http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 181
இதழ் 181 [ செப்டம்பர் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 見せばやな 雄島のあまの 袖だにも 濡れにぞ濡れし 色は変はらず கனா எழுத்துருக்களில் みせばやな をじまのあまの そでだにも ぬれにぞぬれし いろはかはらず ஆசிரியர் குறிப்பு: பெயர்: சேடிப்பெண் தாய்ஃபு காலம்: கி.பி. 1131-1200. பேரரசர் கோஷிராகவாவின் முதல் மகளும் முந்தைய பாடலின் (ரகசியமானது காதல்) ஆசிரியரான ஷிக்கிஷியின் அக்காவுமான இளவரசி ர்யோஷியின் அந்தப்புரத்தில் முதன்மை உதவியாளராக இருந்தவர். அப்போது சிலகாலம் அரசவையின் புலவர் குழுவில் ஒரேயொரு பெண்பாற்புலவராகவும் இருந்துள்ளார். கரின்யென் என்ற கவிதை வட்டத்தின் உறுப்பினராக இருந்து பல கவிதைப்போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். கி.பி. 1192ல் இளவரசி ர்யோஷி புத்தமதத்தைத் தழுவியபோது இவரும் தழுவினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக "தாய்ஃபுவின் ஆயிரம் பாடல்கள்" என்ற தனிப்பாடல் திரட்டும் 63 பிற பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: காதலின் வலியைக் காதலர்க்கு உரைத்தல் பாடலின் பொருள்: தினந்தோறும் அலைகளால் நனையும் ஓஷிமா தீவின் மீனவர்களின் உடைதான் அதிகம் நனைவது என நினைக்கிறோம். ஆனால் வற்றாத என் கண்ணீரால் வண்ணமே மாறிவிட்ட என் உடையின் கைப்பகுதியைப் பாருங்கள். இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் ஹொன்காதோரி என்றொரு பாடல் புனையும் முறை இருந்திருக்கிறது. இதற்கு முன்னர் இயற்றப்பட்ட ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை விரித்துக் கூறுவது போலவோ அல்லது அதற்குப் பதில் கூறுவது போலவோ பாடலை இயற்றுவது. இத்தொடரின் 48வது பாடலை (இதயஅலை மோதும் மனக்கல்) பாடலின் ஆசிரியர் ஷிகேயுக்கி வேறொரு பாடல் திரட்டில் இயற்றிய பாடல் ஒன்றுக்கு இப்பாடல் மறுமொழியாக அமைந்திருக்கிறது. இவரது பாடல் "ஓஷிமா தீவின் மீனவர்களின் உடை மட்டுமே கண்ணீரால் நனைந்த என் உடையின் கைப்பகுதி அளவுக்கு நனைந்திருக்கிறது" என்ற் பொருள் கொண்டது. இப்பாடலுக்கு மறுமொழியாக இப்புலவர் இயற்றியது "ஓஷிமா மீனவர்களின் உடையைவிட அதிகமாக நனையும் அளவுக்கு என் கண்ணீர் வற்றாமல் இருக்கிறது" என்பது. இப்பாடலின் இறுதி அடியில் கைப்பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது என்று வருகிறது. வெளுத்திருக்கிறது என்று சொல்லாமல் வண்ணம் மாறியிருக்கிறது என்று சொல்வதால் அழுதழுது கண்ணீர் வற்றி ரத்தமே கண்ணீராகப் பெருகி உடையைச் செந்நிறமாக மாற்றியுள்ளது என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வெண்பா: அலைபல மோதினும் பெய்திடும் சோனை இலைச்சை வெளுக்கா உடையோ? - தலைவா உனதுயிர் ஏந்திய பேதையோள் கண்களால் செந்நிறம் ஆன உடை சோனை - விடாமழை இலைச்சை - நிறம் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |