http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > கலையும் ஆய்வும்
சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
பால.பத்மநாபன்

 



நாகேசுவரத்து நாயகர்



குடந்தை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள நாகேசுவரன் கோயில் ஒரு முற்கால சோழர் காலத்திய கோயில் ஆகும். சுமார் 1100 வருடங்களுக்கு முன்னர் சோழ உளிகள் உருவாக்கிய உன்னத படைப்புகள் இங்கே சிற்றுருவ சிற்பங்களாய், கோட்ட சிற்பங்களாய், நாசிகை சிற்பங்களாய், நாலாபுரமும் கண்ணுக்கு காட்சியளித்தும், மனதிற்கு மகிழ்ச்சி அளித்தும் சிந்தையை சிலிர்க்கவைக்கவும் செய்கின்றன.





இச் சிற்பங்களில் நாயகமாக விளங்குவது வீணாதரர் சிற்பம் ஆகும். இக் கோயில் விமானத்தின் தெற்கு பக்கத்தில் முதல் தளத்தின் ஆர உறுப்பாக விளங்கும் சாலை நாசிகை கோட்டத்தில் தெற்கு நோக்கி இருக்கின்றது



ஒரு பத்ர பீடத்தின் மீது விரிக்கப்பட்டுள்ள ஒரு விரிப்பின் மீது உட்கார்ந்து, இடது காலை முழங்கால் அளவில் மடக்கி உத்குடி ஆசனம் பெற்று, வலது காலை தொங்கவிட்டும், சற்றே உடலினை இடது புறம் திருப்பி சற்று கீழ் நோக்கிய பார்வை பெற்றும், இவ் வீணாதரர்  தொங்கவிடப்பட்ட வலது காலை ஒரு பாதம் தாக்கியில் இருத்தியும் உள்ளார்.



இப் பத்ர பீடத்தில் குத்திட்டிருக்கும் இடது காலின் கீழே படமெடுத்த பாம்பு ஒன்று நம்மை மிரட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு கால்களிலும் தாழ்செறிகளும், இடையில் தோலாடையும் அனிந்துள்ள வீணாதரரின் அரைக்கச்சின் முன்பக்கப்பகுதி  பத்ர பீடத்தில் இரு கால்களுக்குமிடையில் தளர்வாக இருப்பதுபோல்  படர்ந்து காண்பிக்கப்பட்டுள்ளது.      



வயிற்றில் உதரபந்தமும், மார்பின் குறுக்கே .முப்புரி நூலும் அணிந்துள்ள வீணாதரர், இடது மணிக்கட்டில் கங்கணமும், விரல்களில் மோதிரமும் பெற்றுள்ளார். பின் கைகளில் தோள்வளையும் கழுத்தில் சவடியும் அணிந்துள்ள வீணாதரரின் தலையலங்காரம் சடாபாரமாக உள்ளது.



பதக்கங்கள் பதித்க்கப்பெற்ற நெற்றிப் பட்டத்தை அணிந்துள்ள வீணாதாரரின் வலச்செவி நீள் செவியாகவும், இடச்செவியில் பனையோலை பெற்றும் காணப்படுகின்றன 



சிவபெருமானின் முன் இரு கரங்கள் ஒரு வீணையை தாங்கி பிடித்துள்ளது . வீணையின் அடிப்பகுதி வலது தொடையில் இருத்தியும் மேல்பகுதியினை இடது உள்ளங்கையில் தாங்கிப்பிடித்து, வீணையின் மேற்புற அடிப்பகுதியில் உள்ள குடம் போன்ற  பகுதியை மார்போடு அணைத்தும், வீணையின் மேற்புறத்தே காணப்படும் நரம்புகளை வலது முன் கையிலுள்ள நடு விரலும் மோதிர விரலும் சுண்டியிட, சுட்டு விரலும் சுண்டு விரலும் நரம்புகளை மீட்டாமல் சற்றே மேல் எழும்பி நிற்க,  சுண்டிவிடப்பட்ட நரம்புகளின் வழியே புறப்பட்ட இசையின் இன்ப வெள்ளத்தில் மனம் மூழ்கி கிடக்க அதனால் மெய் மறந்து, கண் இமைகள் கண்களை மூட முயற்சிக்க, கண்கள் பாதி மூடியும் ஒரு கிறக்க நிலையில் மோன நிலையில்  மயங்கியிருக்க ,  உதடுகள்  இருண்டும் சற்றே பிரிந்து சிறு புன்னகையை வெளிப்படுத்த ,உதடுகள் பிரிந்ததால் பக்கவாட்டில் சற்றே  வெளிப்படும் கோரைப்பற்களின் வழியே சிந்தும் சிறு புன்னகையை செதுக்கிய சோழ உளிகளை என்னவென்று பாராட்டுவது.  











  

வீணையின் மேல்புறம் இருக்கும் நரம்புகளை தாங்கும் கனுக்கள் எட்டு வீனையின் மேல் காணக்கிடைக்கின்றன. இடது கை தாங்கியுள்ள வீனையின் மேற்பகுதி சிறிதளவு சிதைந்துள்ளது .வலது கையின் சுண்டு விரலின் மெல்பகுதியும் சிறிதளவு சிதைந்துள்ளது. இடது பின் கை முழுவதும் சிதைந்துள்ளதால் பிடித்துள்ள கருவி என்னதென்பதை அறியக்கூடவில்லை. வலது பின் கையின் மேற்பகுதி சிதைந்துள்ளதால் கையிலுள்ள கருவி என்னதென்பதை தீர்மானமாக உணரமுடியவில்லை.அக்க மாலையாக இருக்கலாம்.அல்லது பாம்பாக இருக்கலாம்

 



நார்த்தாமலை வீணாதரர் 



வீணாதரர் முற்சோழர் கால கற்றளிகளிலும் பல்லவர் கால கற்றளிகளிலும்   பரவலாக காணப்பட்டலும்,   சோழமண்டலத்திலுள்ள   முற்சோழர்கால கற்றளிகளான திருப்பூந்துருத்தி, அவனிகந்தபுரத்தின் தென்தளி,  திருப்புறம்பியம்,  கரந்தை,  லால்குடி ,    உய்யகொண்டான் திருமலை, துடையூர், திருவிசலூர்  திருச்சினம்பூண்டி, திருப்பழனம், கொடும்பாளுர் மற்றும் நார்த்தாமலை ஆகிய இடங்களில் காணப்படும் வீணாதரர்கள் குறிப்படதக்கவை .      



குடந்தை நாகேசுவரர் வீணாதரர், விமானத்தின் முதல் தளத்தின் ஆர உறுப்பாக விளங்கும் தெற்கு சாலை நாசிகை கோட்டத்தில் அமர்ந்திருக்க, திருவிசலூர் வீணாதரர் இக் கோயில் திருச்சுற்றில் பழைய கட்டுமான தெற்கு கோட்டத்தில் வீணை மீட்டியும் லால்குடி, துடையூர்,  திருச்சினம்பூண்டி, மற்றும் கொடும்பாளூர் வீணாதரர்கள் விமானத்தின் தெற்கு தேவ கோட்டங்களில்  நின்ற நிலையிலும் காட்சியளிக்கின்றனர்.



திருப்பூந்துருத்தி   வீணாதரர் தெற்கு தேவ கொட்டத்தில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்க, நார்த்தாமலை மற்றும் திருப்பழனம் வீணாதரர்கள் தெற்கு மகா நாசிகையில் நின்று வீணை வாசிக்க, கீழையூர் வீணாதரர் மட்டும் மேற்கு மகாநாசிகையில் நின்று வாசிக்கிறார்.  .



குடந்தை நாகேஸ்வரர் மற்றும் திருப்பூந்துருத்தி வீணாதரர்கள் இடது காலை மடக்கி குத்திட்டு உத்குடி ஆசனத்தில் அமர்ந்திருக்க, திருப்புகலூர், லால்குடி. துடையூர் மற்றும் கொடும்பாளூர் வீணாதரர்கள் இடது காலை முன்னிருத்தி நிற்க, கீழையூர்மற்றும் திருப்பழனம் வீணாதரர்கள் வலது காலை முன்னிருத்தி நிற்கின்றனர்   



முதலாம் ஆதித்த சோழன் கால கற்றளிகளில் வீணாதரர்கள் பரவலாக காணப்பட்டாலும் பின் வந்த பராந்தக சோழன் காலத்தில் குறையத்தொடங்கியன. பின் வந்த சோழர்கள் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் உள்ளன.  நாகை மாவட்டத்திலுள்ள சிக்கல், கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரிகபுரத்திலுள்ள வீணாதரர்களை   பிற்கால சோழர் காலத்தியதாக குறிப்பிடலாம்..





திருப்பூந்துருத்தி வீணாதரர்

                                           



கீழையூர் அவனிகந்தபுரத்து தென் தளி வீணாதரர் 



கி..பி. 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி.5 அல்லது 6 ம் நூற்றாண்டு)  காரைக்காலம்மையார் இறைவன் ஆடல் செய்யும்போது உடன் இசைக்கின்ற இசைக்கருவிகளின் பட்டியலை தனது மூத்த முதல் திருப்பதிகத்தில் அறிமுகப்படுத்துகின்றார்

        துத்தங்கைக் கிள்ளை விளிரித்தாரம் 

               உழைகுளி ஒசையின் கெழும்பாடிச்

        சச்சரி கொக்கரை தக்கையோடு

                தகுணிதங் துந்துபி தாளம் வீணை

        மத்தளம் கரடிகை வன்கை மெந்தோல்

                தமுருகம் குடமுழா மொந்தை வாசித்து

        அத்தனை விரவிளோடு ஆகும் எங்கள்

                அப்பன் இடம்திரு வாலங்காடே

                                    _காரைக்கால் அம்மையார்— (1)



காரைக்கால் அம்மையார், இறைவனின் வழிபாட்டில் வாசிக்கப்படும் கருவிகளாக சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை, ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றார்., 



அப்பரும், சம்பந்தரும் மற்றும்  சுந்தரரும் இறைவனின் ஆடல் நிகழ்ச்சியின்போது உடன் இசைக்கப்படும் பல இசைக் கருவிகளை  தங்களது தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டாலும், இறைவன்  தானே வாசிக்கும் கருவிகளாக கல்லலகு(2), வீணை, தமருகம்(3) , பேரி(4), மொந்தை(5) ,தக்கை(6)  ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர். இதில் வீணையை கையிலேந்திய வீணாதரர் பற்றி அப்பரும் சம்பந்தரும்  பல பதிகங்களில் குறிப்பிடுகின்றனர்.

   



லால்குடி வீணாதரர்



திருஞானசம்பந்தர் தனது திருக்கானூர் பதிகத்தில் வீணை ஏந்திய விகர்தனை பின் வருமாறு குறிப்பிடுகின்றார். 

                தமிழினீர்மை பேசித்தாளம் 

                         வீணை பண்ணிநல்ல

                 முழவமொந்தை மல்குபாடல் ----------

                                         -சம்பந்தர்- தேவாரம்- 1.73. 8.



தமிழில் இனிய வார்த்தைகளைப் பேசி தாளத்தோடு வீணையை மீட்டி முழவம், மொந்தை ஆகிய துனைக்கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடிவரும் இறைவன் என்று  வீணையை மீட்டி வரும் இறைவனை சம்பந்தர் குறிப்படுகின்றார்



ஞானசம்பந்தர் தனது திருவிடைமருதூர் பதிகத்தில் வீணை ஏந்திய வித்தகரை  வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை  உடையவர்   என்று   இறைவனை குறிப்படுகின்றார்   



               கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்

                நிலையினர் சலமக ளுலவிய சடையினர்-------

                                   - சம்பந்தர்- தேவாரம்- 1.122.7



அப்பர் தனது திருவாருர் பதிகத்தில் விணை ஏந்திய விமலனை பின் வருமாறு புகழ்கின்றார்.



           தாடழுவு கையன் தாமரைப்பூஞ் சேவடியன்

            கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்-----

                                 - அப்பர்—தேவாரம் - 4.19.10 



முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாய், தாமரைப் பூப்போன்ற சிவந்த திருவடிகளை உடையவனாய், பிறரால் அறிந்து கொள்ள முடியாத வேடத்தவனாய் வீணையை கையில் கொண்டவனாய் என்று இறைவனை அப்பர் அடையாளப்படுத்துகின்றார்.

   



கரந்தை வீணாதரர்     

  

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.