http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > கலையும் ஆய்வும்
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

முதல் இராஜராஜர்

முதல் இராஜராஜரின் 5 கல்வெட்டுகளில் 11ஆம் ஆட்சி யாண்டில் பதிவானது குமரடிநங்கையின் மகள் செக்கையளிடம் பெற்ற 25 கழஞ்சுப் பொன்னுக்கு வட்டியாகக் கலிகைவிடங்கரின் திருஅமுதுக்கு நிசதம் குறுணி நெல்லாக ஆண்டுக்கு 90 காடி நெல் கிராமப் பஞ்சாரக்காலால் அளந்து அளிக்கச் சீறூர் ஊரார் இசைந்தமை தெரிவிக்கிறது.31 மன்னரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளுள் ஒன்று, தக்கோல விடங்கதேவரின் படையலுக்காகத் திருவூறல் நங்கையின் மகள் வீரம்மை தன்ம கட்டளைக்கல் லால் நிறுக்கப்பெற்ற 23 கழஞ்சுப் பொன்னைத் தக்கோலப் பிடாகையான சீறூர்க் குடியினரிடம் அளித்தமை சொல்ல, மற்றொரு கல்வெட்டு, திருவூறல் நங்கையின் மற்றொரு மகளான கோவிந்தவ்வை பதினொன்றரைக் கழஞ்சுப் பொன்னளித்தமை குறிக்கிறது.32

முதல் இராஜராஜரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கோயிலில் நந்தாவிளக்கேற்றப் பெண்ணொருவர் 90 ஆடுகள் தந்தமை கூற, அவரது 26ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தக்கோலமான சத்திரியசிகாமணிபுரத்துத் திருவூறல் இறைவனுக்கு நந்தாவிளக்கேற்ற 96 ஆடுகள் தரப்பெற்றமை சுட்டுகிறது. இக்கல்வெட்டில், ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணையிற் கோட்டத்துத் தனியூராகத் தக்கோலம் குறிக்கப்படுகிறது.33

விமலாதித்தர், முதல் இராஜேந்திரர்

விமலாதித்தரின் 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருவூறல் தேவனார் மகள் திருவூறல் நங்கையின் மகள் அத்தியூர் நங்கை நந்தாவிளக்கேற்ற அளித்த 100 ஆடுகளை நாட்டுமன்றாடி பெற்று விளக்கேற்றும் பொறுப்பை ஏற்றமை கூற, முதலாம் இராஜேந்திரரின் இரண்டு கல்வெட்டுகளுள் ஒன்று, திருவேங்கடக் கோட்டத்துத் தொண்டைமான் பேராற்றூரைச் சேர்ந்தவரும் இராஜேந்திரசோழ பிரம்மாதிராயரின் பணிப் பெண்ணுமான சரபந்தொந்தவை கோயிலில் நந்தாவிளக்கேற்ற 12 கழஞ்சுத் துளைநிறைப் பொன்னைத் திருவூறல் இறைவனின் தேவதானமான மேல்மலை ஆற்றூர் நாட்டு உறிகையூரான இராஜமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து சபையாரிடம் அளித்து அதன் வட்டி கொண்டு விளக்கேற்றச் செய்த தகவலைத் தருகிறது.34

அதே மன்னரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கோட்டம் வகை செய்த பெரும்பன்றூர்க் கிழவன் கண்ணன் பொன்னன், பல்வேறு நிலத்துண்டுகளிலிருந்து பெறப்பட்டு இராஜகேசரியால் அளக்கப்பெற்ற 266 மரக்கால் நெல் கொண்டு கோயிலில் இராஜேந்திரசோழ தேவர் திருநாளான திருவாதிரையில் திங்கள்தோறும் விழா அமைத்ததாகவும் அதற்கான எண்ணெய்ச்செலவு, புதன்கிழமை தோறும் தேவர்கள்நாதரில் எழுந்தருளும் தேவர்கள்நாதருக்கு எண்ணெய், மஞ்சனக்காப்புச்செலவு, பிரசாதம் பெறுவார்க்கான எண்ணெய்ச்செலவு, நறுமணப்பூக்களால் 5 வடம் கட்ட சாத்திரமாணி மூவருக்கான ஊதியம், பெருந்திருவமுது, இறைஉலாவின்போது விளக்கெரிக்க ஆகும் எண் ணெய்ச்செலவு ஆகியவற்றிற்கு அந்நெல் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் தருகிறது. நிலத்துண்டுகள் இருந்த இடங்களைச் சுட்டும்போது பெருமாள் கோயில், பரியாறு, கோட்டைப்பாக்கம் ஆகியன வெளிச்சம் பெறுகின்றன. நிலங்களின் பெயர்களாகத் திருக்காரிக்குழி, உய்யக்கொண்டான், இராஜசிங்கன், கலிகை விடங்கன், நாற்பத்தெண்மன், தேவர்கள்நாதன், சத்திரியசிகாமணி, திருவூறல்பட்டி முதலியன அமைந்திருந்தன.35

முதல் இராஜாதிராஜர், வீரராஜேந்திரர்

முதல் இராஜாதிராஜரின் 36ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கோயிலுடையார் சிலர் தாம் பெற்ற 18 கழஞ்சுப் பொன்னுக்கான வட்டியாக 7 நாழி ஓர் உரி நெய்யை அருமொழிதேவன் எனும் அளவையால் கோயிலுக்களக்க இசைந்தமை கூறுகிறது.36 அம்மன் திருமுன் தூணொன்றில், ‘திருவளர் திரள்புயம்’ எனத் தொடங்கும் வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி பொறிக்கப்பட்டுள்ளது. மெய்க்கீர்த்தியின் இறுதியில், ‘பரிதொரு பலகையில் பழுதற எழுதிப் பலகையும் சார்த்தி இப்படிக்கு’ என்ற தொடருடன் சரணன் திருமூலன், தேவர்கள்நாதன், அகத்தியன், துறையன் திருவூறல் உடையான், தருணேந்துசேகரன் ஆகிய 5 சிவபிராமணர்களின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.37

முதல் குலோத்துங்கர்

முதல் குலோத்துங்கரின் 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வல்லவப்புறமான தக்கோலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மாசி மக ஆறாம் நாளில் திருச்சாந்தாடலுக்காகத் தக்கோலவிடங்கர் திருமேனி வீதி உலா செல்லும் செலவினங்களுக்காக இராஜ மார்த்தாண்ட சதுர்வேதிமங்கல சபையாரிடம் 25 கழஞ்சுப் பொன் அளித்தமையும் அக்கொடைவழிக் கிடைத்த வட்டியான 50 கலம் நெல் கொண்டு இக்கொடையை நிறைவேற்ற சபையார் இசைந்ததையும் பகிர்கிறது.38

மன்னரின் 17ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தக்கோலமான குலோத்துங்கசோழபுரத்து இறைவனுக்கு சசிகுலசளுக்கித் திருக்காளத்தித் தேவனான யாதவராயன் சூரியகிரகணத்தின் போது கிரகணதட்சிணையாக உறிகையூர்த் தலைப்பாடக நிலத்தைத் திருப்பணிக்காக அளித்தமை தெரிவிக்கிறது.39 மேல்மலை ஆற்றூர் நாட்டு உறிகையூரான இராஜமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து சபையின் நிலவிலை ஆவணமாக அமைந்துள்ள மன்னரின் 36ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, சோழமண்டலத்துத் தென்கரை இராஜேந்திர சோழ வளநாட்டு நகர் வேளான் இராஜேந்திரசோழனான இராஜேசுவர மூவேந்தவேளான் இறைவனுக்குத் திருவீதிமடப்புறமாக அளிக்க சபையிடம் 16 சாண் கோலால் அளக்கப்பட்ட 10,000 குழி (5 வேலி) நிலத்தை 10 காசுக்குப் பெற்றதாகக் கூறுவதுடன், நிலஎல்லைகளாகக் கடப்பேரி, பெரிய ஏரி, கலிங்கு வாய்க்கால் ஆகியனவற்றையும் சுட்டுகிறது. வேலிக்காசு, சில்அந்தராயம் ஆகியன தவிர்க்கப்பட்டு நீர் ஈந்தபடி நீர்ப்பாய்ச்ச வழி செய்து ஆவணம் கையெழுத்தான தகவலும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.40

மன்னரின் 45ஆம் ஆட்சியாண்டில் இறைவன் திருமுன் 10 நந்தாவிளக்குகள் ஏற்றக் கொடையாளி ஒருவர் 60 பொன்னளிக்க, அதைப் பெற்ற சங்கரன்பாடிக் குடிகள் தாங்கள் அவ்வூரை விட்டு வேற்றூருக்கு மாறினாலும் கொடையைத் தவறாது நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். 48ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருவூறல் நகரத்தாரும் கைக்கோளர்களும் மாசி மகத்தன்று நிகழும் இறைத்திருமேனி உலாவிற்கான செலவினங்களைச் சந்திக்க இறையிலி நிலமொன்றைத் தனியாருக்கு விற்றதாகக் கூறுகிறது.41

பிற கல்வெட்டுகள்

இரண்டாம் குலோத்துங்கரின் 12ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கோயில் கணக்குப் பெருந்தூறுடையான் உடையநாயகன் கூத்தாடுவான் கோயில் சிவபிராமணரிடம் 3 பழங்காசு தந்து சந்திவிளக்கேற்றியதாகச் சொல்கிறது.42 மூன்றாம் இராஜராஜருடையதாகக் கொள்ளத்தக்க 2 கல்வெட்டுகளுள் ஒன்று (பொ. கா. 1222), இறைத்திருமுன் நந்தா விளக்கேற்ற அளிக்கப்பட்ட கொடையைக் குறிக்க மற்றொன்று (பொ. கா. 1235), மையக் கோயிலின் பொறுப்பேற்றிருந்த சபையால் 15 கண்டகோபாலன் புதுமாடை கொண்டு நந்தாவிளக்கொன்று ஏற்றப்பட்ட தகவலைத் தருகிறது.43

விஜயகண்டகோபாலரின் 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பல்லவக் குடும்பத்தைச் சேர்ந்த மகாமண்டலேசுவரரான திரிபுராந்தகதேவரின் மகன் மதுசூதனதேவர் வடமுடிகொண்ட சோழபுரமான தக்கோலத்துத் திருவூறல் கோயிலில் மாசித் திங்களில் விழா எடுக்கவும் இறைஉலா நிகழ்த்தவும் நிலக்கொடை அளித்தமை கூறுகிறது. நிலத்தின் கூடுதல் விளைவு கொண்டு கோயில் திருப்பணிகளை மேற்கொள்ளவும் கொடை வழிவகுத்துள்ளது. அதே மன்னரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மன்னரின் நலத்திற்காகக் கோயில் இறைவனுக்கு நள்ளிரவுப் படையலிட மதுசூதனதேவர் அளித்த மற்றொரு நிலக்கொடையைச் சுட்டுகிறது.44

தேவராயரின் பொ. கா. 1427ஆம் ஆண்டுக் கல்வெட்டு, அரச ருக்கான கோயில் சார்ந்த நிலவரிகளில் விபூதி காணிக்கை தவிர்த்த பிறவற்றைக் கோயில் பண்டாரத்தில் செலுத்தி, அத்தொகையைக் கோயில் சார்ந்த வழிபாடு, விழாக்கள், திருப்பணிகள் ஆகிய செலவினங்களுக்குப் பயன்படுத்துமாறு காஞ்சிபுரம், திருக்காளத்தி, திருவொற்றியூர், திருவாலங்காடு, திருப்பாலைவனம், சந்திரகிரி ராஜ்யம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சிவன், விஷ்ணு கோயில்களுக்கு அனுப்பப் பெற்ற அரசாணை திருவூறல் கோயிலுக்கும் வந்தமை கூறுவதுடன், அவ்வாணையைச் செயற்பாட்டுக்குக் கொணர விழைந்த திருவூறல் மாகேசுவரர்கள் வயிரவநாயனார் தலைமையில் தேவராயரால் எழுதப்பெற்ற மடலையும் அரியப்ப தண்டநாயகர், பிக்ஷாவிருத்தி அய்யகள் அனுப்பிய அரசாணையையும் சான்றாவணங்களாகக் கொண்டு மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது.45

சதாசிவதேவ மகாராயரின் பொ. கா. 1544ஆம் ஆண்டுக் கல்வெட்டு, கோபுரம் கட்டுவதற்காகக் கோயில் நிருவாகத்திட மிருந்து சில தேவதான நிலங்களைப் புன்னைவாயலைச் சேர்ந்த பண்டாரெட்டி 100 பொன் அளித்துப் பெற்றதையும் அப்பொன் வழிக் கிடைக்கும் வட்டியில் இறைவனுக்குக் காலையில் தயிர்ச் சோறு வழங்க முடிவானதையும் தெரிவிக்க, அவரது 1557ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இறைவனுக்கும் இறைவி மலையாமகள் அம்மைக்கும் சந்தனம், கஸ்தூரி, கற்பூரம் ஆகியன வழங்கவும் நாள் வழிபாட்டிற்கும் குறிப்பாகத் திங்கட்கிழமைகளில் மகா மண்டலேசுவர இராமராஜய்யரின் மகனான கிருஷ்ணமராஜய்யன் நலத்திற்காக வழிபடவும் கோயில் வருவாய் கொடையாகத் தரப்பட்டமை சுட்டுகிறது.46

இராஜநாராயண சம்புவரையரின் 17ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பல்லவ வழி வந்த பொதுக்கமூர் சித்தராசாவின் மகன் புல்லகண்டசித்தராசா கோயிலின் வழிபாடு, படையல், விழாக்களுக்காகவும் பசவசங்கரன் சந்தி நிகழ்த்தவும் நிலக்கொடை அளித்தமை கூறுகிறது.47 பாணராஜரின் பெருமைகளைப் பேசும் பாடல் வடிவிலமைந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.48

முடிவுரை

தக்கோலம் ஜலநாதீசுவரத்தில் பதிவாகியிருக்கும் 51 கல்வெட்டுகளால் ஊறல் என்ற இவ்வூரின் பெயர் பதிக ஆட்சியிலிருந்து காலந்தோறும் மாறி இன்று தக்கோலமாக அறியப்படும் நிலைவரை பெற்ற மாற்றங்களையும் கோயிலின் வழிபாடு, படையல், ஒளிர்வு ஆகியவற்றிற்கு அருளாளர் பலரால் வழங்கப்பட்ட கொடைகளையும் அறியமுடிவதுடன், இப்பகுதியில் பயன்பாட்டிலிருந்த பொன்னளந்த தருமகட்டளைக்கல், நெல்லளந்த எண்ணாழிக்கால், பஞ்சாரக்கால், கவராமொழி மரக்கால், இராஜகேசரிக்கால், அதே பெயரிலிருந்த நாழி, அருமொழிதேவன் நாழி, நிலமளந்த 16 சாண் கோல் ஆகியனவும் வெளிச்சத்திற்கு வருகின்றன. சோழர் கால ஊர்கள் பலவற்றின் பெயர்களும் அக்காலத்தே இப்பகுதியில் வழக்கிலிருந்த சில்லாயங்கள் சிலவற்றின் பெயர்களும் அறியப்படுவதுடன், இலிங்கத்திரு மேனிகள் பொன்னாலான, ‘கொள்கை’ எனப்படும் கவசம் அணிந்திருந்த செய்தியும் கிடைக்கிறது. அபராஜிதச் சதுர்வேதி மங்கலம் உள்ளிட்ட சில பிராமணக் குடியிருப்புகளைச் சுட்டும் இக்கல்வெட்டுகள் கோயிலுக்களந்த நெல் பெற வந்தாருக்கு அவ்வூரவையார் நாளும் இரண்டு சோறளிக்க இசைந்தமையையும் கூறுகின்றன.

இக்கோயிலில் பணியாற்றிய மூன்று தலைமுறைத் தேவரடியார்களான நந்திரிநங்கை அவர் மகள் குமரடிநங்கை, குமரடி மகள் செக்கையள் ஆகியோரை அடையாளப்படுத்தும் சோழர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்த இரணசிங்க வீரர் பள்ளிக்கட்டில் மண்டபத்தையும் அதற்குப் பள்ளிக்கட்டில் வழங்கிய பார்த்திவேந்திரர் தேவி அருமொழி நங்கையையும் வெளிப்படுத்துவதுடன், அம்மண்டபத்தில் குமரடிநங்கை எழுந்தருளுவித்த கலிகைவிடங்கர் குறித்தும் பேசுகின்றன. இங்குப் பணியாற்றிய திருவூறல்நங்கை எனும் தேவரடியாரின் வீரம்மை, கோவிந்தவ்வை, அந்தியூர்நங்கை எனும் மூன்று பெண்களும் இக்கோயில் இறைவனின் படையல் வழிபாடு, விளக்கு ஆகியவற்றிற்காகப் பொன்னும் ஆடுகளும் வழங்க, கோட்டம் வகை செய்த கண்ணன் திருவாதிரை விழா கொண்டாடியுள்ளார். சில கல்வெட்டுகள் நீர்மேலாண்மை பேச, ஒரு கல்வெட்டு வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியை ஐந்து சிவபிராமணர்கள் பலகையில் பழுதற எழுதிய பாங்கு பகர்கிறது. ஓர் அரசாணையைச் செயற்பாட்டுக்குக் கொணர இக்கோயில் அலுவலர்கள் சான்றாவணங்களுடன் மேற்கொண்ட முயற்சிகளை ஒரு கல்வெட்டு விளக்க, அரசர்கள் நலம் வேண்டி நிகழ்த்தப்பட்ட சிறப்பு வழிபாடுகளை இரண்டு கல்வெட்டுகள் வெவெளிச்சப்படுத்துகின்றன. ஏறத்தாழ 700 ஆண்டுக்கால அளவிற்குப் பரவியுள்ள தக்கோலக் கல்வெட்டுகளால் இப்பகுதியின் வரலாறு புதிய பக்கங்களைப் பெற்றுள்ளது.

குறிப்புகள்
31. SII 5: 1366.
32. ARE 1921: 257, 258.
33. ARE 1921: 247, 259.
34. SII 5: 1364; ARE 1921: 256
35. SII 5: 1378.
36. ARE 1921: 262.
37. SII 5: 1382. இந்நூலாசிரியர்கள் அறிந்தவரையில் சோழ மன்னர் ஒருவரின் மெய்க்கீர்த்தி, ‘பரிதொரு பலகையில் பழுதற எழுதிப் பலகையும் சார்த்தி இப்படிக்கு’ என்ற தொடருடன் பட்டர்கள் ஐவர் கையெழுத்துப் பெற்ற நிலையில் வேறெந்தத் தமிழ்நாட்டுக் கோயிலிலும் காணப்படவில்லை. இப்பதிவைத் தக்கோலத்தின் தனிச்சிறப்பாகக் கொள்ளலாம்.
38. ARE 1921: 243.
39. SII 5: 1379.
40. SII 5: 1381.
41. ARE 1921: 263, 268.
42. SII 5: 1380.
43. ARE 1921: 265, 266.
44. ARE 1921: 264, 267.
45. ARE 1921: 270.
46. ARE 1921: 269, 272.
47. ARE 1921: 271.
48. ARE 1921: 273.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.