http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 181
இதழ் 181 [ செப்டம்பர் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா ஆயர்மகள்! சங்க இலக்கியம் காட்டும் உழைக்கும் பெண்களுள் ஆயர் மகளிர்- சுறுசுறுப்பும் வேகமும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பேச்சும், வீரத்தைப் போற்றும் மனத்திண்மையும், வருவாயைப் பெருக்கும் வணிக அறிவும் கொண்டவர்களாகத் தனித்தன்மையுடன் வெளிப்படுகின்றனர். சங்கப் புலவர்களும் அம்மகளிரின் ஆளுமையின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களாக, பல்வேறு கோணங்களில் தகவல்கள் வழங்கிக் காட்சிப்படுத்துகிறார்கள். மோர் விற்கும் ஆயர்மகளின் தோற்றம் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை காட்டும் கோவலர் குடியிருப்பில் ஆயர் மகளின் தோற்ற விளக்கம், நம் கண்முன்னே அப்பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. ……………………… நுரை தெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள் மோர் மாறும் நல்மா மேனி சிறு குழை துயல்வரும் காதின், பணைத்தோள், குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள் (158-162) நல்ல மாந்தளிர் அல்லது கருத்தநிற மேனியும், சிறிய குழையசையும் காதும், மூங்கில் போன்ற தோளும், சிறிய வகிடெடுத்த கூந்தலும் கொண்ட ஆயர்மகள், தயிர்த்துளிகள் தெறித்த வாயுடைய மோர்ப்பானையைத் தலையில் மென்மையான சுமட்டின் மேல் வைத்து, அன்று கடைந்த புதிய மோரை விற்கச் செல்கிறாள். சோழன் நல்லுருத்திரனாரின் முல்லைக்கலியிலோ, காதல் வயப்பட்ட தலைவன் ஆயமகளைப் பலவாறாகப் புனைந்துரைக்கிறான். மோர் விற்றபின் வீடு திரும்பும் அப்பெண்ணைத் தடுத்து, தன் காதலை விளக்குகிறான். ‘கொலை உண்கண், கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி இனை வனப்பின் மாயோய்!’- கொல்லுகின்ற கண்களும், கூரிய பற்களும் மாந்தளிர் மேனியும் கொண்டவளாம் அவள். ‘பெரியதான தோள்களும் கண்களும், சிறியதான நெற்றி பாதம் மற்றும் இடையும் பொருந்திய அழகுடன், பகைவர் படைகளைத் தாக்கும் மன்னரைப்போல என்னுயிரை நீ தாக்குகிறாயே…. இது சரியா?’ என்பதோடு, “தொலைவிலுள்ள இடங்களில் மோர் விற்றுக் களைத்து நீ திரும்புகையில், என்னைப் பார்த்துச் சிரித்து என் உயிருடன் போரிடுகிறாய்.. நான் என்ன பிழை செய்தேன்,” என்று ஏக்கத்துடன் கேட்கிறான்- அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், 5 நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட இகலாட்டி, நின்னை எவன் பிழைத்தேன், எல்லா யான்? (கலி. 108, 5-7) எனுமிடத்தில், தலைவனோடு அழகு தமிழும் சேர்ந்து நம்மை மயக்குகிறது. காதல் சொல்லவரும் ஆண்மகனைத் துணிவுடன் எதிர்கொள்ளல் தன்னிடம் காதல் சொல்ல வரும் இளைஞனை நோக்கி, அவன் மயக்கம் தெளியுமாறு சொல்லம்பு வீசித் துணிவுடன் நிற்கும் ஆய்மகளைக் கலித்தொகையின் மற்றொரு பாடல் (கலி. 110) காட்டுகிறது. ‘காப்பு நிறைந்த ஆயர் குடியிருப்பிலெல்லாம் பெண்களை வேண்டி நின்றிருப்பாய் நீ; சிறிதே பேசிச் சிரித்தவுடன் உன்னிடம் மயங்கி வந்துவிடுவேனென்று என்னை எளிதாக நினைத்தாயோ?’ என்று சாட்டையடியாகச் சொற்களை வீசுகிறாள் அவள். அவனோ விடுவதாக இல்லை- ……………….மெல்லியல் ஆய்மகள்! மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு ‘மத்திலே பிணைந்த கயிறுபோல உன் எழிலிலே சிக்கி என் நெஞ்சு சுழல்கிறது,’ என்று, தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கி மோரைப் பிரித்தெடுக்கும் அவளுடைய பணியையொட்டியே, தன் நிலையை அவனியம்ப… ‘சரிசரி, என் குடும்பத்தவர் பார்த்துவிடப் போகிறார்கள். இப்போது போய்வா.. நாளை காண்போம்,’ என்று இறங்கி வருகிறாள் அவள். வீரனையே கணவனாக அடைய விரும்புபவள் ஆயர் பெண்டிர் வளர்ந்த சூழல் வீரம் நிறைந்த ஒன்று. முல்லை நிலத்துக்கேயுரிய ஏறுதழுவலில், தந்தையரும் தமையன்மாரும் காளையை அடக்கும் வீரரையே அவளுக்கு மணமுடிக்கத் தேர்ந்தெடுக்கும் போக்கைத் தோழி தலைவனுக்கு உரைப்பதன்மூலம் நமக்குரைக்கிறாள்- கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின், படாஅகை ஈன்றன ஆயமகள் தோள் (கலி. 101, 36-38) கடுஞ்சீற்றமுடைய யானையைக் காட்டிலும் சீற்றமுடைய ஏற்றைப் போகவிடாது நீ அடக்கினால், வெற்றிக் கொடி ஏந்திய ஆயமகளை நீ கைப்பிடிப்பாய், என்பதோடு, கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் (கலி.103, 63-64) என்கிறாள். உயிரைக் கொல்லும் காளையின் கொம்புக்கஞ்சும் ஆடவனோடு, இந்தப் பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறப்பிலும் இணையமாட்டாளாம் ஆயர்மகள். நன்றி- ஓவியம்: திரு. செ. கிருஷ்ணன், இந்திய வனப் பணி (ஓய்வு) வீரனையே கைப்பிடிக்க வேண்டுமென்ற தெளிவில், தலைவி உதிர்க்கும் சொற்களும் மிகுந்த முதிர்ச்சியோடே வெளிப்படுகின்றன. போர் ஏற்று அருந்தலை அஞ்சலும், ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும், இவ் இரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ, எம் கேளே! (கலி. 106, 40-42) "கூரிய கொம்புடைக் காளையின் தலைக்கு அஞ்சுவதும், அழகுபொருந்திய ஆய்ச்சியரின் தோள்களை விரும்புவதும் என்ற இந்த இரண்டும் ஒன்றாக நடக்க இயலுமா? சொல் என் தோழி!,” என்று தன் தோழியிடம் தலைவி கேட்கிறாள். அடுத்து, ஒரு படி மேலே சென்று, கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே! (கலி. 106, 43-45) “ 'கொல்லும் தன்மையுடைய ஏற்றை அடக்கியவன் இவள் கணவன்’ என்று ஊரார் பாராட்டும் உயர்வுச் சொல், யாம் மோர் விற்றுக் கொணரும் செல்வத்தினும் மிகப் பெரியது. அச்செல்வத்தை எம் மனம் கவர்ந்த காதலர் எமக்குத் தருவாரா? சொல் என் தோழி!,” என்கிறாள். வீரத்திற்கும் காதலுக்கும் உவமை வீரத்தைப் போற்றும் குலமென்பதால் போர்க்களத்தில் பாயும் இளம் வீரனின் ஆற்றலைக் காட்டும் புறநானூற்றுப் பாடலிலும், ஆய்மகள் உண்டாக்கும் தயிரும் அவள் தோய்க்கும் முறையும் சுவையுடன் காட்டப்படுகின்றன. மடப்பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த குடப்பால் சில் உறை போலப் படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே (புறம் 276, 4-6) தயிருண்டாக்கும் ஆயர்குலப் பெண், தன் கூர்மையான நகத்தின் நுனியிலிருந்து ஒரு துளி தயிரைப் பானை நிறைய பாலுக்குள் சுண்டியெறிவாள். அந்த ஒரு துளி தயிர், பானை நிறைந்த பாலைத் தன்மையிழக்கச் செய்வதுபோல, போர்க்களத்தில் பலருக்கிடையில் புகுந்து எதிரிகளுக்கு இன்னல் விளையுமாறு போரிடுகிறானாம் அந்த வீரன். கலித்தொகையில் மத்தம் பிணித்த கயிறுபோல் தலைவனின் காதலுள்ளம் தவித்ததுபோல, நற்றிணையில் (84), தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்துபோய் பொருள்தேடப் போவதறிந்த தலைவியின் புலம்பலிலும் வெண்ணெயும் மத்தும் உவமையாக நிற்கின்றன. தலைவன் தனியே செல்லும் மரங்களில்லா வெப்பம் நிறைந்த பாதையில் மான்கள், கானல் நீரைப் பெரிய நீர்நிலையென்று நினைத்து நீரருந்தச் செல்லும். மோரிருக்கும் சுட்ட மண்பானையில் வெய்யிலால் சூடான மத்துகொண்டு கடைய, ‘பிறவா வெண்ணெய்’- நன்கு உருவாகாமல் வெண்ணெய் எப்படி காட்சியளிக்குமோ அப்படியிருக்குமாம் அந்த உவர் நிலத்தில் படர்ந்திருக்கும் உப்பு. மத்தின் ஒலியிலும் ஒலிக்கும் வீரம் காதலுணர்வோடும் வீரக்காட்சிகளோடும் ஆயர்மகளின் விற்பனைப் பொருள் ஒப்புநோக்கப்பட்டாலும், காதலினும் வீரம் சில வேளைகளில் விஞ்சி நிற்பதைக் காணலாம். மத்து கொண்டு அவள் தயிர் கடையும் ஒலிகூட, புலியின் உறுமலாகவே கேட்கிறது புலவர்கள் செவியில். புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ் உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ (பெரும்பாண். 156-159) என்கிறது பெரும்பாணாற்றுப்படை. குடைக்காளானின் அரும்புகளைப் போன்ற மேல்பகுதியைக் கொண்ட தயிரைக் கலக்கி, புலியின் உறுமலையொத்த ஒலியுடன் அந்தத் தயிரைக் கடைந்து, வெண்ணெயைப் பிரித்தெடுத்துவிட்டு, மோர்ப் பானையைத் தலையில் வைத்து விற்கச் செல்கிறாள் அவள். கருவூர் நன்மார்பன் என்ற புலவரின் அகநானூற்றுப் பாடலிலோ (277), பொருளீட்டல் வேண்டித் தலைவன் வேற்றூர் சென்றிருக்கிறான். தலைவி அவன் சென்ற வழியை எண்ணி அஞ்சுகிறாள். அந்தப் பாதையில், வாள்களைப் போன்ற வரிகளுடன் ஆண்புலியொன்று மோர் கடையும் ஒலிபோல் உறுமி அச்சுறுத்துமே என்று வருந்துகிறாள். அதிகாலையில் பணி வீரம் செறிந்த முல்லை நிலத்து ஆயர் மகளின் உழைப்பைப் பாடும் புலவர்கள், குறிப்பாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது, அதிகாலையில் தொடங்கும் அவளுடைய பணி. நள் இருள் விடியல் புள் எழப் போகிப் புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி (பெரும்பாண். 155-156) என்று, இருள் விலகாத அதிகாலைப் பொழுதில், பறவைகள் எழுந்து பறந்து தம் தேடலைத் தொடங்கும் வேளையில், புலிக்குரல் மத்தைக் கொண்டு தன் பணியைத் தொடங்கிவிடுகிறாள் அப்பெண், என்கிறது பெரும்பாணாற்றுப்படை. கயமனாரின் நற்றிணைப் பாடலில், வீட்டவர் எழும் முன்னர் தலைவனோடு சென்றுவிடத் துணிந்தாள் தலைவி. ஆனால் தன் ஆயத்தோர் வருந்துவார்களே என்றெண்ணி, முடிவை மாற்றிக் கொள்கிறாள். விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப் பாசம் தின்ற தேய் கால் மத்தம் நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் (நற்றிணை12, 1-3) மோர் நாற்றத்தைப் போக்க விளம்பழத்தை மோர்ப்பானையில் இட்டுவைத்திருந்திருந்தார்கள். விளம்பழத்தின் மணம்நிறைந்த அந்தப் பானையில் மோரையூற்றி, வெண்ணெயைப் பிரிக்கும் பொருட்டு தேய்ந்த மத்தைக் கயிற்றால் கடைந்த ஒலிதான், அப்பகுதியின் முழங்கிய முதலொலி. பொழுது விடியும் வேளையை, மத்தின் இயக்கம் முழங்கும் விடியலென்று ஆயர் பெண்டிர் உழைப்பைக் கொண்டே காட்சிப்படுத்துவது அவர்களுடைய அயரா உழைப்பின் உயர்வைக் காட்டும் வண்ணனை. பண்டமாற்று வெண்ணெயைப் பிரித்தெடுத்து, மோர்ப்பானையைத் தலையிலேற்றி, தொலைவில் மற்ற நிலங்களுக்கும் சென்று ஆய்ச்சியர் விற்று வந்ததை ‘அகல் ஆங்கண் அளை மாறி’ என்று கலித்தொகை கூற, தயிருக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெற்றதைப் புறநானூற்றில் கோவூர் கிழார் சொல்கிறார். சோழன் நலங்கிள்ளி, பாண்டிய நாட்டின் ஏழு கோட்டைகளை வென்று அவற்றில் திறந்த வாயுடைய புலியுருவைப் பொறித்தார்; அந்தப் பாண்டிய நாட்டில் பெரிய இல்லங்களில் வசிக்கும் உழவர்களின் மனைவிமார், மான் தசை கொணர்ந்த வேடனுக்கும் ஆய்மகள் கொணர்ந்த தயிருக்கும் மாற்றாக அவரவர் கலங்களில் தங்கள் நிலத்தில் விளைந்த வெண்ணெல்லை வழங்கினாராம். கான் உறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும், ஆய் மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய, ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் குளக் கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் (புறம் 33) என்று விளக்குகிறது பாடல். பலப்பல வேலைகள் மோர் விற்பது மட்டுந்தான் ஆயர்மகளின் வேலையா? நாள்முழுக்க வீட்டு உறுப்பினர்கள் பலருக்கும் தன் உழைப்பால் உதவிடும் அவள் இயல்பைப் படம்பிடிக்கிறது கலித்தொகை(108). தலைவனுக்கும் தலைவிக்குமிடையில் நடக்கும் சுவையான சொல்லாடல் இது. “முன்பொருநாள் மோர் விற்று நீ திரும்புகையில், பிளந்த இளமாங்காய்ப் போன்ற உன் கண்களால் என் நெஞ்சைக் களவாடி, அதைக் களமாகக் கொண்டு உன் கட்டுப்பாட்டில் வைத்து ஆளுகின்றாய்,” என்று அவன் கூற, வந்தது பாருங்கள் அவளுக்குக் கோபம். “நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்? புனத்து உளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?” (30-33) “உன் நெஞ்சத்தைக் களமாகக் கொண்டு ஆள்வதால் எனக்கென்ன பயன்? புனத்துக்குச் சென்றிருக்கும் என் தமையனுக்கு உணவு கொண்டு செல்லுமா உன் நெஞ்சம்? மந்தையை மேய்க்கச் சென்றிருக்கும் என் தந்தைக்குப் பால் கறக்கும் கலங்களைத் தூக்கிச் செல்லுமா உன் நெஞ்சம்? அல்லது, அது தினைப் புனத்திற்குள் என் தாய் விட்ட கன்றை மேய்த்துத்தான் தருமா?,” என்று குடும்பத்திற்காக, தான் செய்யும் பணிகள் பலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறாள் அவள். சுடச்சுடத் தாக்குதல்களைப் பொழியும் முல்லை நிலத்துப் பெண்ணிடம்தான் எத்தனைத் தெளிவும் தற்காப்பும் துடுக்குத்தனமும்! தெளிவும் தற்காப்பும் தந்த வணிக உத்தி தெளிவு கொண்ட மனமும் தற்காத்துக் கொள்ளும் அறிவும் ஒருங்கே பெற்றதால்தான் ஆயர்குலத்துப் பெண், மோர் விற்றுப் பண்டமாற்றாகக் கிடைத்த நெல்லைக் கொண்டு சுற்றத்தார் அனைவரையும் உண்ணச் செய்கிறாள். அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள், எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம் (பெரும்பாண்.163-165) தன் உழைப்பின் பயனைப் பலரோடும் பகிரும் பெருங்குணம் கொண்டிருந்தாள் அவள். அனைத்திற்கும் மேலாக, நெய்விற்றுக் கிடைத்த பணத்தில் பெண்களுக்கே விருப்பமான பசும்பொன் வாங்காமல், எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் வாங்குவாளாம். அனைவரின் பசியாற்றும் அன்புள்ளமும், வருவாயில் தொழிலுக்கான மேல்முதலீடு செய்யும் கூரிய முதலீட்டறிவும் உடையவளாகச் சங்ககால ஆயர்குலப் பெண்டிரைப் பார்க்கிறோம். அன்பு நிறைந்த நெஞ்சம் மனத்திண்மை மதிநுட்பம் மற்றும் மேலோங்கிய ஆளுமையைத் தாண்டி ஒளிர்வது அவளுடைய அன்பு நெஞ்சம். சுற்றத்தாரைப் பசியாற்றும் பண்புடன் கூடவே, உழைப்பின் பயனைத் தனக்களிக்கும் ஆநிறையை மிகுந்த அன்புடன் பேணியதும் சங்கப் பாடல்வழி அறியலாம். சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர, இன்னே வருகுவர் தாயர்” என்போள் (முல்லைப் பாட்டு, 12-16) மாலையாகிவிட்டது. சிறிய தாம்பில் கட்டப்பட்ட இளங்கன்றுகள் தாயைக் காணாது துடித்துக் கொண்டிருந்தன. அத்துடிப்பைப் பார்த்த ஆயர்மகள், நடுங்கும் தன் தோள்களில் கைகளைக் கட்டியபடி- “வளைந்த கோல்களைக் கொண்ட கோவலர் பின்னிருந்து தள்ளிவிட உங்கள் தாய்மார் விரைவில் வந்துவிடுவர்,” என்று அன்பாயுரைத்து கன்றுகளின் பரிதவிப்பைத் தீர்த்தாளாம். ஆயர்மகள் பண்பு பல்வேறு பண்பு நலன்கள் கூறப்பட்டாலும், ஒரு முறை மட்டுமே மணக்கும் பண்பை ஆயர்மகளிரின் அருநெறியென்று முல்லைக் கலி இயம்புகிறது. தவிப்புடன் தலைவி, தலைவனிடம் கூறுமாறு தோழி வாயிலாகத் தகவலொன்றை அனுப்புகிறாள். ……………………………….அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும், அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20 இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே? (கலி.114, 18-21) “நிலைமை கைமீறிப் போவதாக அவரிடம் சென்று சொல். என் வீட்டார் அவரில்லாத திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். நீரால் சூழப்பட்ட உலகையே தந்தாலும், அருநெறி ஆயர் மகளிர்க்கு இரு மணம் என்பது இயல்பில்லை என்பது அவர் அறிந்ததுதானே?,” என்று படபடக்கிறாள். உழைப்பால் உள்ளங்கவர்ந்த சங்ககாலப் பெண்கள் எதிர்பார்ப்பின்றி உழைப்பதும் விருந்தோம்புவதும் அன்பு பாராட்டுவதும் பொதுவாய்ப் பெண்மைக்குரிய உயர் பண்புகளென்று உலகமறியும். ஆனால், உள்நாட்டு வணிகமும் அயல்நாட்டு வணிகமும் செழித்திருந்த சங்ககாலத் தமிழகத்தில் பெண்கள் நிலத்திற்கேற்பப் பணியாற்றி, தங்கள் பங்கிற்குப் பொருளீட்டியது வளர்ந்த நாகரிகக் கூறுகளுள் சிறப்பானது. கால் கடுக்கச் சென்று உப்பும் மீனும் பூவும் மோரும் விற்ற பெண்டிரையும், வீட்டிலேயே கள் காய்ச்சி சிறுதொழில் நடத்திய கள் அடு மகளிரையும், ஊரிலுள்ளோர் துணிகளை வெளுத்துத் தந்த பசைகொல் மெல்விரல் புலைத்தியையும் முந்தைய பதிவுகளில் கண்டோம். மதுரை வீதிகளில், நரைத்த கூந்தலை வாரிப் பின்னிய தொல் முதுபெண்டிர் பலபொருட்களை விற்றனர்; தனியாகக் கடை நடத்தும் ஒள்ளிழை மகளிர், ஊரடங்கியபின் தம் கடைகளின் கதவடைத்து உறங்கச் சென்றனர். மனதில் பட்டதைப் பட்டுப் பட்டென்று தெளிவாகப் பேசி, பலவிதப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் ஆயர்மகள் இவர்கள் அனைவரிலும் வேறுபட்டுத் தெரிகிறாள். உழைத்துப் பொருளீட்டும் பெண்களை இதுகாறும் தேடிய நம் பார்வையில், காளைகளின் கொம்புகளுக்கிணையான கூரிய அறிவுடன் தனித்து நிற்கிறது முல்லை நிலத்து ஆயர்மகளின் ஆளுமை. தான் விரும்பிய பசும்பொன்னை வாங்கிக் கொள்ளும் உரிமையும் அவளுக்கு இருந்தது; அதை விடுத்து எருமைகளையும் கன்றீனும் பசுக்களையும் வாங்கும் வணிக உத்தியும் அவள் பெற்றிருந்தாள். தெளிவான சிந்தனையாற்றலுடன் உழைக்கும் பொருளைப் பெருக்கும் வழியுமறிந்து செயல்பட்டவள் அவள். அன்பும், நற்பண்பும், துணிவும், தற்காத்துக் கொள்ளும் மனவலிமையும், பலரைக் கையாளும் சொல்வன்மையும், உடலுழைப்பும், பொருளீட்டும் ஆற்றலும், அதைப் பன்மடங்காகப் பெருக்கும் பேரறிவும் என்று ஆயர்குலத்துப் பெண் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்; மலைக்கச் செய்கிறாள். தமிழ் மண்ணில் பெண்கள் உழைத்துப் பொருளீட்டியும் தொழில் முனைவோராகச் சிறந்தும் விளங்கிய வரலாற்றை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்ள நம் இலக்கியங்களே சாளரங்கள். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |