழ மறைவது கோல் மணு - எட்டு வீசை கொண்ட மணங்கு என்னும் அளவின் பேச்சு வழக்கு இரவினில் சேர்ந்தது இம்மியே ஆயின் கிரக்கம் குறையா நினைவே - சிரக்கும் நலனை; அதன்வழி மீளலும் அன்றியே சூழக் கெடுவது வாழ்வு சிரக்கும் - அழிக்கும் அல்லது கெடுக்கும் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |