http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 181
இதழ் 181 [ செப்டம்பர் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 玉のをよ たえなばたえね ながらへば 忍ぶることの 弱りもぞする கனா எழுத்துருக்களில் たまのをよ たえなばたえね ながらへば しのぶることの よわりもぞする ஆசிரியர் குறிப்பு: பெயர்: இளவரசி ஷிக்கிஷி காலம்: கி.பி. 1149-1201. பேரரசர் கோஷிராகவாவின் மூன்றாவது மகள். தனது 10வது வயதிலேயே ஷிண்டோ மதத்துறவி ஆகிவிட்டார். இவரது தந்தை கோஷிராகவா கி.பி. 1155 முதல் 1158 வரை ஜப்பானை ஆண்டார். நாம் முன்பே பார்த்ததுபோல் ஹொகென் புரட்சியின் விளைவாக அரசரான இவர் 1158ல் நடந்த ஹெய்ஜி புரட்சியால் பதவியை இழந்தார். இருப்பினும் அப்போது நிலவிவந்த இரட்டை ஆட்சிமுறையால் 1192ல் இறக்கும்வரை மிகுந்த அதிகாரம் கொண்டவராக இருந்தார். முழு அதிகாரத்தைக் கொண்டிருந்த கடைசி அரசர் இவர். அதன் பின்னர் அதிகாரம் அரசரிடமிருந்து சாமுராய்களுக்கு மாறியது. அரசபதவி என்பது பெயரளவிலான ஒன்றாக மாறிப்போனது. இளவரசி ஷிக்கிஷி 1159ல் துறவியானபோது இவரது தந்தையால் தலைநகர் கியோத்தோவிலுள்ள கமோ கோயிலின் தலைமைப் பூசாரியாக நியமிக்கப்பட்டார். எனவே, உறவுகளைத் துறந்து பூணும் துறவறமாக இல்லாமல் அதிகார மையத்தின் உள்ளேயே தொடர்ந்து வசித்துவந்தார். பின்னர் 1169ல் தனது 20ம் வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதப்பணியிலிருந்து விலகினார். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் கவிதைகளில் நாட்டம் செலுத்தத் தொடங்கினார். கி.பி. 1181ல் இத்தொடரின் 83வது பாடலை இயற்றிய புலவர் தொஷினாரியிடம் பயிலத்தொடங்கினார். அப்போது இத்தொகுப்பைத் தொகுத்தவரும் தொஷினாரியின் மகனுமான சதாய்யேவுடன் இவருக்குக் காதல் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். சதாய்யேவை விட இவர் 13 ஆண்டுகள் மூத்தவர். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டபோது பல இரவுகள் சதாய்யே இவருக்குப் பணிவிடை செய்ததாகத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் 1190ல் புற்றுநோய் குணமானபிறகு புத்தமதத்தைத் தழுவினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 399 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: காதலை ரகசியமாக வைத்திருக்க எண்ணுதல் பாடலின் பொருள்: கோத்து வைத்திருக்கும் முத்துமாலை இப்போதே அறுந்தால் போகட்டும் (உடலில் இருக்கும் ஆன்மா இப்போதே போனால் போகட்டும் - இப்போதே இறந்தாலும் பரவாயில்லை). ஆனால் தொடர்ந்து வாழ்ந்தால் காதல் வெளிப்பட்டு அவப்பெயர் வந்துசேர வாய்ப்பிருக்கிறது. இப்பாடலிலும் சிலேடை பயின்று வருகிறது. ஜப்பானிய இலக்கியங்களில் கயிற்றால் கோத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துமாலை வாழ்வுக்கு உவமையாக கூறப்படுகிறது. இச்செய்யுளின் முதற்சொல் 'தமா' என்பதற்கு முத்து என்றும் ஆன்மா என்றும் இருபொருள் உள்ளன. கயிறுடன் கோத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துமாலையை ஆன்மாவை உடலுடன் பிணைத்து வைத்திருக்கும் வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டுகிறார்கள். காதலை ஏன் ரகசியமாக மறைக்கவேண்டும்? அப்போதைய காலகட்டத்தில் பெருந்திணை விலக்கப்பட்ட உறவல்ல என்பதால் ஏன் மறைத்து வைக்க முயன்றனர் என்பது தெரியவில்லை. வெண்பா: இறப்பது என்றிடில் இன்னே விரைந்து இறந்திடு மற்று தொடர்ந்தும் - இறவாது நின்றிடில் காதல் வெளிப்படத் தாங்காது வேண்டாமே நீள்நெடு வாழ்வு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |