http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 58
இதழ் 58 [ ஏப்ரல் 26 - மே 20, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் அழிந்தவை போக எஞ்சியிருக்கும் நாயக்கர் கால ஓவியங்கள் பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரை மண்டபக் கூரையில் இன்றளவும் காணுமாறு உள்ளன. நாயக்க அரசி மங்கம்மாளும் அவருடைய தளவாய் இராமப்பரும் இடம்பெற்றிருக்கும் அங்கயற்கண்ணி சொக்கர் திருமணக்காட்சி இக்கூரையின் முதன்மை ஓவியமாய் வரையப்பட்டுள்ளது. ஓவியத்தில் இறைவனும் இறைவியும் திருமணக்கோலத்தில் நிற்கின்றனர். இறைவியின் வலக்கை இறைவன் கைத்தலம் பெற நீண்டுள்ளது. இடக்கையில் மலர்ச்செண்டு. இறைவனின் வலக்கை இறைவியின் கைமீது இருத்தப்பட்டுள்ளது. அவரது இடக்கையிலும் மலர்ச்செண்டு. இறைவனின் பின்கைகளில் மழுவும் மானும். இறைவியின் வலப்புறத்தே சங்கும் சக்கரமும் ஏந்தியவாறு நீலவண்ண மேனியராய்த் திருமால் காட்டப்பட்டுள்ளார். தேவர்கள் இருபுறத்தும் சூழ நின்று வணங்கி வாழ்த்த நிகழும் இந்தத் திருமணக் காட்சியைக் கைக்கூப்பி வணங்கிய நிலையில் வலப்புறத்தே இராமப்பரும் இடப்புறத்தே அரசி மங்கம்மாளும் கண்டு மகிழும் நிலையில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் நாயக்கர் காலப் பண்பாடு, நாகரிகம் அறியப் பெருந்துணையாகிறது. தலைப்பாகை அணிந்து வெள்ளை வேட்டியும் இடுப்பில் மடித்துக் கட்டிய பச்சைத் துண்டுமாய்க் காட்சிதரும் இராமப்பரின் கழுத்தில் இருபுறமும் தொங்குமாறு நீளத்துண்டு. கழுத்தில் முத்துமாலை. அரசி மங்கம்மாள் வெள்ளாடை அணிந்திருக்கிறார். மேற்சட்டையும் வெள்ளாடையாகவே உள்ளது. தலையலங்காரம், கழுத்தணிகள் இவை குறிப்பிடத்தக்கவை. இருவர்தம் தலைக்கு மேலே தெலுங்கிலும் தமிழிலும் அவரவர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இராமப்பருக்கு மேலிருக்குமாறு, 'ராஜராஜஸ்ரீ தழவா (தளவாய்) ராமப்பரய்யறவர்கள்' என்றும் அரசி மங்கம்மாளுக்கு மேலிருக்குமாறு, 'மகா ராஜமாண்னிய மகா ராஜராஜஸ்ரீ மங்கம்மா அவற்கள்' என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |