http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 58

இதழ் 58
[ ஏப்ரல் 26 - மே 20, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

கொள்ளை அழகு - கொள்ளை போகும் அழகு
மீனாட்சி திருமணத்தில் மங்கம்மாள்
திரும்பிப்பார்க்கிறோம் - 30
பழந்தமிழ்க் கல்வெட்டுகள்
கங்கையின் மறுவீட்டில் - 4
Thirumeyyam - 5
பிரிய மனமில்லாத புறாக்களும் பகலிரவு தெரியாத பாவையும்!
சோழர்களின் சாஸன சுலோகங்கள்
பிறமொழிக் கல்வெட்டுக்கள் – 1
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 3
இதழ் எண். 58 > இலக்கியச் சுவை
சோழர்களின் சாஸன சுலோகங்கள்
க.சங்கரநாராயணன்
காணுமிடமெங்கும் கடும்புலியின் கொடி பொறித்து கயலும் கணைவில்லும் கவினிழந்து தடுமாறக் கார்குழலாள் நிலமடந்தைக்குக் கணவனெனக் கோலோச்சியச் சோழப்பரம்பரை வரலாற்றுப்பதிவுகளிலும் தன் ஈடிணையிலாப் பெருமையை நிலைநாட்டியது. இராஜகேஸரி, பரகேஸரி என்று மாறி மாறி பெயர்சூடிய சோழ குல வேந்தர்கள் பல்வேறு தானங்களுக்காக ஆவணங்களை வெளியிட்டனர். இப்படி மாறி மாறி பெயர் சூடியதற்கு காரணம் தெளிவாகத் தெரியவில்லை. லெய்டன் செப்பேட்டின் எட்டாம் செய்யுளும், திருவாலங்காட்டுச் செப்பேட்டின் 32 ஆம் செய்யுளும் இராஜகேஸரி, பரகேஸரி என்று இரு புராணகால அரசர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்குப் பிறகே ஆணைப்பெயர் மாறி வந்ததாகக் கூறுகின்றன. ஆவணங்களை வெளியிட்ட சோழர்கள் தங்களைப் பற்றியச் செய்தியை இரத்தினச்சுருக்கமாக இலச்சினையிலும் கல்வெட்டுக்களின் முன்னும் பதிப்பித்து முன்னுதாரணமாய்த் திகழ்ந்தனர். இத்தகைய பழக்கம் பல்லவர் செப்பேடுகளிலும் காணப்பட்டாலும் சோழர்களின் ஆவணங்களிலேயே சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. அப்படி இரத்தினச்சுருக்கமாகக் குறிப்பிடும் வடமொழி சுலோகங்கள் அனுஷ்டுப் என்னும் பாவகையிலேயே அமைந்திருக்கும். அடிக்கு எட்டெழுத்துகளாய் 32 எழுத்துக்களைப் பெற்று எல்லா அடிகளிலும் ஐந்தாம் எழுத்து குறிலாகவும் ஆறாம் எழுத்து நெடிலாகவும் ஏழாம் எழுத்து ஒன்று, மூன்று அடிகளில் நெடிலாகவும் இரண்டு, நான்கு அடிகளில் குறிலாகவும் அமைந்தால் அந்தப் பாவகையை அனுஷ்டுப் என்பர். (இதே பாவகை மூன்று அடிகளைப் பெற்றிருந்தால் அதனை காயத்ரீ என்பர்.) இவ்வகைப் பாவகையில் தங்களைப் பற்றிய குறிப்பை இரத்தினச்சுருக்கமாகச் சோழர்கள் வெளியிட்டனர். அப்படி வெளியிட்ட சுலோகங்களைக் இங்கு காண்போம்.

1. கரிகாலன்

இன்றுவரை இலக்கியச்சான்றுகளை மட்டுமே நம்பவேண்டிய கரிகாலனின் சாஸனசுலோகமாக ஒரு சுலோகம் செவிவழியாக வழங்கப்படுகிறது. இது எந்தச் செப்பேட்டிலும் கல்வெட்டிலும் காணப்படுவதல்ல. அந்தச் சுலோகம்
पात्राकलितवेदानां शास्त्रमार्गानुसारिणाम्।
तदेवमरिकालस्य करिकालस्य शासनम्।।
பாத்ராகலித-வேதானாம் ஶாஸ்த்ர-மார்க-அனுஸாரிணாம்
தத் ஏவம் அரிகாலஸ்ய கரிகாலஸ்ய ஶாஸனம்.
இந்தச் சுலோகம் சிம்மவர்மனின் பள்ளன்கோவில் செப்பேட்டின் இலச்சினைச் சுலோகத்தை ஒத்துள்ளது(पात्रास्खलितवृत्तीनां ..वेदमार्गानुसारिणाम्). முக்கால் வரி மட்டும் கிடைத்துள்ள அந்தச் சுலோகத்தின் பொருள் பல்லவர் செப்பேடு முப்பதில் தவறாகத் தரப்பட்டுள்ளது. இனி இந்தச் சுலோகத்திற்கு வருவோம். பொதுவாக இதற்குப் பொருள் சொல்ல வேண்டுமானால் தகுந்த பாத்திரத்தில் வேதத்தைச் சேர்த்தவர்களுக்கும் சாஸ்திரவழியைப் பின்பற்றுபவர்களுக்கும் எதிரிகளுக்குக் கூற்றுவனான கரிகாலனின் இத்தகைய சாஸனம் என்று சொல்லலாம். ஆனால் அது தவறான பொருள். சாஸனம் என்னும் சொல் நேரடியாக தண்டித்து நெறிப்படுத்தல் என்றே பொருள் தரும். பாகன் என்னும் அசுரனைத் தண்டித்ததால் இந்திரனுக்குப் பாகசாஸனன் என்ற பெயருண்டு. ஆகவே வேதத்தைத் தகுந்தமுறையில் கொடுத்தவருக்கும் சாஸ்திரப்படி நடப்பவருக்கும் தண்டனையானது என்று பொருள் கொள்ள இயலாது. ஆகவே இலக்கணப் புணர்ச்சியின்படி பிரிமொழி சிலேடை போல பொருள் கொள்ளவேண்டும். பாத்ராகலிதவேதானாம் என்பதை பாத்ரு ஆகலிதவேதானாம் என்றும் சாஸ்த்ரமார்கானுஸாரிணாம் என்பதை சாஸ்த்ரு அமார்கானுஸாரிணாம் என்றும் பிரிக்கவேண்டும். அப்போது வேதத்தைக் கொண்டவரைக் காப்பதும் தவறான வழிகளில் செல்பவர்களை நெறிப்படுத்துவதுமான எதிரிகளுக்குக் கூற்றான கரிகாலனின் சாஸனம் என்னும் பொருள் கிடைக்கும்.

இந்தச் சுலோகத்தை முனைவர்.நாகசாமி அவர்கள் ஏசாலம் செப்பேட்டின் முன்னுரையில் காமகோடி பீடாதிபதிகள் கூறியதாகப் பதிப்பித்துள்ளார்.

2. முதலாம் பராந்தகன்

மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரிவர்மனான பராந்தகனின் சாஸன சுலோகம் வேளஞ்சேரிச் செப்பேட்டில் இடம்பெற்றுள்ளது. அந்தச் சுலோகமாவது –
श्रीमच्चन्द्रद्युतेरेव चोळवंशशिखामणेः।
शासनं चोलभूभर्तुः परकेसरिवर्मणः।।
ஸ்ரீமத் சந்த்ர-த்யுதே: ஏவ சோள-வம்ஶ-ஶிகாமணே:
ஶாஸனம் சோள-பூபர்த்து: பர-கேஸரி-வர்மண:
சந்திரனைப்போல ஒளியுடையவனும் சோழகுலத்திற்கே தலையணி போன்றவனும் சோழபூமியின் தலைவனுமான பரகேஸரிவர்மனின் திருவுடைய சாஸனம் என்பது இதன் பொருள். பராந்தகன்(எதிரிகளுக்குக் கூற்றுவன்) என்னும் பெயர் மறத்தின் வன்மையைக் குறித்தாலும் சந்த்ரத்யுதி என்னும் சொல் அவனுடைய குளிர்ந்த தன்மையைக் குறிக்கிறது.

3. இரண்டாம் பராந்தகன் (சுந்தரசோழன்)

பாண்டியனைச் சுரமிறக்கின பெருமாளான சுந்தரசோழனால் வெளியிடப்பட்ட அன்பில் செப்பேடு அவனுடைய சாஸனசுலோகத்தைக் கொண்டுள்ளது. அந்தச் சுலோகமாவது
शश्वद्विश्वम्भरानेत्रं लक्ष्मीजयसरोरुहम्।
शासनं शाश्वतं श्रीमद्राजकेसरिवर्मणः।।
ஶஶ்வத் விஶ்வம்பரா-நேத்ரம் லக்ஷ்மீ-ஜய-ஸரோருஹம்
ஶாஸனம் ஶாஶ்வதம் ஸ்ரீமத்-ராஜகேஸரிவர்மண:
நிலமடந்தையின் கண்போன்றதும் திருமகளின் வெற்றித்தாமரை போன்றதுமான இந்த நிலையான சாஸனம் ஸ்ரீமத்-ராஜகேஸரி வர்மனுடையதாகும் என்பது இதன் பொருள்.

4. உத்தமசோழன்

மதுராந்தகன் என்று வழங்கப்பட்ட உத்தமசோழனால் வழங்கப்பட்ட சென்னை அருங்காட்சியகச் செப்பேடு அவனுடைய சாஸன சுலோகத்தைக் கொண்டுள்ளது. அந்தச் சுலோகமாவது
न्यायानां शासनं कुर्वत्शा(*च्छा)सनं चक्रभूभृता(*तः)
शासनं भूपतेरेतत् राजकेसरिवर्मणः।।
ந்யாயானாம் ஶாஸனம் குர்வத் – ஶாஸனம் சக்ரபூப்ருத:
ஶாஸனம் பூபதே: ஏதத் பரகேஸரிவர்மண:
(* - இக்குறியிட்டவை என்னுடைய திருத்தங்கள்)
நியாயங்களை எடுத்துச் சொல்லுவதான இந்தச் சாஸனம் பூமி வளையத்தைத் தாங்கும் பரகேஸரிவர்மனான மன்னனின் சாஸனமாகும் என்பது இதன் பொருள்.

5. முதலாம் இராஜராஜன்

ஈடிணையிலாப் பெருவேந்தனான இராஜராஜனின் சாஸனசுலோகம் இதுவரை ஒரு செப்பேட்டிலும் கிடைக்காதது துரதிருஷ்டமே. இராஜராஜனால் ஆணையிடப்பட்ட லெய்டன் செப்பேடு அவன் மறைவுக்குப் பிறகு இராஜேந்திரனால் வெளியிடப்பட்டதால் இராஜேந்திரனின் சாஸன சுலோகத்தையே தாங்கியுள்ளது. ஆயினும் பெருவுடையார் கோயில் கல்வெட்டு தரும் இராஜராஜசோழனின் சாஸனசுலோகமாவது
एतद्विश्वनृपश्रेणिमौळिमालोपलाळितम्।
शासनं राजराजस्य राजकेसरिवर्मणः।।
ஏதத் விஶ்வ-ந்ருப-ஶ்ரேணி-மௌளி-மாலோபலாளிதம்
ஶாஸனம் ராஜராஜஸ்ய ராஜகேஸரிவர்மண:
உலக அரசர்களுடைய வரிசையின் மகுடங்களின் மாலையால் சீராட்டப்படுவதான இது இராஜகேஸரிவர்மனான இராஜராஜனின் சாஸனம். மெய்கீர்த்தியை உருவாக்கியது போல சாஸனசுலோகத்திலும் தன் பெயரைப் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (கரிகாலனுடைய சுலோகம் செவிவழியாகப் பெறப்பட்டதே.)

6. முதலாம் இராஜேந்திரன்

மதுராந்தகன் என்று புகழ்பெற்ற இராஜேந்திரனின் சாஸனசுலோகம் லெய்டன் செப்பேடு, திருவாலங்காட்டுச் செப்பேடு, கரந்தைச் செப்பேடு மற்றும் ஏசாலம் செப்பேடுகளில் காணப்படுகிறது. அந்தச் சுலோகமாவது
राजद्राजन्यमकुटश्रेणिरत्नेषु शासनम्।
एतद्राजेन्द्रचोलस्य परकेसरिवर्मणः।।
ராஜத்-ராஜன்ய-மகுட-ச்ரேணி-ரத்னேஷு ஶாஸனம்
ஏதத் ராஜேந்த்ர-சோளஸ்ய பரகேஸரிவர்மண:
அரசர்களின் மகுடங்களின் வரிசையிலுள்ள ஒளிரும் இரத்தினங்களில் திகழ்வதான இது பரகேஸரிவர்மனான இராஜேந்திரசோழனின் சாஸனமாகும் என்பது இதன் பொருள். திருவாலங்காட்டுச் செப்பேட்டின் சாஸன சுலோகம் ஸ்வஸ்திஸ்ரீ என்று துவங்குகிறது.

7. வீரராஜேந்திரன்

முதலாம் இராஜேந்திரனின் மகன்களின் ஒருவனும் இரண்டாம் இராஜேந்திரனுக்குப் பிறகு அரியணையேறியவனுமான வீரராஜேந்திரனின் சாரளச் செப்பேட்டில் இவனுடைய சாஸன சுலோகம் காணப்படுகிறது, அந்தச் சுலோகமாவது
विश्वैः विश्वम्भराधीशैर्(न्नन्दितैर्) वन्दित(मिद)म्।
शासनं वीरराजेन्द्रराजकेसरिवर्मणः
விஶ்வை: விஶ்வம்பராதீஶை: நந்திதை: வந்திதம் இதம்
ஶாஸனம் வீர-ராஜேந்த்ர-ராஜகேஸரி-வர்மண:
மகிழ்ச்சியுற்ற எல்லா அரசர்களாலும் வணங்கப்பட்டதான இது வீரராஜேந்திர ராஜகேஸரிவர்மனின் சாஸனம் என்பது இதன் பொருள்.

8. குலோத்துங்கசோழன்

சாளுக்கியசோழர்குலத்தின் முதல் மன்னான குலோத்துங்கனின் சிறிய லெய்டன் செப்பேடு அவனுடைய சாஸனசுலோகத்தைக் கொண்டுள்ளது. அந்த சுலோகம்
पुण्यं क्षोणीश्वरसभाचूडरत्नाय शासनम्।
श्रीकुलोत्तुङ्गचोळस्य राजकेसरिवर्मणः।।
புண்யம் க்ஷோணீஶ்வர-ஸபா-சூட-ரத்னாய ஶாஸனம்
ஸ்ரீகுலோத்துங்க-சோளஸ்ய ராஜகேஸரி-வர்மண:
அரசர்களின் அவையின் தலையணி இரத்தினம் போன்றதும் புண்யமுமான இந்த சாஸனம் ராஜகேஸரிவர்மனான ஸ்ரீ குலோத்துங்கசோழனுடையதாகும்.

இவ்வாறு சோழமன்னர்களின் சாஸனசுலோகங்கள் கிடைத்துள்ளன.

இந்த சுலோகங்கள் துவங்கிய காலத்தில் வடமொழி காவியங்கள் பெருமளவு எழுதப்பட்டதால் அவற்றின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. காதம்பரி போன்ற உரைநடை காவியங்களில் காணப்படும் வரிகள் உலக அரசர்களின் மகுடங்களால் உராயப்பட்ட பாதபீடமுடையவன், அவர்களின் தலைகளால் சீராட்டப்பெற்ற ஆணைச்சக்கரத்தை உடையவன்(अशेषनरपतिशिरस्समभ्यर्चितशासनः) போன்ற கற்பனைகளின் தழுவல்கள் இப்படி சாஸன சுலோகங்களாக மாறியுள்ளன என்பது வடமொழிக்காவியங்களைக் காணும்போது தெளிவாகிறது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.