http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 58

இதழ் 58
[ ஏப்ரல் 26 - மே 20, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

கொள்ளை அழகு - கொள்ளை போகும் அழகு
மீனாட்சி திருமணத்தில் மங்கம்மாள்
திரும்பிப்பார்க்கிறோம் - 30
பழந்தமிழ்க் கல்வெட்டுகள்
கங்கையின் மறுவீட்டில் - 4
Thirumeyyam - 5
பிரிய மனமில்லாத புறாக்களும் பகலிரவு தெரியாத பாவையும்!
சோழர்களின் சாஸன சுலோகங்கள்
பிறமொழிக் கல்வெட்டுக்கள் – 1
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 3
இதழ் எண். 58 > பயணப்பட்டோம்
கங்கையின் மறுவீட்டில் - 4
ரிஷியா


கங்கைகொண்ட சோழீசர், இல்லையில்லை, இராஜேந்திர சோழீசரிடம் மானசீகமாய் உரையாடினேன். மகாமண்டபத்தின் உட்புறத்தை நோக்கியபோது கருங்கற்களைச் சுவரில், தளத்தில் நன்றாகப் பதிக்கவில்லை. எங்கும் நிற்கவும் முடியவில்லை. செப்புச் சிலைகள் பல மகாமண்டபத்தில் இடம்பெற்றிருந்தன. சூரிய பீடத்திற்கு எதிரேயும் ஒரு க்யூ வரிசை. திருக்கோயிலை விட்டு வெளியேறி வடக்குப் புறத்தில் இளைப்பாற அமர்ந்தேன். அத்தனை கூட்டத்திலும் சுகமாய் வீசியது கங்கைகொண்ட சோழத் தென்றல்.

அம்மா என்னும் அன்புத்தோழி திரு. விக்கிரமனின் 'சித்திரவல்லி' நாவலின் கதைக்களம் இக்கோயிலிலிருந்து ஆரம்பிக்கும் என்று ஏதேதோ பேசிக்கொண்டே போக, எல்லாவற்றுக்கும் நான் 'உம்' சொல்லிக்கொண்டே விமான எழிலை இரசித்தேன். திரு. நாகசாமி அவர்கள் கூறுவதுபோல் பெண்மையின் சாயல் எல்லாம் எதுவும் விமான எழிலில் காணப்படவில்லை.

மாலை 5 மணியைக் கடந்தது காலமென்னும் மீளாநதி. கடைசி முறையாக மேற்குப் புறத்தில் சற்று அமர்ந்தேன். மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மகாதீபாராதனைக்கு வருகை தர, அப்பப்பா! காவலும், இரைச்சலும் களைகட்டியது. கூட்ட நெரிசல் அதிகரிக்க, என் அம்மா முகம் சுளித்து, 'வா, கிளம்பலாம்' என்றார். 'பொறும்மா! இராஜேந்திர சோழன் வருகிறார். வேளக்காரப் படையினரின் அதட்டல்கள், உருட்டல்கள் எங்கும் கேட்கின்றன. கங்கையும் கடாரமும் கொண்ட தெற்காசியாவின் மகா சக்ரவர்த்திகள் வர, அவரைக்காணக் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், ஆடவர்கள் எல்லாம் நெருக்கிப் பிடித்து நிற்கிறார்கள். இப்படியெல்லாம் கற்பனை பண்ணி இரசி!' என்று நான் அம்மாவிடம் சொல்ல, 'உன் பிள்ளை கதையை வீட்டில் வந்து கிறுக்கி எழுது. இப்பக் கிளம்பு' என்று அவர் சொல்ல, 'பொறும்மா! 5 நிமிஷங்கள் இந்தப் பெருங்கூட்டத்தை இரசிக்கின்றேன்' என்று பிடிவாதமாக நின்று கூட்டத்தை இரசித்தேன். உள்ளத்தில் உவகை பொங்கியது.

வெற்றித்தூண் கண்டேன்; எனை மறந்தேன்

மேற்கில் ஆதித்தன் அன்னாபிஷேகம் கண்ட மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டிருந்தான். மேகங்கள் சூழ்ந்தபின்னும் ஒளி ரச்மிகளைப் பூமியின் மேல் வீசும் சூரியன் போல போர் அழிவிற்குப் பின்னும் செம்மாந்து மிளிர்கின்றது கலையழகுடன் கங்கைகொண்ட சோழீசர் திருக்கோயில்.

வல்லோர் ஆய்ந்த எழில்கள் எல்லாம் சிற்பமாய், கவின்மிகு சிற்பத் தொகுதிகளாய் எங்கும் நிறைந்து காணக்கிடைக்க, களவு புரியும் கள்ளனைப் போல் முழுமையாய் இரசிக்கமுடியாமல், அவ்வளாகத்தை விட்டு விடைபெற்றேன்.

மீண்டும் திருச்சி நோக்கிய அந்தப் பயணத்தில் நான் கண்டது, இதயத்தைக் கொள்ளை கொண்டது. ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறிநின்றேன். கண்ணெட்டும் தூரம்வரை படர்ந்திருந்த பசுஞ்சோலைகளினூடே கறுத்த கோபுரங்கள் புடைசூழ ஒரு பழங்காலக் கோயில் வளாகம் ஒன்று கண்ணில் தென்பட்டது. நாதமுனிகளுடன் தொடர்புடைய குருவாலப்பர் திருக்கோயில் அது.

சாலையின் ஒரு திருப்பத்தில் மிக வேகமாகவும், இலாவகமாகவும் பேருந்தைச் செலுத்தினார் ஓட்டுனர். ஒரு கறுத்த சர்ப்பத்தினைப் போன்று வளைந்து நெளிந்து சென்றது அந்தக் குறுக்குச்சாலை இடைக்கட்டு வழியாக. ஓர் அமைதியான கிராமம். இயற்கையின் நாதங்களே அதிகமாய்க் கேட்டது. பேருந்து செல்லச் செல்லச் சாலையின் வலப்புறம் உயர்ந்த செம்மண் சுவர் ஒன்று தென்படவே, முதன்முறையாகப் பரபரப்பானேன். மனதில் ஒரு பொறி தட்டியது. முடிந்தவரை கால்களை உயர்த்திக்கொண்டு எம்பிப் பார்த்தால், கரையின் மறுபக்கம் ஒரு பரந்து விரிந்த சமவெளி.

இதுதான் ஜென்மாந்திரத் தொடர்போ என்னவோ எனையறியாமல் 'சோழகங்கம்' என்று உரக்கக் கூவினேன். வினோதமாய்ப் பார்த்தபடியே அருகிலிருந்த பெண்மணி பெருமிதத்துடன் இதுதான் பொன்னேரி என்றார். ஓ.. சந்தோஷம் என்றேன் சமாளித்துக்கொண்டு. அவரோ, 'சோழகங்கம் தெரியாது. ஆனால் இதுதான் பொன்னேரி. அதோ பாலம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்' என்றார். பொன்னேரியின் மறுகரை தென்படவேயில்லை. நீர் ததும்பி வழியும் சோழகங்கத்தை இன்று காணக் கொடுத்து வைக்கவில்லை.

கங்கையின் மறுவீடு

சோழகங்கம், நீர்மயமான வெற்றித்தூண். சோழநாட்டில் பெருமையுடன், வெற்றிக் களிப்பாய் வந்து குடிபுகுந்த கங்கையின் புதிய முகவரி, வாசஸ்தலம். அவளின் மறுவீடானது சோழவளநாடு.

பொன் கொழிக்கச் செய்ததனாலோ பொன்னேரி என்றும் பெயர். சோழநாட்டினுள்ளே ஒரு பொங்குமாங்கடல்.

கல்லிலான வெற்றித்தூண்களை நிலைநாட்டிப் போர்வெற்றிகளைப் பறைசாற்றி வீராபிஷேகம் செய்து கொள்ளும் மாமன்னர்கள் மத்தியில், மிகப்பெரிய நீர்த்தேக்கத்தைத் தோற்றுவித்து, கங்கையைத் தெற்கே கொணர்ந்து, தன் கங்கைப் போர்வெற்றியைக் குறிக்கும் வகையில் நீர்மயமான வெற்றித்தூண் ஒன்றை நிர்மாணித்த ஒரு யுகபுருஷனின் வெற்றிச் சாதனையை என்னென்பது?

வரலாற்றின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல். இராஜேந்திரனின் "ஜெயஸ்தம்பம் ஒரு ஜலஸ்தம்பம்" என்பது வரலாறு காட்டும் சீரிய பாடம்.

சோழமன்னர்களுடைய புனல்நாடன் என்ற சிறப்புப் பெயருக்கேற்ப, கடற்காவிரியின் குறுக்கே நீரைத்தேக்கி உலகின் முதல் அணையைக் கட்டிய கரிகாலனின் வீரப்பரம்பரையில் வந்த இளவல் அல்லவா?

உலக வரலாற்றில் போர்வெற்றியின் சின்னமாய் நீர்த்தேக்கம் நிர்மாணித்த மாமன்னன் வேறு எவரேனும் உண்டோ? எல்லா முதற் பெருமைகளும் சோழர்களையே சாரும் என்பதுதான் வரலாற்றின் விதியோ?

"சூரிய வம்சத்தில் தோன்றிய சோழமன்னர்களின் பெருமையை எவ்வாறு கூறுவேன்? கலைமகளே எனக்கு நீ அருள் புரியவேண்டும். 50 அட்சரங்கள் கொண்டு எங்ஙனம் சோழர் பெருமையைப் பறைசாற்ற முடியும்?" என்றுரைத்த நாராயணகவியின் வரிகள்தாம் (எசாலம் செப்பேடுகள்) எத்தனை உண்மையானவை? பொருள் பொதிந்தவை?

"பகீரதனைப்போல் கங்கையைக் கொணர்ந்தவன். இச்செயலை நிலைநிறுத்தவே கங்கைகொண்டசோழபுரம் என்னும் ஊரை ஏற்படுத்தி அங்கு மஹேசுவரனுக்குப் பெரிய ஆலயத்தை நிர்மாணித்தவர்" என்று எசாலம் செப்பேடுகள் பெருமையுடன் பேசுகின்றன வீரபரகேசரியான இராஜேந்திரன் புகழை.

வடக்கே இமயத்தில் பிறந்து, வளர்ந்து, நடைபயின்று, வளம்செய்த கங்கையைத் தெற்கே குடிபுக வைத்து, சோழநாட்டை அவளின் மறுவீடாகச் செய்தது இராஜேந்திரசோழனின் வீரத்தால் மட்டுமன்று, அவனின் ஒருயுகக் கனவினாலும்கூட. (தந்தை ஒரு நித்யவினோதர், பிள்ளையும் சளைத்தவர் அல்ல).

பெருமழைக் காலத்தில் ஒருமுறை வந்து காணவேண்டும் பொன்னேரியை என்று தோன்றியது. பேருந்து கடந்து சென்றது முன்னே. என் மனமோ பின்னோக்கிச் சென்றது. செம்மாந்து உயர்ந்திருந்த கரை, பரந்து விரிந்த சமவெளி, கண்ணில் தென்படாத எதிர்க்கரை பறைசாற்றியது சோழகங்கத்தின் பிரம்மாண்டம்தனை. பேரேரி என்பது சரிதானே?

மீண்டும் ஜெயங்கொண்ட சோழபுரம், திருச்சி எனப் பயணம் இனிதாய் நிறைவடைந்தது. மாளிகைமேடு, தொட்டிக்குளம், மெய்க்காவல்புதூர், வாரியங்காவல் பகுதிகளைக் காண அவகாசம் இல்லாமல் ஊர் திரும்ப வேண்டியுள்ளதே என்று தோன்றினாலும், இனிவரும் பயணங்களில் அங்கெல்லாம் சுற்றிவருவேன் என்று தெரியும். மனம் கொண்டாடியது. ஒப்பாரும் மிக்காரும் அற்ற தந்தை, அவருக்கேற்ற பிள்ளை.

வாழ்க்கையின் ஓர் இனியநாள், இனிதாய்ப் பொன்புலரியாய்ப் புலர்ந்து, மிக இனியதாய் மகிழ்ச்சிப் பூக்களாய் மலர்ந்து, மிகமிக இனிதாய் நிறைவடைந்தது. மிக்க நன்றிகள் இராஜேந்திரா உனக்கு.

பின்குறிப்புகள் :- எண்ணச் சிதறல்கள்

1. இதுவரை நான் சென்ற கோயில்களில் என் மனதிற்கு அளப்பரிய அமைதி அளித்த கோயில் இது ஒன்றே.

2. சோழகங்கத்தை மீண்டும் உருவாக்கலாமே. ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக நிர்மாணிக்கலாமே? ஏன் தமிழகச் சுற்றுலாத்துறை கண்டுகொள்வதில்லை?

3. இராஜேந்திரன் என்ற மகத்தான ஆளுமையைச் சந்தித்த பிரமிப்பை உண்டுபண்ணியது இத்தலம்.

4. முனைவர் இரா.கலைக்கோவன், "ஏன் இந்தத் தலைப்புக் கொடுத்தீர்கள்" என்று வினவியது எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.

5. ஏன் வரலாற்று நூல்கள் தேதிகளையும் போர்களையுமே முன்னிறுத்தி எழுதப் படுகின்றன? வாழ்வியல் பாடங்களை ஏன் பகர்வதில்லை? ஒரு மன்னனின் போர் வெற்றிச்சின்னம் ஒரு பேரேரி என்பது வாழ்வியல் பாடம் அல்லவா? இதை முன்னிட்டே இக்கட்டுரைக்கு "கங்கையின் மறுவீட்டில்" என்று தலைப்பிட்டேன். என் பாமரச் சிந்தனையில் உதித்தது இந்த வாழ்வியல் பாடம் மட்டுமே.

6. It must have been very difficult to be the son of Sri Rajaraja Chola, but Rajendra has done it. Hats off to you, Sri Rajendra. History is lucky.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.