![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 58
![]() இதழ் 58 [ ஏப்ரல் 26 - மே 20, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, 3. 11. 1989ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் சு.செல்லப்பனிடமிருந்து மடலொன்று வந்தது. அதில் டிசம்பர் 14 அன்று நிறுவனத்தில், 'தமிழ்ப் பண்பாட்டில் சிற்பக்கலை' என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கொன்று நடக்கவிருப்பதாகவும் அதில், 'தமிழகத்தில் சிற்பக்கலை வளர்ச்சி' எனும் தலைப்பில் உரையாற்றுவதுடன் ஓர் அமர்விற்குத் தலைவராகவும் இருந்து நடத்தித்தரவேண்டும் என்றும் இயக்குநர் கனிவுடன் கேட்டிருந்தார். அருமையான தலைப்பென்பதால் உடன் இசைவளித்தேன். உரைக்கு ஒரு திங்கள் காலமே இருந்ததால் உடன் ஆய்வுப்பணியைத் தொடங்கினேன். நளினி துணையிருந்தார். இருவரும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள மகேந்திரவர்மரின் குடைவரைக்குச் சென்று சிற்பங்களை ஆராய்ந்தோம். 'பல்லவச் சிற்பங்களில் முகம் நீளமாக இருக்கும்' என்று ஓர் அறிஞர் கருத்துக் கூறியிருந்ததால், சிற்பங்களின் முக அளவுகளை எடுத்தோம். அவற்றை உய்யக்கொண்டான் திருமலைக் கோயிலில் உள்ள சோழச் சிற்பங்களின் முகஅளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். பார்வை ஆய்வு, அளவுகள் வழியான ஆய்வு இரண்டிலுமே அறிஞர் கூற்றுப் பிழையானது என்பது தெரியவந்தது. அறிஞர்கள் லாங்ஹர்ஸ்ட், ரியா, ஹூல்ஷ், டக்ளஸ்பாரட், கூ. ரா. சீனிவாசன் இவர்தம் கலைநூல்களைப் படித்தேன். பல கோயில்களை இந்த ஆய்விற்காகவே நானும் நளினியும் அகிலாவும் பார்வையிட்டோம். டிசம்பர் பத்தாம் நாளுக்குள் அரும்பாடுபட்டு உரையைத் தயாரித்து 14ம்நாள் நிகழ்விற்குத் தயாரானேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதுதான் என் முதல் உரை என்பதால், சரியாகச் செய்யவேண்டுமே என்ற எண்ணம் பெரிதாக இருந்தது. இயக்குநர் செல்லப்பன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநராகவும் இருந்து சிறந்தவர். சொல்லாற்றல் மிக்கவர். நிறுவனத்தில் பணியாற்றிய பேராசிரியர்களும் ஆய்வுகளில் மூழ்கியவர்கள். அது ஆய்வு நிறுவனம் என்பதால் பணியிலிருந்த ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஏதாவது ஓர் ஆய்வுப் பணி தொடர்ந்து இருந்தது. அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்தத் தமிழ் உயராய்வு நிறுவனம் அக்காலத்தில் மிகுந்த பணிப்பற்றுடன் செயற்பட்டதால் அருமையான நூல்கள் பல வெளிவந்தன. அத்தகு நிறுவனத்தில் ஆய்வறிஞர்களிடையே உரையாற்றப் போகிறோம் என்ற எண்ணமே கோலோச்சி நின்றது. என் உரையே தொடக்க நிகழ்ச்சியாக இருந்தது. செல்லப்பன் தலைமையேற்றார். பதினைந்து பக்கங்களில் எழுதியிருந்த உரையைப் படித்தேன். என் ஆய்வில் புலப்பட்ட முதன்மைக் கருத்துக்களை முன் வைத்து அவற்றைச் சான்றுகளுடன் நிறுவினேன். அரங்கம் என் உரையை மகிழ்வுடன் வரவேற்றது. கேள்வி நேரத்தின்போது, பல கேள்விக் கணைகள் வீசப்பட்டன. களஆய்வுகள் செய்து எழுதிய உரை என்பதால் சரியான விடைகளைத் தரமுடிந்தது. உழைப்பு உயர்வு தரும் என்ற என் நம்பிக்கை அன்று மெய்யானது. இயக்குநரின் பாராட்டும் ஆய்வறிஞர்களின் வாழ்த்துக்களும் மகிழ்வித்தன. கேள்விநேரத்தின்போது தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத்துறையில் பேராசிரியராக இருந்த திரு.வேலுசாமி சுதந்திரன் ஒரு கேள்வி கேட்டார். கேள்வி என்பதைவிட அவருடைய மனக்குறையை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். 'இவ்வளவு நீண்ட உரையில் நாமக்கல் அனுமாரைப் பற்றி நீங்கள் ஏதும் கூறவில்லையே' என்று அவர் சொன்னபோது, 'என் தலைப்பு தமிழ்நாட்டுஅனுமார்கள் பற்றியதன்று; 'தமிழ்நாட்டில் சிற்பக்கலை வளர்ச்சி'; இந்தத் தலைப்பின் கீழ் நாமக்கல் அனுமார் இடம்பெறமுடியாது' என்று உடன் மறுமொழி கூறினேன். அவையோர் என் மொழிவைப் பெரிதும் இரசித்துக் கைதட்டி மகிழ்ந்தனர். இது போல் கேள்விகளைக் கருத்தரங்குகளில் பலவாகச் சந்திக்கவேண்டியிருக்கும் இவற்றிற்கு அறியாமையோ, காழ்ப்புணர்ச்சியோ மட்டுமே காரணங்களாக அமையும். கேட்பவரைப் பார்த்தாலே இரண்டில் எது பின்னணியில் உள்ளது என்பதை உணரமுடியும். நம்முடைய மறுமொழி அதற்கேற்ப அமையுமாறு பார்த்துக்கொண்டால் போதுமானது. இதுநாள்வரை நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறேன். பெரும்பாலான அரங்குகளில் கேள்விகளே இருக்காது. கேட்கும் அரங்குகளில் கேள்விகள் மேற்கண்ட இரண்டில் ஏதேனும் ஒன்று சார்ந்தே அமையும். அறிவார்ந்த கேள்விகள் கேட்கப்பட்ட அரங்குகள் மிகச் சிலவே. அவற்றுள் குறிப்பிடத்தக்கது கோயிற்பட்டித் திருவள்ளுவர் மன்றம். அதன் தலைவர் அ. சங்கரவள்ளிநாயகம் அந்த அமைப்பை அத்தனை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். பொழிவு ஒன்றரை மணிநேரம் நிகழும். வினாக்கள் தொடுப்பது தலைப்பைப் பொருத்து அரைமணி முதல் முக்கால் மணி நேரம்வரை நடக்கும். சங்கரவள்ளிநாயகம் நன்றி உரைக்கும்போது குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அந்தப் பேச்சு அன்றைய உரையாளரின் பொழிவிலிருந்த நலிவு,பொலிவுகளை ஆழமாக அணுகி, நற்சிந்தனையுடனான விமர்சனமாக அமையும். முதற் கூட்டத்திற்குப் போனபோது எனக்கு இதெல்லாம் தெரியாது. ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு நான் சனியிரவே கோயிற்பட்டிக்குச் சென்றுவிட்டேன். பேருந்துநிலையம் வந்து வரவேற்ற அப்பெருந்தகை, இல்லத்தில் இரவு உணவு கொள்ளச்செய்து தங்கும்விடுதி ஒன்றில் சேர்த்தார். காலைச் சிற்றுண்டியும் அவர் வீட்டில்தான். பத்து மணிக்குக் கூட்டம் தொடங்கியது. முதன்மைச் சாலையில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றின் வகுப்பறையில்தான் கூட்டம். நாற்பது பேர் விரிப்பில் அமர்ந்திருந்தனர். பொழிவாளருக்கு மட்டும் ஒரு நாற்காலி. என்னை அதில் அமரச் செய்தார்கள். சங்கரவள்ளிநாயகமும் விரிப்பில்தான் அமர்ந்தார். மன்றச் செயலாளர் வரவேற்புரையும் அறிமுகவுரையும் நிகழ்த்த, நான் உரையாற்ற எழுந்தேன். அரங்கில் இருந்த பலர் கையில் தாள்களும் பேனாவும் கொண்டிருந்தனர். அவை மன்றம் சார்ந்த அறிக்கைகள் போலும் என்று நினைத்திருந்த எனக்கு, குறிப்பெடுக்கவே அவற்றைக் கொணர்ந்திருந்தனர் என்பது உரையின்போதுதான் தெரியவந்தது. அவர்களுக்குப் பயன்படுமாறு உரை நிகழ்த்தவேண்டுமே என்று அஞ்சினேன். சங்கரவள்ளிநாயகத்தை ஒருமுறை பார்த்தேன். தமிழாய் வாழ்ந்த அந்த அறிஞரின் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது. அந்த புன்னகை எனக்குப் பேரூக்கம் தந்தது. அறிவார்ந்த அவை கிடைத்திருக்கிறது, விட்டுவிடக்கூடாது என்று துணிந்தேன். அதுநாள்வரை நான் பெற்றிருந்த ஆய்வு அனுபவங்களை எல்லாம் அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். உரையை முடித்தபோதுதான், நூறு நிமிடங்கள் பேசியிருந்தமை புரிந்தது. நெடுநேரம் பேசிவிட்டோமோ என்ற அச்சத்துடன் அவையிலிருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் இருப்பது போல் தோன்றியது. செயலாளர் கேள்விநேரம் அறிவித்ததுமே, கணைகள் தொடங்கின. கூட்டத்திற்கு வரும் முன்னர்அனைவருமே கோயிற்கலைகளைப் பற்றிப் படித்து வந்திருப்பார்களோ என்று எண்ணும் அளவு தெளிவான, நுட்பமான கேள்விகள் கேட்கப்பட்டன. ஓர் ஆய்வாளனுக்குப் பெருமகிழ்வு தருவதே அறிவார்ந்த கேள்விகள்தான். கலந்துரையாடல் தொடங்கியதுதான் தெரியும். மிக உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்த அந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவுபெற்றபோது மணி ஒன்றரையைத் தாண்டியிருந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர்கூட எழுந்து செல்லவில்லை. கலந்துரைக்குப் பிறகு நன்றியுரையாற்ற வந்த சங்கரவள்ளிநாயகம் கம்பீரமாக என்னைப் பார்த்தார். 'பார்த்தாயா எங்கள் அமைப்பை! எப்படிப்பட்ட பெருமக்களைத் திரட்டியிருக்கிறேன்!நினைவுகொள், இப்படிப்பட்டவர்களால்தான் தமிழ் வளரும்' என்பது போல் இருந்தது அந்தப் பார்வை. நன்றியுரையில் நான் அதிகம் தொடாதிருந்த இலக்கியப்பகுதியை அவர் உரை செழுமைப்படுத்தியது. என் உரையில் இருந்த மெய்மையை அவர் இரசித்துப் போற்றினார். அருமையான ஆய்வு அணுகுமுறை என்று பாராட்டினார். இலக்கியப் பின்புலம் உள்ளது; அது மிகின் கூடுதல் சிறப்பு அமையும் என்று வாழ்த்தினார். இளங்கோவின் காப்பியம் தொடர்பாக நான் வெளிப்படுத்திய ஒரு கருத்தினை மறுத்துரைத்தார். ஓர் இலக்கிய ஆய்வாளரின் பார்வை அது என்பதால், அந்த மறுப்புரையை நான் கவனத்தில் கொண்டேன். பின்னாட்களில் சிலம்பில் ஆழத் தோய்ந்தபோது அவர் பார்வை சரியன்று, என் கருத்தே சரி என்பதை உணர்ந்தேன். மறுமுறை அவரைச் சந்தித்தபோது என் எண்ணத்தை வெளிப்படுத்திக் காரண, காரியங்களை நிறுவியபோது அந்தப் பெருந்தகை வியந்தார். தம் கருத்தை மாற்றிக் கொள்ளவும் முன்வந்தார். சங்கரவள்ளிநாயகத்தைப் போன்ற தமிழறிஞர்கள் நாட்டில் மிகச் சிலரே உள்ளனர். தென்தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. கோயிற்பட்டியே வணங்கும் அளவு அறிவால் செம்மாந்து வாழ்ந்தவர் அப்பெருந்தகை. தமிழால் செல்வரானவர்கள் நிறைந்த இந்த நாட்டில், தமிழுக்காய்த் தம் வருவாய் அனைத்தும் வழங்கிய விசித்திரமான பேராசிரியர் அவர். அறிவின் வீறு அவர் நடையிலேயே தெரியும். தமிழறிஞர்களும் அரசர்களைப் போல் செம்மாந்து பெருமிதத்துடன் விளங்கமுடியும் என்பதற்கு அவரே சான்றாய் இருந்தார். அவருடைய மாணவர்கள் அவரை எந்த அளவிற்கு மதித்தனர் என்பதை நேரடியாகக் காணும் வாய்ப்புகள் இருமுறை அமைந்தன. சிராப்பள்ளி மருத்துவ மன்ற அரங்கில் 2007ல் அவருக்குச் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பித்தோம். அப்போது எனக்கு நன்கு பழக்கமான ஒரு குடும்பத் தலைவி அவருடைய கணவருடன் பரிசுப் பொருள் ஒன்றை ஏந்தியபடி அரங்கிற்கு வந்தார். என்னை அணுகியவர், தாம் சங்கரவள்ளிநாயகத்தின் மாணவி என்றும் தம் ஆசிரியர் விருது பெறும் அந்நல்லோரையில் தமக்குக் கற்பித்த அப்பெருந்தகைக்கு நன்றி பாராட்டத் தாம் விரும்புவதாகவும் தாம் கொணர்ந்திருந்த பரிசை அவருக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எப்போதோ கற்பித்த ஓர் ஆசிரியருக்குப் பல்லாண்டுகள் சென்ற பிறகும் ஒரு மாணவர் பரிசளிக்க விழைந்தது மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அவை மகிழுமாறு அந்த மாணவி பரிசை வழங்கியபோது சங்கரவள்ளிநாயகத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ஆசிரியரும் மாணவியும் அன்பொழுகப் பார்த்துக்கொண்டஅந்தச் சில நிமிடங்கள் சங்கரவள்ளிநாயகத்திற்குள் ஒளிர்ந்துகொண்டிருந்த பேராசிரியத்தைப் புடம்போட்டுக் காட்டின. தென்பாண்டித் தமிழ்ச் சிங்கமாய் வாழ்ந்த அப்பெருந்தகை 2008ல் அமரரான போது நெருங்கிய ஓர் உறவை இழந்தாற் போல் உணர்ந்து வருந்தினேன். 18. 11. 1989ல் மையத்தில் நடந்த திங்கட்பொழிவிற்கு மாவட்ட மருத்துவமனை முதன்மையராக இருந்த மருத்துவர் வே. அங்கமுத்து தலைமையேற்றார். வரலாற்றில் ஈடுபாடுள்ள திரு. அங்கமுத்து நல்ல தமிழ் ஆர்வலராகவும் இருந்தார். சந்திக்கும்போதெல்லாம் இருவரும் வரலாறு பற்றிப் பேசுவோம். அவருடைய தமிழ் நாட்டம் என்னைப் பெரிதும் கவர்ந்தமையால்தான் திங்கட் பொழிவிற்கு வருமாறு கேட்டேன். அன்போடு ஒப்புக்கொண்டு வந்து தலைமையேற்றதுடன், தொடர்ந்து இயன்றபோதெல்லாம் மையக் கூட்டங்களில் கலந்துகொண்டார். என் மாமனாரும் திருச்சிராப்பள்ளியின் கண்மருத்துவ முன்னோடிகளுள் தலையாயவருமான அமரர் தி. வ. அரங்கநாதனின் படத்திறப்பையும் நவம்பர் பொழிவுடன் இணைத்திருந்தோம். என் மாமனாரின் அன்புக்குரிய சீடரான கண்மருத்துவர் மு.ரா.சீ.இராமகிருஷ்ணன் படத்திறப்பை நிகழ்த்தித் தம் குருநாதர் பற்றி உரையாற்றினார். தி.வ.அரங்கநாதனின் படத்தின் கீழ், 'என் ஆசிரியர்' என்று நான் குறித்திருந்தேன். அந்தக் குறிப்பை இராமகிருஷ்ணன் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார். அந்தக் குறிப்பு நூறு விழுக்காடு உண்மை. 1975 ஏப்ரலில் கண்மருத்துவ மேற்படிப்பு முடித்துத் திரும்பிய என்னைத் தம்முடன் இருத்தி, தம் மருத்துவ அணுகுமுறைகள்அனைத்தையும் உடனிருந்து காணுமாறு செய்து, என்னை ஒரு தகுதிசான்ற கண்மருத்துவனாய் உருமாற்றிய தி. வ. அரங்கநாதன் என்றென்றும் என் நினைவில் வாழும் அற்புத ஆசிரியராவார். அவருடைய எளிமை, பார்த்தவுடன் நோயைக் கண்டறிந்து விடும் அநுபவத் திறன், அதிகச் செலவில்லாத மருத்துவ முறை, என எல்லாமே எனக்கு முன்மாதிரியாய் அமைந்தன. 1975ல் இருந்து 1980வரை ஒரு முழுமையான கண்மருத்துவனாக விளங்கிய அந்த ஐந்தாண்டுக் காலத்தில் முற்றிலும் அவர் நடைமுறைகளையே நான் பின்பற்றினேன். தி. வ. அரங்கநாதன் சென்னையில் கண்மருத்துவப் பட்டயம் முடித்ததும் இலண்டனிலும் வியன்னாவிலும் கண்மருத்துவ மேற்படிப்புப் பயின்றவர். ஜப்பானில் மிசுட்டானி எனும் முன்னோடி கண்மருத்துவரிடம், 'கான்டாக்ட் லென்ஸ்' பயிற்சிகள் பெற்றவர். இவ்வளவு வெளிநாட்டு அநுபவங்கள் இருந்தபோதும், தமிழில் பேசுவதையே விரும்பியவர். திருமுறைகளில் ஆழமான ஈடுபாடும் பயிற்சியும் உடையவர். எப்போதும் கதர் வேட்டி, சட்டை மட்டுமே அணிந்தவர். கண்மருத்துவத் துறையில் அவர் சாதித்தவை ஏராளம். தமிழ்நாட்டுக் கண்மருத்துவர்களுக்கென்று ஓர் அமைப்பு, நாளும் நிகழும் மருத்துவ முன்னேற்றங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ள அவ்மைப்பின் சார்பில் ஆண்டுக்கொரு மாநாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கண்மருத்துவம் சார்ந்த முதன்மையான கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் பதிவுசெய்ய மூன்று திங்கள்களுக்கு ஒருமுறை அவ்வமைப்பின் சார்பில் ஆய்விதழ் வெளியிடல் இவை அவருடைய தலையாய பணிகளாய் அமைந்தன. சிராப்பள்ளியின் ஊரகப்பகுதிகளில் வாழும் எளிய மக்களுக்கும் கண்மருத்துவம் பெற வாய்ப்பாக அவரும், அவருடைய நண்பர் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கமும் இணைந்து சிராப்பள்ளியில் நிகழ்த்திய கண்மருத்துவ முகாம்கள் தமிழ்நாட்டளவில் முன்னோடி முகாம்களாக அமைந்து வரலாறு படைத்துள்ளன. இந்திய மருத்துவ மன்றச் சிராப்பள்ளிக் கிளைக்குச் சொந்தமாகக் கட்டடம் அமைந்ததும் அவர், அவ்வமைப்பின் செயலாளராக இருந்தபோதுதான். 1970களிலேயே விழித்திரை அறுவை, சீரமைப்பு அறுவை என்று கண்மருத்துவத்தில் பெரும் சாதனைகளைச் செய்த பெருமகன் அவர். அமரர் தி. வ. அரங்கநாதனின் படத்திறப்பு நிகழ்ந்ததும், 'பூம்புகார் உண்மைதானா?' என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல் அகழாய்வுத்துறையின் தலைவர் பேராசிரியர் விக்டர் இராசமாணிக்கம் உரையாற்றினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் இணையான புலமை உடைய அவர், கடலாய்வுகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர். பூம்புகாரில் அதுகாறும் நிகழ்த்தப்பட்டிருந்த கடலாய்வு, நிலஆய்வு குறித்த வரலாற்றைக் காலநிரலாக முன்வைத்துப் பேசியவர், தமிழ்நாட்டுக் கடலோரங்களைப் பற்றியும் அங்கு வளர்ந்து, செழித்து, மறைந்த நாகரிகங்கள் பற்றியும் தொட்டுக்காட்டினார். வரலாற்றில் கற்கவும் கேட்கவும் படிக்கவும் எவ்வளவோ இருப்பதை அன்று உணர்ந்தேன். எவ்வளவுதான் படித்தாலும், 'இதுதான் எல்லை' என்று இன்புறவே முடியாதபடி அறிவு, குறுந்தொகைத் தலைவியொருத்தி தன் காதலைச் சொன்னது போல, வானினும் உயர்ந்து, நிலத்தினும் பெரிதாகி, நீரினும் ஆழமாகிச் செழிக்கிறது. 'அறிதோறும் அறிதோறும் அறியாமை' என்னும் வள்ளுவம்தான் எத்தனை உண்மை! 16. 12. 1989ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நண்பர் திரு. அ. கோபாலன் தலைமையில் புதுச்சேரிப் பல்கலைக்கழக நாடகப்பள்ளியின் தலைவர் இந்திரா பார்த்தசாரதி, 'சிலம்பின் நாடகப் பரிமாணங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்திரா பார்த்தசாரதியின் வருகை சிராப்பள்ளி வாழ் மாணவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கில் காவேரி கல்லூரி மாணவியர் சிலரை அவருடன் உரையாடிப் பயன்பெற வாய்ப்பளித்தேன். அந்த மாணவியர் இந்திரா பார்த்தசாரதியின் நூல்களை அதிகம் படித்திராத காரணத்தால் அவருடன் சரியாக உரையாடமுடியாமல் திரும்பினர். தேவாங்கன தேசாயின் பாலியல் சிற்பங்கள் பற்றிய நூலைப் படித்திருக்கிறீர்களா என்று கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர் அ. கோபாலன் கேட்டதுடன், நூலையும் என்னிடம் தந்தார். அந்நூலை 1984லேயே நண்பர் மஜீதிடம் பெற்றுப் படித்திருக்கிறேன். முதன்முறையாகப் பாலியல் சிற்பங்களைத் திருக்கோயில்களில் பார்த்த அளவிலேயே, அவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளும் ஆவல் எழுந்தது. என்றாலும், அப்போது மாடக்கோயில் ஆய்வில் மூழ்கி இருந்தமையால் படங்களும் குறிப்புகளும் எடுப்பதோடு நிறுத்தியிருந்தேன். மருத்துவப் படிப்பில், ஃபாரன்சிக் மெடிஸன் என்றொரு பாடம் உண்டு. அதற்காக ஆண், பெண் பாலியல் செயற்பாடுகள், இயல்பு மீறிய பாலியல் உறவுகள் இவை பற்றியெல்லாம் படித்ததுண்டு. உளவியல், பாலியல் நோய்கள் படிப்பிற்காகவும் இவை பற்றிய எண்ணற்ற நூல்களைப் பயின்றிருந்தமையால் கோயில்களில் கண்ட சிற்பங்கள் அறிவூட்டல் அமைப்பு களாகவே தெரிந்தன. தேசாயின் நூலைப் படித்தபிறகு இத்தகு சிற்பங்கள் மிக்கிருப்பதாகக் கருதப்படும் காஜுராஹோ, கோனார்க் கோயில்களுக்குச் செல்லும் எண்ணம் எழுந்தது. 1986ல் அப்னா உத்ஸவ் நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது. அது போழ்து நான் சிராப் பள்ளியிலுள்ள கலைக்காவிரி நாட்டியப்பள்ளியில் வருகைப் பேராசிரியனாக இருந்தேன். அப்பள்ளியின் இயக்குநரும் நானும் அப்னா உத்ஸவ் நடன நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞர்களைக் கலைக்காவிரிக்கு அழைக்கவும் ஜவஹர்லால் நேரு பல்கலையில் இருந்த ஆடற்கலைப் பேராசிரியர் சுனில் கோத்தாரியைச் சந்திக்கவும் டில்லி சென்றோம். அந்தப் பயணத்தின்போதே காஜுராஹோ செல்லவும் திட்டமிட்டேன். நானும் இயக்குநரும் 10. 11. 1986 அன்று இரவு விமானத்தில் டில்லி அடைந்தோம். சிராப்பள்ளிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வாஸன் முருகைய்யாவின் இல்லத்தில் தங்கினோம். 11. 11. 1986 காலையில் பல்கலைக்கழகம் சென்று சுனில் கோத்தாரியைச் சந்தித்தோம். அவருடைய நூலகம், ஆய்வுகள் பார்த்தபின் அப்னா உத்ஸவ் நிகழ்ந்த பல இடங்களுக்கும் சென்று கலைஞர்களைச் சந்தித்தோம். மல்லிகா சாரபாய், சோனால் மான்சிங், பிர்ஜு மகராஜ், சுவர்ணமுகி இவர்களுடன் உரையாடி மகிழ்ந்தோம். 12. 11. 1986 அன்று நடன அரங்குகளில் காலம் சென்றது. 13. 11. 1986 மாலை டில்லியில் இருந்து காஜுராஹோவிற்கு நான் மட்டும் விமானத்தில் சென்றேன். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து அனைத்துக் கோயில்களையும் பார்த்தேன். அந்தக் கோயில்களைப் பார்த்த பிறகுதான் பாலியல் சிற்பங்களில் நம்மவர்கள் பெற்றிருக்கும் உயரங்களை உணரமுடிந்தது. காஜுராஹோவின் சிறப்பே கூட்டமைப்பான உறவுக் கோலங்கள்தான். தமிழ்நாட்டில் இவை அறவே இல்லையென்று கூறமுடியாது என்றாலும் பொதுவாக இத்தகு கூட்டமைப்புகளைக் காணமுடியாது. தமிழ்நாட்டில் பாலியல் சிற்பங்கள் பல்லவர் காலத்திலேயே வந்துவிட்டன என்றாலும், ஒன்றிரண்டையே காணமுடிகிறது. சோழர் காலத்திலும் ஏறத்தாழ அதே நிலைதான். விஜயநகர, நாயக்கர் காலத்தில்தான் இத்தகு சிற்பங்கள் பல்கிப் பெருகின. காஜுராஹோவிலிருந்து திரும்பியதும் டில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகம் சென்றிருந்தேன். டில்லி, கல்கத்தா, பம்பாய், சென்னை இந்நான்கு தேசிய, மாநில அருங்காட்சியகங்களுள் ஒன்றுகூடச் சிறப்பான முறையில் அமையாமை துன்பமான நிலையாகும். எவ்வளவோ அரிய உடைமைகள் இருந்தும் அவற்றைச் சரியாக வெளிப்படுத்திக் கொள்ளக்கூட நமக்குத் தெரியவில்லை. இந்த நான்கு அருங்காட்சியகங்களில் ஒன்றுகூட உள்ளத்திற்கு நிறைவளிக்கும் வகையில் அமையவில்லை. ஹைதராபாத்துக்குக் கண்மருத்துவ மாநாட்டிற்காகச் சென்றிருந்தபோதுதான் அங்கிருந்து ஒரிஸா சென்றேன். 10. 1. 1987 இரவு விமானத்தில் புவனேசுவரம் சென்று தங்கினேன். நான்கு நாட்கள் அங்கிருந்தேன். புவனேசுவரம் கோயில்கள், கோனார்க், பூரி முதலிய இடங்களில் இருந்த கோயில்கள் அனைத்தும் பார்க்கும் வாய்ப்பமைந்தது. கலிங்கக் கோயில்களில் சிற்பப் பெருக்கம் இருந்தது. ஆனால், செழுமையோ, நளினமோ இல்லை. பாலியல் சிற்பங்கள் காஜுராஹோவைவிட வளமையாக இருந்தன. என்றாலும், தமிழ்நாட்டின் வகைமை இல்லை. புவனேசுவரத்துக் கோயில்கள் அனைத்தையும் பார்த்து முடித்த நிலையில் கல்கத்தா சென்றேன். அங்கு அருங்காட்சியகம் பார்த்துவிட்டுக் காசி செல்லக் கருதியிருந்தேன். அருங்காட்சியகம் தந்த ஏமாற்றம் காசிப் பயணத்தை விலக்கிவிட்டுச் சென்னை மீளவைத்தது. சந்தெல்லர், கலிங்கர் கட்டுமானங்களும் சிற்பங்களும் எனக்குள் பதிவாகின. பின்னாளில் மிகப் பரவலாகப் பல்லவ, பாண்டிய, சோழக் கட்டுமானங்களிலும் சிற்பங்களிலும் அமிழ்ந்தபோது இந்தப் பதிவுகள் ஒப்பீட்டுப் பார்வைக்குப் பெரும் துணையாயிருந்தன. இந்த இரண்டு மரபுக் கோயில்களையும் பார்க்க எனக்குத் துணைநின்ற பெருந்தகை கலைக்காவிரியின் அப்போதைய இயக்குநர் அமரர் ஜார்ஜ் அடிகளார்தான். கலைக்காவிரி நாட்டியப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுமாறு ஆடற்கலைப் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் நோக்குடன் நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் அவர் பின்புலமாக இருந்தார். காஜுராஹோ, ஒரிஸா கோயில்களில் இருந்த ஆடற்சிற்பங்கள் அனைத்தையும் கலைக்காவிரிக்காக ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றைத் தமிழ்நாட்டுக் கலைச்சிற்பங்களுடன் ஒப்பீடு செய்து, கலைக்காவிரி மாணவர்களுக்கு ஓர் உரை நிகழ்த்தியமையும் நினைவில் உள்ளது. காஜுராஹோ, ஒரிஸா பயணங்கள் பல தளங்களில் எனக்குப் பயனுள்ளவையாக அமைந்தன. ஆடற்கலைச் சிற்பங்கள், பாலியல் சிற்பங்கள், கட்டுமான ஆய்வுகள், சிற்ப ஒப்பீடு என அது சமயம் நான் மேற்கொண்ட களஆய்வுகளும் கற்ற தரவுகளும் என்றென்றும் நினைவில் இருக்கும். 1989ல் நாங்கள் களஆய்வுகள் மேற்கொண்ட கோயில்களாக வேங்கடத்தான் துறையூர், மதுரகாளியம்மன் கோயில் (12. 3. 1989), விஜயாலய சோழீசுவரம், பழியிலி ஈசுவரம் (1. 5. 1989),தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் (22. 5. 1989), பழுவூர் ஆலந்துறையார் (23. 5. 1989), திருச்செந்துறை சந்திரசேகரர் (17. 6. 1989), பைஞ்ஞீலி (9. 8. 1989, 14. 11. 1989), இறைவாசநல்லூர், பனையபுரம் பனங்காட்டு ஈசுவரம் (15. 8. 1989), திருவெள்ளறை (17. 9. 1989), பாச்சூர் (21. 11. 1989), சிராப்பள்ளி மேல்குடைவரை (8. 11. 1989) இவை அமைந்தன. இவற்றுள் இறைவாசநல்லூர் மாடக்கோயிலாக அமைந்துள்ளது. பனையபுரத்தில்தான் பரவைநங்கைக்காக முதலாம் இராஜேந்திரனின் மகன் எடுத்த கோயில் உள்ளது. பரவைபுரமே பின்னாளில் பனையபுரமாகப் பெயர் மாற்றம் பெற்றது. தமிழ்நாட்டு வரலாற்றில் மறக்கவே முடியாத நங்கை பரவைதான். தந்தையின் காதலியைத் தனயர்கள் போற்றிக் கோயிலெடுத்த வரலாறு தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு. இராஜேந்திரனிடம் பரவை கொண்டிருந்த காதல் திருவாரூர்க் கல்வெட்டுகளில் காவியமாகப் பதிவாகியுள்ளது. அந்த இருவரின் அன்பான உறவை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாபெரும் சோழர் கால வரலாற்றுப் புதினத்தை யாரேனும் உருவாக்கினால் அதற்கு, 'செம்புலப் பெயல்நீர் போல' என்று தலைப்பிடவே நான் விரும்புவேன். தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் பதிவாகி வரலாறாக விளைந்திருக்கும் இராஜேந்திரனின் அணுக்கி பரவை என் நெஞ்சில் நிறைந்த நங்கை. அன்புடன், இரா. கலைக்கோவன் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |