http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > கலையும் ஆய்வும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
பால.பத்மநாபன்

 



                 காருடைக் கொன்றை மாலை                                                                       

                         கதிர்மணி யரவி னோடு

                  நீருடைச் சடையுள் வைத்த

                         நீதியார் நீதி யாய

                  போருடை விடையொன் றேற

                        வல்லவர் பொன்னித் தென்பால்

                  ஏருடைக் கமல மோங்கு

                        மிடைமரு திடங்கொண் டாரே. 

                                        தேவாரம்--  அப்பர்-4-35-3  (1)



பொருள்: காவிரியின் தென்கரையில் அழ்கிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய் அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார். (2)



இக்கொயிலிருந்து நடுவன் அரசால் பதிவு செய்த 151 கல்வெட்டுகளில், 2 கல்வெட்டுகளின் மசிப்படிகள் காணாமல் போனதாலும் ஒரு  கல்வெட்டு மீண்டும் மறுமுறை பதிவு செய்யப்பட்டதாலும் மீதமுள்ள 148 கல்வெட்டுகள்தான் இக் கோயிலைப் பற்றியும் இவ்வூரைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றன. மன்னர் பெயரைக் குறிப்படும் சிறப்பு அடைமொழியொ, மெய்கீர்த்தியோ அல்லாமல் பொதுவான பெயரான பரகேசரிவர்மன் என்றழைக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தம்-27  உள்ளன. அதில்



1)   2-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை---------------- 2

2)   3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை--------------- -2

3)   4-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை---------------- 5                         

4)   6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை---------------- 1-

5)   9-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை---------------- 2

6)  10.ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை----------------- 1

7)  11-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை----------------- 3

8)  12-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை----------------- 1

9)  14-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை----------------- 6

10) 19-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளின் எண்ணிக்கை----------------- 1

11) ஆட்சியாண்டு இல்லாத பரகேசரி கல்வெட்டுகள்-----------------------3

கூடுதல்---------------27





பரகேசரியின் 2-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்

 1) ARE 244/1907- S.I.I.VOL-19 No-3



இக் கல்வெட்டின் பாடம் நடுவன் அரசு வெளியிட்ட தென்னிந்தியாவின் கல்வெட்டு தொகுதி 19 ல் 3-ம் எண்ணாக பதிவாகியுள்ளது.



திருவிடைமருதூர் இறைவனுக்கு, சிங்களாந்தக தெரிந்த கைக்கோளர் படையைச் சேர்ந்த முத்தி  திருநாரணன் என்பவர் சந்தன மரத்தால் ஆன கைப்பிடி உள்ள கூர்மையான வாள் ஒன்று கொடுத்துள்ளார். சிங்களாந்தகன் என்ற சிறப்புப் பெயர் முதலாம் பராந்தகனுக்கு உரியதாகும். முதலாம் பராந்தகன் தனது முதல் மூன்று ஆட்சியாண்டிற்குள் மதுரையைக் கைப்பற்றி பாண்டியனை தோற்க்கடித்தான். இதனால் இவன் மதுரை கொண்ட பரகேசரி என்று அழைத்துக்கொண்டான். இவனின் 3-ம் ஆட்சியாண்டு முதல் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இதனை உறுதிபடுத்துகின்றன. (3)



தோற்ற பாண்டிய மன்னன் சிங்களத்திற்கு (இலங்கை) சென்று படை உதவி கேட்டதின் பேரில் சிங்களப்படை தமிழகம் வந்து பாண்டியப்படையுடன் இணைந்து வெள்ளூர் என்னுமிடத்தில் சோழனை எதிர்த்தன.(4)  இப்போர் பராந்தகனின் 8-ம் ஆட்சியாண்டில் நடந்திருக்கவேண்டும் என்று நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ளார். {4} இப்போரில் சிங்களர் படையும் பாண்டிய படையும் தோல்வி கண்டன. பின்னர்  சிங்களத்தில் நடைபெற்ற போரிலும் சோழர் படை சிங்களப்படையை தோற்கடித்து மலைக்குகையில் ஒளியுமாறு செய்தது. இதனால் பராந்தகன் தன்னை சிங்களாந்தகன் என்று அழைத்துக்கொண்டான் .இவையெல்லாம் இவனின் 8-ம் ஆட்சியாண்டிற்கு பிறகு நடைபெற்றவையாகும். (5)  





பராந்தகனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் மதிரை கொண்ட பரகேசரி என்றே முதலாம் பராந்தகரை அழைக்கின்றன. இவனின் 12-ம் ஆட்சியண்டு கல்வெட்டுக்ள் பாண்டியநாட்டு வெள்ளுரில் நடைபெற்ற போரில் பாண்டிய மற்றும் ஈழப் படைகளை வென்றதை குறிப்படுகின்றன.(6) இவ் வெள்ளூர் போர் கி.பி.915-ல் நடைபெற்றிருக்கவேண்டும் என்று நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ளார்.(7) எனவே சிங்களாந்தகன் என்ற பெயர் பராந்தகனின் 8-ம் ஆட்சியாண்டிற்கு பிறகுதான் ஏற்பட்டிருக்கவேண்டும்.      ஆனால் இக் கல்வெட்டு 2-ம் ஆட்சியாண்டை குறிப்படுவதால், இக் கல்வெட்டு பராந்தகனுடையது அல்ல எனத் தெளியலாம். பராந்தகனுக்கு பின் வந்த ஒரு பரகேசரி மன்னனுடையதாகலாம்.  கண்டராதித்த சோழனுக்கு பின் ஆண்ட அரிஞ்சியன் சோழன், இளவரசனாய் ஆட்சி செய்த ஆதித்தகரிகாலன் அல்லது உத்தமசோழன் ஆகிய மூவரில் ஒருவராகலாம்.





 

2) ARE 253/1907- S.I.I.VOL-19 No4



இக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 19 ல் 4-ம் எண்ணாக பதியப்பட்டுள்ளது.



திருவிடைமருதூர் கோயிலின் கருவறைக்கு முன்பாக உள்ள பெரிய மண்டபத்தின் முன்பாக திருப்பலகணியும், திருக்கதவும்,நிலையும், படியும் கைக்கோளர் படையினரால் செய்யப்பட்டது  இதற்கு தங்கள் குல பெரியோர் திசையாயிரத்து நூற்றுவர் என்ற வணிகக்குழுவினரின் பெயர் சூட்டபட்டு இந்த தர்மத்தை  திசையாயிரத்து நூற்றுவர் காப்பாற்றவேண்டும் என்றும் விரும்பினர். இந்த தர்மத்தினை காப்பவர்கள் பாதம் தங்கள் தலைமேலே என்றும் போற்றியுள்ளனர்.



இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பரகேசரியின் காலத்தில் திருவிடைமருதூர் கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு முன் உள்ள பெரிய மண்டபம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு கோயிலிலும் கருவறை, அர்த்த மண்டபம் அல்லது முகமண்டபம், அதற்கடுத்து மகாமண்டபம் என்று கட்டடக்கலையின் இலக்கணத்திற்கு உட்பட்டு, இக்கோயிலில் கருவறை, முகமண்டபம், கல்வெட்டில் சொல்லப்படுகின்ற பெரிய மண்டபம் என்கின்ற மகாமண்டபம் இருந்துள்ளன. இம்மகாமண்டபத்தின் முன்பில் அதாவது மகாமண்டபத்தின் நுழைவாயிலில் பலகணியும்,திருக்கதவும், நிலையும், படியும் கட்டப்பட்டது



இத்ற்கு முன்னர் இம்மண்டபம் திறந்த மண்டபமாய் கிழக்குப் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். எனவே இம் மகாமண்டபத்தின் கிழக்கு சுவர் எடுத்து அதில் பலகணியும்,வாயில் வைத்து அதில் நிலையும் படியும் அமைத்து திருக்கதவும் எடுப்பித்தனர்



இக்கோயில் எடுப்பித்த முதலாம் பராந்தகான் [ இதை 4ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ஆராய்வோம் ] அல்லது அவருக்கு பின் வந்த பரகேசரி என்று பட்டம் சூடிய அரிஞ்சியன் அல்லது ஆதித்த கரிகாலன் அல்லது உத்தம சோழன் காலத்தியதாக கருதலாம்



இதற்கு முன்னர் ஆராய்ந்த பரகேசரியின் 2 ம்   ஆட்சியாண்டு கல்வெட்டில் சிங்களாந்தக கைக்கோளர் படையைச் சார்ந்த ஒரு வீரன் இறைவனுக்கு  சந்தன வாள் கொடுத்துள்ளார்



இக் கல்வெட்டிலும் கைக்கோளர் படையினர் இக் கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளதால் இவ்விரண்டு கல்வெட்டுகளும் பரகேசரி என்று பட்டம் சூடிய ஒரே மன்னனுடையதாகலாம்                                                            



பரகேசரியின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1 ARE 151/1895 S.I.I.VOL-5 No715



இக்கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 ல் 715-ம் எண்ணாக பதியப்பட்டுள்ளது.



இக்கல்வெட்டு கண்டராதித்த முத்தரையன் என்ற அரசு அதிகாரி இக் கோயிலில் ஒரு நுந்தா விளக்கு எரிய வைக்க 96 ஆடுகளை வழங்கியதை தெரிவிக்கின்றது.ஒரு அரசு அதிகாரி அல்லது ஒரு சிற்றரசர் தான் வாழும் காலத்தில் உள்ள மன்னரின் பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொள்வது வழக்கம்.(8) இக்கல்வெட்டில் வரும்  கண்டராதித்த என்ற பெயர் கண்டராதித்த சோழனை குறிப்பதாகும்.ஆனால் கண்டராதித்த சோழன் இராஜகேசரி ஆவான். எனவே இக் கல்வெட்டு இவனோடு சேர்ந்து அல்லது பின் ஆண்ட அரிஞ்சயன் சோழனுக்கு உரியதாகலாம்...  



2. ARE 247/1907 S.I.I.VOL19 45



இக்கல்வெட்டு பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒருவன், திருவிடைமருதூர் கோயிலுக்கு வெள்ளிக் கலசம் ஒன்றை கொடுத்துள்ளான். இக் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் தானம் அளித்தவரின் பெயர் போன்ற விபரங்களை அறிய இயலவில்லை. 



                                                    வளரும்

அடிக்குறிப்புகள்

1.தேவாரம் 4 ம் திருமுறை –அப்பர்

2.பன்னிரு திருமுறை—மூலமும் உரையும் –ஜி.ச.முரளி –சதுரா பதிப்பகம்- பக்கம்-744

3.ARE 29/1907,ARE 157/1928, ARE 11/1931

4.சோழர்கள்- K.A.நீலகண்டசாஸ்திரி பக்கம்-166

5..சோழர்கள்- K.A.நீலகண்டசாஸ்திரி பக்கம்-166

6.ARE 231/1926,S.I.I.Voi-3 No 99

7. .சோழர்கள்- K.A.நீலகண்டசாஸ்திரி பக்கம்-166



 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.