![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 150
![]() இதழ் 150 [ ஜனவரி 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பல்லவர் கட்டடக்கலை அறிய அவர்தம் கற்றளிகள் குறித்த தெளிவான கண்ணோட்டம் வேண்டும். கற்றளிக் கலை இராஜசிம்மர் காலத்தே தொடங்குவதால், கல்வெட்டுகளாலும் கலைமுறையாலும் அவருடையதாக அடையாளப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுமானங்களையும் அணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. இக்கட்டுமானங்களில் சில சிதைந்த நிலையி லும் சில முழுமையானவையாகவும் பார்வைக்குக் கிடைக் கின்றன. சிதைந்தவற்றுள் கீழ்த்தளம் மட்டுமே எஞ்சியுள்ள இராஜசிம்மர் காலக் கற்றளிகள் மூன்றனுள் இரண்டு மாமல்ல புரத்தில் உள்ளன. ஊரின் மேற்கிலுள்ள குன்றில், அதன் மேற்பரப்பைச் சமப்படுத்தக் கற்களை அடுக்கித் தளம் அமைத்து, அதன்மீது முகமண்டபம் பெற்ற ஒருதள விமானமாக மேற்குப் பார்வையில் எழுப்பப்பட்ட உலக்கணேசுவரம், இப்போது கருவறைத் தெய்வமற்ற நிலையில் கீழ்த்தளத்துடன் உள்ளது. இராஜசிம்மர் காலக் கற்றளிகளில் தனித் தன்மையதான இக்கட்டுமானத்தை விரிவாகப் பார்க்கலாம். துணைத்தளம் உத்திரம், வாஜனம், வலபி ஆகிய கூரையுறுப்புகளுடன் துணைத்தளமென விளங்கும் இத்தள அமைப்பின் கூரைநீட்சி தெற்கிலும் வடக்கிலும் ஐந்து கூடுவளைவுகள், கிழக்கிலும் மேற்கிலும் நான்கு கூடுவளைவுகளுடன், கோணப்பட்டம், சந்திர மண்டலம் பெற்ற அழகிய கபோதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளைவுகள் கிளாவர் தலைப்புக் கொள்ள, கூடுகளில் காளைத்தலை போன்ற செதுக்கலுடன் மதலைகள். கபோதத்தின் மேல் பூமிதேசம். விமானம் துணைஉபானம், உபானம், தாமரையிதழ் போல் வளைக்கப்பட்டுக் கோணப்பட்டம் பெற்ற ஜகதி, எண்பட்டைக் குமுதம், பிரதிவரி கொண்டு பிரதிபந்தமாக அமைந்துள்ள விமானத் தாங்குதளத்தின் மீது வேதிகைத்தொகுதி. துணைக்கம்பின் மீது நேர்க்கோட்டில் எழும் சுவரின் திருப்பங்களில் பாதம் பெற்ற எண்முகத் தாவுசிம்மத் தூண்கள். தொங்கல், கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் என அனைத்து உறுப்புகளும் பெற்ற இத்தூண்களின் மேலுள்ள போதிகைகள் பட்டை பெற்ற வளைமுகத் தரங்கக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே கூரையுறுப்புகள். கோண, நடுப்பட்டமும் சந்திரமண்டலமும் பெற்றுக் கூரை நீட்சியாக வளைந்திறங்கும் கபோதத்தில் பிள்ளையார் சிற்பத்துடன், திசைக்கிரு கூடுவளைவுகள். விமானச் சுவரின் நடுப்பகுதியில் முப்புறத்தும் சட்டத்தலை பெற்ற யானையடி நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள ஆழமான கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணல். கிழக்கில் குஞ்சிதகரணர். வடக்கில் இராவணஅருள்மூர்த்தி. கோட்டங்களை உத்திரம், வாஜனம், வலபி மூட, அவற்றின் நடுப்பகுதியில் பொருந்திய பதக்கமென எண்முகத்தூண் தலையுறுப்புகளின் (கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை) செதுக்கல். மேலே மகரதோரணம். பஞ்சரங்கள் திருப்பத் தூண்களுக்கும் கோட்ட அணைவுத் தூண்களுக் கும் இடைப்பட்ட விமானத்தின் சுவர்ப்பகுதியில் முப்புறத்தும் தாய்ச்சுவரிலிருந்து சற்றே முன்தள்ளியனவாய் எழிலார்ந்த தளப் பஞ்சரங்கள். விமானத்தின் தாய்ச்சுவர் போலவே தாங்குதளம், வேதிகைத்தொகுதி பெற்ற இவற்றின் பன்முகத் தூணடிகளாகச் சங்கூதும் பூதங்கள் அமைய, தூண்களுக்கு இடையில் முப்புறத்து மாய் ஆறு காவலர் சிற்பங்கள். தூண்களின் மேலுள்ள வளைமுகத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கோணப் பட்டமும் சந்திரமண்டலமும் கொண்ட கபோதம் கூடுவளைவுகள் இன்றி வெறுமையாக உள்ளது. கூரைமீது பூமிதேசம், வேதிகை, கோட்டத்துடன் கிரீவம். சிறு நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள கிரீவகோட்டத்தில் இலலிதாசனத்தில் பூதம். விமானக் கபோதத்தின் கூடுவளைவுகளே இப்பஞ்சரங்களின் சிகரமாகியுள்ளன. முகமண்டபம் சற்றே உள்ளொடுங்கி விமானக் கட்டமைப்பிலுள்ள முகமண்டபத்தின் அகலக் குறைவான வட, தென்சுவர்க் கோட்டங்களில் வடபுறம் ஜலந்தரவதமூர்த்தி. தென்புறம் கங்காளர். பூதஅடி நான்முக அரைத்தூண்கள் தழுவும் இக்கோட்டங்களின் தலைப்பில் தென்புறம் தோகைவிரித்த அன்னஇணைகளும் வடபுறம் எதிரெதிராக நோக்கும் மகரங்களும் உள்ளன. முகமண்டப மேற்குச்சுவரில் நுழைவாயிலின் இருபுறத்துமுள்ள தளப்பஞ்சரத் தூண்களுக்கிடையில் கவரிப்பெண்கள். வாயில் நிலைகளாகியுள்ள நான்முக அரைத்தூண்களில் ஒருக்கணித்த நிலையில் காவலர்சிற்பங்கள். முகமண்டபக் கபோதத்தில் மேற்கில் இரு கூடுவளைவுகள், தெற்கிலும் வடக்கிலும் திசைக்கொரு கூடுவளைவு அமைய, கூடுகளில் பிள்ளையார் சிற்பங்கள். கூரையின் மேல் பூமிதேசம், வேதிகை. மேற்கு நோக்கிய கருவறை வெறுமையாக உள்ளது. கோட்டச் சிற்பங்கள் வடக்குக் கோட்டத்திலுள்ள இராவணஅருள்மூர்த்தி கயிலைமலையை பெயர்க்கமுயலும் இராவணனையும் மேலே மலைமீது அமர்ந்துள்ள இறைஇணையையும் படம்பிடிக்கிறது. சுகாசனத்தில் இடக்காலைக் கீழிறக்கியுள்ள சிவபெருமானின் இட முன் கை மடியில். பின்கைப் பொருளை அறியமுடிய வில்லை. சடைமகுடம், சிற்றாடையுடனுள்ள அவரது வல முன் கை கடகத்திலிருக்க, பின்கையில் பாம்பு. இறைவனின் இடப் புறத்தே கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடையுடன் இடுப்பிற்குக் கீழ்ப்பட்ட உடல் இடஒருக்கணிப்பிலிருக்க, மார்பும் முகமும் வலத்திருப்பமாய்க் கொண்டு இருகால்களையும் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ள இறைவியின் இடக்கையில் மலர். வலக்கைஇறைவனின் இடத்தோளில் அமர்ந்து நெகிழ்ந்துள்ளது. மூன்று முகத்தினராய் மலையைப் பெயர்க்கும் இராவணனின் இடக்கால் மலைமீது தாங்கலாக, வலக்கை ஒன்று மார்பருகே. கிரீடமகுடம், பூட்டுக்குண்டலங்களுடனுள்ள அவரது ஓர் இடக்கை வியப்பு முத்திரையிலிருக்க, பிற கைகள் மலையைப் பெயர்த்தெடுக்கும் பணியில். அப்பர் பெருமானின் பதிக அடிகளுக்கு ஏற்ப, இராவணனின் மூன்று வாய்களும் அலறும் மெய்ப்பாட்டில் அகலத் திறந்திருக்க, கண்கள் பிதுங்கியுள்ளன. தென்கோட்டத்தில் மரமொன்றின் கீழ் இடஒருக்கணிப்பில் யோகபட்டத்துடன் வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வல முன் கை தளத்தில் அமர, இட முன் கை முழங்கால் மீது படர்ந்து மார்பருகே ஏந்து கையாக உள்ளது. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை பெற்று மலைமீது அமர்ந்துள்ள அவரது வலப் பின் கை தோளருகே மடிய, இடப் பின் கையிலுள்ளது மழுவாகலாம். கருடாசனத்தில் இடக்கால் உயர்த்தப்பெற்றுக் குஞ்சிதகரணத்திலுள்ள சிவபெருமானின் வல முன் கை வேழ முத்திரையில் அமைய, இட முன் கை தலைக்கு மேல் உயர்ந்து கவிந்துள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், மார்புநூல், இடைக்கட்டுடனான இடைச்சிற்றாடை, கைவளைகள் பெற்றுள்ள அவரது பிற இடக்கைகளுள் ஒன்று தீச்சுடர் ஏந்த, மற்றொன்று பதாகத்தில். பிற இரண்டு கைகளுள் ஒன்று தொடையில். மேலுயர்ந்துள்ள மற்றொரு கைப்பொருளை அறிய முடியவில்லை. வலக்கைகள் ஒன்றில் தலையோடு. ஒன்று கீழ் நோக்கிய பதாகமாக அமைய, மேல்நோக்கியுள்ள பிற இரண்டில் ஒன்று பதாகமாக இறைவன் முகம் நோக்கி அமைய, மற்றொன்று வான்பார்வையில் திரும்பியுள்ளது. முகமண்டப வடகோட்டத்தில் ஜலந்தரவதம் செய்யும் சிவபெருமான் உத்குடியில் உள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், சிற்றாடை பெற்றுள்ள அவரது வல முன் கை மேலுயர்ந்து பொருளொன்றைப் பிடித்துள்ளது. பின்கையில் பாம்பு. இட முன் கை சிதைந்திருக்க, பின்கை வியப்புமுத்திரையில். கீழே வீழ்ந்தமர்ந்த நிலையில் இறைவனுக்காய் முகம் திருப்பியுள்ள ஜலந்தரனின் இடக்கை மார்பருகே. சடைப்பாரம் பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள் முப்புரிநூல் பெற்றுள்ள அவரது வலக்கை வேண்டாம் என வேண்டும் மெய்ப்பாட்டில். தென்கோட்டத்தில் வலப்பாதத்தை சமத்திலும் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி, மேற்கு நோக்கி ஒருக்கணித்திருக்கும் கங்காளரின் இடக்கை தலையருகே சிம்மமுக முத்திரையில் அமைய, முகம் நேர்ப்பார்வையில். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், மார்புநூல், முத்து அரைக்கச்சு, இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்து மலரச் சிரிக்கும் அவரது வலக்கை கங்காளத் தண்டை அணைத்தபடி வயிற்றருகே. பஞ்சரச் சிற்பங்கள் விமானத்தின் முத்திசைகளிலுமுள்ள ஆறு பஞ்சரங்களி லும் தூண்களுக்கு இடைப்பட்டுக் காட்சிதரும் ஆறு காவலர் களுமே அவ்வத்திசைக் கோட்டத் தெய்வங்களுக்காய் ஒருக் கணித்துள்ளனர். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலின் பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே சடைமகுடம், சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், மார்புநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் ஒருகையை அருகிலுள்ள உருள்பெருந்தடிமீது இருத்தி, மற்றொரு கையைத் தலையருகே சிம்மமுக முத்திரையில் கொண்டுள்ளனர். தென் திசை மேற்கரின் கோட்ட மேற்பகுதியில் தோரணத்தொங்கல்கள். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடையுடன் கிழக்குக் கோட்டங்களிலுள்ள கவரிக்காரிகைகளில் தெற்கர் வலக்கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையால் தோள்மீதுள்ள கவரியைப் பிடித்துள்ளார். அவ ரது மடிப்பகுதியில் அரைக்கச்சின் அழகிய பதக்கம். வலஒருக் கணிப்பிலிருந்தபோதும் அவரது முகம் இடத்திருப்பமாய் உள் ளது. இடுப்பிற்குக் கீழ் இடஒருக்கணிப்பிலும் உடலின் மேற் பகுதியை வலஒருக்கணிப்பிலும் கொண்டுள்ள வடக்குக் காரிகை வலக்கையில் கவரி கொண்டுள்ளார். இடக்கை தோளருகே உயர்ந்துள்ளது. மகரதோரணங்கள் விமானக் கோட்டங்கள் மூன்றின் மீதுமுள்ள மகரதோர ணங்கள் இறவாதான் ஈசுவரம் போல் விரிவான அளவில் அமை யாமைக்குத் தளப்பஞ்சரங்களின் இணைப்பால் சுவர்ப்பிரிப்பில் நிகழ்ந்த இடநெருக்கமே காரணம் எனலாம். தோரண மகரங்கள் கிழக்கிலும் தெற்கிலும் கோட்ட வலபி மீது கால் வைத்து, அணைவுத் தூண் பலகைமீது தோகை இருத்தி யுள்ளன. வடக்கில், அவை பலகைமீது நிற்பதையும் தோகை அதை ஒட்டியே படர்வதையும் காணமுடிகிறது. மகரங்களின் அங்காத்த வாய்கள் வழி வெளிப்படும் தோரண வளைவு கீழ்ப்பகுதியில் அமர்நிலைப் பூதமொன்றைக் கொள்ள, சடை மகுடம், சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், சிற்றாடை பெற்றுள்ள அவற்றின் வலக்கை கடகமாக, இடக்கை முழங்கால் மீது. முகமண்டப வடகோட்ட மகரதோரணம் முற்றிலும் மாறுபட்ட அமைப்பாக உருவாகியுள்ளது. இங்குக் காட்டப்பட்டுள்ள இரண்டு மகரங்களுமே பிற தோரணங்களில் உள்ளாற் போல் ஒன்றையொன்று நோக்காமல் எதிரெதிர்த் திசைகளை நோக்கிய வாறு தோகைகள் சந்திக்கும் நிலையில் அணைவுத் தூண் பலகைகள் மீது அமர்ந்துள்ளன. மேற்கு மகரம் பலகை மீது முழுமையாக அமர, கிழக்கு மகரம் பலகையின் முதற்பாதியை விடுத்து இரண்டாம் பாதியில் அமர்ந்துள்ளமையும் தோகை வளைவின் கீழ்ப்பகுதி சிற்பமேதுமின்றி வெறுமையாக உள்ளமையும் இங்குப் பணி நிறைவடையவில்லை என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலாம். முகமண்டபத் தென்கோட்டத்தில் மகரதோரணத் திற்கு மாற்றாக ஒன்றையொன்று நோக்கி நின்றவாறு முகம் திருப்பிய நிலையில் அடர்த்தியான தோகைகளுடன் அன்னங்களைக் காணமுடிகிறது. இது போன்ற அன்னஇணை ஐராவதேசுவர முகமண்டப கொற்றவைக் கோட்டத் தலைப்பிலும் உள்ளது. முகமண்டப வாயிற்காவலர்கள் மாமல்லபுரம் நரபதிசிம்ம விஷ்ணுகிருகத்தில் உள்ளவாறு போலவே உலக்கணேசுவரத்திலும் முகமண்டப வாயில்களை அனைத்துள்ள நான்முக அரைத்தூண்களே அவற்றின் உடற்பகுதியில் வாயிற்காவலர்களைக் கொண்டுள்ளன. விஷ்ணுகிருகத்தினும் இங்கு அவர்கள் அளவிலும் அழகிலும் சிறப்புடன் மிளிர்வது குறிப்பிடத்தக்கது. வாயிலுக்காய் ஒருக்கணித்துள்ள இருவருமே ஒரு காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலின் பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் கொண்டுள்ளனர். சடைமகுடம், சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடையுடனுள்ள அவர் தம் ஒருகை மழுமீதமர, மற்றொரு கை மார்பருகே. வடக்கர் நெறித்த புருவங்கள் கொள்ள, தெற்கரின் மகுடத்திலுள்ள மழுவின் கத்திப்பகுதி அவரை மழுவடியாராக அடையாளப்படுத்துகிறது. - வளரும் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |