http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 37

இதழ் 37
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
இராவண அனுக்கிரகமூர்த்தி
திரும்பிப் பார்க்கிறோம் - 9
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
திருவாலித்திருமகன்
Agricultural Terms in the Indus Script - 1
அங்கும் இங்கும் - 1
Links of the Month
தொலைந்ததெல்லாம் கிடைக்கும்!
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
இதழ் எண். 37 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 9
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

1984 செப்டம்பர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு மாதமாகும் திருச்சிராப்பள்ளி ஜேசீஸ், அரிமாசங்கம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், எனப் பல அமைப்புகளில் தொடர்புடையவராய் இருந்த பொறியாளர் திரு. பட்டாபிராமன் திடீரென ஒரு நாள் என் இல்லம் வந்தார். தமிழ்நாடு ஜேசீஸின் சிறந்த இளைஞர் விருதுக்கு, என் பெயரைப் பரிந்துரைத்திருப்பதாகவும் அதற்கு அதுநாள்வரையில் நான் செய்திருந்த ஆய்வுப்பணிகள், பிற பங்களிப்புகள் இவை தேவையென்றும் கேட்டார். பட்டாபிராமன் இதழ் சேகரிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டவர். பழகுதற்கு இனியவர். அமுதசுரபி ஆசிரியர் திரு.விக்கிரமனுக்குத் திருவரங்கத்தில் பாராட்டு விழாவொன்று எடுத்தபோது எனக்கு அறிமுகமாகிப் பிறகு நட்பு பூண்டவர். அவர் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. என்னிடமிருந்த கட்டுரைகள், அழைப்பிதழ்கள், சான்றிதழ்கள் தந்தேன். அனைத்தையும் நகல் எடுத்துக்கொண்டு தருவதாகக் கூறிப் பெற்றுச் சென்றார். இரண்டே நாட்களில் அதுநாள் வரையிலான என் வாழ்க்கை வட்டத்தைத் தயாரித்து என்னிடம் வழங்கினார். வியப்படைந்தேன். முதன்முதலாக என் வாழ்க்கைக் குறிப்புகளை நான் பார்த்த நாள் அது!

தமிழ்நாடு முழுவதுமிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது போல் தேர்வுசெய்து அனுப்புவார்கள் என்றும் அவ்வாறு வரும் பெயர்களையும் அப்பெயர்களுக்கு உரியவர்களின் பணிகளையும் தலைமைக் குழுவினர் சீர்தூக்கிப் பார்த்து உரியவர்களை விருதுக்குத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் திரு. பட்டாபிராமன் கூறியிருந்தார். ஓரிரு நாட்கள் நினைவிலிருந்த இந்தத் தகவல் பிறகு மறந்துபோயிற்று. திடீரென அக்டோபர்த் திங்கள் 25ம் நாள் பட்டாபிராமன் தொலைப்பேசினார். தமிழ்நாடு ஜேசீஸ் விருது எனக்குக் கிடைத்திருப்பதாகவும் சேலத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஜேசீஸ் மாநாட்டில் நான் நேரில் வந்து இந்த விருதை வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொண்டார். 31. 10. 1984ல் நிகழ்ந்த அந்த மாநாட்டிற்கு என் வாழ்வரசி, மகள், மகன் அனைவரும் சென்றிருந்தோம். மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து என் பணிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்து, 'சகலகலா வல்லவர்' என்ற அழைப்புடன் அந்த ஆண்டின் மிகச் சிறந்த இளைஞர் விருதினை அளித்துப் பெருமைப்படுத்தினார்கள். பெரியதொரு மேடையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நான் பெற்ற முதல் விருது அதுதான். உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம் என்ற மகிழ்வு எங்கள் அனைவருக்குமே இருந்தது.

திரு. பட்டாபிராமனால் என் பங்களிப்புகளை நான் உணரமுடிந்தது. அதுநாள்வரை பிடித்ததையெல்லாம் செய்து வந்த நிலையிருந்ததே தவிர, என்ன செய்தோம், எவ்வளவு செய்தோம், எந்தெந்தத் துறைகளில் செய்திருக்கிறோம் என்ற தெளிவில்லாது இருந்தது. பட்டாபிராமன் என்னுடைய அனைத்துப் பணிகளையும் அட்டவணைப்படுத்தி ஆராய்ந்திருந்தார். அவருடைய இறுதி அறிக்கை என்னை நான் விளங்கிக்கொள்ள எனக்குப் பேருதவியாக இருந்தது. என்னிடமிருந்த ஆற்றலை அடையாளப்படுத்தியதோடு, அந்த ஆற்றல் வெளிப்பட்ட திசைகளையும் அவர் கண்டறிந்து கூறியிருந்தார். என்னையே நான் ஆற்றுப்படுத்திக்கொள்ள ஜேசீஸ் விருது வழிவகுத்தது. அதன் விளைவாய் பல வழிகளில் சிதறியிருந்த ஆற்றலை ஒருமுகப்படுத்த முடிந்தது. எனக்குள் ஒளிந்திருந்த நடிப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடிந்தது. அதற்கு மிகவும் உதவியாக இருந்தவை இந்திய மருத்துவ மன்றத்தின் திருச்சிராப்பள்ளிக் கிளையும், 'துடிப்பு' என்ற பெயரில் நாங்கள் அமைத்திருந்த இலக்கிய அமைப்பும் ஆகும்.

'துடிப்பு' இலக்கிய அமைப்புத் தமிழ் ஆர்வமும் ஒத்த நோக்கமும் கொண்ட இளம் நண்பர்களால் உருவாக்கப்பட்டது. சிராப்பள்ளித் தென்னூர் நெடுஞ்சாலையில் மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவ முனைவர் திரு. மு. சிவக்கண்ணு தலைவராக இருந்தார். வானொலி திரு.நெல்லை ந. முருகனும் தொலைத்தொடர்பு அலுவலர் திரு. வள்ளிநாயகமும் நானும் பிற பொறுப்புகளில் இருந்தோம். இந்த அமைப்பிற்கு உரையாற்ற அழைக்கப்பட்ட நிலையில்தான் எழுத்தாளர் திரு. பாலகுமாரன், பேராசிரியர் மா. இராமலிங்கம் இவர்கள் அறிமுகம் கிடைத்தது. கவிதை புனையும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள எனக்குப் பெரிதும் உதவிய இவ்வமைப்பு மூன்றாண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்ததென்றாலும், பலருடைய பணிமாறுதல்களால் மெல்லத் தொய்வுற்றுப் பின் செயலிழந்தது.

என் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு என்னை வளர்த்த இதழ்களுள் தலையாயவையாகச் செந்தமிழ்ச் செல்வியையும் தினமணி கதிரையும் கூறலாம். அப்போதெல்லாம் தினமணியில் வெள்ளிக்கிழமை நாளிதழில் சுடர்ப் பகுதியில் கோயில் கட்டுரைகள் தவறாமல் இடம்பெறும். திரு. நாராயணசாமி தொடர்ந்து எழுதுவார். அவற்றைப் படித்திருந்த நிலையில், உறையூர்த் தான்தோன்றீசுவரத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். தினமணி இதழ் அக்கட்டுரையை 21. 11. 1982ல் வெளியிட்டது. அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாவது கட்டுரையான 'கடம்பூர்க் கரக்கோயில்' தினமணியின் இணைப்பாக வந்த தினமணி கதிரின் 23. 10. 1983 இதழில் வெளியானது. கங்காவதரணம் 1. 1. 1984ம் இதழிலும், 'சதுர தாண்டவப் பெருமாள்' 6. 5. 1984ம் இதழிலும், 'சோழபுரத்து பைரவர் கோயில்' 13. 5. 1984ம் இதழிலும் வெளிவந்தன. புத்தர் சிற்பம் கண்டுபிடிப்புப் பற்றிய கட்டுரை தினமணி கதிர் 8. 7. 1984ம் இதழில் வந்தது.

15. 7. 1984ம் இதழில் வெளியான, 'தழுவக் குழைந்தவர்' கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஆளரவமற்று இருந்த திருச்சத்திமுற்றம் கோயிலுக்கு மக்களை இழுத்து வந்தது. இக்கட்டுரையின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து சங்கரன் கோயில் திரு. ந. சுப்பிரமணிய சிவாச்சாரியார் எழுதியிருந்த மடல், கதிர் 15. 7. 1984ம் இதழில் வெளியானது. 'திருச்சத்திமுற்றம் என்ற தலத்து வரலாறு வேறாக உள்ளது. அதனைக் காஞ்சிப் புராணத்தோடு ஒப்பத் தழுவக் குழைந்த நாதர் என்று தலைப்பிட்டுச் சொல்வது பொருத்தமுடையது அன்று. அப்பெருமை காஞ்சிபுரத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அப்பெரியாருக்கு நான் எழுதிய மறுமொழியையும் கதிர் வெளியிட்டது. இந்த விளக்கம் 21. 10. 1984ல் வெளியானது. 7. 10. 1984ம் இதழில், 'புதிய செப்பேடு' என்ற தலைப்பில் திருமலை நாயக்கர் செப்பேடு பற்றிய கட்டுரை வெளியானது. 2. 12. 1984ம் இதழில் போசளீசுவரம் கட்டுரை வெளியானது.

திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் சிராப்பள்ளியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயிலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் திரு. இரா. காளத்தீசுவரன். பாம்பின் தலைமீது திருவடி வைத்து சிவபெருமான் நிகழ்த்தும் ஆனந்தத் தாண்டவச் செப்புத்திருமேனி இக்கோயிலில் உள்ளது. வியப்பூட்டும் இந்தத் திருமேனியை முன்னிலைப்படுத்தி, 'அரவத்தின் மீதாடும் அண்ணல்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட என் கட்டுரையை 20. 1. 1985ல் கதிர் வெளியிட்டது. ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயிலின் பரிதாபகரமான நிலைமையை விளக்கி எழுதப்பட்ட, 'மிதக்கும் கோயில்' கட்டுரை 3. 2. 1985ல் வெளியானது. ஒவ்வொரு கதிர் இதழிலும் வெளியாகும் கட்டுரைகளைப் படித்துக் கருத்துரைக்கும், 'வாரம் ஒரு கடிதம்' பகுதியும் கதிரில் தொடர்ந்து வெளிவந்தது திரு. தேவகுமார் என்பார் இதை எழுதியிருந்தார். 'மிதக்கும் கோயில்' கட்டுரை வந்த இதழ் குறித்த அவரது ஒரு பக்கக் கடிதத்தில், இரண்டு பத்திகள் ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயிலுக்காக ஒதுக்கப் பட்டிருந்ததைக் குறிப்பிடவேண்டும்.

'மிதக்கும் கோயில் கட்டுரையில் டாக்டர் கலைக்கோவன் தமிழ்நாட்டில் ஆலம்பாக்கத்தில் ஒரு பழைமையான கோவில் செல்வம் இன்று பரிதாபமாக புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையை விளக்கியுள்ளார். அவர் கண்ணீர் விட்டு எழுதியுள்ளார். நாமும் கண்ணீர் மல்க கட்டுரையைப் படிக்கிறோம். இவை போன்ற அரும்பெரும் செல்வங்களை நாம் இனி உருவாக்குவதல் இயலாது. பண்டைய சரித்திரம் நமக்குப் பிதிரார்ஜிதமாகத் தந்துள்ள அரிய சொத்தினை பராமரிக்கவும் முடியாமல் நாம் இனியும் இருக்கலாகாது. ஆகாது, ஆகாது காண்!

இந்தக் கட்டுரையின் நகல்களை எடுத்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவர், ழ். சு. & ஊ. நு. துறையின் ஆணையாளர், துறையின் அரசுச் செயலர், அப்புறம் மத்திய அரசின் தொல்பொருள் துறைத் தலைவர், அந்தக் கிராமம் இருக்கும் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் எல்லோருக்கும் தலா ஒன்றாக நீங்கள் ஒரு கடிதத்துடன் அனுப்பி இது பற்றி தொடர்ந்து செயல்பட வேண்டுகிறேன். உரியவர்களிடமிருந்து வருகிற பதில்களையும் கதிரில் பிரசுரியுங்கள். இது மாதிரி ஒரு இயக்கம் தொடங்கட்டும் உடனே.'
கதிரில் வெளிவந்த இந்தக் கட்டுரையும் மடலும் இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையராகச் சிராப்பள்ளியில் இருந்த திரு. வேணுகோபாலைத் துன்பம் கொள்ளச் செய்தது. அப்பெரியாரும் துணை ஆணையராக இருந்த திரு. அழகப்பனும் என்னுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் அறிந்தனர். அவர்கள் கூறிய பிறகே தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் கீழ்ப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இக்கோயில் இருப்பது தெரியவந்தது. உடன் மஜீதைத் தொடர்புகொண்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கதிரில் கட்டுரையைப் படித்த ஆலம்பாக்கத்தைச் சுற்றியிருந்த ஊர்ப் பெருமக்களும் கவலையோடு ஒத்துழைக்க, பல துறையினரின் பங்களிப்பில் கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்த தண்ணீரை வெளியேற்ற முடிந்ததுடன், மழைநீர் தேங்காது வெளிச்செல்லவும் வழியமைக்கப்பட்டது. இந்தப் பணியின் போதுதான் துறைசார்ந்த கருத்து வேறுபாடுகள், மக்கள் - அரசு மோதல்கள் எனப் பலவும் அறியமுடிந்தது. திரு. வேணுகோபாலின் பெருந்தன்மையும் மஜீதின் நட்பும் ஊர்மக்களின் உதவியும் மட்டுமே அந்தக் கோயிலைக் காப்பாற்றின என்றால் அது மிகையாகாது. பின்னாளில், என் இனிய நண்பரும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் சிற்பியாக இருந்து ஓய்வுபெற்றவருமான திரு. இராமன் தனிக்கவனம் செலுத்தித் தம் தலைமையின் கீழ் அக்கோயிலைச் சீரமைத்தார். அவருடைய முயற்சியும் ஆற்றலுமே பல நெருக்கடிகளுக்கு இடையில் அக்கோயில் பொலிவு பெறத் துணையாயின.

சிற்பி திரு. இராமன் இனிமையான மனிதர். சென்னையிலிருந்து சிராப்பள்ளிக்கு அவர் மற்றலாகி வந்த பிறகு என்னுடன் நெருக்கமானார். நானும் அவரும் மணிக்கணக்கில் கட்டடக்கலை தொடர்பான செய்திகளை விவாதித்ததுண்டு. நான் கூ. ரா. சீனிவாசன் நூல்களைப் பயின்று கட்டடக்கலை கற்றிருந்தேன். அவர் கணபதி சிற்பியின் மாணவர். அதனால் மரபுவழிக் கல்வி பெற்றிருந்தார். இருவருக்கும் தொடக்கத்தில் பலத்த மோதல்கள் ஏற்படும். அவருக்கோ, எனக்கோ எள்ளளவும் தன்முனைப்பு இல்லாதிருந்தமையால், அந்த மோதல்கள் கருத்து மோதல்களாகவே முளைத்து மடிந்தன. மனவேறுபாடு என்பது கடந்த பதினைந்தாண்டுகளில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. கோயிற் கட்டடக்கலையில் எங்களுக்கு இருந்த பல அய்யப்பாடுகளை இந்த விவாதங்கள் நீக்கின.

தம்முடைய மாணவப் பருவக் கையேடுகளை எல்லாம் என்னிடம் தந்து படிக்கவைத்தவர் திரு. இராமன். எந்தத் தயக்கமும் இல்லாமல், 'தெரியாமையை' வெளிப்படுத்திக்கொள்ள நாங்கள் இருவருமே தயாராக இருந்ததால், ஒருவரிடமிருந்து மற்றொருவர் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. பல மரபுச் சொற்களை அவரிடமிருந்து நான் பெற்றேன். பல வழக்குச் சொற்களைக் கூ . ரா. சீனிவாசனிடம் அறிந்த வகையில் என்னால் அவருக்குத் தரமுடிந்தது. சில புதிய கலைச் சொற்களை இருவரும் இணைந்து விவாதித்து உருவாக்கியுள்ளோம். எங்கள் மையத்தில் பின்னாளில் கோயிற்கலை பட்டயப் படிப்புத் தொடங்கியபோது அவர்தான் கட்டடக்கலை வகுப்புகள் எடுத்தார். மிக எளிமையானவர்; துடிப்பானவர்; கற்கவும் கற்பிக்கவும் விரும்புபவர். வரலாறு இதழிலும், துறை சார்ந்த நூல்களிலும் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள அவரது திறமை இன்றளவும் குடத்திலிட்ட விளக்காகவே இருப்பது பெருங்குறையே.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அனைத்துத் துறைகள் சார்ந்த இளநிலை, முதுநிலை மாணவர்கள் தத்தம் இறுதியாண்டில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்து ஆய்வுநடத்தி ஆய்வேடு வழங்க வேண்டுமென விதியமைத்திருக்கிறது. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையில் முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்த வாணி எத்தகு ஆய்வு மேற்கொள்வதென்ற சிந்தனையில் இருந்தார். அவரது தாய்மாமன் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். அவரிடமும் அவர் வழி மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினருடனும் தலைப்புப் பற்றி விவாதித்து முடிவு காணா நிலையில், 1984ன் இறுதியில் சக்தி சங்கம் நிகழ்த்திய என் உரையில் பங்கேற்றார்.

உரை நிகழ்ந்து சில நாட்களில் வாணியும் அவர் அன்னையார் திருமதி செல்வி சந்திரசேகரனும் இல்லம் வந்திருந்தனர். வாணியை அறிமுகப்படுத்திய திருமதி செல்வி, வாணிக்குக் கோயில் சார்ந்து ஓர் ஆய்வுத் தலைப்புக் கூறுமாறு கேட்டார். வாணியைப் பார்த்து, 'உங்கள் விருப்பம் என்ன?' என்று கேட்டேன். அவர் ஏதேனும் ஒரு கோயிலைப் பற்றி ஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறினார். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் செய்யமுடியுமா என்று கேட்டார். அந்தக் கோயிலின் செறிவையும் ஆழத்தையும் சில வரிகளில் விளக்கி, அது பல முனைவர் ஆய்வுகளுக்கான களம் என்பதை விளக்கினேன். அரைமணி நேரப் பேச்சுக்குப் பிறகு மீண்டும் வருவதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

வாணியின் சந்திப்பிற்கு முன், 'ஆய்வேடுகள்' என்ற நிலையில் எதையும் நான் படித்ததில்லை. ஆய்வு அணுகுமுறைகளைப் பற்றியும் எனக்கு ஏதும் தெரியாது. அப்படி நூல்கள் இருப்பதையும் அறியேன். வரலாற்று வரைவியல் என்று ஒரு தனிப் பிரிவே இருப்பதையும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் அப்போது எனக்கு அமையவில்லை. இருந்தாலும், ஓர் ஆய்வு எப்படி அமையவேண்டும் என்பதில் எனக்கென்று சில கருத்துக்கள் இருந்தன. அவை அநுபவத்தாலும் படித்த நூல்களாலும் உருவானவை. பின்னாளில் வாணிக்காகவும் முனைவர் ஆய்விற்காகவும் வகைவகையான ஆய்வு நெறிமுறை நூல்களைப் படித்தபோது என் கருத்துக்கள் சரியான தளங்களிலேயே வடிவம் பெற்றிருந்தமையை நான் உணரமுடிந்தது. எந்த 'இசமும்' சாராமல் உண்மை நெறி நின்று ஆய்வு செய்வதில் பெருஞ் சுகம் உள்ளது. எல்லாவற்றையும் ஏதாவது ஓர் 'இசத்தின்' பின்னணியில் பார்ப்பது எனக்கு இன்றளவும் உடன்பாடு இல்லை.

ஒருமுறை புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வுத்துறையில் நிகழ்ந்த ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் கருத்தரங்கொன்றில் நான் படித்தளித்த ஆய்வுக்கட்டுரை குறித்துக் கருத்துரைத்த பேராசிரியர் ஒருவர், அக்கட்டுரை எந்த நெறிமுறையும் சாராமல் இருப்பதாகக் குற்றம் கூறியதுடன், ஏதேனும் ஓர் ஆய்வுநெறியைத் தேர்ந்துகொள்ளுமாறு அறிவுரையும் கூறினார். அதே கூட்டத்தில் என்னுடன் கட்டுரை படித்த முனைவர் இ. சுந்தரமூர்த்தி (முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்) என் கட்டுரை உரிய நெறிமுறைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாகக் கூறி என்னைத் தேற்றினார். ஆய்வாளனாக உருமாறிய நாளிலிருந்து இன்றுவரை முடிவுகளை வைத்துக்கொண்டு சான்றுகளைத் தேடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்துவருகிறேன். பல நூலாசிரியர்கள் ஒரு கருத்துருவை உருவாக்கிக் கொண்டு, அதற்கான சான்றுகளைத் தேடுவதைப் படித்த அநுபவத்தில் கண்டதுண்டு. இதை நான் எப்போதுமே செய்ததில்லை. இனிச் செய்யும் எண்ணமும் இல்லை.

ஒரு வாரம் கழித்து வாணி வந்தார். மீண்டும் நெடிய கலந்துரை. இறுதியாக முள்ளிக்கரும்பூர் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆய்வு நிகழ்த்துவதென ஒப்புதலானது. இது கடினமான பணியாக இருக்குமென்று அவரிடம் கூறினேன். அவரோ சவால்கள் நிறைந்த ஓர் ஆய்வையே விரும்பினார். அவரும் நானும் இணைந்து ஆய்வு செய்யும் தலைப்பாக முள்ளிக்கரும்பூர் அமைந்தது. அவராகவே முள்ளிக்கரும்பூர் சென்று சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களையெல்லாம் பார்த்துவந்தார். பிறகு நானும் அவருமாக முள்ளிக்கரும்பூர் சென்றோம். முள்ளிக்கரும்பூர், கொத்தட்டை, மஞ்சாங்குளம் பகுதிகளைப் பார்வையிட்டபோது வரலாறு பற்றிய அவரது கண்ணோட்டத்தைக் கலந்துரை வழி அறிய முடிந்தது. நான் அதுநாள்வரை சந்தித்திருந்த வரலாறு தொடர்பான இளைஞர்களிடமிருந்தும் பேராசிரியர்களிடமிருந்தும் அவர் மாறுபட்டுத் தோன்றினார். எனக்கு அவருடன் உரையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 'அசோகர்' பற்றிய அவருடைய கல்லூரிக் கட்டுரை அவரைப் பற்றிய என் மதிப்பீட்டை உயர்த்தியது.

இரண்டாவது முறை முள்ளிக்கரும்பூர் சென்றிருந்தபோது கொத்தட்டையருகே அழிந்துபோன சிவன் கோயிலொன்றின் சுவடுகளைக் கண்டுபிடித்தோம். அந்த இடத்தை விரிவான அளவில் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுத்தோம். அடுத்த சில பயணங்களின்போது பேரளவிலான சிவலிங்கம் ஒன்று புதர்களின் மறைவில் உடைந்த நிலையில் மறைந்திருந்ததையும் அவ்விடத்திலும் கோயிலொன்று இருந்து அழிந்தமைக்கான தடயங்கள் காணப்பட்டதையும் கண்டறிந்தோம். முள்ளிக்கரும்பூருடன் நிறுத்திக் கொள்ளாது பக்கத்திலிருந்த குழுமணி, அந்தநல்லூர், அல்லூர், ஜீயபுரம் எனப் பல ஊர்களுக்கும் சென்றோம். அவ்வூர்களிலிருந்த சோழர் கோயில்களையும் அங்கிருந்த கல்வெட்டுகளையும் விரிவாக ஆராய்ந்தோம்.

பெரும்பாலான எங்கள் ஆய்வுப் பயணங்களில் திரு. ஆறுமுகமும் திரு. மஜீதும் இடம்பெற்றிருந்தனர். ஒவ்வொரு பயணத்தின்போதும் கற்றவற்றை எல்லாம் அல்லூர் பசுபதீசுவரர் கோயில் முன்பிருந்த மாந்தோப்பில் அமர்ந்து விவாதிப்போம். வாணி வீட்டிலிருந்து அருமையான உணவு வரும். திருமதி செல்வி சந்திரசேகரனின் கைப்பாகம் இணையற்றது. அதனால் பெரும்பாலான மதியங்கள் அவர் வீட்டு உணவுதான். வாணி நிறைய கேள்விகள் கேட்பார். என் ஆய்வு அநுபவமே மூன்றாண்டுகள்தான் என்ற நிலையில் எனக்குத் தெரிந்த அளவில் விடையிறுப்பேன். சில நேரங்களில் அவருக்கு நிறைவேற்படும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அந்த நிறைவை அவர் முகத்தில் காணமுடியாது.

விழைந்து கேட்கும் ஒருவருக்குச் சொல்ல முடியாமல் இருக்கிறோமே என்று வருந்துவேன். தேடிப் படித்துச் சிந்தித்து மறுமொழி உரைக்கும்போது அதில் அவர் கொள்ளும் மகிழ்வு கண்களில் பளிச்சிடும். அந்த மகிழ்விற்காகப் பல இரவுகள் கண் விழித்திருக்கிறேன். ஓர் ஆசிரியனை உருவாக்குவதே மாணவர்கள்தான். அவர்களுடைய அணுகுமுறைதான் ஆசிரியனைச் செதுக்கிச் சிற்பமாக்குகிறது. என்னைச் செதுக்கியவர்கள் என் அன்பான மாணவிகளே என்பதில் எனக்கு என்றுமே பெருமையுண்டு. நான் பேறு செய்தவன்.

ஏறத்தாழ ஒரு மாதம் முள்ளிக்கரும்பூரின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தோம். கிடைத்த தரவுகளை எல்லாம் ஒருமுகப்படுத்திக் கலந்துரை நிகழ்த்தினோம். விளைவுகளை முன்னிலைப்படுத்தி ஆய்வேட்டை எழுதுமாறு வாணிக்கு அறிவுறுத்தினேன். மெல்ல, மெல்ல முள்ளிக்கரும்பூர் ஆய்வேடு வளரத் தொடங்கியது. ஜனவரி 1985ல் தொடங்கிய அந்தப் பணி மார்ச்சில் முற்றுப்பெற்றது. அந்தத் தொண்ணூறு நாட்களும் மறக்க முடியாதவை.

கல்லூரிக் காலத்தில் எம். பி. பி. எஸ். படித்தபோதும், கண்மருத்துவப் படிப்பின்போதும் எத்தனையோ பிரிவு மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். கற்றுத்தருவதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்பவன்தான் என்றாலும், அப்போதெல்லாம் கிடைக்காத ஒரு பெரும் நிறைவு முள்ளிக்கரும்பூர் ஆய்வில் ஏற்பட்டது. மறக்கப்பட்ட ஒரு பின்னணியை, சிதறிப்போன ஒரு வரலாற்றை அங்குமிங்குமாய் அகழ்ந்தும் அலைந்து திரிந்து தேடியும் தோப்புகளிலும் குட்டைகளிலுமாய்க் கண்டெடுத்தும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்த அந்தத் தொண்ணூறு நாட்களும் வரலாற்றைப் பற்றிய என் பார்வைக்குப் புதிய அளவீடுகளைத் தந்தன. முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியலாக மலர்ந்தமைக்கு முழுமுதற் காரணம் வாணிதான்.

ஆய்வேட்டை எழுதிமுடித்த நாளை மிகவும் கொண்டாடினோம். 'கோச்செங்கணான் - மாடக்கோயில்கள்' தொடர்பான ஆய்வும் களஆய்வுதான் என்றாலும், அதில் கோயில்கள் கண்ணெதிர்ச் சான்றுகளாக இருந்தன. இலக்கியங்கள் ஏற்கனவே பல அறிஞர்களின் ஆய்வுகளுக்கு உட்பட்டிருந்தன. நுணுகித் தேடி உண்மைகளை ஒருங்கிணைத்த அந்தப் பணியிலும் புதியனவற்றை அறியமுடிந்தது உண்மைதான் என்றாலும், முள்ளிக்கரும்பூர் ஆய்வு முற்றிலும் களஞ்சார்ந்த ஆய்வாக அமைந்து, 'மீட்டுருவாக்கம்' என்ற தத்துவத்தின் அடிப்படைகளையும் அதன் பன்முகங்களையும் உணர்த்தி, வரலாற்றாய்வின் செழுமையை எனக்குள் ஆழமாக விதைத்தது என்றால் அது மிகையாகாது. மூன்றாண்டுகளாக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த என்னையே முள்ளிக்கரும்பூர் மயக்கியதென்றால் புதியவரான வாணி எத்தகு கிளர்ச்சியை, அநுபவங்களைப் பெற்றிருப்பார் என்பதை நீ உணர்ந்து மகிழலாம்.

'முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியல்' என்ற தலைப்பில் எங்கள் கண்டுபிடிப்பு களையும் கலந்துரை முடிவுகளையும் செந்தமிழ்ச் செல்வியில் தொடராக எழுதினேன். செப்டம்பர் 1985ல் இருந்து பிப்ருவரி 1986வரை செந்தமிழ்ச் செல்வி இக்கட்டுரையை வெளியிட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை முழுக்க முழுக்க என்னால் எழுதப்பட்டதுதான் என்றாலும் கட்டுரையின் இணை ஆசிரியராய் வாணியின் பெயரையும் இணைத்திருந்தேன். அவருடைய உற்சாகமும் உழைப்பும் தூண்டலும் கூட்டுறவும்தான் இந்த ஆய்வை வளர்த்தன என்பதால், அந்த வெளிப்பாடுகளை மதித்துப் போற்றுவது என் கடமை என்று கருதி அவ்வாறு செய்தேன். ஆனால், வாணியும் சரி, பின்னால் வந்த நளினி, அகிலா இவர்களும் சரி, யாருமே தங்கள் பெயரை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் சற்றும் ஆர்வம் இல்லாதவர்கள். வரலாற்றுக்குத் தம்மால் இயன்றதைச் செய்கிறோம் என்ற மகிழ்வு தவிர வேறொன்றும் கருதாத அந்த அற்புத உள்ளங்கள் என்னைச் சூழ்ந்தமை என் பெரும் பேறு என்றுதானே கூறுமுடியும்?

இறைவன் எல்லாம் அறிந்தவன் வாருணி. யாரிடம் யாரை அனுப்புவது என்று அவனுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. எங்கு எது சேர்ந்தால் எது விளையும் என்ற அந்தக் கணக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக வரலாற்றை வளர்த்து வருகிறது. ஆய்வேடு முடிந்ததென்று வாணி விடைபெற்றுக் கொள்ளவில்லை. என்னுடன் இருந்து தொடர்ந்து உழைத்தார். நான் ஆய்வுக்காகச் சென்ற இடங்களுக்கெல்லாம் எங்களுடன் அவரும் வந்தார். ஒன்றிணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல கோயில்களை நாங்கள் ஆராயமுடிந்தது. வாணியுடன் நான் பார்த்து ஆராய்ந்த கோயில்களுள் முதன்மையானது புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்.

தஞ்சாவூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், 'பசுபதி கோயில்' என்னும் ஊரில் அமைந்துள்ள அந்தச் சின்னஞ்சிறு கோயில் சோழச் சிற்பிகளின் சாதனைக் களம். அந்தக் கோயிலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தஞ்சாவூரில் அப்போது தொல்லியல்துறைப் பதிவு அலுவலராக இருந்த அமரர் திரு. கு. தாமோதரன் ஆவார். நான், அவர், பேராசிரியர் அரசு, மஜீது நால்வருமாக அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். முதல் பார்வையிலேயே அந்தக் கோயில் என்னைக் கட்டிப்போட்டது. அகிலனின் வேங்கையின் மைந்தனில், 'ரோகிணி' என்றொரு ஈழத்துப் பெண் வருவார். கொடும்பாளுர் இளவரசர் இளங்கோவின் மீது கொண்ட காதலால், கொடும்பாளூர்க் கோட்டைக்குப் பகைவர்கள் தீ வைத்த நிலையில் அதைக் காப்பாற்ற முடியாதவராய், ரோகிணி கோட்டையின் ஒவ்வோர் இடமாக ஓடி, 'இது என் கோட்டை', 'இது என் இடம்' என்று கண்ணீரோடு கூவி நெகிழ்வார். அந்த உணர்ச்சி வெள்ளக் கூவலை அகிலனின் வரிகளில் படிக்கவேண்டும்.

அந்த ரோகிணியின் நிலையில்தான் நான் அன்று இருந்தேன். கண்டபாதச் சிற்பங்களும் தாங்கு சிற்பங்களும் கோட்டச் சிற்பங்களும் மகரதோரணச் சிற்பங்களும் கொற்றவையின் ஒல்காப் பேரெழிலும் அம்மம்மா! அந்தச் சிற்பங்களைச் செதுக்கிய விரல்களை எல்லாம், அந்தச் சிந்தனைகளைக் கரு உயிர்த்த மனிதர்களை எல்லாம் கட்டித் தழுவிக் கொண்டாடி முத்தமிட ஆவேசம் பிறந்தது. அழகான சிற்பங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. ஆனால், கோயிலே அழகான சிற்பங்களால் உருவானதாய், உள்ளத்தில் கள்வெறியூட்டும் கலையழகு பொலிந்ததாய் தமிழ்நாட்டில் ஒரு கோயில் உள்ளதெனில், அது புள்ளமங்கை ஆலந்துறையார் தான் வாருணி. எனக்குப் பிடித்த மாணவர்களை எல்லாம் அந்தக் கோயிலுக்கு அழைத்துப் போயிருக்கிறேன். நூறு முறை போயிருப்பேன். ஆனால், ஒவ்வொரு முறையும் புள்ளமங்கலத்தில் புதிய அழகுகள் புலப்படுவதைப் பூரிப்போடு பார்த்து எனக்குள் நானே அதிர்வும் களிப்புமாய் உறைந்து போயிருக்கிறேன். அந்தப் புள்ளமங்கையை என்னுள் நிறைத்துக்கொள்ள என் மூன்று மாணவிகளே துணைநின்றனர்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.