http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 37

இதழ் 37
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
இராவண அனுக்கிரகமூர்த்தி
திரும்பிப் பார்க்கிறோம் - 9
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
திருவாலித்திருமகன்
Agricultural Terms in the Indus Script - 1
அங்கும் இங்கும் - 1
Links of the Month
தொலைந்ததெல்லாம் கிடைக்கும்!
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
இதழ் எண். 37 > கலையும் ஆய்வும்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini
சாக்கைக் கூத்தன், சாலினி

கி. பி. 550க்கும் கி. பி. 900க்கும் இடைப்பட்டு விளங்கிய பல்லவர், பாண்டியர் ஆட்சியில் பக்தி இயக்கம் பரவியது. இறையுணர்வு தழைத்ததால், கோயில்கள் பெருகின. அரசர்களையும் செல்வர்களையும் நாடி வளர்ந்த கலைகள், கோயில்கள் நோக்கி ஈர்க்கப்பட்டன. இறைவழிபாட்டின் இன்றியமையாக் கூறுகளாக இசையும் ஆடலும் ஒன்றியதால், ஒவ்வொரு கோயிலிலும் இவ்விரு கலைகளிலும் வல்லவர்கள் பணியமர்த்தப்பட்டனர். சங்க காலத்தின் தொடக்கப்பகுதியில் இறைவனை நோக்கியும் ஆடும் மக்கள் மீது இறைவன் இவர்ந்திருப்பான் எனக் கருதியும் ஆடல்கள் நிகழ்ந்தன. சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் இறைவனே ஆடுவான் எனும் கருத்துத் தழைத்தது. பாண்டரங்கம், கொடுகொட்டி இவற்றை சிவபெருமான் நிகழ்த்தினார் எனவும் மல்லாடல், குடக்கூத்து இவற்றைத் திருமால் நிகழ்த்தினார் எனவும் நம்பினர்.

சங்கம் மருவிய காலத்தில் மக்கள் ஆடல்களாக இருந்த பேடியாடல், துடியாடல் இவையும் இறையாடல்களாயின. இறைவனை முன்னிருத்தி வணங்கியே ஆடல்கள் தொடங்கின. பெரும் பகுதி, வாழ்க்கை நிகழ்வுகளைப் பாடுபொருளாய்க் கொண்டும் சிறுபகுதி இறையருள் வேண்டியும் மக்கள் ஆடலாய் நிகழ்ந்த குரவை, சங்கம் மருவிய காலத்தில் இறைநோக்கிய, இறைபற்றிய ஆடலாக மாறியது. கண்ணனும் நப்பின்னையும் எருமன்றத்தில் ஆடிய பாலசரித நாடகங்களைப் பின்பற்றியே தாம் ஆடுவதாக ஆய்ச்சியர் நம்பினர். குன்றக் குறவரோ முருகனின் அருஞ்செயல்களைப் பாடிப் பரவினர். இந்த இறைநோக்குநிலை பல்லவர், பாண்டியர் காலத்தில் பல்கிப் பெருகியது.

சங்க காலத்தின் பிற்பகுதியில் மூன்று ஆடல்களை மட்டும் ஆடியவராகக் காட்டப்பெறும் சிவபெருமான் பல்லவர், பாண்டியர் காலத்தில் ஆடல் தெய்வமாக உயர்த்தப்பட்டார். இந்த நிலை சங்கம் மருவிய காலத்திலேயே தொடங்கிவிட்டதெனலாம். சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையில் இதற்கான முதல் தடயமாக இறைவனுக்கும் காளிக்கும் நடந்த ஆடல் போட்டியை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதில் இறைவனை ஆடல் கண்டு அருளிய நங்கையாகக் காட்டப்பெறுபவர் காளி. இந்த ஆடற்போட்டியைத் திருமூலரும் குறிப்பிடுகிறார். திருமூலரின் திருக்கூத்து தரிசனம் சிவபெருமானை ஆனந்தக் கூத்தராக அறிமுகப்படுத்துகிறது.

மண்டல நிலையில் நின்று உள்ளாளம் பாடி வீசி எடுத்த பாதம் அண்டம் உற நிமிர்ந்தாடும் இறைவனைக் காரைக்காலம்மையின் மூத்த திருப்பதிகம் காட்டுகிறது. இறைவனாடும் காடரங்கு அணங்கு ஆடும் காடு என்று சுட்டும் அம்மை, அங்கு இறை.வன் கால் உயர் வட்டணை இட்டு நட்டம் ஆடியதாகக் குறிப்பிடுகிறார். அந்த ஆடலுக்குப் பன்னிரண்டு இன்னியங்கள் இயங்கின. சுத்த நிருத்தம், அவிநயக்கூத்து இவ்விரண்டிலும் சிவபெருமான் காளியை வென்றதாக சம்பந்தரும் குறிப்பிடுகிறார்.

சிவபெருமானின் ஆடல் நாயக நிலையும் ஆடியும் பாடியும் இறைவனை வழிபடுதலே சிறப்புடையது என ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடல்களை இயற்றியதும் ஆடற்கலை மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற வழியமைத்தன எனலாம். இறைக்கோயில்கள் அனைத்திலும் ஆடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே கூத்தியர் இருந்தனர். ஆடற்கலைக்கென நூல்கள் இருந்தன. அவற்றுள் பெருங்கதை சுட்டும் நாடகநூலும் பரதர் எழுதிய நாட்டிய சாத்திரமும் குறிப்பிடத்தக்கன. பரதரின் நாட்டிய சாத்திரம் தமிழ்நாடு முழுவதும் பின்பற்றப்பட்டமைக்குச் சிற்பங்களும் ஓவியங்களும் செப்புத் திருமேனிகளும் சான்றுகளாகின்றன. 'புயங்கராக மாநடம்', 'சதுரநடம்' எனும் திருமுறை சொற்றொடர்களும் இக்கருத்திற்குத் துணைநிற்கின்றன.

இக்காலத்தில் ஆடற்கல்வி கலை வல்ல ஆண்களாலும் பெண்களாலும் வழங்கப்பட்டது. ஆடல் ஆசிரியர்கள் அதற்கென அமைந்த அரங்குகளில், கருவி அமைந்த குழுவொடு இருந்து பயிற்றுவித்தனர். அரங்குகளில் இருந்தவர்கள் ஆசாரியர்கள் என்றும் கோயில்களில் இருந்தவர்கள் நட்டவம் என்றும் குறிக்கப்பட்டனர். 'அரங்கியல் மகளிர்க்கு ஆடல் வகுக்கும் தலைக்கோல் பெண்டிர்' எனும் பாடலடியால் தலைக்கோலியரும் ஆடல் ஆசிரியர்களாகத் திகழ்ந்தமையை அறியமுடிகிறது. அரங்க நிகழ்வுகளின் அமைப்பாளர்களாகவும் விளங்கிய அவர்கள் நடநவில் மகளிர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆடற்கல்வி புகட்டிய நிறுவனங்கள் பல ஊர்களில் இருந்தமையை, 'அரங்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறு' எனும் பதிக அடிகள் நிறுவவல்லன. பத்திமை இயக்கத்தால் மக்கள் ஆடல் பெருகியமையையும் அனைத்து ஊர்களிலும் ஆடல் நிகழ்ந்தமையையும் அறியமுடிகிறது. தொழில்முறைக் கலைஞர்களாகக் கூத்தர், கூத்தியர், நாடகக்கணிகையர் அமைந்தனர்.

பல்லவர், பாண்டியர் காலத்தில் சொக்கம் பரவலாக ஆடப்பட்டதைச் சிற்பங்கள் வழி அறியமுடிகிறது. சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரத்தில் சிவபெருமானின் புஜங்கத்ராசிதக் கரணச் சிற்பம் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆடற் சிற்பங்களில் இதுவே காலத்தால் பழைமையானது. ஆனந்தத் தாண்டவமாக அறியப்படும் இதைப் பற்றி சகளாதிகாரம் குறிப்பிடுகிறது. இராஜசிம்மப் பல்லவரின் கற்றளிகளில் சிவபெருமானின் குஞ்சிதம், இலலாட திலகம், புஜங்கத்ராசிதம், அர்த்தஸ்வஸ்திகம், ஊர்த்வஜாநு கரணச் சிற்பங்களும் பாண்டியர் பகுதியான திருமலைப்புரத்தில் சிவபெருமானின் மண்டலநிலைச் சிற்பமும் பரங்குன்றத்தில் சதுரகரண சிற்பமும் இடம்பெற்றுள்ளன. இக்கரணங்களைக் கூத்தியரும் நிகழ்த்தினர் என்பதை நிறுவுமாறு காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயிலிலும் பாகூர் சிவன்கோயிலிலும் சிற்பங்கள் உள்ளன.

நிருத்தம் அவிநயத்தோடு அமைந்த ஆடலாகும். சாந்திக்கூத்தின் வகைகளுள் ஒன்றாய் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் அவிநயக்கூத்தே நிருத்தமாகும். கதை தழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப கை காட்டி அவிநயம் செய்யும் கூத்தாக அது அமைந்தது. 'ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்' என மணிமேகலை சுட்டுவதால், அவிநயம் இல்லாமலும் கூத்து நிகழ்ந்ததையும் அவிநயம் தனிப்பெரும் கலையாக வளர்ந்ததையும் அறியமுடிகிறது. 'நிருத்தம் பழம்படி ஆடும்' எனும் அப்பர் பெருமானின் பதிக அடியால், அக்காலத்தில் நிருத்தம் சில புதிய உத்திகளையும் பெற்று அமைந்தமையை உணரலாம்.

கதை தழுவி வரும் கூத்தான நாடகத்தில் வல்லவர்களாய் இருந்த ஆடற்பெண்கள் நாடக மகளிர் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் அந்நாளில் பலராய் இருந்தமையை, 'நாடகமகளிர் நாலெண்பதின்மர்' எனும் பாடலடி உணர்த்தும். அரண்மனைகளில் நாடகக் கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் பல இருந்தன. இக்காலத்தில் நாடகம் சிறப்புற்று விளங்கியதைத் திருமுறை ஆசிரியர்களும் பெருங்கதை ஆசிரியரும் நன்கு எடுத்துரைக்கின்றனர். நாடகக் காட்சிகளைப் போல அமைந்த ஆடற்சிற்பங்கள் காஞ்சிபுரம் வைகுந்தநாதப் பெருமாள், தான்தோன்றீசுவரம், கச்சபேசுவரர் கோயில்களில் காணப்படுகின்றன.

திருமுறைகள் சில ஆடல்வகைகளை முன்வைக்கின்றன. சம்பந்தரும் அப்பரும் திருமூலரும் குறிப்பிடும் குனித்தல் வளைந்தாடும் கூத்தாகும். கால்களில் கழலும் சிலம்பும் ஒலிக்க நிகழ்ந்த இவ்வாடலுக்குக் குழல், கல்லவடம், கொடுகொட்டி எனும் தோல் கருவிகள் இசை தந்தன. படுதம் பெயர்ந்தாடும் கூத்து. இதற்குப் பாடலும் இருந்ததாக சம்பந்தர் குறிக்கிறார். வட்டணை திருமுறை ஆசிரியர்கள் குறிக்கும் பாதவேலை மிக்குடைய ஆடல் நடையாம். இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுழன்று நடந்து வட்டமிட்டாற் போல் ஆடிவருவதே வட்டணையாம். பஞ்சமரபு இதை நான்காய்ப் பகுக்கும்

கூத்து, கொம்மல், கபாலக் கூத்து, பாண்டரங்கம், மரக்கால் கூத்து, குணலை, பிச்சாடல் எனும் ஆடல்களும் வழக்கிலிருந்தன. இவற்றுள் கொம்மல் கைதட்டி ஆடும் ஆடல். குணலை வரிக்கூத்து. நந்திக் கலம்பகம் மதங்கி ஆடலைக் குறிக்கிறது. குரவை மக்கள் ஆடலாய்க் குரா மர நிழலிலும் விளமரக் காவினுள்ளும் மலைப்பகுதிகளிலும் தொடர்ந்தது. முன், பின்தேர்க் குரவைகள், வாளமலை, வள்ளிக்கூத்து, துடிக்கூத்து இவையும் இக்காலத்துத் தொடர்ந்தன எனக் கருதுமாறு வெண்பாமாலைப் பாடல்கள் அமைந்துள்ளன.

சோழப் பெருவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் சமயம் தழைத்தது. கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. கோயில் என்ற அமைப்பு ஒரு பெரும் நிறுவனமாகவும் மாறத் தொடங்கியது. பொருளாதார வசதிகளும் மன்னர், மக்கள் அணைப்பும் கிடைத்த நிலையில் கோயில்கள் பல கலைஞர்களைப் பணியமர்த்திக் கொண்டன. ஒவ்வொரு கோயிலிலும் பாடுவாரும் கருவிக்கலைஞர்களும் ஆடற்பெண்களும் இருந்தனர். நாள் வழிபாடுகளின் போதும் இறை ஊர்வலங்களின்போதும் ஆடல், பாடல் நிகழ்வுகள் இருந்தன. இதனால், கலைகள் வளம் பெற்றன.

பல ஆடற்கலை, இசைக்கலை நூல்கள் சோழர் காலத்தே வழக்கில் இருந்தமையைத் தமிழிலக்கண, இலக்கிய உரையாசிரியர்களின் மேற்கோள்கள் தெரிவிக்கின்றன. இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், இவை உரையெழுத அடியார்க்கு நல்லார்க்கு மேற்கோள் நூல்களாக உதவின. முழுமையும் கிடைக்காமல் ஒருசார் நூற்பாக்களே கிடைத்த நிலையில் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், கூத்தநூல் இவை சுட்டப்படுகின்றன. இசைத்தமிழ்ச் செய்யுள்துறைக்கோவை, சந்தம், வாய்ப்பியம், செயல்முறை, பதினாறு படலம், விளக்கத்தார் கூத்து இவையும் அக்காலத்தே வழக்கில் இருந்த இசை, ஆடற்கலை நூல்களாக அறியப்படுகின்றன. சோழர் காலத்தில் வழக்கில் இருந்த மற்றோர் ஆடற்கலை நூலாக நாட்டிய சாத்திரத்தைக் குறிக்கலாம்.

சோழர் காலத்தில் கோயில்களிலும் தளிச்சேரிகளிலும் ஆடல் பயிற்றுவிக்கப்பட்டது. இதற்கென்றே பல கோயில்களில் நாடகசாலைகளும் திருக்காவணங்களும் நிருத்த மண்டபங்களும் இருந்தன. தளிச்சேரிகள் ஆடற்பெண்களின் வாழிடங்களாகும். சோழ மண்டலத்தில் இருந்த நூற்றிரண்டு தளிச்சேரிகளைத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டொன்று வெளிச்சப்படுத்துகிறது. அவற்றுள் நாற்பத்தொன்பது தளிச்சேரிகள் கோயில்களைச் சார்ந்தும் ஐம்பத்து மூன்று தளிச்சேரிகள் ஊர்களுக்குள்ளும் இருந்தன. இத்தளிச்சேரிகளில் கூத்திகள், தேவனார் மகளார், கூத்தப்பிள்ளை, தளிச்சேரிப் பெண்டுகள், தேவரடியார், தளியிலார், பதியிலார் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட ஆடற்கலை மகளிர் இருந்தனர்.

ஆடல் கற்பிக்க நட்டுவ ஆசான்களும் தலைக்கோல் மகளிரும் கூத்தர்களும் இருந்தனர். இயல், இசை, நாடகங்களின் முறையைத் தெரிந்த அறிஞர்கள் நட்டுவர், நடையறிபுலவர் என அழைக்கப்பட்டனர். இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிப் பெண்களுக்கு நட்டுவம் செய்ய ஏழு ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களுள் நால்வர் கலைவிற்பன்னர்கள் என்பதால் நிருத்தப் பேரையன், நிருத்தமாராயன் என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இரண்டு வேலி நில வருவாயாக அமைந்த நெல் இருநூறு கலம் அவர்களுக்கு வாழ்வூதியமாகத் தரப்பட்டது. பல நட்டுவர்கள் இருந்த மற்றொரு கோயிலாக நங்கவரம் மறவனீசுவரம் விளங்கியது.

திருவிடைமருதூர்க் கோயிலில் அகமார்க்க நட்டுவம், அவிநய நட்டுவம் என இருநட்டுவ முறைகள் இருந்தன. திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் தளியிலாருக்கு ஆடல் கற்றுத் தருவதற்காக நட்டுவர் ஒருவர் இருந்தார். கீழையூர்த் தென்வாயில் ஸ்ரீகோயிலில் மூவேந்த சிகாமணி நிருத்த விழுப்பரையன் நட்டுவக்காணி பெற்றிருந்தார். பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் விக்கிரமாதித்தன் ஆச்சனான இராஜராஜ நாடகப்பேரையன் நட்டுவப் பணியில் இருந்தார். திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் கோயிலில் மோடன் ஆதிச்சனும் கீரனூர் வாகீசுவரர் கோயிலில் இடனைமாராயனும் நட்டுவர்களாக விளங்கினர்.

நட்டுவ ஆசான்களைப் போலவே தலைக்கோலியரும் ஆடல் பயிற்றுவித்தனர். திருவாரூர்த் தியாகராசர் கோயில், உடையார்குடி அனந்தீசுவரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில், திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில், திருவையாறு வடகயிலாசம் இவற்றில் தலைக்கோலியர் பலராக இருந்தனர். இவர்கள் ஆடல் பயிற்றுவித்ததுடன், ஆடியும் மகிழ்வித்தனர்.

கூத்தர்கள் கோயில் திருவிழாக்களில் பங்கேற்று ஆடல் நிகழ்த்தியதுடன், மரபுவழியாகக் கலையைப் பயிற்றுவித்தனர். தந்தை - மகன், தாய் - மகள், மாமன் - மைத்துனன், அண்ணன் - தம்பிகள் என்று உறவின் முறையாக குடும்பம் முழுவதுமே கூத்துக்கலையைப் பயின்று ஆடியமையை அறியமுடிகிறது. சில கோயில்களில் இக்கூத்தர்கள் ஆடற்கலைஞர்கள் போலத் தொடர்ந்து புரக்கப்பட்டமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

சோழர் காலத்தில் பல்வேறு வகையான ஆடல்கள் பயிலப்பட்டன எனினும், மிகுதியும் பயிலப்பட்டது சாந்திக்கூத்தே எனலாம். சாந்திக்கூத்தின் ஒரு பிரிவாக விளங்கிய சொக்கத்தின் நூற்றியெட்டுக் கரணங்களும் சோழர் காலத்தில் மூன்றிடங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டன. முதல் தொடர் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலும் இரண்டாம் தொடர் சோழமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலத்திலிருந்த திருமயானமுடையார் கோயிலிலும் மூன்றாம் தொடர் சமயபுரத்திற்கு அருகிலுள்ள வேங்கடத்தான் துறையூர் திருவாலீசுவரத்திலும் அமைக்கப்பட்டன.

இவை தவிர, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில், பொன்செய் நல்துணையீசுவரம், கும்பகோணம் நாகேசுவரர் கோயில், திருநாவலூர்த் திருத்தொண்டீசுவரம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரம், திருச்சின்னம்பூண்டி திருச்சடைமுடிநாதர் கோயில், நாலூர் திருமயானம், திருநறையூர் சித்தேசுவரம், சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில் இவற்றில் பல கரணச் சிற்பங்களைக் காணமுடிகிறது.

சாந்திக்கூத்தின் இரண்டாம் வகையான மெய்க்கூத்து சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது. திருவிடைமருதூர்க் கோயில் கல்வெட்டொன்று அங்கு அகமார்க்க வகை ஆடலைக் கற்பிக்கும் நட்டுவர்கள் இருந்தமையைத் தெரிவிக்கிறது. இதே கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டு, அகமார்க்கமான மெய்க்கூத்தின் உட்பிரிவான தேசிக்கூத்துக்குரிய பாடல்கள் இங்குப் பாடப்பட்டதாகக் கூறுகிறது. குளத்தூர் சுந்தரசோழீசுவரம் உடையார் கோயில் கல்வெட்டும் மெய்க்கூத்தைக் குறிக்கிறது.

சாந்திக்கூத்தின் மூன்றாம் வகையான அவிநயக்கூத்து திருவிடைமருதூரில் அமைந்தது. அவிநயக்கூத்து எனக் கொள்ளத்தக்க சிற்பத்தொகுதியைக் கும்பகோணம் நாகேசுவரர் கோயில் கண்டபாதப் பகுதியில் பார்க்கமுடிகிறது. நான்காம் வகையான நாடகமும் பயிலப்பட்டது. அந்தரமகளிர் அன்னார் நாடகம் இயற்றியதாகக் கூறும் சிந்தாமணி, சுதஞ்சணன் சரிதம் நாடகமாக நடிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கடலூர் பாடலீசுவரக் கல்வெட்டு, கன்னிவனபுராணம் பாடி நாடகம் செய்தவருக்கும் பூம்புலியூர் நாடகம் செய்தவருக்கும் பாலையூரில் நாடகஞ் செய் நாவலன் நிலம் வழங்கப்பட்டமையைக் குறிப்பிடுகிறது.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் மாசிமக விழாவின்போது ஐந்தங்கம் நாடகம் நிகழ்த்தப்பட்டது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் வைகாசிப் பெரிய திருவிழாவின் போது இராஜராஜேசுவர நாடகம் நிகழ்ந்தது. திருநல்லூர் கல்யாணசுந்தரேசுவரர் கோயிலில் நெற்றிக் கண் நங்கையால் கோவண நாடகம் நிகழ்த்தப்பட்டது. திருவாவடுதுறை கோமுக்தீசுவரத்தில் வடுகமாங்குடி பாண்டிகுலாசநி என்பவரால் திருமூலநாயனார் நாடகம் நடிக்கப்பட்டது.

சோழர் காலத்தில் சாக்கைக்கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து, விநோதக்கூத்து இவற்றுடன் பல்வகைக்கூத்தும் நிகழ்த்தப்பட்டன. சிறுபழுவூர் ஆலந்துறையார் கோயிலிலும் கோட்டூர்க் கொழுந்தீசுவரர் கோயிலிலும் காமரசவல்லி கார்க்கோடக ஈசுவரத்திலும் திருவீழிமிலை வீழிநாதர் கோயிலிலும் கீரனூர் சிவயோகநாதசாமி கோயிலிலும் சாக்கைக்கூத்து நிகழ்த்தப்பட்டது. நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் உடையநாச்சி சாக்கைக் கூத்தாடினார். திருவிசலூர் சிவயோகநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டநாயகச் சாக்கையும் நாங்கூர்ச் சாக்கையும் கூத்து நிகழ்த்தினர்.

திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், வயலகம் விசுவநாதசாமி கோயில் இவற்றில் ஆரியக்கூத்து ஆடப்பட்டது. மானம்பாடி நாகநாதசாமி கோயிலில் உள்ள கல்வெட்டுச் சித்திரை விழாவில் ஐந்து நாட்கள் தமிழ்க்கூத்து நடைபெற்றதைக் கூறுகிறது. திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் உள்ள இராஜராஜன் திருமண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்கன் விநோதக்கூத்து கண்டருளினார். விநோதக்கூத்தின் ஒரு பிரிவான குடக்கூத்து சோழர் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்தது. வைகறையாட்டம், குனிப்பம், பதினோராடல், குரவை, துணங்கை, வாளமலை இவையும் இக்காலத்து இருந்தன.

2. உடன்கூட்டம்

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.