http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 181

இதழ் 181
[ செப்டம்பர் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 3
நாங்கூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 90 (ரத்தக்கண்ணீர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 89 (ரகசியமானது காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 88 (குறுங்கூடலின் நெடுநினைவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 87 (தூவானமும் வெண்வானமும்)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்- 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில் முனைவோர் - 6
கம்பர் காட்டும் நல்லடக்கம்
இதழ் எண். 181 > இலக்கியச் சுவை
கம்பர் காட்டும் நல்லடக்கம்
சு.சீதாராமன்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.


மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை என்றும்,

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.


உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும் என்றும் வள்ளுவப்பெருந்தகை அடக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார்.

மேலும்,

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும் என்றும் அடக்கத்தின் பெருமையை வான் புகழ் கொண்ட வள்ளுவர் நிலை நிறுத்தியிருக்கிறார்.

அதெல்லாம் சரி அவருக்கென்ன அவர் எல்லாவற்றிலும் சிறந்ததை இலக்கணம் வகுத்து நமக்கு வழங்கியிருக்கிறார். ஆனால் வாழ்ந்து காட்டியவர் யாரேனும் உண்டா? என்ற வினா இயல்பாக எழும். நாம் வரலாற்றை உற்று நோக்கினால் பெரியோரைத் துணைக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்தில் வைக்கப்பட்டவர்களும் இவ்வையத்தில் உண்டு என்பதை நன்குணரலாம்., ஆம்! கம்பன் என்ற கல்வியில் பெரியவனை அறியாத தமிழறிஞர்களும் உண்டோ?

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களில் இராம காதையை உலகிற்கு வழங்கிய வள்ளுவன் தன் படைப்பை இவ்வாறு அறிமுகம் செய்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசில் கொற்றத்து இராமன் கதைஅரோ!


ஒரு பூசை-ஒரு பூனை; ஓசை பெற்று உயர் பாற்கடல்புக்கு- ஒலிமிகுந்ததும் உயர்ந்ததுமான பாற்கடலை அடைந்து; முற்றவும் நக்குபு புக்கென - (அந்தப் பாற்கடல்) முழுவதையும் நக்கப் புகுந்தாற் போல;இக் காசு இல் கொற்றத்து இராமன் கதை - குற்றமில்லாத வெற்றி கொண்ட இராமபிரானது இக்கதையை; ஆசை பற்றி அறையலுற்றேன்-ஆசை கொண்டமையால் சொல்லத் தொடங்கினேன் என்று ஆரம்பிக்கிறார். அப்படி தான் எழுதிய காவியத்தை நூலுணர்ந்த பெரியோர் எங்ஙனம் பிழை பொறுப்பர் என்பதை கீழ்க்கண்ட பாடலில் அவர் வெளிப்படுத்தும் விதத்தைப் பார்ப்போம்.

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?


மடப் பிள்ளைகள்-அறியாமை யுடைய குழந்தைகள்; அறையும் ஆடரங்கும் தறையில் கீறிடின்-அறையும் நாடக மேடையுமாகத் தரையிலே கோடு கீறி விளையாடினால்; தச்சரும் காய்வரோ- சிற்பக் கலை வல்லவர்கள் அக்குழந்தைகளைக் கோபிப்பார்களோ?; (அதுபோல); இறையும் ஞானம் இலாத என் புன்கவி- சிறிதளவேனும் தெளிவு இல்லாத என் புல்லிய கவியைக் கேட்டு; முறையின் நூல் உணர்ந்தோரும் முனிவரோ-முறையாக நூல்களை ஓதி உணர்ந்த புலவர்கள் சினம் கொள்வாரோ? (குழந்தைகளின் தரைக் கீறல் கண்டு சிற்பிகள் சினவார்; என் புன்கவி கேட்டுப் புலவர்கள் சினவார்).

குச்சி கொண்டு தரையில் கோடுகள் இட்டுத் தம் கற்பனைக்கண்களால் மாட மாளிகைகளைக் காணும் திறம் பேதையராயினும் குழந்தைகளுக்கு உண்டு. துறையடுத்த கவித்திறம் புலமைத்திறம் இல்லெனினும் அன்பெனும் நறவம் மாந்திய பித்தனாகிய கவிஞனுக்குக் கற்பனையில் பல நற்றிறம் தோன்றும். நூலறிவால் பகுத்தறிவைப் பெருக்கியுள்ள புலவோர்க்குக் கவிப்பித்தன் நிலைஎட்டாது. ஆயினும். குழந்தையைப் பழிக்காது பாராட்டும் சிற்பி போலப் பத்திமையை மேதைகள் பாராட்டுவர் என்று‘கவிச்சக்கரவர்த்தி’ தம் கவியை நூலோர் எவ்விதம் அணுகுவர் என்று அடக்கத்துடன் வெளிப்படுத்தும் பாங்கு சொற்களின் விவரணங்களுக்கு அப்பாற்பட்டது.

ஆனால் பின்நாளில் கம்பரை முறையின் நூல் உணர்ந்தார் எவ்விதம் நமக்கு அறிமுகம் செய்தனர் என்பதற்கு கீழ்க்கண்ட பாடல் சாட்சியாகும்.

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம்
எய்தி அரசு ஆண்டு இருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக்கா
ஓங்கு நீழல் இருந்தாலும்
செம்பொன்மேரு அனைய புயத்
திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்பநாடன் கவிதையில் போல்
கற்றோர்க்கு இதயம் களியாதே


இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் (இம்மன்னுலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்து அரசாட்சி செய்து கொண்டிருந்தாலும்)உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நீழல் இருந்தாலும் (விண்ணுலகத்தில் உயர்ந்து விளங்கும் கற்பகச் சோலையின் நீழலில் இருந்தாலும்) செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில் (சிவந்த பொன்மயமான மேருமலையைப் போன்ற தோள்களில் வலிமை அமையப்பெற்ற இராமனது புனிதக் கதையை கூறும் நூல்கள் பலவற்றுள்) கம்பநாடன் கவிதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே (கம்பர் இயற்றிய இராமயணப் பாடல்களில் மனம் களிப்படைவதைப்போல, கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மனம் களிப்படையாது)

ஆம்! கல்வியில் பெரியவன் கம்பன் தானே! .
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.