http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 37

இதழ் 37
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
இராவண அனுக்கிரகமூர்த்தி
திரும்பிப் பார்க்கிறோம் - 9
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
திருவாலித்திருமகன்
Agricultural Terms in the Indus Script - 1
அங்கும் இங்கும் - 1
Links of the Month
தொலைந்ததெல்லாம் கிடைக்கும்!
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
இதழ் எண். 37 > இலக்கியச் சுவை
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
மா.இராசமாணிக்கனார்
அரண்மனைகளில் விருந்து

சோழநாட்டு மன்னனான கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் உணவளித்த திறம் பொருநர் ஆற்றுப்படையில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது:

பொருநர் அரண்மனையை அடைந்தவுடன் பணிப்பெண்டிர், பருகியவரை மயங்கச் செய்யும் மகிழை (கள்ளை)ப் பொற்கலங்களில் வார்த்துத் தந்தனர் (அடி, 84-88). பொருநர் அதனை உண்டு, வந்த களைப்பைப் போக்கிக்கொண்டனர். கொழுத்த செம்மறிக்கிடாயின் இறைச்சித்துண்டங்கள் சில, இரும்புக் கம்பியில் கோத்துச் சுடப்பட்டன; வேறு சில இறைச்சி வகைகள், வேகவைக்கப்பட்டன; பல வடிவங்களில் அமைத்த பல்வேறு இனிப்புச் சுவையுடைய பண்ணியாரங்கள் (தின்பண்டங்கள்) வைக்கப்பட்டன. முல்லை அரும்பை ஒத்த மெல்லிய அரிசிச்சோறும் படைக்கப்பட்டது. பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின பொரிக்கறிகளும் வைக்கப்பட்டன (அடி, 103-116). பிரியா விடைபெறும்பொழுது இனியபூ (குங்குமப்பூ) மணக்கின்ற தேறல் (கள் தெளிவு) பருகத் தரப்பட்டது (அடி, 157).

ஓய்மானாட்டுத் தலைவனான நல்லியக்கோடன் அரண்மனையில் பாணர்க்குப் பாம்பு விடம் ஏறி மயக்கினாற்போல மயக்கத்தை உண்டாக்கும் தேறல் (கள் தெளிவு) தரப்பட்டது; வீமசேனன் வரைந்த சமையற்கலை நூலிற்கண்டபடி உணவுப்பொருள்கள் தயாரிக்கப்பட்டுப் பொற்கலங்களில் படைக்கப்பட்டன (சி.ஆ.படை, அடி, 237-244).

தொண்டை நாட்டுத் தலைவனான இளந்திரையன் என்பானது காஞ்சி மாநகரத்து அரண்மனையில் சமையலில் வல்லோன் பல இறைச்சி வகைகளைத் தயாரித்தான்; கண்ட சருக்கரையோடு அடிசிலை (சருக்கரைப் பொங்கல்?) ஆக்கினான். இங்ஙனம் வல்லோனால் ஆக்கப்பட்ட பலவகை உணவுப்பொருள்கள் பாணர் பிள்ளைகளுக்குச் சிறிய வெள்ளிக்கலங்களிலும் பெரியவர்களுக்குப் பெரிய வெள்ளிக்கலங்களிலும் படைக்கப்பட்டன (பெ.ஆ.படை, அடி, 471-480).

நன்னன் தலைநகரான செங்கண்மாத்து அரண்மனையில், பெண் நாய் கடித்துக் கொணர்ந்த பசிய நிணத்தையுடைய தசைகளும் வெண்ணெல் அரிசிச் சோறும் கூத்தர்க்குப் படைக்கப்பட்டன (மலை, 563-566).

மதுரையில் உணவு

'பீடுமிக்க மாடமதுரையில் வாழ்ந்த பாணர் கொழுவிய இறைச்சி வகைகளைத் தின்றனர்; பலவகைச் சோற்றை வெறுத்துக் கள்ளை மிகுதியாகப் பருகினர்; என்பது மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது (அடி, 210-213). மதுரையில் பலவகைச் சோறுகள் தயாரிக்கப்பட்டன என்பது இதனால் தெரிகின்றதன்றோ? இக்காலத்தில் வெண்சோறு, ஊன் சோறு (இக்காலப் புலால் பிரியாணி போன்றது), புளிச்சோறு, தயிர்ச்சோறு, சருக்கரைப் பொங்கல், வெண்பொங்கல் எனப்படும் சோற்று வகைகள் அக்காலத்திலும் இருந்தன என்று கருதலாம்.

தென்பாண்டி நாட்டுப் பரதவர் (மீனவர்), கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைச் சிறப்பாக உண்டனர் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது (அடி, 141).

பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்குச் சோறிடும் சாலைகள் (ஆதுலர் சாலைகள்) இருந்தன. அவற்றில் இருந்த எளியவர்க்குப் பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், முந்திரிகைப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய் (நீண்ட கத்திரிக்காய்) முதலிய (சமைத்த) காய்கள், பலவகை இலைக்கறிகள், இனிப்புப் பண்டங்கள், இறைச்சி கலந்தசோறு, (பக்குவப்படுத்தப்பட்ட) பலவகைக் கிழங்குகள், பாற்சோறு, பால் என்பவை படைக்கப்பட்டன (ம.கா.அடி, 527-535).

பாண்டி நாட்டில் விழா நடைபெற்ற இடங்களில் விழாக்காண வந்தவர்க்கெல்லாம் சோறு படைத்தல் அக்கால வழக்கம் (ம.கா.அடி, 201-203).

புலால் அற்ற உணவு

பெரும்பாணன் தொண்டைநாட்டில் வேதியர் வீட்டில் இராசான்னம், மாதுளம்பிஞ்சைப் பிளந்து மிளகுப்பொடியும் கருவேப்பிலையும் கலந்து பசு வெண்ணெயிலே வேகவைத்த பொரியல் முதலியன கிடைக்கும் என்று கூறினானே தவிரப் புலால் கிடைக்கும் என்று கூறவில்லை (பெ.ஆ.படை, அடி, 304-310). எனவே, சங்ககால வேதியர் இல்லங்களில் புலால் உணவு சமைக்கப்படவில்லை என்று கருதலாம்.

கடற்கரைப்பட்டினத்திலிருந்து கச்சிக்குச் செல்லும் வழியில் இருந்த தோப்புகளில் வாழ்ந்த உழவர் இல்லங்களில் பலாப்பழம், வாழைப்பழம், இளநீர், நுங்கு, கிழங்குகள் ஆகியவை உணவாகக் கிடைக்கும் என்றே அப்பெரும்பாணன் கூறியுள்ளான். இங்கும் அவன் புலால் உணவைக் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தகும் (அடி, 351-362). இதனால் புலால் உண்ணாத வேளாளரூம் தொண்டை நாட்டில் இருந்தனர் என்று கருதலாம்.

இங்ஙனமே காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வேளாளர் கொலை செய்யாதவர்; களவு செய்யாதவர்; தேவர்களை வணங்கினர்; அவர்களுக்கு வேள்வியில் ஆவுதி கொடுத்தனர்; பசுக்களையும் எருதுகளையும் பாதுகாத்தனர்; வேதியர் புகழைப் பரவச் செய்தனர்; ஏழைகளுக்குப் பல பண்டங்களைக் கொடுத்தனர்; சிறந்த நல்லொழுக்கத்தைப் பின்பற்றி நடந்தனர் (ப.பாலை, அடி, 109-205).

ஊறுகறி

குடும்பத்துடன் உப்பை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராய்ச் சென்று வாணிகம் செய்துவந்த உமணர், ஊறுகாய்ப்பானைகளைத் தம் வண்டிகளில் கட்டியிருந்தனர். ஊறுகாய், 'காடி' எனப்பட்டது. அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் 'காடி வைத்த கலம்' எனப்பட்டது. 'புளியங்காய், நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் 'காடி' என்றார்,' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம்.

சிற்றுண்டி

கூவியர் (அப்பவாணிகர்) 'கரிய சட்டியில் பாகுடனே வேண்டுவன கூட்டி நூல்போல் அமைத்தவட்டம் (இக்கால இடியாப்பம் போன்றது) ஒருவகைச் சிற்றுண்டியெனப் பெரும்பாணாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது (அடி, 377-378). மதுரை நகரக் கடைத்தெருவில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அவற்றிற் பாகில் சமைத்தல் அமைந்த நல்ல வரிகளுடைய தேனிறலைப் போன்ற மெல்லிய அடைகள் செய்யப்பட்டன; பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாய்க் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப்பிடித்த 'மோதகம்' என்ற ஒரு வகைத் தின்பண்டமும் செய்யப்பட்டது. இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவைக் கொண்டு கூவியர் பல சிற்றுண்டி வகைகளைச் செய்தனர் (ம.கா. அடி, 624-627).

குடிவகை

அரசன் முதல் ஆண்டி ஈறாக அனைவருமே அக்காலத்தில் குடிப்பழக்கம் உடையவராயிருந்தனர். ஆயின், அவரவர் தரத்திற்குத் தக்கபடி குடிவகை வேறுபட்டிருந்தது. பூந்தேனைக் கொண்டு ஒரு வகைக் குடி செய்யப்பட்டது; வேறுவகைத் தேனைக் கொண்டும் குடிவகை தயாரிக்கப்பட்டது. இஃது இக்கால 'சர்பத்து'ப் போன்றதெனலாம். தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள் எனப்பலவகைக் குடிவகைகள் வழக்கில் இருந்தன. கள் மூங்கிற்குழையில் ஊற்றி முற்றச்செய்தும் பருகப்பட்டது. மேனாடுகளிலிருந்து யவனரால் இறக்குமதி செய்யப்பட்ட குடிவகையும் இருந்தது. எளிய மக்கள் முதல், நாடாண்ட மன்னன் வரையில் இக்குடி வகை சிறப்பிடம் பெற்றிருந்தது எனலாம். ஒவ்வொரு குடிவகையும் புலவரால் தனித்தனியே சிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி நிலத்தார், நெடிய மூங்கிலரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட கள்ளின் தெளிவைப் பருகினர்; தேனைக் கொண்டு தயாரித்த கள்ளை மூங்கிற்குழையுள் இட்டு முற்றச் செய்து பருகினர். இக்கள் 'தேக்கள் தேறல்' எனப்பட்டது (முருகு, அடி, 195).

இல்லங்களில் நெல்லைக்கொண்டும் பிறபொருள்களைக் கொண்டும் கள் சமைக்கப்பட்டது.

'இல்லடு கள் இன் தோப்பி பருகி'

என்பது பெரும்பாணாற்றுப்படையில் உள்ள (அடி, 142) தொடராகும். இதற்கு, 'தமது இல்லிற் சமைத்த கள்ளுகளில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளையுண்டு' என்று நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார் (பெ.ஆ.படை, அடி, 142). மதுரை மாவட்டத்தில் தொப்பி (தோப்பி) நெல் என ஒரு வகையுண்டு. இத்தோப்பி அரிசியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கள் 'தோப்பி' எனப்பெயர் பெற்றது போலும்!

தொண்டை நாட்டு வலையர் கள்ளை எங்ஙனம் தயாரித்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை கீழ்வருமாறு கூறுகிறது:

வலையர் முதலில் குற்றாத கொழியல் அரிசியைக் களியாகத் துழாவிக் கூழைத் தயாரித்து, அதனை வாயகன்ற தட்டுப்பிழாவில் (தாம்பாளத்தில்) உலர ஆற்றுவர்; நெல்முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; அக்கலவையை இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் சாடியில் வைப்பர்; அது நன்கு முற்றிய பின்பு விரலாலே அலைத்து அரிப்பர்; அங்ஙனம் அரிக்கப்பட்டும் கள் வெவ்விய நீர்மையை உடையதாக இருக்கும். இங்ஙனம் தயாரக்கப்பட்ட கள் 'நறும்பிழி' எனப்பட்டது (பெ.ஆ.படை, அடி, 275-281).

மதுரை நகரில் வாழ்ந்த மிலேச்சர் (யவனர் முதலிய வெளிநாட்டவர்) வண்டுகள் மொய்க்கும் கள்ளைப் பருகி மகிழ்ந்தனர். அக்கள் 'வண்டு மூசுதேறல்' எனப்பட்டது (ம.கா. அடி, 33).

சோழநாட்டுத் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்துப் பரதவர் பனங்கள்ளைப் பருகினர். அது 'பெண்ணைப்பிழி' எனப்பெயர் பெர்றது (ப.பாலை, அடி, 89). பெண்ணை-பனைமரம். காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வ மகளிர் மட்டு என்னும் பெயர்கொண்ட ஒரு வகைக் கள்ளையும் பருகினர் (ப.பாலை, அடி, 108). 'மட்டு-கள்' என்பது நச்சினார்க்கினியர் உரை. ஆயின், பின்னூலான சிந்தாமணியில் 'மட்டு-காமபானம்' என்று நச்சினார்க்கினியரே (செ.98 உரை) பொருள் கூறியுள்ளார். மேலே கூறப்பெற்ற செல்வ மகளிர் 'மது' எனப்பெயர் கொண்ட ஒருவகைக் கள்ளையும் பருகினர். 'மது-காமபானம்' என்பது நச்சினார்க்கினியர் உரை (ப.பாலை, 108). அச்செல்வ மகளிர் இராக்காலத்தில் கணவரோடு இன்புறப் பட்டாடைகளை நீக்கிப் பருத்தியாடைகளை அணிந்தனர்; 'மட்டு நீக்கி மது மகிழ்ந்தனர்' என்று பட்டினப்பாலை ஆசிரியர் கூறுதலைக்காண, 'மட்டு' என்பது சாதாரண இன்சுவைப்பானம் என்றும், அதனால் அதனை நீக்கி, வேட்கையைத் தூண்டும் 'மது' என்னும் காமபானத்தை உட்கொண்டனர் என்றும் கொள்வது பொருத்தமாகும்.

நன்னனது மலைநாட்டு மக்கள், தேனால் தயாரிக்கப்பட்ட கள்ளை மூங்கிற்குழையுள் விட்டு முற்றவிட்டுப் பின்பு அதன் தெளிவைப் பருகினார்கள் என்று மலைபடுகடாம் கூறுகின்றது. அக்கள்ளின் தெளிவு 'தேக்கள் தேறல்' எனப்பட்டது (அடி, 171, 522). இங்ஙனம் தேனாற்செய்த கள்ளின் தெளிவை மூங்கிற் குழையில் முற்றவிட்டுப் பருகுதல் மலைநாட்டார் பழக்கம் என்று திருமுருகாற்றுப்படையும்

'நீடமை விளைந்த தேக்கள் தேறல்' (அடி, 195)

எனத் தெரிவிக்கிறது.

நன்னனது மலைநாட்டார் வைக்கும் விருந்தில் கலந்து கொள்பவர் உடும்பு, கடமான், பன்றி ஆகியவற்றின் பதப்படுத்தப்பட்ட இறைச்சித் துண்டங்களை உண்டு கொண்டே இடையில் மேலே சொல்லப்பட்ட தேக்கள் தேறலைப் பருகுவர்; இறுதியில் நறவு என்னும் ஒரு வகைக் கள்ளையும் பருகுவர் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார் (மலை, அடி, 171-177). எனவே, தேக்கள் தேறல் வேறு, நறவு வேறு என்பது தெளிவாகிறது. 'நறவு - நெல்லாற் சமைத்த கள்' என்பது நச்சினார்க்கினியர் உரை. மலைபடுகடாம் செய்யப்பட்டு ஏறத்தாழத் தொள்ளாயிரம் ஆண்டுகட்குப் பின்பு தோன்றிய தக்கயாகப் பரணியில், "நறவுகொள் மகளிர் - காமபானம் செய்யும் வாமமார்க்கப் பெண்கள்' என்பது வரையப்பட்டுள்ளது (கண்ணி, 24, உரை). கம்பர் தமது இராமாயணத்துள்,

"காமம் வருந்திய பயிர்க்கு நீர்போல்
அருநற(வு) அருந்து வாரை"

(ஊர்தேடுபடலம், செ.107).

என்றூ குறித்துள்ளார். இங்கும் நறவு என்பது காமபானத்தையே குறிக்கிறது எனலாம்.

எனவே, மேலே சொல்லப்பட்ட மது என்பதும் இங்குச் சொல்லப்பட்ட நறவு என்பதும் காமபானம் என்பது இங்கு அறியத்தகும்.

கரிகாலன் அரண்மனையில் பருகப்பட்ட கள் 'மகிழ்' (பொ.ஆ.படை, அடி, 84) எனவும், 'மகிழ் பதம்' (மகிழ்ச்சி விளைக்கும் கள்) எனவும் பெயர் பெற்றது (பொ.ஆ.படை, அடி, 111); குங்குமப்பூ மணத்தையுடைய கள்ளின் தெளிவு 'பூக்கமழ் தேறல்' எனப்பட்டது (அடி, 157); பாண்டியன் தன் அரண்மனையில் பருகியது 'மணம் கமழ் தேறல்' (அடி, 780) எனப்பட்டது. அது பொன் வட்டிலில் தரப்பட்டது. 'மணங்கமழ் தேறல் என்றதனாற் காமபானமாயிற்று' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம்.

இதுகாறும் கூறப்பட்ட பல குடி வகைகளை நோக்க, கள் என்பது மட்டு, மது, நறவு, தேறல் எனப்பல வகைப் பட்டது என்பதும், இவை தேன் கொண்டும், நெல்லரிசி கொண்டும், பழங்கள் கொண்டும், தென்னை, பனை மரங்களின் சாறுகொண்டும் தயாரிக்கப்பட்டன என்பதும், இவற்றுட்சில மூங்கிற்குழையிலும் பிற பாத்திரங்களிலும் இட்டு முற்றச்செய்து பருகப்பட்டன என்பதும், அரண்மனை விருந்துகளில் குங்குமப்பூ இட்டு மணமேறிய பூங்கமழ் தேறல் பருகப்பட்டது என்பதும், இக்குடி வகைகள் மக்கள் வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வேறுபட்டன என்பதும் தெளியலாம்.

தென்னை மரத்திலிருந்தும் பனை மரத்திலிருந்தும் இறக்கப்பட்டுப் பதப்படுத்தப்படும் நீர் இக்காலத்தில் 'பதநீர்' என்னும் பெயரில் விற்கப்படுகின்றதன்றோ? அந்நீர் உடம்பில் குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறது; களைப்பைப் போக்குகிறது; சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று நாட்டு மருத்துவரும் அதனைப் பருகுவோரும் கூறுகின்றனர். இப்பதநீர்க்குத் 'தேறல்' (கள்ளின் தெளிவு) என்னும் பெயர் பொருத்தமேயாகும். இதனை எவரும் குறைந்த செலவில் பருகலாம். செல்வர் இதிற் குங்குமப்பூ முதலிய மணப்பொருள்களைக் கலந்து மணம் மிகச் செய்து பருகுவதும் உண்டு. இத்தகைய தேறலே சங்க காலப் புலவர் - பாணர் - கூத்தர் - அரசர் - செல்வர் முதலியோர் சாதாரணமாகப் பருகினர் என்பது பொருந்தும்.

இத்தேறல், 'பூக்கமழ் தேறல்', 'மணங்கமழ் தேறல்' என்று சிறப்பிக்க்ப்பட்டது. இஃது அரண்மனை அழகிகளால் பொற்கலங்களில் நிரப்பி மன்னனுக்கும் விருந்தினர்க்கும் தரப்பட்டது. மாங்குடி மருதனார் என்ற புலவர் பெருமான் பாண்டியனை நோக்கி,

"விளங்கிழை மகளிர் பொலங்கலந் தேங்கிய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினி துறைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே."

(ம.கா. அடி, 779-783)

என்று உளமார வாழ்த்தினர் என்பதை நோக்க, இத்தேறல் தீமையைச் செய்யாதது என்பதும், இது மன்னர்க்கு இன்றியமையாத குடிவகை என்பதும் நன்கு புலனாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளுக்கடைகளில் விற்கப்பட்ட மயக்கந்தரும் கள் வகையும் சங்ககாலத்தில் உழைப்பாளிகளால் உட்கொள்ளப்பட்டது என்பதும் பொருத்தமாகும். இக்கால 'பிராந்தி, விஸ்கி' போன்ற மயக்கந்தரும் உயர்ந்த குடிவகைகளே காமபானம் என்று கருதப்பட்ட 'மது, நறவு' எனப் பெயர் கொண்டவை எனலாம்.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.