http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 150
இதழ் 150 [ ஜனவரி 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
காவார் பொழிற்கயிலை ஆதி கருவேயெம்
பரகேசரியின் 12-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1.ARE 209/1907 S.I.I. Vol 19 No 300 இது ஒரு சிதைந்த கல்வெட்டு. தஞ்சாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் திருவிடைமருதூர் கோயிலில் உள்ள பள்ளிக் கட்டில் பிராட்டியாரின் பூஜைக்கு 1½ வேலி நிலம் நிவந்தம் வழங்கினார். இதற்கு இக் கோயில் தேவகன்மிகள் , திரைமூர் சபையினர், திருவிடைமருதூர் நகரத்தார், இக் கோயில் மேலாண்மை செய்யும் அதிகாரி ஆகியோர் இக் கோயில் பெரிய காவணத்தில் கூடியிருந்து ஒப்புதல் அளித்தனர். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் மற்ற விபரம் அறியமுடியவில்லை. எனவே இந்த பரகேசரி எந்த மன்னன் என்று அறிய இயலவில்லை. பரகேசரியின் 14-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1.ARE 194/1907 S.I.I. Vol 19 No 342 திருவிடைமருதூர் தேவகன்மிகள், திரைமூர் சபையினர், திருவிடைமருதூர் நகரத்தார், கோயில் மேலாண்மை செய்யும் இங்கனாட்டு பல்லவரையர் ஆகியோர் கோயிலின் தெற்கில் திருக்கொக்காராணிக்க பொன் திருவாசலில் கீழ்பரடை இலுப்பை மரத்தின் கீழ் கூடி திருவிடைமருதூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துண்டை வடகரை மிறைக் கூற்றத்து தேவங்குடி தேவங்குடையான் எச்சில் கண்ட இராவணனுக்கு விற்றுக் கொடுத்தனர். இக் கோயில் அதிகாரி இங்கனாட்டு பல்லவரையர் உத்தம சோழன் காலத்தில் பணிபுரிந்த அதிகாரி ஆவார் என்பதை பரகேசரியின் 6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் பார்த்தோம்.(3) மேலும் கல்வெட்டில் உள்ள நாள், கிழமை, மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றின் குறிப்பு கொண்டு “எபிமரிஸ்” என்ற கால கணக்கீட்டின் அடிப்படையில் இந்நாள் 6.10.984 என்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.(4) இக் காலம் உத்தம சோழன் ஆட்சி செய்த காலம் ஆகும்(5). எனவே இப் பரகேசரி உத்தம சோழன் என உறுதியாக கூறலாம். 2.ARE 217/1907 S.I.I. Vol 19 No 343 இக் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. ஏதோ ஒரு நிலத்தை விளை நிலமாக்கியதை கூறுகின்றது. வேறு எந்த செய்தியும் அறிய இயலவில்லை. எனவே இப் பரகேசரி யார் என்று தெரியவில்லை. 3.ARE 221/1907 S.I.I. Vol 19 No 344 இதுவும் சிதைந்த ஒரு கல்வெட்டு. மேலும் சிதைந்த பகுதிகளை மாறி மாறி வைத்து திருப்பணி செய்துள்ளதால் செய்திகள் முழுமையாக பெறமுடியவில்லை. எனினும் ஒரு சில செய்திகள் வரலாற்று கீரலாய் வெளிப்படத்தான் செய்கின்றன. முதல் பிரிவு கல்வெட்டிலிருந்து, ஒரு நுந்தா விளக்கு எரிக்க எண்ணெய் வழங்கப் பட்ட செய்தியும் கோயிலில் நடைபெற்ற வைகறை ஆட்டத்துக்கு இசைக் கருவி வாசிக்கப்பட்ட செய்தியும் தெரிவிக்கின்றன, பிரிவு 2 ல் உள்ள சிதைந்த கல்வெட்டு அயபாடி நிலத்துக்கு கீழ்ப்பாற்கெல்லையாக ஏனாதிமங்கலம் என்ற கிராமம் உள்ளதை தெரிவித்து எல்லைகளையும் பிடி சூழ்ந்து தெரிவிக்கும் செய்தியையும் தெரிவிக்கின்றது. பிரிவு 3 ல் உள்ள சிதைந்த கல்வெட்டு செம்பியன் சோழியவரையனுக்கும் அவன் வர்க்கத்தார்க்கும் காணியாய் கொடுத்த நிலத்தைப் பற்றி கூறுகின்றது. பிரிவு 4 ல் உள்ள சிதைந்த கல்வெட்டு அதிகாரி ஒருவரின் பெயரினை தெரிவிக்கின்றது. இது ஒரு முழுமையான கல்வெட்டாக இல்லாமல் இரு கல்வெட்டுகளின் சிதறிய பாகங்களை வைத்து வருடம் 1895 க்கு முன் நடைபெற்ற திருப்பணியில் கட்டப்பட்டுள்ளதால் விபரமான செய்திகளை பெறமுடியவில்லை. எனினும் ஒரு துண்டு கல்வெட்டு காணி நிலம் பெற்றவர் பெயர் சோழியவரையன் என்று தெரிவிக்கின்றது. இவர் ஒரு அரசு அதிகாரி ஆவார். இவரின் முழு பெயர் சிறுகுளத்தூருடையான் அரையன் பராந்தகனான செம்பியன் சோழியவரையன். இவர் உத்தம சோழனின் ஆணை ஒன்றில் குறிக்கப்படுவதால் உத்தம சோழன் காலத்தில் பணியாற்றியவர் என்பது தெரியவருகின்றது.(5) எனவே இவ்விரு கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு உத்தமசோழன் காலத்தியது ஆகும். 4.ARE 225/1907 S.I.I. Vol 19 No 345 இச் சிதைவுற்ற கல்வெட்டில் சிற்றிங்கண் உடையான் பட்டன் …… என்ற அதிகாரியின் பெயர் வெளிப்படுகின்றது தவிர வேறு எந்த செய்தியும் வெளிப்படவில்லை.இச் சிற்றிங்கண் உடையான் பட்டன் கண்ணான இங்கன் நாட்டு பல்லவரையர் என்பவர் உத்தமசோழன் காலத்தில் பணிபுரிந்த ஒரு அதிகாரி ஆவார் என்பதை ஏற்கனவே கல்வெட்டு எண் ARE 194/1907 ன் மூலம் பார்த்தோம்.(6) எனவே இப் பரகேசரி கல்வெட்டு உத்தம சோழனுடையது எனத் தெளியலாம். 5.ARE 228/1907 S.I.I. Vol 19 No 346 திருவிடைமருதூர் இறைவனுக்கு சிற்றிங்கணுடையான் பட்டன் கண்ணணான இங்கண் நாட்டு பல்லவரையர் இக் கோயில் மேலாண்மை செய்யும் அதிகாரியாக பணிபுரியும்போது கோயில் நிலத்தில் பயிரிடப்பட்ட பாக்கு மரங்களிலிருந்து ஒரு ஆண்டில் கிடைக்கப் பெற்ற பாக்குகளை விற்ற வகையில் பெற்ற பொன் 110¾ கழஞ்சில் செய்யப் பெற்ற கிரீடம் ஒன்றை வழங்கினான். இக் கல்வெட்டில் வரும் அரசு அதிகாரி சிற்றிங்கணுடையான் பட்டன் கண்ணணான இங்கண் நாட்டு பல்லவரையர் என்பவர் உத்தம சோழன் காலத்தில் வாழ்ந்த அரசு அதிகாரி என ஏற்கனவே கல்வெட்டு எண் ARE 194/1907 மூலம் பார்த்தோம்.(7) எனவே இப் பரகேசரி கல்வெட்டு உத்தம சோழனுடையது என உறுதியாக கூறலாம். 6.ARE 236/1907 S.I.I. Vol 19 No 347 கோயில் தேவகன்மிகளும் திரைமூர் சபையினரும் திருவிடைமருதூர் நகரத்தாரும் கோயில் ஸிகாரியம் செய்யும் (மேலாண்மை செய்யும்) சிற்றிங்கணுடையான் பட்டன் கண்ணணான இங்கண் நாட்டு பல்லவரையனும் மோகி ஒற்றியூரன் கூத்தனா…….. அரையன் கூத்தன் வைத்த பசு 62 ன் மூலம் கிடைக்கப் பெற்ற பாலைக் கொண்டு தினமும் 3 சந்தியும் (வேளையும்) 5 நாழி பாலால் இறைவனுக்கு அபிஸேகம் செய்யப் படவேண்டும் என்ற நிவந்தத்தை ஒத்துக் கொண்டனர். இதில் வரும் அரசு அதிகாரி உத்தம சோழன் காலத்தியவர் ஆவார். ஆகவே இப் பரகேசரி கல்வெட்டு உத்தம சோழன் காலத்தியது ஆகும். பரகேசரியின் 16-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1.ARE 208/1907 S.I.I. Vol 19 No 390 இது ஒரு சிதைந்த கல்வெட்டு. பரகேசரி மன்னரின் ராணி ஒருத்தி திருவிடைமருதூர் இறைவனுக்கு பொன்னால் ஆன மகுடம் ஒன்றை வழங்கியுள்ளார். கல்வெட்டு சிதைந்துள்ளதால் இவ் ராணியின் பெயர் மற்ற விபரங்கள் ஏதும் அறிய இயலவில்லை. எனவே இக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என்பதை அறிய இயலவில்லை. ஆட்சியாண்டு இல்லாத கல்வெட்டுகள் 1.ARE.196/1907 S.I.I.Vol 19 No.448. முதலாம் பரந்தகன் மகன் உத்தமசீலி திருவிடைமருதூர் இறைவனுக்கு விளக்கு வைக்க மகேந்திரமங்கலம் என்ற கிராமத்தில் இரு துண்டு நிலங்களை காசு கொண்டு விலைக்கு வாங்கி கோயிலுக்கு அளித்தார். இக் கல்வெட்டில் வரும் பராந்தக சோழனின் மகன் இளவரசன் உத்தமசீலி என்ற சோழன் முதலாம் பராந்தக சோழனின் காலத்திலேயே வாழ்ந்து பின் சரித்திரத்திலிருந்து காணாமல் போனவர் (8),. இவர் பெயரில் கல்லணைக்கு பக்கத்தில் சோழர் காலத்தில் ஒரு சதுர்வேதி மங்கலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனவே இப் பரகேசரி கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் காலத்தியதாகும். 2.ARE.268/1907 S.I.I.Vol 19 No.449 இது ஒரு சிதைந்த கல்வெட்டு. திருவிடைமருதூர் இறைவனுக்கு 2 நுந்தா விளக்கு எரிக்க 200 சாவா மூவா பேராடுகள் இடையர்களிடம் கொடுக்கப் பட்டு எரிக்கப்பட்டது. கல்வெட்டு சிதைந்துள்ளதால் தானம் அளித்தவரின் பெயர் போன்ற மற்ற விபரங்கள் அறிய இயலவில்லை. எனவே இக் கல்வெட்டு எந்த் பரகேசரி மன்னனுடையது என்பதை அறிய இயலவில்லை. 3.ARE.246/1907 S.I.I.Vol 23 No.246 இதுவும் ஒரு சிதைந்த கல்வெட்டு. திருவிடைமருதூர் இறைவனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிப்பதற்கு 91 ஆடுகள் தானம் வழங்கப் பட்டது. இவ்வாடுகளைப் பெற்ற கோயில் நிர்வாகத்தினர் அவ் வாடுகளை இடையர்களிடம் கொடுத்து விளக்கு எரித்தனர். மேலும் தைப் பூசத் திருநாளில் அன்று இறைவனுக்கு அமுது படைக்கவும் கோயில் நிர்வாகிகள் தீர்மானித்தனர். இக் கல்வெட்டு சிதைந்துள்ளதால் தானம் வழங்கியவரின் பெயர் போன்ற விபரங்கள் அறிய இயல்வில்லை.. எனவே இக் கல்வெட்டு எந்த பரகேசரி மன்னனுடையது என்பதை அறிய இயலவில்லை இவ் 25 கல்வெட்டுகளை ஆராய்ந்ததில் 10 கல்வெட்டுகள் மட்டுமே கீழ்க்கண்ட மன்னனுடையது என்பதை ஆராய்ந்தோம். முதலாம் பராந்தக சோழனுடையது ------------------ 2 மீதமுள்ள 15 கல்வெட்டுகள் எந்த மன்னனுடையது என்பதை அறிய முடியவில்லை. இப்போதைக்கு பரகேசரி என்ற பட்டம் சூடிய ஒரு மன்னனுடையது எனக் கொள்வோம். இனி இராஜகேசரி என்ற பொதுப் பெயருட்ன் அழைக்கப்படும் கல்வெட்டுகள் எந்தெந்த மன்னனுடையது என்பதை ஆராய்வோம். ( வளரும்) அடிக்குறிப்புகள்: |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |