http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 181
இதழ் 181 [ செப்டம்பர் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவர்களில் அரசர்களைப் போலவே அரசியரும் இருந்தனர். எனினும், கண்டராதித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னையுமான செம்பியன்மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம் அவர்களில் பலருக்குக் கிடைக்காமலே போயிற்று. கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்ததும் அவர்களுக்கிடையிலும் பின்பும் ஆட்சியிலிருந்தவர்கள் மாதேவியிடம் செலுத்திய அன்புநிறை பத்திமையுமே செம்பியன்மாதேவியின் அரும்பணிகள் சிறக்கவும் தொடரவும் நிலைக்கவும் காரணிகளாயின. முதல் பராந்தகர் காலத்திலிருந்து முதல் இராஜராஜர் காலம்வரை சோழராட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்திசத்திவிடங்கி. சோழநாட்டின் பெருவேந்தராய் மிளிர்ந்த முதல் இராஜராஜரின் பட்டத்தரசியாக, உலகமாதேவி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இப்பெருமாட்டி இரண்டு கலைக்கோயில்களை உருவாக்கியுள்ளார். இரண்டுமே பாடல் பெற்ற இரு காவிரிக்கரைக் கோயில்களில் அடங்கியுள்ளன. சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழித் தளி, பெருவளாகமாய் விரிந்த பெருங்கோயில். அதன் முதலிரு கோபுரங்களுக்கு இடைப்பட்ட பெருவெளியில் தென்புறத்தே இலங்கும் ஒருதள விமானமும் முகமண்டபமும் பெற்ற சேத்திரபாலர் கோயில் தந்திசத்திவிடங்கியால் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டில் எழுப்பப்பட்டது. அப்பர் கயிலாயக் காட்சி பெற்ற திருவையாற்று ஐயாறப்பர் கோயிலுள் வடபுறத்தே விளங்கும் உலகமாதேவீசுவரமான வடகயிலாயம் இவ்வம்மையால் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக வடிவம் பெற்றது. இரண்டு கோயில்களுமே எழிலார்ந்த சிற்பங்களாலும் வளமான கல்வெட்டுகளாலும் நிறைந்துள்ளன. பல திருக்கோலங்களில் பல்வேறு திருப்பெயர்களுடன் விளங்கும் சிவபெருமானுக்கு ஆடையற்ற கோலங்களாய் அமைந்தவை மிகச் சிலவே. அவற்றுள் மிகப் பழைமையானது அவர் பிச்சையேற்கும் கோலம். நாயை ஊர்தியாகக் கொண்ட பைரவ வடிவம் அவரது மற்றோர் ஆடையற்ற கோலமாகும். இவ்விரண்டு கோலங்களிலும் முற்சோழர் சிற்பங்கள் பலவாய்க் கிடைத்துள்ளன. மூன்றாவதும் சிறப்புக்குரியதுமான வடிவமாக அமைந்த சேத்ரபாலரைத் தமிழ்நாட்டில் செழிக்கச் செய்தவர் தந்திசத்திவிடங்கி. உத்தமசோழரின் ஆட்சிக்காலத்தில் உலகமாதேவியால் வலஞ்சுழிக் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் அமைக்கப்பெற்ற சேத்ரபாலர், இராஜராஜர் ஆட்சிக் காலத்தே தனித் திருமுன் பெற்றுக் கற்றளித் தெய்வமாய் இடம்பெயர்ந்தமையைக் கல்வெட்டுகள் பெருமையோடு புகல்கின்றன. சேத்ரபாலர் என்றால், ‘ஊர்க்காவலர்’ என்று பொருள். ‘தாம் இருக்கும் இடத்தைக் காப்பவர்’ என்று இவரை ஆகமங்கள் அடையாளப்படுத்துகின்றன. வலஞ்சுழிக் கோயிலுக்குள் தென்கிழக்கில் மேற்குப் பார்வையாக அமைந்த இத்திருமுன்னே தமிழ்நாட்டில் சேத்ரபாலருக்காக எடுக்கப்பட்ட முதல் தனித் திருக்கோயிலாகும். தமிழ்நாட்டில் காணப்பெறும் மிகச் சிலவான இந்த ஊர்க்காவலர் சிற்பங்களில் தலையாயது உலகமாதேவியால் உருவாக்கப்பட்டது. எட்டுக் கைகளுடன் சுடர்முடி அழகராய் விளங்கும் வலஞ்சுழி ஊர்க்காவலரின் தலையில், இடுப்பில், திருவடியில் பாம்புகள். காவலுக்குரிய கருவிகள் கைகளில் இலங்கக் கோரைப்பற்களுடன் நெடிய திருமேனியராய் விளைந்த இந்தக் காவலருக்குப் பூசைக்கும் அழகூட்டலுக்கும் என உலகமாதேவியும் சோழப் பெருங்குடும்பமும் வாரி வழங்கிய கொடைகள் கல்வெட்டுகளாய் இந்தத் திருமுன் சுவர்களை நிறைத்துள்ளன. இராஜராஜப் பெருவேந்தர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் கொடையாளர் பட்டியலில்கூட இடம்பெறாத அவரது மூன்று திருமகள்களுள் குந்தவையும் நடுவிற் பெண்ணான மாதேவடிகளும் சேத்ரபாலருக்குத் தங்கம் தந்து மகிழ்ந்துள்ளனர். உலகமாதேவியின் வலஞ்சுழி அறிமுகம் சேத்ரபாலர் வழிபாட்டைச் சோழநாட்டில் செழிக்க வைத்தது. ஐயாற்று உலகமாதேவீசுவரம் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக உலகமாதேவியால் கற்றளியாய் எழுப்பப்பெற்றது. வலஞ்சுழி சேத்ரபாலர் போலவே இங்கும் சோழக் கொடைகள் கல்வெட்டுகளாய்க் கற்சுவர்களை நிறைத்துக் கண்சிமிட்டுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜரின் மூன்றாம் மகள் அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவியை வெளிச்சப்படுத்துகிறது. வலஞ்சுழி சேத்ரபாலருக்கு விருப்போடு பொன்னையும் நகைகளையும் அள்ளி வழங்கிய குந்தவை நங்கையை உலகமாதேவீசுவரம் கல்வெட்டுகளில் காணமுடியாதபோதும் மாதேவடிகள் வலஞ்சுழிக்கு அளித்தாற் போலவே இங்கும் கொடையாளியாய் ஒளிர்கிறார். உலகமாதேவீசுவரத்திற்கு அளிக்கப்பட்ட கொடைகளுள் குறிப்பிடத்தக்கது பாவைக்கண்ணாடி. இதை, ‘செம்பின் மேல் பொன் அடுக்கிய பாவைக்கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று, மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் காண்ணடி ஒன்று’ என விரித்துப் போற்றும் கல்வெட்டு, அந்நாளைய ஆடலுக்குத் தோல்கருவிகளே பேரிசைக் கருவிகளாய் விளங்கியமை சுட்டுவதுடன், சோழர் கைத்திறம், கலைத்திறம் இவற்றிற்கும் சான்றாய் நிற்கிறது. வலஞ்சுழி சேத்ரபாலரை உருவாக்கிய சிற்பியின் பெயர் பதிவாகவில்லை என்றாலும், உலகமாதேவீசுவரச் சிற்பியை முதல் இராஜேந்திரரின் கல்வெட்டு அடையாளப்படுத்துகிறது. எழிலார்ந்த சிற்பங்களுடன் உருவான இக்கற்றளியை வடிவமைத்த செம்பியன்மாதேவிப் பெருந்தட்டாரின் உளித்திறம் போற்றித் தட்டாரக்காணியாக நிலம் வழங்கிப் பெருமைப்படுத்திய தந்திசத்திவிடங்கி இராஜராஜருக்குப் பிறகும் பெருமையுடன் வாழ்ந்திருந்தமை இங்குள்ள இராஜேந்திரர் கல்வெட்டுகளால் வெளிச்சமாகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில்களிலும் கொடையாளிகளாய்த் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யாத இராஜராஜரின் மகள்கள் மூவரும் உலகமாதேவியின் திருப்பணிகளில் மட்டும் பங்கேற்றுள்ளமை அவர்களை அவ்வம்மையின் அன்புக்குரிய புதல்விகளாய் அடையாளப்படுத்துகிறது. இம்மூவருள் குந்தவை மட்டுமே விமலாதித்தரின் தேவியாய் அறிமுகமாகிறார். பிற இருவரும் இராஜராஜரின் திருமகள்களாக மட்டுமே கல்வெட்டுகளில் காட்டப்பெறுகின்றனர். வரலாற்றின் பாதை விசித்திரமானது. ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்ற இராஜராஜரின் பெருமைக்குரிய தொடரில் அவர் திருமகள்கள் அடைக்கலமாகாமைக்கு எது காரணமோ அதுவே தந்திசத்திவிடங்கி போன்ற படைப்பாளிகளையும் மேகமாய் மறைத்து வேடிக்கை காட்டுகிறது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |