http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 37
இதழ் 37 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
பெருந்தலைச் சாத்தனார் வரலாற்று வல்லுநர் அல்லர். பொருள் தேடப் புறப்பட்ட காதலனைத் தோழி தடுத்தாட்கொள்ளும் காட்சியைத்தான் அப்பெருந்தகை கவிதையாக்க முனைந்தார். ஆனால், அந்த இருபத்துநான்கு அடிப் பாடலில், (அகம். 12) முதல் பன்னிரண்டு அடிகள் வரலாற்றுக்குள் வட்டமடித்தே, பின் காதலுக்குள் நுழைந்து கண்சிமிட்டுகின்றன.
இந்தப் பன்னிரண்டு அடிகள், பாண்டிய அரசரையும் அவரது படைத்தலைவர் பண்ணியையும் அப்பெருந்தகையின் பண்பையும் படம் பிடித்துப் புலவருக்கு உவமையாக்க உதவியுள்ளன. கோடை என்னும் ஊரின் தலைவர் பண்ணி. கூர்மை வாய்ந்த அம்பினை உடையவர். யானைகளைப் பிடித்துப் பழக்கி அவற்றைத் தம்மை நாடி வரும் 'இல்லாதவருக்கு' வழங்குபவர். பிடிப்பதும் பழக்குவதும் தவிர, அந்த யானைகளுக்கும் அவருக்கும் வேறு தொடர்பில்லை. வந்தார்க்கு வழங்குவதற்கென்றே அவை பிடிக்கப்பட்டன எனுமாறு போல, அவரது யானைத் தொழுவம் 'சொந்தமின்றி' இருந்தது. வீரமும் ஈகையும் நிரம்பிய இந்தப் பண்ணி பாண்டியரின் படைத்தலைவர். படைத்தலைவரே இப்படியென்றால் பாண்டியர் எப்படி? கடல் மூழ்கி எடுத்த முத்துக்கள் கோத்த மாலையும் மலைக் குறவர் அன்போடு கொணர்ந்தளித்த சந்தனமாலையும் அணிந்த அந்தப் பாண்டியரின் மார்பு, 'திருவீழ்' மார்பாம். (நேரடிப் பொருளில் என்றால் செல்வம் செழிக்கும் மார்பு. இறைநோக்குப் பொருளில் என்றால் இலக்குமி விரும்பி உறையும் மார்பு.) இவ்வழகிய மார்பினுக்குச் சந்தனமாலை கொணர்ந்த மலைக் குறவர், அதனைத் 'தெறல் அரும் மரபின் கடவுள் பேணிக் கொணர்ந்தனராம். 'எங்கள் மன்னர் நெடுக வாழ்ந்து நல்லாட்சி நடத்த, அவர் மார்பினை இந்த மாலை அலங்கரிக்கட்டும். அதற்குத் தெய்வமே நீ துணையிரு' என்பது போல் உள்ளம் உருகக் கடவுளை வேண்டிக் குறவர் கொணர்ந்த அந்தச் சந்தனமாலைதான் எத்தனை பெருமைக்குரியது! குறவர் வணங்கிய கடவுள், 'வருத்தும்' கடவுளன்று. அன்புடைய அடியாரைத் துன்புறுத்தாத கடவுள். மலைவாழ் மக்கள் கடவுளின் வாழ்த்துடன், எத்தனை நேயமாய் மன்னர் மார்புக்கு அந்த மாலையைக் கொணர்ந்திருப்பர் என்பதை நினைக்கையில் வியப்பு மலர்கிறது. பகைவர் தொடர்ந்து திறையளிக்கும் வலிமையான அரசின் அந்தப் பாண்டியக் காவலன் எத்தனை பேறு செய்தவன்! நண்பர்களே இது வரலாற்று வீச்சு. இதை அடுத்துப் பெருந்தலைச் சாத்தனார் தோழியின் உரைநயம் காட்டுகிறார். சங்க காலத்தின் உன்னதமான உருவாக்கம், 'தோழி'! அவள் யார்? எப்படிப்பட்டவள்? தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் வாழ்க்கையில் அவளின் பங்களிப்பு தான் என்ன? அவள் அவள்தானா? அல்லது தலைவி, தலைவனின் மனச்சான்றா? எல்லாக் கேள்விகளுக்கும் நெகிழ, நெகிழ விடையிறுக்க ஆசைதான். ஆனால், நீங்களாகத் தேட ஏதேனும் வேண்டுமல்லவா? தோழியைத் தேடுங்கள் தொலைந்ததெல்லாம் கிடைக்கும். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |