http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > பயணப்பட்டோம்
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
ச. கமலக்கண்ணன்

 ஜப்பானின் புவியியல் அமைப்பை அறிந்துகொள்வது மிகவும் சுவையான ஒன்று. நான்கு புறமும் கடலால் சூழப்பட ஆயிரக்கணக்கான தீவுகளின் தொகுப்பு. தொகுப்பு என்று சொல்வதைவிடத் தொடர் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அமையும். மொத்தம் 6,852 தீவுகள். இவற்றில் 5 தீவுகள் முதன்மையானவை. வடக்கில் ஹொக்கைடோ, நடுவில் ஹொன்ஷூ, தெற்கில் ஷிகொக்கு மற்றும் க்யூஷூ, தென்மேற்கில் ஒக்கினாவா. பெருநகரங்களான தோக்கியோ, ஓஸகா, ஹிரோஷிமா, நகோயா முதலியவை ஹொன்ஷூவில்தான் இருக்கின்றன. இந்நாட்டின் மொத்தப்பரப்பளவில் 3ல் 2 பங்கு காடுகள் மற்றும் மலைகளால் நிறைந்தது. பசிபிக் கடலில் Ring of fire என அழைக்கப்படும் பெரிய குதிரைலாட வடிவிலான டெக்டோனிக் பல்லடுக்குகளின் வடமேற்கில் ஜப்பான் அமைந்துள்ளதால் அதன் உள்வாங்கும் தன்மையின் காரணமாக நிலநடுக்கங்களும் சுனாமிகளும் எரிமலைகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த உள்வாங்கும் தன்மையால் இத்தீவுக்கூட்டம் காலப்போக்கில் சிறிது சிறிதாக நகர்ந்து மேற்கில் ஜப்பான் கடல் உருவானது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்த ஜப்பான் கடலின் கரையிலுள்ள ஒரு நகரம்தான் தொத்தோரி.

நிர்வாக வசதிக்காக ஜப்பான் 47 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் பெரும்பாலான தெற்காசியப்பகுதியைக் கைப்பற்றி வைத்திருந்த ஜப்பான், போருக்குப் பின்னர் ஒவ்வொன்றாக மற்ற வல்லரசுகளிடம் இழந்தது. ஒக்கினாவாவை அமெரிக்கா கைப்பற்றியது. இப்போதும் அமெரிக்க இராணுவத்தளம் இங்குச் செயல்பாட்டில் உள்ளது. கொரியாவின் வடபகுதி சோவியத் ஒன்றியத்துடனும் தென்பகுதி அமெரிக்காவிடமும் சேர்ந்து தற்போதைய வட மற்றும் தென் கொரியாவாக ஆயின. தைவானைச் சீனா கைப்பற்றிக்கொண்டது. கிழக்குப் பகுதியில் இருந்த டேலியன் பகுதி சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்டுப் பின்னர் சீனாவிடம் தரப்பட்டது. கொரோரு மற்றும் இன்னும் சில தீவுகள் அமெரிக்காவின் வசமாயின. மீதமுள்ள பகுதிகள்தான் இந்த 47 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒக்கினாவாவின் வரலாறு பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது.க்யூஷூவுக்குத் தென்மேற்காகத் தைவான் வரையில் அமைந்திருக்கும் பகுதி ர்யூக்யூ தீவுகள் என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள தீவுகளில் ஒன்றுதான் ஒக்கினாவா. கி.பி 1429 லிருந்து இந்த ர்யூக்யூ தீவுகள் தனி நாடாக இருந்தன. 1609ல் ஜப்பான் அதன்மீது படையெடுத்துத் தன்வசமாக்கிக்கொண்டது. 1879ல் தனி மாகாணமாக்கப்பட்ட இத்தீவை இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஒரு லட்சத்து 85 ஆயிரம் துருப்புகளுடன் படையெடுத்துக் கைப்பற்றியது. இப்போரில் மூன்றில் ஒருபங்கு மக்கள் இறந்தனர். உலகப்போருக்குப் பின்னர் 27 ஆண்டுகள் அமெரிக்காவின் இராணுவ ஆட்சி இங்கு நடைபெற்றது. இடையில் 1950 ஜூன் மாதம் தொடங்கிய கொரிய யுத்தத்தில் (வடகொரியா தென்கொரியா மீது தொடுத்த போர்) அமெரிக்கா இங்கிருந்துதான் தென்கொரியாவுக்கு ஆதரவாகத் தனது B-29 Superfortress போர்விமானத்தை அனுப்பியது. அதிகாரபூர்வமற்ற முறையில் இப்போர் 1953ம் ஆண்டு முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு ஓராண்டு முன்பாகவே அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தின் விளைவாக ஒக்கினாவா பகுதியில் அமெரிக்கா தனது இருப்பை விரிவாக்கம் செய்யத் தொடங்கி, அதன் கை ஓங்கத் தொடங்கியது. 1960களில் அமெரிக்கா ரகசியமாக அணு ஆயுதங்களை இங்கு வைத்துக்கொள்ள ஜப்பான் அனுமதி தரும் அளவுக்கு இது சென்றது. ஏற்கனவே ஹிரோஷிமாவின் பாதிப்பை அனுபவித்த ஜப்பானிய மக்கள் இதற்கு எதிராகக் கிளர்ந்தெழ ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான் 1965ம் ஆண்டு வியட்நாம் போர் தொடங்கியது. அதற்கும் இப்படைத்தளமே அமெரிக்காவுக்குப் பேருதவியாக இருந்தது. இப்போரினால் உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக உருவான மனநிலையும் ஒக்கினாவா மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்த்தது. எல்லா நாடுகளும் புரட்சியை ஒடுக்க ஊடகங்களைத் தடைசெய்தும் வெளியிடங்களுடனான தகவல் தொடர்பைத் துண்டித்தும் நடவடிக்கை எடுப்பதுபோல அமெரிக்காவும் அதே தவறைச் செய்தது. இருப்பினும் ஒரு புலனாய்வு நாளிதழ் ஒக்கினாவில் என்ன நடக்கிறது என்பதையும் வான்வழித் தாக்குதல் தொடர்பான படங்களையும் கசியவிட்டது. ஏற்கனவே ஒக்கினாவைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த ஜப்பானிய மக்களை மேலும் கொதிப்படையச்செய்து பெஹெய்ரென் இயக்கம் தோன்ற வழிசெய்தது. இவ்வியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மக்கோத்தோ ஓடா, ஒக்கினாவை அமெரிக்காவிடமிருந்து மீட்டு ஜப்பானிடம் ஒப்படைப்பது ஒன்றே ஜப்பானை வியட்நாம் போரிலிருந்து வெளியேறச் செய்து அமெரிக்கப் படைகளைப் போரை நிறுத்த நிர்ப்பந்திப்பதற்கான ஒரேவழி என நம்பினார். அமெரிக்காவை ஆதரிக்கும் ஜப்பான் பிரதமரைக் கடுமையாக விமர்சனம் செய்த அவர், மறியல்கள் மட்டுமின்றி, இராணுவ வீரர்கள், மாலுமிகள், விமானிகள் ஆகியோரிடம் வியட்நாம் போரை நிறுத்தவேண்டிய தேவை குறித்துத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் கூட்டங்கள் நடத்திப் பரப்புரை செய்தும் அகிம்சைப் போராட்டம் மேற்கொண்டார். இதுவும் ஒரு காரணமாக அமைய, குண்டுவீச்சுக்குப் பயந்து கிம் புக் என்ற 9 வயதுச் சிறுமி நிர்வாணமாக ஒடிவரும் புகைப்படம் 1972ல் நிக் உட் என்ற புகைப்படக்காரரால் எடுக்கப்பட்டு அமெரிக்கர்களின் மனதை மாற்றி, போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. பின்னர் அமெரிக்காவும் ஒக்கினாவாவை ஜப்பான் அரசிடம் ஒப்படைத்து, அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இராணுவத்தளத்தை நிர்வகிப்பதாக உறுதியளித்தது.இப்படி ஓர் உறுதியை அளித்த பின்னரும் அமெரிக்கா அடங்காமல் தனது உள்ளடி வேலைகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. 1981ல் மாய்நிச்சி ஷிம்புன் என்ற நாளிதழ் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கக் கப்பல்களில் அணு ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்ற தகவலை வெளிக்கொணர்ந்தாலும் அப்போதைய ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் இது ஜப்பான் அரசுக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்று அறிவித்தவுடன் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர். பின்னர் 1995ல் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு 12 வயது ஜப்பானியப் பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்தது புரட்சி வெடிக்கக் காரணமானது. பின்னர் நடைபெற்ற கலகத்தின் விளைவாக 1997 முதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் புதிதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும் செய்திகள் வருவது 2002 வரை தொடரத்தான் செய்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2005ல் இத்தகைய அழிவாயுதங்கள் கொண்ட கடற்படை, மக்கள் வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுத் தொலைவில் உள்ள ஒரு தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.அதன் பின்னர் அமைதி நிலவுவதுபோல் தெரிந்தாலும், அவ்வப்போது இராணுவத்தினரின் அத்துமீறல்கள் செய்திகளாக வந்தவண்ணமே உள்ளன. 2008ல் அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காண்டலீசா ரைஸ் கூட இதுபோன்ற ஒரு வன்புணர்வுக்கு மன்னிப்புக் கேட்டார். இத்தகைய சம்பவங்கள் முன்பைவிடக் குறைந்துவிட்டன என்று ஒரு சாராரும், சம்பவங்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது என்று இன்னொரு சாராரும் கூறுவதால் உண்மை எங்கோ உறங்கிக்கொண்டிருக்கிறது என்ற கவலையுடன், அரசு அனுமதிக்கும் தகவல்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிடுவதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல என்ற கசப்பான உண்மையும் சேர்ந்து நம் மனதைப் பிசைகிறது. இச்செய்திகளை எல்லாம் ஒரு ஜப்பானிய நண்பரிடமிருந்து கேட்டபிறகு ஒருமுறை ஒக்கினாவா சென்று பார்த்து வரவேண்டும் எனத் தோன்றியது. பார்ப்போம், வரலாறு.காம் வாசகர்களுக்கு அதற்குக் கொடுத்து வைத்திருக்கிறதா என்று. இப்போது ஒக்கினாவிலிருந்து கட்டுரையின் தலைப்பிலுள்ள மாஃபியாக்கள் இருக்கும் இடத்துக்குத் திரும்புவோம்.மேலே முதல் பத்தியின் இறுதியில் கூறிய ஜப்பான் கடலின் கரையில் அமைந்துள்ள தொத்தோரி நகரம் ஜப்பானின் 47 மாகாணங்களில் ஒன்றான தொத்தோரி மாகாணத்தின் தலைநகராகவும் உள்ளது. தோக்கியோவிலிருந்து நேரடி விமானப் போக்குவரத்து கொண்ட இந்நகரில்தான் இம்மாகாணத்தின் தெற்கெல்லையிலுள்ள சூகொக்கு மலையிலிருந்து உற்பத்தியாகும் செந்தாய் ஆறு கடலில் கலக்கிறது. அம்மலையிலிருந்து அடித்து வரப்பட்ட மணல்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இக்கடற்கரையில் படிந்து படிந்து பெரும் மணல்மேடாக உருவாகியிருக்கிறது. விமானம் தரையிறங்கும்போதே வலதுபுறத்தில் இவ்வழகைக் காணுமாறு விமானி கூறுகிறார். மனிதர்களும் ஒட்டகங்களும் சிறுபுள்ளிகளாகத் தெரியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே யார் மனிதர், எது ஒட்டகம் எனத் தெரியுமளவுக்கு விமானம் கீழிறங்கி விடுகிறது. நாங்கள் சென்றிறங்கியபோது வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ். அன்றைக்கு மழைவரும் என்று வானிலை அறிவிப்பு இருந்தாலும் பனிப்பொழிவு இருக்காது என்றது ஆறுதலாக இருந்தது. மணல்மேடு முழுதும் பனிபடர்ந்து நடக்க இயலாமல் போய்விடும். அவ்வப்போது காற்றுச்சுழல்களும் அதிகம் ஏற்படுகின்றன. உடல் விரைக்கும் அளவு குளிரில் மணற்புயலின் நடுவில் நின்று உடலெங்கும் புழுதி படிந்து பின்னர் ஒரே உதறலில் எல்லாம் கீழே விழுவதை அனுபவிப்பது தனிசுகம். விமானத்திலிருந்து பார்த்து வியந்த இன்னொரு சிறப்பு என்னவென்றால் தமிழ்கூறும் நல்லுலகின் ஐவகை நிலப்பரப்புகளையும் ஒரே இடத்தில் காணலாம். அப்போது புகைப்படம் எடுக்க இயலாததால் கூகுள் நிலப்படம்தான் கீழே தரமுடிந்தது.

இந்தப் பரந்துபட்ட வெட்டவெளியில் மாஃபியாக்கள் எப்படி இருப்பார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள் அல்ல. நம் மனதைக் கொள்ளையடிக்கும் மணல் சிற்பக் கலைஞர்கள் இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முனைவர் கலைக்கோவன் அவர்களிடமிருந்து வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோன் இசையுடன் தெற்காசியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மணற்சிற்பக்கூடம் பற்றிய பிரமாதமான தொகுப்பாக இருந்தது. ஜப்பானில் இந்தியப் புராண மற்றும் வரலாறு தொடர்பான காட்சிக்கூடமா? உடனே சென்று பார்க்கவேண்டும் என ஆவல் உந்தித்தள்ளியது. மேலதிக விவரங்களைத் தேடிப்பார்த்தால் ஜனவரி 2020 முதல் வாரத்துடன் கண்காட்சி நிறைவடைவதாகத் தெரிந்தது. உடனே அவ்வாண்டு இறுதியிலேயே உடன் பணிபுரிபவரும் புகைப்பட ஆர்வலருமான பாலமுரளியுடன் சேர்ந்து பயண முன்பதிவு செய்தோம். இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் புகைப்படங்களும் அவர் எடுத்தவையே. ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசியிலிருந்து ஜனவரி தொடக்கம் வரை ஒவ்வொரு பின்புலத்துடன் சிற்பக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 2020ம் ஆண்டுக்கான கரு செக் குடியரசு மற்றும் ஸ்லோவாகியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாறு. கொரோனா பாதிப்பால் பார்வையாளர்கள் வருகை குறைந்துள்ளதாகச் செய்தி. 2019ம் ஆண்டின் கரு தெற்காசியா. சிற்பக்கூடத்தின் உள்ளே நுழையும்போதே மகாத்மா காந்தி நம்மை வரவேற்கிறார். பின்னர் தாஜ்மகால், விநாயகர், கங்கைக்கரை, கோனாரக் சூரியன் கோயிலின் காலச்சக்கரம், புத்த கயா, கஜூராஹோ உலக மரபுச் சின்னம், அன்னை தெரசா, முகலாயர் அரண்மனைகள், வங்கதேசத்தின் தலைநகர் தாக்காவிலுள்ள நட்சத்திர மசூதி, சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ, நேபாளத்தின் காத்மாண்டுவின் பதான் தர்பார் மண்டபம்,  ஆப்கானிஸ்தானின் ஹஸரத் அலி நீல மசூதி, பாமியான் குன்றிலிருந்து தாலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர் சிலை, இலங்கையின் சிகிரியா குகை ஓவியங்கள் ஆகியவற்றுடன் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயர் ரூட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் நாவலின் சிற்பம் உட்பட எல்லாவற்றையும் அவற்றை வடித்த உலகளாவிய சிற்பக்கலைஞர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நம் ஊர் சுதர்சன் பட்நாயக் கோனாரக் சிற்பத்தை வடித்திருக்கிறார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளின் சிற்பங்கள்:2006: இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலம்2008: ஆசியா2009: ஆஸ்திரியா2010: ஆப்பிரிக்கா2012: இங்கிலாந்துமுதலாம் எலிசபெத் ராணியின் அரசவை

ஷேக்ஸ்பியர்

அறிவியலாளர்கள் நியூட்டனும் டார்வினும்2013: தென்கிழக்கு ஆசியாஅங்கோர்வாட்

ஆங் சான் சூச்சி2014: சோவியத் ரஷ்யாநெப்போலியனின் படைகள்

பொதுவுடைமைச் சதுக்கம்

லியோ டால்ஸ்டாயின் படைப்புகள்2015: ஜெர்மனிபெர்லின் சுவர் உருவாக்கம்

பெர்லின் சுவர் இடிப்பு

கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை உருவாக்குதல்2016: தென் அமெரிக்கா

மச்சுபிச்சு2017: அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்

நியூயார்க் நகரம்

ஹாலிவுட் (சார்லி சாப்ளின், மர்லின் மன்றோ, லாரல் ஹார்டி உள்ளிட்டோர்)

ரஷ்மோர் மலையும் வாஷிங்டன் டெலாவேர் நதியைக் கடத்தலும்2018: நோர்டிக் நாடு

ஆல்ஃப்ரட் நோபல்மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.