http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 37

இதழ் 37
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
இராவண அனுக்கிரகமூர்த்தி
திரும்பிப் பார்க்கிறோம் - 9
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
திருவாலித்திருமகன்
Agricultural Terms in the Indus Script - 1
அங்கும் இங்கும் - 1
Links of the Month
தொலைந்ததெல்லாம் கிடைக்கும்!
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
இதழ் எண். 37 > கலையும் ஆய்வும்
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ச. கமலக்கண்ணன்
சென்றமுறை இந்தியா வந்திருந்தபோது, தமிழ்ப் பேராசிரியரான நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு கேள்வி கேட்டார். வெகுஜனப் பத்திரிகைகளான குமுதம், விகடனை விட, இலக்கியம் மற்றும் வரலாற்று நூல்கள் மக்களை விட்டு விலகியே இருப்பது ஏன்? என்று கேட்டார்.

"அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. குன்றக்குடி மடம் வெளியிடும் சிற்றிதழ்களான 'மக்கள் சிந்தனை', 'அறிக அறிவியல்', எம்.எஸ்.உதயமூர்த்தியின் 'நம்பு தம்பி நம்மால் முடியும்' போன்றவை மக்களின் வரவேற்பைப் பெற்றவைதானே?" என்றேன்.

"இருப்பினும் சதவீத அடிப்படையில் பார்த்தால் இவற்றை வாசிப்போர் எண்ணிக்கை குறைவுதானே?"

"எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் வாசிப்போரின் இரசனை உயர்தரமானதுதானே?"

"உயர்தரமான இரசனை என்று கூறிக்கொண்டு சராசரி வாசகனுக்கு எட்டாத தூரத்தில் இருந்து கொண்டால், எப்படி? சிற்றிதழ்களில் இருக்கும் நல்ல விஷயங்கள் என்றைக்குப் பொதுமக்களைச் சென்றடைவது? அப்படி அடையாத பட்சத்தில் இச்சிற்றிதழ்களின் பயன் என்ன?"

"எல்லோரும் வாசிக்கவேண்டும் என்பதற்காகச் சினிமாச் செய்திகளை வெளியிட முடியுமா? தனது இரசனையைத் தரம் உயர்த்திக் கொள்ளவேண்டியது வாசகனின் கடமையல்லவா? சிற்றிதழ்கள் சிந்திக்கத் தூண்டுபவை. சினிமாப் பத்திரிகைகளைப் படித்துவிட்டுத் தூக்கி எறிந்து விடலாம். அதனால் மட்டும் என்ன பயன் விளைந்து விட்டது? சிற்றிதழ்களாவது குறைந்த பட்சம் அவற்றைப் படிப்பவர்களின் சிந்தனையைச் செம்மைப் படுத்துகின்றன."

"வாசகன் தன் தரத்தை உயர்த்திக் கொள்ளவில்லை என்பதற்காக அப்படியே விட்டுவிடலாமா? இவ்விதழ்களுக்கும் வாசகனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டியது யார் கடமை?"

"நிச்சயம் எழுத்தாளர்கள் மற்றும் இதழ்களின் கடமைதான் என்றாலும், இலக்கிய இதழ்கள் எல்லாம் அறிவுஜீவிகளுக்கானது என்ற தன்னடக்கத்துடனும், வரலாற்று நாவல்களையெல்லாம் வாசிக்க மிகுந்த பொறுமை வேண்டும் என்ற அறியாமையுடனும் ஒரு வாசகன் இருந்தால், இதழ்களால் என்ன செய்ய முடியும்?"

"எப்படி இந்த எண்ணம் ஏற்பட்டது? தரமான இதழ்கள் என்று கூறிக்கொண்டு புரியாத மொழியில் எழுதியதால்தானே?"

"அப்படி ஏன் சொல்லவேண்டும்? ஒரு காலத்தில் தரமான இதழ்கள் என்று பெயர்பெற்ற பத்திரிகைகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க வேண்டி, சிறிது சிறிதாக மசாலாச் செய்திகளைக் கலப்படம் செய்ததாலும்தானே? நல்ல செய்திகளைத் தந்தால் சராசரி வாசகன் படிக்க மாட்டேன் என்றா சொல்லி விடுகிறான்? சினிமா நிகழ்ச்சிகளைத் தந்தால்தான் மக்கள் இரசிப்பார்கள் என்ற வாதத்தை மக்கள் தொலைக்காட்சி முறியடிக்கவில்லையா? சிற்றிதழ்களை அனைத்து மக்களும் படிக்கவேண்டும் என்று பகல்கனவு காணுவதைவிட, பேரிதழ்களும் சிற்றிதழ்களின் தரத்துக்கு ஈடுகொடுக்க முயற்சிக்கலாமே?"

இப்படியே முடிவில்லாத இந்தக் கேள்விகளாலான விவாதம், இறுதியில் வரலாற்று நூல்களின் பக்கம் திரும்பியது.

"வரலாற்று ஆய்வு நூல்களும் இப்படித்தான். பெரும்பாலான வாசகர்களுக்குப் புரிவதேயில்லை."

"வரலாற்றாய்வு நூல்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஆய்வாளர்களுக்காக எழுதப்படுபவை. மற்றொன்று சாதாரண மனிதர்களுக்காக எழுதப்படுபவை. யாருக்காக எழுதப்பட்டதோ, அதைப்பொறுத்து நடை வேறுபடும்."

"ஏன்? இரண்டையும் ஒரே நடையில் எழுதினால் என்ன?"

"அது கடினம். ஆய்வாளர்களுக்காக எழுதும்போது கலைச்சொற்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. அதன் பொருள் அவர்களுக்கே தெரியும். சாதாரண வாசகர்களுக்காக எழுதும்போது அவற்றை விளக்கியாக வேண்டும். இதனால் கட்டுரை நீளமாகிறது. முழுச் செய்தியையும் சுருக்கமாகச் சொல்ல முடிவதில்லை. இருப்பினும், சில வரலாற்றாய்வாளர்கள் இரண்டையுமே திறம்பட எழுதி வருகிறார்கள். இன்னும் சிலர், கட்டுரையை எளிமையாக்குகிறேன் பேர்வழி என்று தலபுராணங்களையும் சொந்த முடிவுகளையும் கலந்து விடுகிறார்கள். வரலாற்றில் மட்டும்தான் என்றில்லை இந்நிலை. அறிவியல் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் உண்டு. ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட இயற்பியல் அல்லது வேதியியல் கட்டுரையை எல்லா வாசகர்களாலும் வாசித்துப் புரிந்துகொள்ள முடியுமா? யாருக்கு இது பயன்படுமோ, அவர்களுக்கு நிச்சயம் புரியும். அல்லது யார் அக்கட்டுரையின் பின்புலங்களை நன்கு அறிந்துள்ளனரோ, அவர்களுக்குப் புரியும். இப்படியிருக்க, ஒரு வரலாற்றுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட அல்லது ஆய்வுநூலில் இடம்பெற்ற கட்டுரை மட்டும் வாசிக்கும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? அல்லது ஒருவேளை, மற்ற துறைகளைவிட வரலாற்றின்மீது ஆர்வமுடையவர்கள் அதிகம் என்பதால் இப்படி ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கலாம்"

நீண்ட விளக்கத்துக்குப் பின் சிறிது சமாதானமடைந்தார் நண்பர்.

ஏறக்குறைய இதே போன்றதொரு கருத்தை நண்பர்கள் கும்பகோணம் சீதாராமனும் பத்மநாபனும் சொன்னார்கள். ஆய்வு நூல்கள் என்று பொதுவாக இல்லாமல், நான் எழுதிய கட்டடக்கலை தொடரைப் பற்றியதாக இருந்தது. அத்தொடரைக் கோயிலுக்கே எடுத்துச் சென்று படித்தாலும், சில இடங்களில் புரியவில்லை. மீண்டும் விளக்க வேண்டும் என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருதடவை வாசித்துவிட்டுப் புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடாமல், மீண்டும் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களது முயற்சியைப் பாராட்டினேன். கட்டடக்கலைச் சந்தேகங்களைப் போக்குவதைவிட அதிகச் சந்தோஷம் அளிக்கக் கூடியது எது? உடனே தயாரானோம். அந்த உரையாடல் வரலாறு.காம் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி, இங்குப் பதிவு செய்கிறேன். இதுவரை தொடராக வந்த கட்டுரைகளின் சுருக்கமாகவும் இருக்கும்.




சீதாராமன் : கட்டுமானக் கோயில்களில் தாங்குதளம், ஆரம், சிகரம் என நிறைய உறுப்புகள் காணப்படுகின்றன. ஆனால் குடைவரைகள் மிக எளிமையாக இருக்கின்றனவே, ஏன்?

கமலக்கண்ணன் : முதலாம் மகேந்திரவர்மருக்கு முன்புவரை செங்கல், மரம், சுதை மற்றும் உலோகத்தினால்தான் கோயில்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கருங்கல்லில் கோயில் கட்டவேண்டும் என்ற விசித்திர சித்தத்தினால், குடைவரை முயற்சியை மேற்கொண்டார். இன்று காணப்படும் அலங்கார உறுப்புகள் எல்லாமே முந்தைய செங்கல் தளிகளிலும் இருந்தன. குடைவரை புதிய முயற்சி என்பதால் ஆரம்பத்தில் இல்லாமல், ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டன. மகேந்திரரின் குடைவரைகளைத் தொடர்ச்சியாகப் பார்த்தால் இந்த படிப்படியான அறிமுகத்தைப் புரிந்து கொள்ளலாம். பிறகு ஒருகல் தளிகளும் கட்டுமானக் கோயில்களும் கட்ட ஆரம்பித்த காலத்தில், செங்கல்லாலான கோயில்களின் மாதிரியை அப்படியே வடித்தார்கள். கட்டடக்கலையின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பயன் இருக்கிறது. ஒவ்வொரு பின்னணி இருக்கிறது.

சீதா : தாங்குதளத்தின் பயன் என்ன? எத்தனை வகையான தாங்குதளங்கள் வழக்கிலிருக்கின்றன?

கமல் : தாங்குதளத்தின் ஒரே பயன் கோயிலின் உயரத்தை அதிகரிப்பதற்காகத்தான். இதில் பல வகைகளுண்டு. பதினாறுக்கும் மேற்பட்ட வகைகளை மயமதம் என்ற கட்டடக்கலை நூல் குறிப்பிட்டாலும், இன்று தமிழகக் கோயில்களில் காணக்கிடைப்பவை கீழ்க்கண்ட நான்குதான்.

1. பாதபந்தம்
2. பிரதிபந்தம்
3. பத்மபந்தம்
4. கபோதபந்தம்

சீதா : இதற்குக் காலவரிசை ஏதாவது உண்டா? முதலில் தோன்றியது இது, பின்னர் இது, என்று?

கமல் : எது முதலில் தோன்றியது என்று தெரியவில்லை. இன்று காணக்கிடைக்கும் கருங்கற்கோயில்களில் பாதபந்தம் மற்றும் பிரதிபந்தம் ஆகிய இரண்டுமே ஆரம்ப கட்டத்திலிருந்து இருக்கின்றன. ஒருவேளை இதற்குமுன் கட்டப்பட்ட செங்கற்றளிகள் இன்றிருந்தால் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். என்ன செய்வது? கருங்கற்கோயில்களையாவது மகேந்திரரின் தொலைநோக்குப் பார்வையால் காணும் பேறு பெற்றிருக்கிறோமே, அதை எண்ணி மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.

சீதா : பாதபந்தத்திற்கும் பிரதிபந்தத்திற்கும் என்ன வித்தியாசம்?

கமல் : இடம்பெற்றிருக்கும் உறுப்புகளை வைத்துத்தான் இன்ன வகையினது என்று அடையாளப்படுத்த முடியும். இந்தப் படத்தைப் பாருங்கள். இது பாதபந்த வகையைச் சேர்ந்தது.



உபானம்

தரையோடு ஒட்டிய உறுப்பு உபானம். இது ஒரு சதுர வடிவிலான அமைப்பு. சில இடங்களில் இரண்டு உபானங்கள் கூட இருக்கும். அவ்வாறு இருந்தால், கீழே இருப்பதற்குப் பெயர் உப உபானம். சில கோயில்களில் இது இல்லாமலேயே கூட இருக்கும். அப்படியென்றால், மண்ணில் புதைந்து விட்டது என்று பொருள்.

ஜகதி

உபானத்திற்கு மேல் இருக்கும் உறுப்பு ஜகதி ஆகும். இதுவும் வடிவில் உபானம் போன்றே இருக்கும். ஆனால் உபானத்தை விடக் குறைந்த பட்சம் இரண்டு மடங்கு பெரியதாகவும் சற்று உள்ளே தள்ளியும் இருக்கும். சில சமயம் இதில் கல்வெட்டுக்கள் கூட இருக்கும்.

குமுதம்

இது ஜகதிக்கு அடுத்ததாக இருக்கும் உறுப்பு. இது மூன்று வடிவங்களில் இருக்கும். உருளை, எண்பட்டை மற்றும் பதினாறு பட்டை. இதில் பதினாறு பட்டை இருந்தால் அக்கட்டுமானம் முற்சோழர் காலத்திற்குப் பிற்பட்டது என உறுதியாகக் கூறலாம். இதில் அரிதாகப் பூ வேலைப்பாடுகளும் காணப்படும். மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீசுவரர் ஆலயத்தின் வெளிப்புறச் சுவரில் இத்தகைய பூவேலைப்பாடுகளைக் காணலாம்.

கண்டம்

பொதுவாக, இந்தக் கண்டப்பகுதி, பாதம், அதற்கு மேலும் கீழும் இரு கம்புகள் என்ற அமைப்பிலேயே காணப்படும். இதில் பாதம் என்பது, சுவரிலுள்ள தூணின் தொடர்ச்சியாகும். அதாவது, தூணின் பாதம். இதை வைத்துத்தான் பாதபந்தம் என்றே அறிய முடியும். இதற்கு பதிலாக, வரிசையாக யாளிகளைக் கொண்ட ஒரு வரி அமைந்திருந்தால் அவ்வரியைப் பிரதிவரி என்றும் தாங்குதளத்தைப் பிரதிபந்தத் தாங்குதளம் என்று அழைப்போம். பிரதிவரியில் நான்கு உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். அவை, ஆலிங்கம், அந்தரி, பிரதிமுகம் மற்றும் வாஜனம் ஆகியவை. இவற்றைப் பற்றி வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

பட்டிகை

பல அடுக்குகளுக்கு மேல் அமைந்திருக்கும் பலகை போன்ற அமைப்புதான் பட்டிகை என்பது. சில கோயில்களில் இப்பட்டிகைக்குப் பதிலாகக் கபோதம் (கூரையின் நீட்சியாக வரும் கபோதம் போலவே) இருக்கும். இதற்குப் பெயர் கபோதபந்த அதிஷ்டானம். கபோதபந்த அதிஷ்டானம் பிரதிபந்தத்திலும் வரும்.

உபரி கம்பு

இதுவும் கண்டப்பகுதியில் காணப்படும் உறுப்பு போலவே இருப்பதால், இதற்குக் கம்பு என்று பெயர். ஆனால், கம்பு இருக்க வேண்டிய கண்டப்பகுதியில் இல்லாமல், பட்டிகையின் மேல் உபரியாகக் காணப்படுவதால், இதை உபரிக் கம்பு என்கிறோம். இதுதான் தாங்குதளத்தையும் சுவரையும் இணைப்பது.

பிரதிபந்தத்தில் வேறு நான்கு உறுப்புகள் இடம்பெற்றிருக்கும். கண்டம், பட்டிகை, உபரிகம்பு ஆகியவற்றுக்குப் பதிலாக, அந்தரி, ஆலிங்கம், வாஜனம், பிரதிவரி ஆகிய நான்கும் இருந்தால், அது பிரதிபந்தத் தாங்குதளமாகிறது.

சீதா : அருமை. பல்வேறு வகையான தாங்குதளங்களிலும் இருக்கும் உறுப்புகளை மொத்தமாகத் தொகுத்து, எந்தத் தாங்குதளத்தில் என்னென்ன உறுப்புகள் இடம்பெறும் என்று அட்டவணை தரமுடியுமா?

கமல் : ஓ! தரலாமே.









































































தாங்குதளம்
பாதபந்தம்
பிரதிபந்தம்
பத்மபந்தம்
உப உபானம்
இருக்கலாம்
இருக்கலாம்
இருக்கலாம்
உபானம்
இருக்கும்
இருக்கும்
இருக்கும்
ஜகதி
இருக்கும்
இருக்கும்
தாமரை போல்
குமுதம்
இருக்கும்
இருக்கும்
இருக்கும்
கண்டம்
இருக்கும்
இருக்காது
இருக்கும்
பட்டிகை
இருக்கும்
இருக்காது
இருக்கும்
கபோதம்
இருக்காது
இருக்காது
இருக்காது
உபரிகம்பு
இருக்கும்
இருக்காது
இருக்கும்
அந்தரி
இருக்காது
இருக்கும்
இருக்காது
ஆலிங்கம்
இருக்காது
இருக்கும்
இருக்காது
வாஜனம்
இருக்காது
இருக்கும்
இருக்காது
பிரதிவரி
இருக்காது
இருக்கும்
இருக்காது
பத்மவரி
இருக்கலாம்
இருக்கலாம்
இருக்கலாம்


சீதா : தாங்குதளத்திற்கு மேலே இருப்பது தூண். இரண்டுக்கும் நடுவில் இராஜராஜீசுவரத்தில் ஒரு பகுதியைப் பார்த்தோமே, அதன் பெயர் என்ன?

கமல் : அதற்குப் பெயர் வேதிகைத் தொகுதி. தாங்குதளத்தையும் சுவரையும் இணைக்கும் பகுதி. இதிலிருக்கும் கண்டத்திற்கு வேதிக்கண்டம் என்று பெயர்.

சீதா : ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான தூண் காணப்படுகிறதே! இதை வைத்துக் அக்கோயிலின் காலத்தைக் கணிக்க முடியுமா?

கமல் : முடியும். ஆரம்ப காலங்களில் தூண்கள் சதுரமாகவோ, எண்பட்டையாகவோ இருந்தன. பிறகு சதுரம், கட்டு என்ற இருவகை உறுப்புகள் இடம்பெற ஆரம்பித்தன. தரையிலிருந்து முதலாவதாக இருக்கும் சதுரத்தின் மேற்பகுதியில் நாகபந்தம் எனப்படும் ஒரு நாகபாம்பு உருவம் இடம்பெற்றிருக்கும். அதன் அளவைப் பொறுத்துக் காலத்தைக் கணிக்கலாம். பல்லவர் மற்றும் முற்சோழர்காலத்தில் இதை அவ்வளவாகக் காணமுடியாது. பிற்சோழரின் பிற்பகுதியிலிருந்து மிகவும் சிறிதாக ஆரம்பிக்கும். பாண்டியர், நாயக்கர் காலங்களில் மிகவும் பெரிதாக உருவெடுத்திருக்கும்.



சீதா : சதுரம், கட்டு தவிர, தூணில் என்னென்ன உறுப்புகள் இருக்கும்?

கமல் : நிறைய உண்டு. கீழே உள்ள படத்தில் பாகங்கள் குறிக்கப்பட்டுள்ளன.



சீதா : தூணும் கூரையும் இணையும் இடத்தில் இருப்பதுதானே போதிகை? இதைவைத்துக் காலத்தைக் கணிப்பது எப்படி என்று எழுதியிருந்தீர்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. குளவுப் போதிகை இருந்தால் அது முதலாம் பராந்தகர் காலக் கட்டுமானம் எனலாம். இன்னும் சரியாகச் சொல்லவேண்டும் என்றால், 9, 10ம் நூற்றாண்டுக் கலைமுறை. ஆனால், பிற்காலத்தில் இராஜராஜரின் கோயிலிலும் இக்குளவுப் போதிகை இடம்பெறுகிறதே? அப்போது குழப்பம் உருவாகிறதே?

கமல் : குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. குளவை அறிமுகப்படுத்தப்பட்டது முதலாம் பராந்தகர் காலத்தில். அதனால், அவருக்கு முன் கட்டப்பட்ட கோயில்களில் இக்குளவு இருக்காது. வேறு விதமாகச் சொல்வதென்றால், ஒரு கோயிலில் குளவுப்போதிகை இருந்தால் அது முதலாம் பராந்தகர் அல்லது அவருக்குப்பின் கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வரலாம். ஒரு கோயிலில் குளவுப்போதிகையும் வெட்டுப்போதிகையும் இருந்தால், அது முதலாம் இராஜராஜர் அல்லது அவருக்குப்பின் கட்டப்பட்ட கோயில் என்று முடிவு செய்யலாம். இருக்கும் போதிகைகளில் எது காலத்தால் மிகவும் பிற்பட்டதோ, அதைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.

சீதா : புரிந்து விட்டது. போதிகை காலக்கணிப்பில் ஒரு முக்கியமான உறுப்புதான் என்றபோதிலும், அது ஒன்றை மட்டுமே வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாது. இதில் மற்ற உறுப்புகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படித்தானே?

கமல் : அதே! அதே!

சீதா : அதற்குமேல் உத்தரம், வாஜனம், வலபி, அதில் பூதவரி வருகிறது. மழைநீர் வழிந்து வெளியே வரக் கபோதம் இருக்கிறது. அதற்குமேல் இருக்கும் ஆர உறுப்புகளைக் கொண்ட கைப்பிடிச்சுவர் எதற்காக இருக்கிறது?

கமல் : ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களின் மேற்றளக் கைப்பிடிச் சுவரை அலங்கரிக்க இந்த ஆர உறுப்புகள் பயன்படுகின்றன. பால்கனியின் கைப்பிடிச்சுவரைப் போலிருக்கும் இதில் இரண்டு வகைகளுண்டு. அர்பிதம், அனர்பிதம். ஆரச்சுவருக்கும் மேற்றளச்சுவருக்கும் இடையே இடைவெளி இருந்தால் அது அனர்பிதம் (எ-கா: தர்மராஜரதம்). இடைவெளி இல்லாவிட்டால் அர்பிதம். மேற்றளங்களில் கருவறை இடம்பெறும்போது அக்கருவறையை அணுகும் விதமாக ஒரு ஆள் நடந்து செல்லும் அளவு இடைவெளி விட்டு ஆரச்சுவரைத் தள்ளி வைப்பார்கள். கீழ்த்தளத்தில் மட்டும் கருவறை அமைந்திருக்கும் பட்சத்தில் மேலே பெரும்பாலும் அர்பிதமாகவே இருக்கும்.

சீதா : ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களின் மேற்றளக் கைப்பிடிச் சுவரை அலங்கரிக்க ஆர உறுப்புகள் பயன்படுகின்றன என்றால், மாமல்லபுரத்தில் ஒரே தளத்தைக் கொண்ட குடைவரைகளிலும் ஆர உறுப்புகள் இருக்கின்றனவே! அது ஏன்?

கமல் : அதுதான் பல்லவச் சிற்பிகளின் கற்பனைத்திறனுக்குச் சான்று. ஆகாயத்தையே இரண்டாம் தளமாக உருவகித்து, அதற்கு ஆரச்சுவரை அமைத்திருக்கிறார்கள். இதை மாமல்லபுரம் தவிர்த்த ஏனைய பல்லவர் குடைவரைகளிலோ, முத்தரையர், பாண்டியர் குடைவரையிலோ காணவியலாது.

சீதா : விசித்திர சித்தருக்கு ஏற்ற சிற்பிகள்தான் வாய்த்திருக்கிறார்கள். குடைவரையில் என்னென்ன விதமான கூரை உறுப்புகள் இருக்கும்?

கமல் : பெரும்பாலும் கபோதம், அதற்குமேல் பூமிதேசம் வரை இருக்கும். ஒரு ஒப்பீட்டுக்காக கட்டுமானக்கோயில், குடைவரை ஆகியவற்றின் வடிவமைப்பு கீழே இருக்கிறது.





சீதா : சிகரங்களில் எத்தனை வகைகள் உள்ளன?

கமல் : பொதுவாக மூன்று வகைகள் உள்ளன. வேசரம், நாகரம், திராவிடம். நான்கு பக்கங்கள் இருந்தால் நாகரம். எண்பட்டையாக இருந்தால் திராவிடம். வட்டமாக இருந்தால் வேசரம்.

சீதா : இந்த மூன்று வகைகளையும் எங்கெங்கே பார்க்கலாம்?

கமல் : திராவிட சிகரத்தை தஞ்சை இராஜராஜீசுவரத்திலும், நாகர சிகரத்தை புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், கொடும்பாளூர் மூவர் கோயில் ஆகியவற்றிலும், வேசர சிகரத்தை பொன்செய் நற்றுணையீசுவரம், திருக்கருகாவூர் ஆகிய ஊர்களிலும் பார்க்கலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரே விமானத்தில் மூன்று இனங்களும் இடம்பெற்றிருக்கும். கீழே சதுரமாக ஆரம்பித்து, நடுவில் எண்பட்டையாக மாறி, மேலே வட்டமாக முடியும். நம் பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ் இதைப் பார்த்தபிறகு, தஞ்சாவூரில் இருப்பது கண்ணுக்குத் தெரியாத ஸ்தூல ஆகாசலிங்கம். க.கொ.சோ.புரத்தில் இருப்பது பிரம்மபாகம், விஷ்ணுபாகம், ருத்ரபாகம் ஆகிய மூன்றும் கொண்ட சரீர ஆகாசலிங்கம் என்பார். இராஜேந்திரசோழர் வழிபடும்போது பொற்றாமரைப்பூவை இவ்வளவு உயரத்துக்குத் தூக்கிப் போட்டாரா என்று என்னைக் கேட்காதீர்கள்!!

சீதா : இப்போதைக்கு இது போதும். மீண்டும் ஒருமுறை களவிஜயம் செய்துவிட்டுப் பிறகு படித்துப் பார்க்கிறேன்.

இந்த உரையாடலில் கட்டடக்கலை தொடர்பான அனைத்தும் இடம்பெற்றுள்ளன என்று கூற இயலாது. இதுபோல் இன்னும் ஏராளமான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே கட்டடக்கலை என்ற பெருங்கடலில் ஓரிரு முத்துக்களை எடுத்திருக்கிறோம். பின்னொரு சமயத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பின் அவற்றையும் காணலாம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.