http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 37
இதழ் 37 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
மதுரைக் குடைவரைகள் நூலுக்காகப் பரங்குன்றம் குடைவரையை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியபோது, இதுநாள் வரையிலும் கண்டறியப்படாத, அடையாளப் படுத்தப்படாத பல புதிய சிற்பங்களைக் காணமுடிந்தது. அவற்றுள் வீரபத்திரர், பிள்ளையார் அடங்கிய எழுவர் அன்னையர் சிற்பங்கள் முதலிடம் பெறுகின்றன. குன்னத்தூர், கோளக்குடி, கோகர்ணம், மலையடிப்பட்டிக் குடைவரைகளுடன் இனிப் பரங்குன்றமும் எழுவர் அன்னையர் தொகுதி பெற்ற குடைவரையாகப் பெருமை கொள்ளும்.
பரங்குன்றின் அடையாளப்படுத்தப்படாத சிற்பத்தொகுதியாக இராவண அனுக்கிரக மூர்த்தியைக் குறிப்பிடலாம். இத்தொகுதியைக் காண முதன்மைக் குடைவரைக்குக் கீழுள்ள பெருமண்டபத்தை அடைய வேண்டும். இம்மண்டபத்தின் தென்சுவரில் அன்னபூரணி குடைவரைக்குக் கிழக்கில் நன்கு முன்தள்ளிய நிலையில் 1.40 மீ. உயரமும் 99 செ. மீ. அகலமும் உள்ள திறப்பொன்று காணப்படுகிறது. கம்பிக்கதவுகள் பெற்றுள்ள இத்திறப்பே, 'இருட்டுக் கொட்டகை' என்றழைக்கப்படும் இராவண அனுக்கிரகமூர்த்தித் தொகுதி உள்ள இடத்திற்கு வழிவிடுகிறது. இங்கிருந்து 4. 15 மீ. அளவிற்கு நீளும் 1. 92 மீ. அகலப் பாதை குன்றின் தென்சரிவில் வெட்டப்பட்டுள்ள சிற்பத்தொகுதியைக் காட்சிப்படுத்துகிறது. கஜலட்சுமி, எழுவர் அன்னையர், இராவண அனுக்கிரகமூர்த்தி, அன்னபூரணி இந்நான்கு தொகுதிகளும் முதன்மைக் குடைவரையாம் மேற்குடைவரைக்கு நேர் கீழே உள்ள பாறைச் சரிவில் கிழக்கிலிருந்து மேற்காகச் செதுக்கப்பட்டுள்ளன. பின்னாளைய கட்டமைப்புகள், இவை ஒவ்வொன்றையும் மற்றவற்றிலிருந்து முற்றிலுமாய்ப் பிரித்துத் தனித்தனிப் பகுதிகளாக வேறுபடுத்தியுள்ளன. இருட்டுக் கொட்டகையின் உட்புறத்தே உள்ள பாறைச் சரிவின் தென்முகம் சுவர் போலப் பொளியப்பட்டு, நான்முக அரைத்தூண்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளுள் இரண்டாம் பிரிவு தவிர, ஏனைய அனைத்தும் தரைத் தளத்திலிருந்து 13 செ. மீ. உயரமுள்ள உபானம் போன்ற தளமொன்றைப் பெற்றுள்ளன. பாறைச் சுவரின் மேற்பகுதியில் தூண்களுக்கு மேலிருக்குமாறு கூரையை ஒட்டி வெட்டப் பட்டிருக்கும் வாஜனம் வழக்கத்தைவிட அகலமாக உத்திரம் போல அமைந்துள்ளது. இந்நான்கு பிரிவுகளில் முதல் பகுதியில் தனித்த பூதம் ஒன்றும் மூன்றாம் பகுதியில் நான்கு பூதங்களும் நான்காம் பகுதியில் வில்லேந்திய பூதம் ஒன்றும் உள்ளன. முதல் பிரிவிற்கும் மூன்றாம் பிரிவிற்கும் இடைப்பட்ட நிலையில், இரண்டிற்கும் சற்று முன்னிருக்குமாறு வெட்டப்பட்டுள்ள இரண்டாம் பிரிவு, பார்வைக்குத் தனிப் பாறை போலக் காட்சிதந்தாலும் இதுவும் தென்சரிவின் ஒருபகுதியே என்பதை இப்பாறையில் வெட்டப்பட்டுள்ள சிற்பத்தின் அமர்நிலை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கிறது. இவ்விரண்டாம் பிரிவில், சிற்பத்திற்கு மேலுள்ள பாறைச் சுவர் சற்று ஆழமாகக் குடையப்பட்டுள்ளது. இக்குடைவின் இருபுறத்தும் தூண்கள் நிறுத்திக் கூரையமைத்துள்ளனர். தென்முகமாக உள்ள நான்காம் பிரிவை அடுத்துக் கிழக்கில் திரும்பும் பாறைச் சரிவையும் செம்மைப்படுத்தி, தேரில் வரும் இராவணனைச் செதுக்கியுள்ளனர். இப்பிரிவும் உபானம், பக்க அரைத்தூண்கள், வாஜனம் பெற்றுள்ளது. மேலிருக்கும் குடைவரைத் திருமுன்களின் திருமஞ்சன நீரும் கழுவு நீரும் இருட்டுக் கொட்டகையின் மேற்கிலும் தெற்கிலும் வழிந்தோடி வெளியேறுகின்றன. இந்நீர்வரத்தின் பெரும்பகுதி தெற்கிலுள்ள இரண்டாம் பிரிவுக் குழிவு வழி வெளியேறுவதால், முன் அமைந்துள்ள சிற்பம் பேரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு நீர்வரத்தால் முதல் பிரிவுச் சிற்பம் அழிவைச் சந்தித்துள்ளது. இராவண அனுக்கிரக கதை விளக்கமாய் விளைந்துள்ள அருமையான இச்சிற்பத் தொகுதியைக் காப்பாற்றுதல் தலையாய கடமையாகும். கிழக்கிலுள்ள முதல் பிரிவின் தளத்தில் நிற்கும் பூதம், சடைபாரமாய் பரவிப்படர்ந்த சடைப்புரிகளும் பனையோலைக் குண்டலங்களும் கொண்டு, வலக்கையை வலப்புறம் உயர்த்திக் கருவி ஒன்றைப் பிடித்துள்ளது. இடக்கை தளத்திற்காய்த் தாழ்ந்துள்ளது. முகம் இடச்சாய்வில் வடபார்வையாய் உள்ளது. இதன் மூக்கும் வாய்ப்பகுதியும் சிதைந்துள்ளன. இரண்டாம் பிரிவில் நீர்வரும் குழிவின் முன்னுள்ள பாறைப்பகுதியில் நடுநாயகமாக மும்முகங்களுடன் இருகால்களையும் முழங்காலளவில் மடக்கி அமர்ந்துள்ள ஆடவரின் வலமுன்கை தொடைமீது அமர, பின்கை மேலுயர்ந்துள்ளது. இடக்கைகளுள் முன்கை இடப்புறத்துள்ள பாறைக்குப் பின் மறைய, பின்கை அதே பாறையைத் தூக்க முயற்சிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. சடைமகுடம், குண்டலங்கள், சரப்பளி, வஸ்திர முப்புரிநூல் பெற்றுத் தாங்கமுடியாத துன்பத்தின் காரணமாய் அலறுமாறு போல் வாயை அகலத் திறந்துள்ள இவர் கயிலையை அசைத்த இராவணன் எனலாம். இவரது இடமுன்கையை மறைத்துள்ள பாறையின் பின்னுள்ள பூதம், தலைக்கு மேல் உயர்த்தியுள்ள வலக்கையில் எறியும் மெய்ப்பாட்டில் கருவி ஒன்றை ஏந்தியுள்ளது. இக்கருவியை அடையாளம் காணக்கூடவில்லை. கழுத்தில் சரப்பளி அணிந்துள்ள இதன் இடக்கை மார்புக்குக் குறுக்காக நீட்டப்பட்டுள்ளது. இராவணனின் இடப்புறமுள்ள மூன்றாம் பிரிவின் கீழ்த்தளத்தில் நிற்கும் இரண்டு பூதங்களுள் முதல் பூதத்தின் இடக்கை, இராவணனும் பூதமும் உள்ள பாறையைத் தள்ளும் மெய்ப்பாட்டில் பாறையின்மீது அழுந்தியுள்ளது. வலக்கையைக் காணக்கூடவில்லை. சடைமகுடம், குண்டலங்கள், கையணிகள், உதரபந்தம் அணிந்து கிழக்கு முகமாகத் திரும்பியுள்ள இதன் முகம் மட்டும் இலேசான வடபார்வையில் உள்ளது. அதன் பின்னிருக்கும் பூதம் வடக்குப் பார்வையில் நின்றபடி, தலையருகே உயர்ந்துள்ள வலக்கையில் உருள்பெருந்தடி ஒன்றை ஏந்தியுள்ளது. இடக்கையில் பட்டாக்கத்தி. தலையில் சென்னி சூழ்ந்த சடைமகுடம். குண்டலங்கள் சிதைந்துள்ளன. கனத்த முப்புரிநூல். சரப்பளி, கையணிகள் பெற்றுள்ள இதன் இடையில் இடைக்கட்டுடனான சிற்றாடை. முடிச்சுகள் இடப்புறம் காட்டப்பட்டுள்ளன. உருள்பெருந்தடிப் பூதத்திற்குப் பின்னாலுள்ள பூதம் சற்று உயரமான தளத்தில் இடுப்பளவாகத் தெரிகிறது. கிழக்கு நோக்கியுள்ள இதன் முகம் நன்கு இடப்புறம் திரும்பியுள்ளது. இரண்டு கைகளிலும் உருள்பெருந்தடி பிடித்துள்ள இதன் தலையலங்காரம் பின் கொண்டையுடன் உள்ளது. தள்ளும் பூதத்திற்கு வலப்புறம் உள்ள உயரமான கிழக்குத் தளத்தில் நான்முக அரைத்தூணை ஒட்டி உத்திரத்தில் தலை பொருந்துமாறு கருடாசனத்தில் மேற்கு நோக்கி அமர்ந்துள்ள பூதத்தின் முகம் வடபார்வையாக உள்ளது. கையணிகள் பெற்றுள்ள இரண்டு கைகளிலும் ஈட்டி போன்ற கருவியொன்றைப் பிடித்துள்ள இதன் கழுத்தில் சரப்பளி. ஈட்டி இராவணனுக்காய்க் குறிவைக்கப்பட்டுள்ளது. நான்காம் பிரிவில் நான்முகத் தூணை அடுத்துள்ள உயரமான தளத்தில் கால்களை நிறுத்தியபடி காட்சிதரும் பூதத்தின் வலக்கை வில் ஒன்றை வளைத்துப் பிடித்துள்ளது. இடக்கை இடப்புறம் மடிந்து வில் நாணை விட்ட மெய்ப்பாட்டில் உள்ளது. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சன்னவீரம், உதரபந்தம் பெற்றுள்ள இதன் கண்களில் அனல். இதையடுத்து மேற்காகத் திரும்பும் பாறைச்சுவரில் தென்முகமாக உள்ள இராவணன் மேகங்களிடையே தேரில் வருபவராய்க் காட்டப்பட்டுள்ளார். வலக்கையைப் பதாகமாக்கி உள்ள இவரது இடக்கை மார்பருகே உள்ளது. சடைமகுடமும் நீண்ட வெறுஞ்செவிகளும் சரப்பளியும் முப்புரிநூலும் கையணிகளும் பெற்றுள்ள இவர் நிற்கும் தேரின் பக்கப் பகுதிகளும் முகப்பும் அழகுறக் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பத்தொகுதியைத் திருப்பரங்குன்றம் என்னும் தம் நூலில் திரு. போசு நான்முகன் தொகுதியாக அடையாளம் கண்டுள்ளார் (பக். 78). திருமதி தேவகுஞ்சரி தம்முடைய மதுரை என்னும் நூலில் இத்தொகுதியை முருகன் சூரபத்மனை அழித்த காட்சியாக அடையாளப்படுத்தியுள்ளார் (பக். 108). இருவர் விளக்கங்களுமே இச்சிற்பங்களை முழுமையாகப் படம்பிடிக்காமை குறிப்பிடத்தக்கது. எல்லோராவிலுள்ள இருபத்தொன்பதாம் குடைவரையில் காட்டப்பட்டிருக்கும் இராவண அனுக்கிரகமூர்த்தி சிற்பத் தொகுதி பரங்குன்றம் தொகுதியுடன் பல நிலைகளில் ஒத்திருப்பது வியப்பூட்டும் உண்மையாகும். தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இராவண அனுக்கிரகமூர்த்தி இடம்பெற்றிருக்கும் ஒரே குடைவரையாகப் பரங்குன்றம் குடைவரையைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கியங்களில் ஏறத்தாழக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளத்தக்க கலித்தொகையின் குறிஞ்சிப் பகுதிப் பாடலொன்று இராவணன் பட்ட பாடுகளை ஐந்தடிகளில் அழகாகப் படம்பிடித்துள்ளமையை இங்கு நினைத்துப் பார்க்கலாம். பரங்குன்றம் குடைவரையைக் குடைவித்த சாமந்த பீமன் தாம் திருக்கோயிலைத் திருத்துவித்ததாகக் கூறுவதும் எண்ணத்தில் கொள்ளத்தக்கது. மதுரைக் குடைவரைகள் நூல் உருவாகிக் கொண்டுள்ளது. இப்புதிய இழைகள் வரலாற்றின் பல முகங்களை முறையாக அடையாளப்படுத்துமாற்றை நூலில் காண்போம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |