![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 57
![]() இதழ் 57 [ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கழுகுமலை பயணக் கடிதம் - 2
இடம் : திருநெல்வேலி, நாள் : 25 - டிசம்பர் - 2008. அன்புள்ள இராஜகேசரி, வணக்கம். இன்றைய கடிதத்தின் மறுபாதியை உங்களுக்கு அனுப்பவேண்டும் என்று தோன்றியது. இப்பொழுது நான் திருநெல்வேலியில் தங்கும் விடுதியில் இருந்தாலும், மனது என்னவோ இன்னும் எட்டையபுரத்திலேயே இருக்கிறது. எல்லோருக்கும் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன். இன்று பாரதியைப்பற்றிச் சில புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். பள்ளிப்பருவத்தில் ஏழு அல்லது எட்டாம் வகுப்புப் பயிலும்போது ஒருமுறை குடும்பச்சுற்றுலா ஒன்றின்போது எட்டையபுரம் சென்றிருக்கிறேன். என்றாலும், அப்போது என் மனதில் பதியாத சில செய்திகள் இன்று தெரிந்தன. பாரதி மணிமண்டபப் பணிகளை வாழ்த்தி காந்தியடிகள் அனுப்பிய வாழ்த்துச்செய்தி அதில் ஒன்று. தன் கைப்படத் தமிழில் எழுதியிருக்கிறார். பாரதியின் கையொப்பத்தையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதன்முதலாகக் கண்டேன். அதுமட்டுமின்றி, எனக்கு மிகவும் பிடித்த மனதில் உறுதி வேண்டும் பாடலை பாரதியின் கையெழுத்திலேயே வாசித்துப் பேருவகை கொண்டேன். ![]() பாரதி பிறந்த இடம் ![]() பாரதி மணிமண்டபம் ![]() காந்தியடிகள் கடிதம் ![]() பாரதி கையெழுத்து ![]() மனதில் உறுதி வேண்டும் சில வருடங்களுக்கு முன்பு, திராவிட இயக்கங்கள் பாரதிக்கு உரிய மரியாதையைத் தரவில்லை என்றும் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்த அளவுக்குப் பாரதியைப் பாராட்டியதில்லை என்றும் சில கட்டுரைகளில் படித்தும் சிலர் கூறியதைக் கேட்டும் இருந்தேன். பாரதி என்ற வார்த்தையையே கலைஞர் பயன்படுத்தியதில்லை என்றும் பாரதிதாசனைக்கூடப் பாவேந்தர் என்றுதான் குறிப்பிடுவார் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் சன் டிவி நேர்காணலுக்காக அறிவாலயத்துக்குச் சென்றிருந்தபோது திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியைப் பார்வையிட்டேன். அதில் அண்ணா மறைந்தபோது கலைஞர் எழுதிய கவிதையில் பாரதியின் பெயரைக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். பெரும்பாலும் பரவலாக அறியப்படும் அக்கவிதையிலேயே பாரதியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தும், ஏன் அவ்வாறு சொல்கிறார்கள் என்று புரியவில்லை. அதன்பிறகு சிலகாலம் மறக்கப்பட்டிருந்த அந்த விஷயம் இன்று பாரதியின் வீட்டில் இருந்த ஓர் அறிவிப்பைப் பார்த்ததும் தெளிவானது. மேற்கண்ட கூற்றுக்கள் உண்மையில்லை என்று உணர்ந்தேன். அந்த அறிவிப்பு கீழே. ![]() பாரதியைப் பற்றிக் கலைஞர் ![]() சில சங்கல்பங்கள் பிறகு மணிமண்டபத்தைப் பார்வையிட்டுவிட்டுக் கழுகுமலை நோக்கி விரைந்தோம். சமீபகாலமாக பாரதியின்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளான ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியது, இங்கிலாந்து மகாராணியை வரவேற்றுக் கவிதை எழுதியது, தமிழைவிடச் சமஸ்கிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தது, அடங்கி நடப்பவர்களைப் பெட்டைகளென்றும் ஈனப்பறையர்கள் என்றும் குறிப்பிட்ட சொல்லாட்சிகள் போன்றவற்றை வழியில் விவாதித்துக்கொண்டே சென்றோம். சற்று நேரத்தில் வெட்டுவான்கோயில் இருக்கும் மலை கண்ணில் பட்டது. கோவில்பட்டியில் சற்று வழிமாறிப் போனதால் சுமார் ஏழு மணிக்குத்தான் கழுகுமலையை அடைவோம் என்று எண்ணியிருந்த எங்களை ஆறரை மணிக்கு முன்பே கொண்டுவந்து சேர்த்த சாரதியைப் பாராட்டிக் கொண்டிருந்தபோதே, வண்டி வேறொரு திசையில் திரும்பியது. இது என்ன குழப்பம் என்று தெளிவதற்குள் ஒரு கோவிலின் முன் வண்டி நின்றது. அங்கே பல வியப்புகள் எங்களுக்காகக் காத்திருக்கின்றன என்பதை அறியாமலேயே அனைவரும் கீழே இறங்கி அங்கிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தோம். 'கழுகாசலமூர்த்தி கோயில்' என்று எழுதப்பட்டிருந்தது. இக்குடைவரை இருப்பது வெட்டுவான்கோயிலும் சமணச்சிற்பங்களும் அமைந்திருக்கும் அதே மலையா அல்லது இவ்வூரில் இரு வேறு மலைகள் இருக்கின்றனவா என்ற குழப்பம் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. பிறகு கோயிலுக்கு உள்ளே சென்றோம். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் ஒரு மனிதர் கம்பீரமாக வரவேற்றார். தன்னை அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தனது அறைக்குள் அழைத்துச் சென்றார். பரஸ்பர அறிமுகப்படலம் முடிந்தபிறகு கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அதைக் கோயில் என்று சொல்வதைக் காட்டிலும், சில கோயில்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு தொகுதி என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். நாயக்கர் காலம் என்று கருதத்தக்கதாக இருந்த சில தூண்களில் பல வித்தியாசமான சிற்பங்களைக் கண்டோம். ஒரு பழங்காலக் கோயிலுக்குச் சென்றால் தவறாமல் கவனிக்க வேண்டியது கூரையிலிருக்கும் பூதவரி என்று சென்ற சில பயணங்களின்போது முடிவு செய்தோம் அல்லவா? அதுபோல் இந்தப் பயணமும் ஒரு பாடத்தைக் கற்றுத்தந்தது. தூண் சிற்பங்களும் பூதவரிக்கு இணையாகக் கவனிக்கப்பட வேண்டியவை என்பதே அது. திருச்சுழியிலும் சரி, கழுகுமலையிலும் சரி. தூண் சிற்பங்கள் கவனத்தை ஈர்ப்பனவாக இருந்தன. அவற்றைப் புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்திக்கொண்டு, குடைவரையை நோக்கி நகர்ந்தோம். ![]() பின்னலுடன் கூடிய கூடையுடன் நிற்கும் பெண் ![]() திருவாசியுடன் கூடிய சிவலிங்கம் ![]() பிற்காலக் கங்காளர் ![]() சிவலிங்கத்தை வழிபடும் பெண்ணுருவம் (சக்தி?) குருக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, கோயில் நிர்வாக அதிகாரி அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார். பிறகு தலைமைக் குருக்களாகக் கருதப்படுபவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றவர் என்ற தகவல் தெரியவந்தது. பிற கோயில்களில் குருக்கள் பட்டம் பெற்றிருப்பதே அரிதாக இருக்கும் நிலையில், இவர் தமிழில் பட்டம் பெற்றிருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பக்தர்கள் கூட்டம் அன்று அதிகமாக இருந்தாலும் நன்கு ஒத்துழைப்புத் தந்தார். தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, கட்டடக்கலையை ஆராய்ந்து அளவுகளையும் குறித்துக்கொண்டோம். குடைவரை மிகவும் எளிமையான உறுப்புகளைக் கொண்டிருந்தது. முகப்பில் சில இடங்களில் செப்பு மற்றும் வெள்ளித் தகடுகளைப் போர்த்தியிருந்தனர். குடைவரையின் அர்த்தமண்டபத்தில் பொருட்களை வைப்பதற்காக மேடையும் முழுக்காட்டுநீர் வெளியேற வழியும் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டிருந்தது வியப்பூட்டியது. அன்று கூட்டமிகுதியால் குடைவரைக்கு வெளியே அவ்வளவாக ஆய்வு செய்யமுடியவில்லை. எனவே, நாளை பக்தர்கள் வரத்தின்றி இருக்கும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி வெளியில் வந்தோம். ![]() கழுகாசலமூர்த்தி சன்னிதி ![]() ![]() ![]() முகப்பு ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() முகமண்டபம் மற்றும் அர்த்தமண்டபம் ![]() ![]() வாயிற்காவலர்கள் நிர்வாக அதிகாரி தனது அறையில் காத்திருந்தார். கோயிலைப்பற்றிச் சென்றுகொண்டிருந்த பேச்சு, வரலாறு மற்றும் தமிழ் இலக்கியங்கள் பக்கம் திரும்பியது. 'சங்க இலக்கியப் பேரவை' என்ற அமைப்பு ஒன்றைக் கழுகுமலையில் நடத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னதும், தூக்கிவாரிப்போட்டது எங்களுக்கு. தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் இத்தகைய பெயரில் ஓர் அமைப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை. சங்க இலக்கியம் பற்றிப் பல்வேறு தமிழறிஞர்களை அழைத்து மாதாந்திரப் பொழிவுகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறினார். எங்கள் அனைவருக்கும் உற்சாகம் தாளவில்லை. சீதாராமன் ஒருபடி மேலேபோய், 'நானும் இதுவரை எத்தனையோ கோயில் அதிகாரிகளுடன் பழகியிருக்கிறேன். ஆனால் உங்களைப்போல் சிறந்த அதிகாரியை இதுவரை கண்டதில்லை' என்று அனைவரின் உள்ளத்திலும் தோன்றியதைப் 'பளிச்'சென்று சொல்லிவிட்டார். பேச்சாற்றலும் நிர்வாக ஆளுமையும் கொண்ட இவர் கோயில் நிர்வாகத்தைத் தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருக்கிறார். அடிப்படையில் தான் ஒரு வழக்கறிஞர் என்பதையும் பிற்காலத்தில் தமிழில் ஆர்வம் ஏற்படும் என்று தெரியாமலேயே அவர் பெற்றோர் பொருத்தமானதொரு பெயர் வைத்ததையும் அவர் பேச்சிலிருந்து அறிந்தோம். ஆம். அவர் பெயர் தமிழானந்தன்!! அடுத்த மடலில் சந்திப்போம். அன்புடன் கமல் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |