http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > கலையும் ஆய்வும்
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
மு. சுப்புலட்சுமி


ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com
வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி

அப்பரும் மகேந்திரரும் - பண்பாட்டுப் புத்துயிர்ப்பில் இரு ஆளுமைகள்

இலக்கியங்கள் வாயிலாக, சங்ககாலம் தொடங்கிக் காப்பியகாலம் கடந்துப் பத்திமை காலத்துள் சுவைமிகு பயணத்தைத் தொடர்கையில், ஆற்றல்மிகு தமிழ்ப் படைப்பாளர்கள் சமயம்சார்ந்த தெளிவான வரலாற்றுப் பாதையையும் பார்வையையும் நமக்கு வழங்குகிறார்கள். வேலன் வெறியாட்டும், கொற்றவை வழிபாடும் வீரமிகு ஆற்றலுடன் நடந்தேறியதோடு பெளத்த பள்ளியும், சமணப் பள்ளியும், அந்தணர் பள்ளியும் அவரவர் முறைகளில் தமக்குள் இணக்கமாகச் செயல்பட்டதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. பலவாகச் சிதறிக்கிடந்த புதிய கடவுளரும் அவர்கள் சார்ந்த கதைகளும் நம்பிக்கைகளும் பல்வேறு இனக்குழுவினரிடையே பெருகிவந்த நிலையைக் காப்பிய காலம் ஒளியூட்டுகிறது. இப்படி, காலம் சிறுகச்சிறுகச் செதுக்கித்தந்த பரந்துபட்ட இறைச்சிந்தனை, எங்கும் நிறைந்து இடர்களைந்து அனைத்து உயிர்களையும் காக்கும் ஓரிறைவன் சிவனே என்பதை வலியுறுத்தும் பேரியக்கமாக உருவெடுத்தது, அப்பர் பெருமான் சூலைநோயுற்றுச் சைவம் தழுவி, பிணி தீர்ந்து எழுந்த நேரத்தில்.

மகேந்திரர் புறச்சமயத்திலிருந்து சைவத்திற்கு மாறியதைத் திருச்சிராப்பள்ளி குடைவரைக் கல்வெட்டு உரைக்கிறது. அந்தப் புறச்சமயம் சமணமென்று உறுதிசெய்வது சேக்கிழாரின் பெரியபுராணம். மகேந்தரர் சைவராக மாறியபின் எழுதிய நூலான ‘மத்தவிலாச பிரகசனம்’, அவர் காலத்தே பெளத்தம், காபாலிகம், பாசுபதம் ஆகிய பிற சமயங்களின் நிலை, பல்வேறு சமயத்தவர் தம்முள் இணக்கமின்றி இருந்தமை, பெளத்தர் தங்கள் சமயக் கட்டளைகளை மீறி வாழ்ந்தநிலை ஆகியவற்றைக் காட்டுவதாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம் ‘பல்லவர் வரலாறு’ நூலில் சுட்டுகிறார்.

இப்படிபட்ட சமயச் சிக்கல்களால் சமூகப் போராட்டங்கள் நிறைந்திருந்த காலக்கட்டம்தான் மகேந்திரர் என்ற மன்னரும் அப்பர் என்ற அடியாரும் சிறிதுகாலம் சமணர்களாக வாழ்ந்து, பின் சைவம் தழுவிய ஏழாம் நூற்றாண்டு.

மகேந்திரர் சைவத்திற்கு மாறக் காரணமாக இருந்தவர் அப்பர் என்பது நமக்கு தெரியும். ஆனால், மன்னரை மாற்றிய அடியவரின் செயலால் அன்றைய தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் சமூக மறுமலர்ச்சி, பத்திமைப் பேரொளிக்குப் பின்னால் நம் பார்வைக்காகவும் புரிதலுக்காகவும் காத்துக் கிடக்கிறது. அப்பர் பல்லோரைத் தம் பாடல்களால் சிவனைப் பின்பற்றச் செய்திருப்பார். ஆனால், காஞ்சிமுதல் புதுக்கோட்டைவரை அகண்ட தமிழ்நிலத்தை ஆண்ட பல்லவப் பேரரசர் மகேந்திரரை மாற்றிய செயற்கரிய சிவநெறிச் செயல், அரசியல் பெருநிகழ்வாகவும் மாறிப் போனது.

போர்த்திறத்தில் சத்ருமல்லர், இசைவல்லமையில் பலபாடி மற்றும் சங்கீர்ணஜாதி, படைப்பாற்றலில் சித்திரக்காரப்புலி, பன்முகத் திறனில் விசித்திரசித்தர் என மகேந்திரரின் புகழ்ப்பாடும் சிறப்புப் பெயர்களுக்கு அவர் வாழ்வே சான்று. ஆனால், தமக்குச் சைவநெறியை அறிவுறுத்திய அப்பர் காரணமாகத் தமிழ் மண்ணுக்கு மன்னர் வழங்கிய கொடைகளை வெளிப்படுத்தும் சிறப்புப் பெயர்கள் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகின்றன.


நாயன்மார், திருத்தவத்துறை

சமணம் விடுத்த மகேந்திரர் புத்தர்களின் வீழ்ச்சிக்கும் காரணராகிப் புக்கபிடுகு என்றும், தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ்நாடெங்கும் கோயில்கள் எழுப்பியதால் சேத்தகாரி என்றும் அழைக்கப்படுகிறார். இந்தப் பெயர்களைக் காட்டிலும் பெரும் ஈர்ப்புடைய மற்றொரு பெயர் மகேந்திரருக்கு உண்டு. கோயில் கட்டுமானக் கலையிலும் கோயில் சார்ந்த சிற்பம்-இசை-நடனம்-கல்வெட்டு என்ற பல்துறைப் புதுமைகளாலும் ‘மறுமாற்ற’ என்ற பிராகிருதச் சொல்லால் அவர் போற்றப்படுகிறார். அதன் பொருள் ‘மறுமலர்ச்சியாளர்’ என்பது. திருநாவுக்கரசர் தம் பதிகங்களில் காட்டும் சமூக மறுமலர்ச்சி பற்றி எழுதுகையில், அவரால் சைவத்துக்கு மாற்றப்பட்ட மகேந்திரர் ‘மறுமலர்ச்சியாளர்’ என்ற சிறப்புப் பெயருடன் போற்றப்பட்டது வியத்தகு தொடர்பு இல்லையா?

அப்பரும் மகேந்திரரும் சைவத்தால் இணைந்த இருவேறு ஆளுமைகள். அரசரும் அடியாரும் தத்தம் வழிகளில் மக்கள் வாழ்வைப் பத்திமையாலும் புதுமையாலும் வருடிச் சென்ற நிகழ்வே ஏழாம் நூற்றாண்டுப் பல்லவ மண்ணின் தலையாய வரலாறு. தமிழகத்தில் பண்பாட்டுப் புத்துயிர்ப்பு ஏற்படுத்திய இருவரின் பாதைகள் வேறென்றாலும் இணையும் புள்ளிகள் பலவாக இருப்பதைக் காணமுடிகிறது.

அவ்வகையில், மகேந்திரர் தம் கோயில்களால் வரலாறு படைக்கிறார்; அப்பரோ, தம் காலத்துக்கு முந்தைய தமிழகத்தில் கோயில் செழித்த வரலாறையும் தமிழகத்தின் கோயில்கலை வரலாறையும் தம் பதிகங்களில் படைத்தளிக்கிறார்.

தமிழகத்தின் முதல் கற்றளி, அதாவது கற்கோயிலை எழுப்பியவர் மகேந்திரர். இன்றைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்ற ஊரில், மலையைக் குடைந்துத் தாம் அமைத்த கோயிலில், ‘பிரம்மா ஈசுவரன் விஷ்ணுவிற்காகச் செங்கல், மரம், உலோகம், சுதையில்லாமல் ‘லக்‌ஷிதாயதனம்’ என்னும் இந்தக் கோயிலை விசித்திரசித்தன் கட்டினான்’ என்று கல்வெட்டில் ஆவணப்படுத்துகிறார். புதுமைகளுக்குச் சொந்தக்காரர் என்பதை உணர்த்த ‘விசித்திரசித்தன்’ என்ற சிறப்புப் பெயரை இங்கு பயன்படுத்தும் மகேந்திரர், தலைசிறந்த குறிக்கோள்களுடன் தொடங்கிய தம் சைவப் பயணத்தைக் குறிக்கும் வகையில் ‘லக்‌ஷிதன்’ என்ற தம்முடைய மற்றுமோர் அடைமொழிப் பெயரை அக்கோயிலுக்குச் சூட்டுகிறார்.

மண்டகப்பட்டுக் குடைவரையால் வரலாறு படைத்தார் மகேந்திர பல்லவர் என்பது ஒருபுறமிருக்க, அதை ஆவணப்படுத்திய கல்வெட்டால் தமிழகக் கோயில் வரலாற்றுக்குப் பேருதவி புரிந்திருக்கிறார் அவர். அந்தக் கல்வெட்டு இல்லையென்றால், தமிழகத்தில் செங்கல், மரம், உலோகம் மற்றும் சுதையால் கட்டப்பட்ட, எளிதில் அழியக்கூடிய கோயில்கள் பல ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்ததும், சைவ வைணவ வழிபாடு பல நூற்றாண்டுகளாகத் தமிழ்மண்ணில் தொடர்ந்த நிலையும் தமிழர் முழுமையாக உணர்ந்திருக்க இயலாது. மாமண்டூர், மகேந்திரவாடி, பல்லாவரம், சீயமங்கலம், தளவானூர், சிராப்பள்ளி ஆகிய ஆறு இடங்களிலும் குடைவரைகளை அமைத்தார் மகேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தச் சாதனையைச் செய்ய அந்த விசித்திரசித்தருக்குத் தூண்டுகோலாய் இருந்தவர் யார்? அப்பர் பெருமான்தானே! சமணராயிருந்தபோது தோன்றாத குடைவரைச் சிந்தனை சைவரானதும் குணபரருக்கு விளைந்தது ஏன்? அப்பரே காரணி என்பதினும் காரணம் வேறிருக்க முடியுமா?” என்று விதந்தோதுகிறார் வரலாற்றறிஞர் டாக்டர் இரா. கலைக்கோவன் (‘அப்பர் என்னும் அரியமனிதர் -2’).

மகேந்திரரைச் சைவத்தின்பால் திருப்பியது மட்டுந்தான் அப்பர் செய்த பெருஞ்செயலா? அப்பர் ஓர் அடியார், பதிகம்பாடி; ஆனால், தம்காலத்துக் கோயில்கள் மற்றும் தமக்கு முந்தைய தமிழகத்துக் கோயில்கள் குறித்த செய்திகளை ஆவணப்படுத்தும் வரலாற்றறிஞராகவும் விளங்குகிறார்.

அப்பருக்கு முன்னர் திருமூலரும் காரைக்கால் அம்மையும் ஐயடிகள் காடவர்கோனும் சிவனைத் தனிப்பெரும் கடவுளாகத் தொழுதுப் பாடல்கள் புனைந்திருந்தனர். ஆயினும், தமிழகத்தின் அகண்ட நிலப்பரப்பில் பரவியிருந்த பற்பலக் கோயில்களுக்குக் காலயர நடந்துச் சென்று, அங்கே சிவவழிபாடு ஏற்கனவே செழித்திருந்ததைச் சொன்னதோடு, தமிழரின் கோயில் கட்டடக்கலை வல்லமையையும் வளர்ச்சி நிலையையும் பதிகங்களில் தெளிவுபடக் காட்டுகிறார் திருநாவுக்கரசர்.


கோயில் கட்டமைப்பு வகைகள்

பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், தூங்கானைமாடக் கோயில் என்று தமிழகத்தில் கட்டப்பட்டிருந்த எண்வகைக் கோயில்களைத் தம் பதிகங்களில் இனம்காட்டுகிறார்.

ஒரே பாடலில் ஏழு வகைகளைப் பட்டியலிடுகிறார் -

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே (6.71.05)

மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே (4.109.1) என்று இன்றைய பெண்ணாகடத்துச் சுடர்க்கொழுந்தீசுவரர் கோயிலைச் சுட்டிப் பாடுகிறார். பதிகங்களில் இவர் வழங்கிய பெயர்கள் கொண்டே பல கோயில்களில் இறைவனும் உமையும் இன்றளவும் விளிக்கப்படுகின்றனர் என்பது கூடுதல் செய்தி.

கடந்தையுள் தூங்கானைமாடக் கோயில் போலவே, மீயச்சூர் இளங்கோயில், கடம்பூர் கரக்கோயில் என்று குறிப்பிட்டும் அடையாளப்படுத்துகிறார். புகலூர், புத்தூர், திருப்புறம்பயம், திருமாற்பேறு, திருவலஞ்சுழி என்று பலவாக இருக்கும் பெருங்கோயில் பட்டியலையும் தருகிறார் (6.070.11).

நிலம் சார்ந்த கோயில் பெயர்களும் வகைகளும்

தமிழகத்துக் கோயில்களின் பெயர்கள் அவை அமைந்த நிலம் சார்ந்து, இயற்கை வளம் சார்ந்து, வணங்கப்படும் இறைவன் சார்ந்து அமையப்பெற்றதையும் தம் பாடல்களில் காட்டுகிறார் அப்பர். ஆறாம் திருமுறையின் பொதுப்பதிகத்தின் (6.071) பதினொரு பாடல்களில் தேர்ந்த ஆசானைப்போல முறையாக அப்பெயர்களை விளக்குகிறார்.

முதல் பாடலில் சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகள்; இரண்டாவது பாடலில் கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம் உள்ளிட்ட 8 வீரட்டானங்கள்; மூன்றாவது பாடலில் செம்பங்குடி, நல்லக்குடி, நாட்டியத்தான்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி உள்ளிட்ட 19 குடிகள்; நான்காவது பாடலில் ஆரூர், பெரும்பற்றப்புலியூர், நறையூர், நல்லூர், நாரையூர், உறையூர் உள்ளிட்ட 19 ஊர்கள்; ஐந்தாவது பாடலில் 78 பெருங்கோயில்கள் இருந்த குறிப்பு மற்றும் 7 கோயில் கட்டுமான வகைகள்; ஆறாவது பாடலில் மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு உள்ளிட்ட 8 காடுகள்; ஏழாவது பாடலில் முல்லைவாயில், ஆலவாயில், குடவாயில் உள்ளிட்ட 9 வாயில்கள்; எட்டாவது பாடலில் நாகேச்சுரம், அகத்தீச்சுரம், சித்தீச்சுரம், இராமேச்சுரம் உள்ளிட்ட 15 ஈச்சுரங்கள்; ஒன்பதாவது பாடலில் கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், அண்ணாமலை உள்ளிட்ட 17 மலைகள்; பத்தாவது பாடலில் நள்ளாறு, பழையாறு, திருஐயாறு உள்ளிட்ட 6 ஆறுகள், வளைகுளம், தளிக்குளம், உள்ளிட்ட 4 குளங்கள், அஞ்சைக்களம், நெடுங்களம் உள்ளிட்ட 3 களங்கள்; கோலக்கா, ஆனைக்கா உள்ளிட்ட 4 காக்கள்; பதினோராவது பாடலில் தவத்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 துறைகள் என்று வகைப்படுத்தி மலைக்க வைக்கிறார் திருநாவுக்கரசர் என்னும் திருத்தொண்டர்.

தனிக்கோயில் பெயர்கள் 134, பெருங்கோயில்கள் 78 சேர இந்தப் பதிகத்தில் மட்டும் 212 கோயில்களை அடையாளப்படுத்துகிறார் அப்பர் என்ற வரலாற்றாசிரியர். ஆய்வாளர்கள் அட்டவணையிட்டு ஆவணப்படுத்தக்கூடிய அளவில் முறையாக அளித்திருக்கும் பாங்கை என்னெவென்று பாராட்டுவது! தனிக்கோயில் பதிகங்களிலும் இன்னபிற கோயில்கள் பற்றிய குறிப்புகள் தருவது அவர் இயல்பு.

அப்பர் பாடிய இந்தக் கோயில்கள் அவர் காலத்தே புதிதாகத் தோன்றியவை அல்ல; அவர் காலத்துக்குக் குறைந்தது நூறு நூற்றைம்பது ஆண்டுகளாகத் தமிழ்மண்ணில் வழிபாட்டில் இருந்தவை. அவர் வெளிப்படுத்தும் புராணச் செய்திகளோ, பல முந்தைய நூற்றாண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தில் பரவியிருந்த கதைகள். கூடுதலாக, அவர் காட்டும் போற்றுதலுக்குரிய கோயில் கட்டடக்கலை வளர்ச்சி அப்பர் சைவத்துக்கு மாறிய காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்த தமிழகத்து வரலாறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமணமும் பெளத்தமும் நிலைகுன்றிய ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், அப்பரால் பெயர் சுட்டப்பெற்றுப் பெருமையுற்ற இந்தக் கோயில்கள் புத்தொளியும் உயிர்ப்பும் பெற்றிருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்பரின் அன்புநெறிப் பாடல்கள் வழங்கும் இந்தச் ‘சமூக மறுமலர்ச்சித்’ தகவல்கள், தமிழகக் கோயில் வரலாறு பற்றிய இன்றியமையாத் தரவுகளாக இன்றைய ஆய்வுகளுக்கும் பேருதவி புரிகின்றன.

சிவனைப் போற்றிய அடியாராக மட்டும் நின்றுவிடாமல் தமிழகக் கோயில்களை அடையாளம் காட்டிய திருநாவுக்கரசர், மனத்தூய்மையோடு ஆலயத்தூய்மையின் தேவையை வலியுறுத்தி, அக்கோயில்களின்பால் மக்கள் பொறுப்புகள் என்னென்ன? கோயில் பராமரிப்பு எப்படி இருக்கவேண்டும்? என்பனவற்றையும் அறிவுறுத்துகிறார். இறைவழிபாடு என்பது அன்புடையோர் கூடி இழுக்கவேண்டிய தேர் என்பதை, பத்திமையைத் தாண்டிய சமூகப் பற்றாளராகத் தம் பதிகங்களால் எங்ஙனம் அறிவுறுத்துகிறார் என்பதைத் தொடரும் கட்டுரையில் காணலாம்.

நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

துணைநூல்கள்
1. டாக்டர் மா. இராசமாணிக்கனார், சைவ சமயம்
2. டாக்டர் மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு
3. டாக்டர் மா. இராசமாணிக்கனார், பெரிய புராண ஆராய்ச்சி
4. டாக்டர் மா. இராசமாணிக்கனார், கால ஆராய்ச்சி
5. டாக்டர் இரா. கலைக்கோவன், காலப்பதிவுகள், வரலாறு.காம்
6. டாக்டர் இரா. கலைக்கோவன், பேரறிவாளர், வரலாறு.காம்
7. டாக்டர் இரா. கலைக்கோவன், அப்பர் எனும் அரிய மனிதர், பகுதி 1,2,3; வரலாறு.காம்
8. டாக்டர் இரா. கலைக்கோவன், இருண்ட காலமா?

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.