http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 181
இதழ் 181 [ செப்டம்பர் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்! அப்பருடைய வாழ்க்கையை எழுதத் தொடங்கும் சேக்கிழார், ‘திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்’ என்று முதல் பாடலில் குறிக்கிறார். திருத்தொண்டின் அகண்டபொருளைத் தம் வாழ்வாலும் பதிகங்களாலும் உலகிற்கு விளக்கிய வாகீசரை அறிமுகப்படுத்த, எவ்வளவு துல்லியமான சொல்தேர்வு! அப்பர், ‘தொண்டுசெய்து என்றும் சோற்றுத்துறையார்க்கே உண்டுநீ பணிசெய் மடநெஞ்சமே’(5.033.10) என்று முதலில், தொண்டின் சிறப்பைத் தம் நெஞ்சுக்குத் தெளிவுபடுத்தினார். பிறகு, ‘தொண்டீர்! ஆரூரமர்ந்தான் அடிநிழற்கீழ்ச் சாம்பலைப்பூசிச் சலமின்றித் தொண்டுபட்டு உய்ம்மின்களே’(4.102.01) என்று, இறைத்தொண்டர்களுக்கு வலியுறுத்தினார். திருத்தொண்டின் அளவற்ற ஆற்றலால் அடுத்து, ‘என் சொல் மறவேல் நமன் தூதுவீர்! கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ்சூழலே(5.092) என்று, பதிகம் முழுதும் பலவாறாக நமன் தூதர்களுக்குக் கட்டளையிட்டார். இவையனைத்தையும் தாண்டி இறைவனிடமே, ‘நாட்பட்டு வந்து பிறந்தேனிறக்க நமன்றமர்தம் கோட்பட்டு நும்மை மறக்கினுமென்னைக் குறிக்கொண்மினே (4.095.05)- இவ்வுலகில் நெடுங்காலம் உயிர்வாழ்ந்துப் பின்னிறக்கும் விதியுடைய என்னைக் காலன் அழைக்கையில், நான் உம்மை மறந்தாலும் நீர் என்னைக் கருத்தில் கொள்ளவேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தார். சிலப்பதிகாரக் கானல்வரியில், ‘எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்,’ (கானல் வரி 32, சிலப்பதிகாரம்) ‘அடப்பங்கொடிகளே அன்னங்களே, தலைவர் நம்மை நினையாது போனாரோ.. அவர் நம்மை மறந்தாராயினும் நாம் அவரை மறக்கமாட்டோம்,’ என்று சொல்லும் தலைவியின் கூற்றில் தெரிவது, காதலின் நெகிழ்ச்சி. இறைவன்பால் காதலும் தன்னைமறந்த அன்பும் பத்திமையின் பகுதியே. இறையன்பர் அப்பரின் கூற்றோ தலைவி கூற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறவாதிருக்க வேண்டும்,’ என்று இறைவனுக்கே பெரும்பொறுப்பைத் தருவதாக அமைந்துள்ளது. பத்திமைத் தொண்டின் துணிவையும் வலிமையையும் உலகோருக்கு உணர்த்துவன நாவுக்கரசரின் சொற்கள். அதனால்தான், இன்தமிழ் மாலைபாடிக் கைத்திருத்தொண்டு செய்யுங்காதலில், திருக்குறுந்தொகைகள் பாடித் திருவுழவாரங் கொண்டு பணியாற்றிய அப்பரின் பல்வேறு பணிகளைச் சேக்கிழார், ‘பெருந்திருத்தொண்டு’ என்று குறிப்பிடுகிறார் (12.21.171). இறைவனை நாடிப் பரம்பொருளை உணர்ந்தோர், மக்களின் முன்னமர்ந்து அருள்மொழிகள் வழங்க, அப்பர்மட்டும் மக்களோடு மக்களாய் அவர்களுக்கிடையில் வியர்வைசிந்த உழைத்தபடி இறையுணர்வை வளர்த்தார். மக்களுள் ஒருவராகத் தம்மை எண்ணியபடியால் அவர்களோடு உரையாடியபடியே இருந்தார். அந்த உரையாடலில், தம்மைப் போன்ற ஒருவர் கடந்துவந்த கடினப்பாதையையும் கடப்பதற்குள் ஊனுருக உயிருருக அவருக்குள் ஏற்பட்ட பலவித உணர்வுகளையும் மக்கள் கண்டனர். விருப்பம்போல் வாழ்ந்து, தவறிழைத்து, துன்பப்பட்டு, அஞ்சி, பின் தவறுணர்ந்து, மன்றாடித் தொழுது, சிவனின்பால் பேரன்பு வளர்த்து, தொண்டாற்றி, இறைத்தொண்டின் திறத்தைத் தமக்கும் உணர்த்தும் அடியாரை, தம்முள் ஒருவராகவே அவர்கள் பார்த்தனர். போராட்ட வாழ்வில் சிவநெறியை அழுந்தப்பற்றி வெற்றிகண்ட வாகீசர், தூய மனத்தினராய் நாடும் மக்களைத் தேடிவந்து அருள்புரிபவர் சிவபெருமான் என்ற கருத்தைத் தம் பாடல்களில் அழுத்தமாக விதைத்தார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற இறைவனை அடையும் வழிகளில், அன்பொன்றை மட்டுமே மனதில்வைத்து உழைப்பை உடலில்வைத்து எளியோரும் சிவனருள் பெறும்வழியைக் காட்டினார். பெரிய வித்தைகள் இல்லாது, குழப்பங்கள் ஏதுமின்றி, உடல் தூய்மையோடு ஆலயத் தூய்மையிலும் இறைவழிபாட்டு முறைகளிலும் கவனம் செலுத்தச் சொன்னார். கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே (5.099.09) கோடிதீர்த்தங்கள் கலந்து குளித்து நீராடினாலும், இறைவனிடத்தில் அன்பு இல்லையேல், ஓடும் நீரை ஓட்டைக் குடத்தில் மூடிவைத்த மூர்க்கனின் செயலையே அது ஒக்கும், என்று உறுதியாக முழங்கினார். கோயில்களுக்கும் அதிலுறையும் இறைவனுக்கும் மக்கள் செய்யவேண்டிய தொண்டுகளைத் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டினார் அப்பர். ஒன்றுகூடி அனைவரும் தொண்டாற்றும் அன்புத்தலம் கோயிலென்றும், சமூகப் பிரிவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி இறைவனை உடலால் நெருங்கி உணர்வால் இணக்கமுறும் இன்பக்களம் இறைவழிபாடு என்பதையும் ஐயமின்றி வெளிப்படுத்துவன அவர் பதிகங்கள். இந்த வழிகாட்டலே, கோயில்களைப் பராமரித்து உடலுழைப்பாலும் உள்ளன்பாலும் ஏற்றத்தாழ்வின்றி இறைவழிபாட்டில் பங்கேற்க, ஏழாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தியது. திருநல்லம் திருநாவுக்கரசர் தம் பாடல்கள் பலவற்றில், கோயில்சென்று இறைவனை வழிபடும் முறைகளைக் கூறியுள்ளபோதிலும், திருவையாறு(4.003), இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை(5.095), திருக்கன்றாப்பூர்(6.061), திருவங்கமாலை(4.009) என்ற நான்கு திருப்பதிகங்களில், பட்டியலிட்டுப் புரிந்துகொள்ளுமாறு மிக அழகாக வழங்கியுள்ளார். அந்தப் பாடல்கள், அன்பர்கள் உணர்ந்து செயலாற்ற ஏதுவான வழிபாட்டுக் கையேடாக இன்றளவும் கொள்ளத்தக்கன என்பது வேறெந்த நாயன்மார் பாடல்களிலும் காணகிட்டாத இறைத்தொண்டில் சமூகத்தொண்டு. திருவையாறு அப்பர் பெருமான், உமையோடு வீற்றிருக்கும் இறைவனைக் கயிலாயத்தில் காணவேண்டி, கால்கள் தேய- கைகளும் மணிக்கட்டுகளும் கரைந்து சிதைய- மார்புத் தசைகள் தேய்ந்து சிதற- எலும்புகள் முறிந்தாலும் அன்புநிறைந்த சிந்தையோடும் தளராத உள்ளத்தோடும் கடினப் பாதைகளைக் கடந்து செல்கிறார். திருத்தொண்டர் வேறெவரும் படாத இன்னல்மிகு உடல்வருத்தம் இது. நண்பர் சேரமானோடு சேர்ந்து கயிலையடைந்த சுந்தரரின் வாய்ப்பும் அப்பருக்குக் கிட்டவில்லை. உடலால் தேய்ந்து சிதைந்த அப்பர், சிவனார் பணித்தபடியால் யாதொரு சுவடும்படாமல் ஐயாறடைந்து, ‘மாதர் பிறைக்கண்ணியானை’ என்று தொடங்கும் திருவையாற்றுப் பதிகம் (4.003) பாடுகிறார். கயிலைக்குச் செல்லாது தமிழ்மண்ணில் மறுபடி கால்பதித்ததால் அப்பரைக்காட்டிலும் பயனடைந்தது தமிழ்ச்சமூகந்தான். ஈடற்ற இணையரான வண்டுலாவுங்குழல் மலைமகளையும் அண்டர்நாயகரையும் வடகயிலையில் காணவியலாமல் திருவையாற்றில் காணச்செல்லும் அப்பர், தாம்கண்ட பல்வேறு இணைகளைச் சுவைபடச் சொல்வதை வியக்காமல் எங்ஙனம் இருப்பது? திருவையாற்றில், காதல் மடப்பிடியோடு களிறு; பேடையொடு வரிக்குயில், சேவல், மயில், மான், நாரை, பைங்கிளி; பசுவைத் தழுவிய ஏறு ஆகியன வருவதைப் பதிகத்தில் பாடுகிறார். இவ்வளவு சுவையுடன் பாடப்பட்ட பதிகத்தில், அடியார்கள் இறைவனைப் பரவும் வழிகளையும் வரிசையாகக் காட்டுகிறார் அவர். அதிகாலையில் எழுந்து மலர்க்கொய்து, முழுமையாக மலராத மொட்டுக்களுடன் நீர்ச்சுமந்து, ‘வாழி’ ‘போற்றி’ என்று ஏத்திச் சுழன்றாடி, ஆடலுக்கேற்பத் தாளமிட்டுமாடி, நீர்த்துறையில் வளர்ந்த பல்வேறு மலர்களைக் கொணர்ந்து தூவித்தொழுது, பாடியுமாடியும் இறையடியே நினைந்து உணர்ந்துருகிக் குழைந்து தொண்டர்கள் வழிபட்டதையும், இனிவருவோர் வழிபடுமாறும் உணர்த்துகிறார். இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றியவன் செங்க ணானும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர் இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே (5.095.11) திருமாலும் நான்முகனும் எங்குந்தேடியும் செஞ்சடை மூர்த்தியைக் காணமுடியவில்லை. ஏன் காணமுடியவில்லை என்று பதிகத்தில் வரிசையாகப் பட்டியலிடுகிறார் அப்பர். “தேடித்திரிந்துணர்ந்தோர், நான்முகனும் திருமாலும் மட்டுந்தானா? நீங்களுந்தான் சற்றே ஆழ்ந்து இப்பதிகத்தைத் தேடுங்களேன்..,” என்று நமக்கும் தேடும் பணியைத் தருகிறார் வாகீசர். தேடினால் கிடைப்பதோ பெரும்புதையல். திருமாலும் நான்முகனும், இறைவனுறையும் கோயில் புகுந்து, மகிழ்வுடன் மணமிக்க மலர்களைக் கொய்து, அம்மலர்களைச் சிவனாருக்கு விருப்பத்துடன் அளித்து வணங்கவில்லை; இறைவனைப் பூவும்நீரும்கொண்டு திருமுழுக்கிட்டு, திலகமிட்டுச் சுற்றியும் வரவில்லை; பசுவின் சாணம்கொண்டு கோயிலைத் திருமெழுக்கிடவில்லை; பூக்கள் நிரம்பிய கூடையைச் சுமந்து வரவில்லை; நெய்யும் பாலும் கொண்டு திருமுழுக்கிடவில்லை; பொய்யும் வஞ்சகமும் நீக்கிப் புகழ்ந்திடவில்லை; எருக்கம்பூவை மாலையாக்கிச் சூடிவிடவில்லை; தாங்கள் கோவணம் அணியவுமில்லை, மரங்களில் ஏறி மலர்பறிக்கவுமில்லை; நிரம்ப நீர்ச்சுமந்து திருமெழுக்கிட்டு சிவனாரை நினைக்கவில்லை; எட்டுறுப்புக்களும் நிலத்தில்படுமாறு வீழ்ந்து வணங்கவில்லை; திருநீறு விளங்குமாறு அணியவில்லை, மணமிக்க மலர்களால் தலைமாலை புனையவில்லை; அன்றலர்ந்த குவளை மலர்களைப் பிளந்து அவற்றின் இதழ்களைப் பிணைத்தும் தொடுத்தும் திருவடியிலிட்டு வணங்கவில்லை; உருத்திராக்கமாலை அணிந்து, சங்கை வாயில்வைத்து ஒலியெழுப்பி வழிபடவுமில்லை. இத்தனை வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடிக்காததால்தான் திருமாலும் பிரம்மனும் தேடித்திரிந்தும் சிவனைக் காணாது நின்றனர் என்பது பதிகத்தில் பொதுவாகக் கொள்ளப்படும் எளிய பொருள். “இவையனைத்தையும் வாழ்க்கை முறையாக வழுவாது ஏற்றீர்களானால், திருமாலுக்கும் நான்முகனுக்கும் காணக்கிடைக்காத அழல்நிற வண்ணனை நீங்கள் காணலாம்”, என்று பதிகத்துள் தேடியுணரும்வண்ணம் செய்திகளை வைத்து, புன்னகைக்கிறார் அப்பர். திருக்கன்றாப்பூர் திருக்கன்றாப்பூர் திருப்பதிகத்தின் (6.061) பாடல்கள் அனைத்தும் ‘தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே,’ என்று முடிகின்றன. இறைவன் எங்கிருக்கிறான் என்ற மிகப்பெரிய வினாவுக்கு எளிமையான ஆனால் அழுத்தமான விடையைப் பகிர்கிறார்- இறைவனுறையுமிடம் அவரைத் தொழுமடியாரின் நெஞ்சமேயாம். இவ்வகையில், பேரன்பை மனத்தில்வைக்கும் தொண்டரையும் அந்த அன்புக்கு மதிப்பளிக்கும் இறைவனையும், சமமாய் உயர்த்தித் தாங்கிய தகைமை நாவுக்கரசருக்கே உரியது. என்னென்ன நற்செயல்கள் புரிந்து, பணியாற்றித் தொழுமடியார்? என்ற கேள்வி படிப்போருக்கு வருவது இயல்புதானே! இறைவனைத் தொழும் அடியார்கள் இயல்புகளைச் சொல்லும் அதே நேரத்தில், எதையெல்லாம் செய்தால் இறைவனைக் காணலாம் என்பதை மேலும் விரிவுபடுத்துகிறார். எளியோரும் ஆற்றக்கூடிய இறைத்தொண்டோடு, சிவனடியாரைச் சிவனெனவே போற்ற வேண்டியதை வலியுறுத்தும் பதிகம் இது. • நாதனேயென்று பரவி நெஞ்சுருகி வஞ்சமிலா அன்போடு, முப்பொழுதும் பூவும் நீரும் கொண்டு நாள்தோறும் வாழ்த்தியேத்தித் தொழுமடியார்; • விடிந்ததுமே வெண்ணீற்றை மெய்யிற்பூசி வெளுத்த கோவணமுடுத்தி இறைவனைப் போற்றி, நறுமண மலர்களைத் தூவித் தொழுமடியார்; • திருநீறணிந்து, உருத்திராக்கம் பூண்டிருப்பவரைக் கண்டால், ‘இவர் வழிபடத்தக்கவரா வழிபடத்தகாதவரா?’ என்ற ஐயத்தின் அடிப்படையில் மனிதருள் வேறுபாடு காட்டாது, இறைவனுக்குத் தொண்டு செய்வதுபோலவே அவர்களையும் தொழுமடியார்; • இது மற்றவர்களுக்கு உதவும் காலமல்ல, நல்ல நாளல்ல என்றெல்லாம் நினையாமல், அனைவருக்கும் ஈந்து, நல்வழிநின்று, பொய்யின்றி மெய்யன்புடன் தொழுமடியார்; • இறைவனைப் பலவாறாக வாழ்த்தி, புலனைந்தும் அடக்கி, உள்ளன்பால் தொழுமடியார்; • இறைவனின் அஞ்செழுத்தை நெஞ்சுருகித் தொழுமடியார்; • அகங்குழைந்து மெய்சிலிர்த்து இறைவன் தாளைக் கையினால் தொழுமடியார்; • மனவுறுதியால் ஐம்பொறிகளையும் அடக்கி, மனங்கலங்காமல் ‘சிவாயநம வென்னுஞ் சிந்தைச்சுருதிதனை’ மனதில் வைத்து, தொழுமடியார் நெஞ்சினுள்ளே இறைவனைக் காணலாம். இப்படி, இன்றளவும் தொடரவேண்டிய சிவத்தொண்டரின் கடமைகளைச் சமூகநோக்குடன் தெளிவாக எடுத்துச்சொன்னவர், ஏழாம் நூற்றாண்டில் சைவத்தை நிலைநாட்டவந்த வாகீசர். திருவாரூர் ‘மதிதருவன் நெஞ்சமே’ என்று, தன் நெஞ்சுக்கு அறிவூட்டப் பாடப்பட்டது திருவாரூர் திருப்பதிகம் (6.031). “அம்மானே ஆருரெம்மரசே; பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய்; உற்றவரும் உறுதுணையும் நீயே; உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கேன்,” என்று பதிகம் முழுதும் பலவாறாகப் போற்றித் துதிக்க மனதிற்கு வழிகாட்டுகிறார். நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே (6.031.03) “நாள்தோறும் எம்பிரான் கோயிலுக்குச் சென்று, விடிவதன்முன் குப்பைகளை நீக்கி, நீரிட்டு மெழுகி, பூமாலை தொடுத்து, இறைவனைப் புகழ்ந்து பாடி, தலையால் கும்பிட்டு, கூத்தாடி, சங்கரா சய போற்றி போற்றி என்று ஆரூரனை அழைத்து வழிபடுவாயாக,” என்று அன்பர்கள் செய்யவேண்டிய எளிய நெறிகளைக் கூறுகிறார். மேலும், ‘அம்மானே ஆரூரெம் ஐயாவென்று துதிசெய்து மலர்த்தூவி, கோயிலை வலஞ்செய்து தொண்டர்களைப் போற்றி இறைவனை’ நாடவேண்டிய முறையை இயம்புகிறார் (6.031.08). தஞ்சை இராஜராஜீசுவரம் திருக்கடவூர் வீரட்டம் கடவூர் வீரட்டானப் பதிகத்தில் (4.031), விளக்கேற்றி தூபமிட்டு வழிபடும் திருத்தொண்டுகளைக் குறிப்பிடுகிறார். பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே (4.031.04) புலரும் பொழுதில் நீராடி அரும்போடு மலர்கள் கொண்டு, விளக்கும் தூபமுமிட்டு வழிபடுவோருக்கு, வெல்லக்கட்டிப்போல இனியவர் கடவூர் வீரட்டனார், என்று சுருங்கச் சொல்கிறார். அதேபோல் விடியும்பொழுதில், தூபமூட்டியில் கனலில் குங்கிலியப்புகை காட்டி, இறைவனுக்குச் ‘சங்கொலிப்பித்திடுமாறும்’ (4.102.10), ‘நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி’ (4.040.08) வணங்குமாறும் அடியவர்களுக்குக் கூறுகிறார். திருவங்கமாலை நாவுக்கரசர் பதிகங்களில் திருவங்கமாலைக்குத் தனிச்சிறப்புண்டு. சரியையும் கிரியையும் கொண்டு உடல் தேயத்தேயத் திருத்தொண்டாற்றி உள்ளத்தெளிவும் திண்மையும் பெற்றபின், யோகமும் ஞானமும் கைக்கூடியதைப் பறைசாற்றுவதே- தன் உடலுறுப்புக்களை வசப்படுத்திக் கட்டளையிடும் திருவங்கமாலை. தான் செய்ததை உள்ளன்புடைய எவரும் செய்யவியலும் என்று தம் வாழ்நாள்முழுக்க அவர் சொல்லிவந்தது அங்கமாலைக்கும் பொருந்தும். திருவையாற்றில் தங்கிப் பதிகங்கள் பாடி, அருகிலிருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று, திருப்பணிகள் செய்து, திருப்பூந்துருத்தியை அடைந்த நாவுக்கரசர், ‘செல்கதி காட்டிடப் போற்றும்’- உலகத்துயிர்கள் இறையடியை அடையும் வழியைக் காட்டும் திருவங்கமாலையைப் புனைந்தார், என்கிறார் சேக்கிழார். “தலையில் தொடங்கிக் கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கைகள், கால்கள் என்று உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றாலும் மனிதன் தன்னைப் படைத்த எம்பெருமானுக்குச் செய்யவேண்டுவதெல்லாம், செய்யக்கூடியதெல்லாம் சொன்னார். தமிழ்நாட்டில் அவருக்கு முன்போ அல்லது தொடர்ந்தோ யாரும் காட்டிடாத ஒப்பற்ற வழிமுறைகளைக் கூறும் அப்பரின் திருவங்கமாலை, அவரை அடையாளம் காட்டும் அற்புதமான பதிகமாய் அமைந்தும், அதிகம் பேசப்படாத பதிகமாகவே விடுபட்டுப்போனது,” என்று வரலாற்றறிஞர் டாக்டர் இரா. கலைக்கோவன் பதிவு செய்கிறார் (அப்பர் எனும் அரிய மனிதர், பகுதி 2; வரலாறு.காம்). அன்பர்கள் வழிபடவேண்டிய முறைகளைத் தொகுத்தளித்தும், அக்காலத்தே வழிபட்ட முறைகளை நமக்குக் காட்டியும், தமிழகப் பத்திமை இயக்க வரலாற்றின் பல பரிமாணங்களைப் பின்வந்தோர் புரிந்துகொள்ளப் பெருந்தொண்டாற்றியவர் அப்பர். தலைமாலை தலைக்கணிந்த தலைவனைத் தலையானது வணங்கவும், எண்டோள் வீசி நின்றாடும் பிரானைக் கண்கள் காணவும், செம்பவளத்தையும் தீயையுமொத்த திருமேனி கொண்ட பெருமானின் பண்புகளை எப்போதும் செவிகள் கேட்கவும், இடுகாட்டில் உறையும் முக்கண்ணனைப் போற்றி மூக்கு முரலவும், மதயானையின் தோலுடுத்திப் பேய்கள்வாழ் காட்டகத்தே ஆடும்பிரானை வாய் வாழ்த்தவும், செஞ்சடையுடைய தூயவனை நெஞ்சம் நினைக்கவும், பாம்பை இடையில் கட்டிய பரமனைக் கைகள் சிறந்த மலர்கள் தூவித் தொழுதிடவும் பதிகத்தில் பணிக்கிறார் அப்பர். மேலும் விரிவாக விளக்குபவர்- ‘கோயிலை வலம்வந்தும் பூக்களால் அருச்சித்தும் போற்றாத உடலால் என்ன பயன்? கறைக்கண்டன் உறையும் கோபுரமுடைய கோயிலைச் சுற்றிவராத கால்களால் என்ன பயன்?’, என்று கோயிலை வலம் வந்து அனைவரும் பூக்கொண்டு இறைவன் தாள்பற்றி வழிபடுவதை வலியுறுத்துகிறார். கண்கள் தொடங்கி உறுப்புகளெல்லாம் இறைவனையே நாடிப் போற்றிட, கோயிலை வலம்வந்து, பூக்கள் படைத்து தொழுதாகிவிட்டது. அடுத்தென்ன? இறைத்தொண்டின் அடுத்த படிநிலை இறைவனை அடைதல்தானே? அடுத்தடுத்து வருவனவற்றை விளக்கவரும் திருவங்கமாலையின் இறுதி மூன்று பாடல்கள் நெஞ்சுருக வைப்பவை. ‘கூற்றுவன் நம்முயிரை எடுத்துப் போகும்பொழுது, குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ?,’ என்று உளம்நெகிழ்கிறார். இறைவன் ஒருவனையே ஒருமுகப்படுத்தி உள்ளொளி பெருக்கும் யோகநிலையை அடைந்து, ‘அவனல்லால் யாருளரோ?” என்று குற்றாலக்கூத்தனை உள்ளே நிறுத்துகிறார். அதன்பின், பித்தன்மேல் பற்றுடைய பத்தராக- ‘கூற்றுவன் கொண்டுசென்றபிறகு, ஈசன் திருவடிக்கீழ் சிவகணங்களுள் ஒன்றாக இறுமாந்திருப்பேனோ?,’ என்று சிவகணமாகவே அமர்ந்துவிட்டார் அவர். எங்கும் எதிலும் நிறைந்தவனாக இறைவனை உணர்ந்து, அவ்வுணர்வுத் தெளிவால் தன்னுள்ளே அவரைக் காணக்கூடும் உயர்நிலையே ஞானம் என்பர் பெரியோர். திருஅங்கமாலையின் இறுதிப்பாடலில் - ‘தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்’, என்று தன்னுள்ளே இறைவனை ஞானநிலையில் கண்டுதெளிந்ததை நெகிழ்ந்துப் பாடுகிறார் அப்பர். இறையருளைத் தேடும் உலகவாழ்வுக்கும், அவன் இணையடிச்சேரும் அமரவாழ்வுக்குமிடையில் எத்தனையெத்தனை போராட்டங்கள், மனக்குழப்பங்கள், உளவியல் மாற்றங்கள், உணர்வலைகள், நெகிழ்வும் மகிழ்வுமூட்டும் தருணங்கள்? அத்தனையும் ஒன்றுவிடாமல் நம்மிடையே அமர்ந்துப் பகிர்ந்துகொள்கிறார். அந்த நெகிழ்விலும் மகிழ்விலும் தாம்சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்குரியவற்றைப் பாடுவதை அவர் பொறுப்பாக எண்ணினார். அதனால்தான், தவறான பத்திமைப் புரிதல்களைச் சாடவும் அவர் தவறவில்லை. அப்பரின் புரட்சிக் கருத்து இறைவனுக்குத் தொண்டாற்றும் பலவித நெறிகளைத் தெளிவாகக் காட்டிய திருநாவுக்கரசர், ஒரு மிகப்பெரிய புரட்சிக் கருத்தை விதைக்க முயற்சித்திருக்கிறார். அஞ்செழுத்தை ஓதியுணர்வோருக்கிடையில் பேதமின்றி, உமையுடன் உள்ளத்தில் மகிழ்ந்திருப்பார் இறைவன் (திருமாற்பேறு, 5.060.01) என்று பத்திமையில் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். அதே பதிகத்தின் மற்றொரு பாடல்- சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே (5.060.03) சாத்திரம் கோத்திரம் குலம் என்பவற்றால் என்ன பயன்? பணியவேண்டியது சிவனிடத்தில் என்றுணர்ந்து பணிந்தீர்களானால், மாத்திரையளவு நேரத்தில் அவர் அருளுவார், என்று ஆணித்தரமாக உரைக்கிறார். ஆனால், அப்பரின் இந்த அழுத்தமான கருத்துக்கு, சமூகம் இன்றுவரையில் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இறைவனின் அளவில்லா அருளைக்காட்டிலும் பெரிதாகிப்போன மனிதமனங்களின் வேறுபாட்டுணர்வே, அப்பரின் உயரிய புரட்சிக் கருத்து இன்றளவும் வெற்றிகாணாதிருப்பதன் காரணம்போலும். ஒரு படைப்பாளரின் எண்ணத்தெளிவு அவர்தம் எழுத்தில் மிளிரும். சமூகத்தின்பால் தமக்குரிய பொறுப்புகுறித்த அப்பரின் தெளிவே, அவர்தம் பதிகங்களை நாம் படித்துவியப்பதற்கான முதன்மைக் காரணி. கோயில் வகைகளைத் தேர்ந்த ஆசானைப்போலப் பட்டியலிட்டு வழங்கியவர், கோயில்சென்று இறைவனை வழிபடும் முறைகளையும் அவ்விதமே தொகுத்தளித்துள்ளார். அவ்வகையில், ஒரு வரலாற்றாசிரியராகவும் ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இறைவழிபாட்டு முறைகளைத் துல்லியமாகக் காட்டியவர் திருநாவுக்கரசர். இறைவழிபாட்டிற்குத் தேவையானவற்றை அவர் பட்டியலிட்டதில், பூக்களுக்கு வேண்டிப் பூங்காக்களும், தூய்மைக்கு வேண்டி உழவாரப் பொருட்களும், மெழுக்கிடவேண்டித் தெளிநீர்க் குளங்களும், தொண்டர்கள் பசியாரச் சைவமடங்களும் புத்தொளி பெற்றுப் பெரும்பணியில் அமர்ந்தன. மக்கள் கூட்டத்தை இறைத்தொண்டிலும், கோயில் பராமரிப்பிலும் ஈடுபடச் செய்த சமயமுன்னோடி என்பதோடு, பொறுப்புடன் மக்கள் தொண்டாற்றுதலே இறைத்தொண்டு என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் சொன்னதில் சமூகமுன்னோடியாகவும் தனித்தொளிர்கிறார் அப்பர். சிவத்தொண்டில் மக்களை ஈடுபடவைத்து, தொண்டருக்கென்று அக்காலச் சமூகத்தில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்தவர் நாவுக்கரசர். அவர் பாடல்களால் இன்றும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி. துணைநூல்கள் 1. சேக்கிழார், பெரிய புராணம் 2. டாக்டர் இரா. கலைக்கோவன், அப்பர் எனும் அரிய மனிதர், பகுதி 1,2,3; வரலாறு.காம் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |