http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 57
இதழ் 57 [ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி,
நளினியின் பைஞ்ஞீலி ஆய்வு அதுவரை படியெடுக்கப்படாதிருந்த பல சோழர் காலக் கல்வெட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவற்றுள் முக்கியமானது முதலாம் இராஜராஜரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இறைவன் விமானத்திற்கு முன்னுள்ள பெருமண்டபத்தின் வடக்குத் தாங்குதளத்தில் இருந்து நளினியால் படித்தறியப்பட்ட இக்கல்வெட்டு, விளத்தூர் நாட்டைச் சேர்ந்த அரங்கன் பழுவூர் நக்கன் என்பார் பைஞ்ஞீலி இறைவனுக்கு இரண்டு சங்கிராந்தியிலும் பூசை, வழிபாடு செய்யவும் அது போழ்து எட்டு அந்தணர்கள் கோயிலில் உணவருந்தவும் வாய்ப்பாகப் பதினேழரைக் கழஞ்சு மூன்று மஞ்சாடி ஆறுமா அளவுப் பொன்னைத் திருவெள்ளறை மேற்சேரி மணியம்பலத்து சபையாரிடம் தந்த தகவலைத் தருகிறது. இந்தச் சிறப்பு வழிபாடுகள் எப்படி நிகழ்ந்தன. இவற்றிற்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்பட்டன என்பனவெல்லாம் கல்வெட்டில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. நக்கனால் தரப்பட்ட பொன்னை வைப்புத் தொகையாகக் கொண்ட சபையார் அதன் வழி வந்த ‘பலிசை’, ‘பொலிசை’, ‘பொலியூட்டு’ எனப் பல சொற்களால் குறிக்கப்படும் வட்டித் தொகையையே செலவினங்களுக்குப் பயன்படுத்தினர். இந்த சங்கிராந்திகளில் இறைத்திருமேனியை நீராட்டக் காவிரியிலிருந்து நீர் கொணரப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. புதிதாகக் கண்டறியப்பட்ட முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுப் பைஞ்ஞீலி இறைவனை, ‘மணவாளர்’ என்றும் இறைவியை ‘பட்டாரகி’ என்றும் அழைப்பது கண்டோம். பைஞ்ஞீலிக்கு அருகில் ‘அழகிய மணவாளம்’ என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் உள்ளமை நினைவிற்கு வந்தது. ஆடித் திங்கள் உத்திராடத் திருநாளில் இறைவனும் இறைவியும் நீராட்டல் பெறவும் பெருந்திருவமுது கொள்ளவும் இராத் திருவிழா எழுந்தருளவும் வாய்ப்பாகத் தினைப்பல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்த சாத்தன் பசுபதியான திருவெள்ளறை மாயிலட்டி என்பார் 23 கழஞ்சுப் பொன்னளித்தார். இந்தப் பொன்னுக்கு எப்படிப் ‘பலிசை’ பொலிந்தது என்பதையும் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. ‘இருபத்து முக்கழஞ்சு பொன்னுக்கும் பலிசையாவது இவ்வாட்டை ஆடி முதலாக கழஞ்சின் வாய்த் திங்கள் இரண்டுமாப் பொன் பலிசையாக வந்த பலிசைப் பொன் முக்கழஞ்சே ஒன்பது மஞ்சாடிப் பொன்’. இந்தப் பலிசைக்குப் பதினேழு கலம் முக்குறுணி நெல் பெறப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பது கொண்டு, அக்காலத்திருந்த நெல் விலையை அறியமுடிகிறது. பெருந்திருவமுதிற்குத் தேவையான ஒரு கலம் அரிசிக்கு, இரண்டு கலம் தூணிப்பதக்கு அளவு நெல் தரப்பட்டுள்ளது. திருவமுது சமைத்தவரைக் கல்வெட்டு, ‘அடுவான்’ என்றழைக்கிறது. நீர் எடுத்து வந்தவரை ‘அட்டுவார்’ என்கிறது. ‘அடுதல்’, ‘அட்டுதல்’ எனும் இத்தகு சொல்லாட்சிகளை இக்கல்வெட்டின் வழிப் பெறமுடிந்தது. ஓர் அடுக்களையில் எத்தகு பணிகள் நிகழ்ந்தன. அவற்றைச் செய்தவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர் என்பனவெல்லாம் இக்கல்வெட்டால் வெளிப்போந்த தரவுகளாயின. பைஞ்ஞீலிக் கோயிலில் இராஜேந்திரர் காலத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யப்பட்டதற்கும் இந்தக் கல்வெட்டே சான்றாகத் திகழ்கிறது. இராத்திருவிழாவின்போது ஏற்றப்பட்ட விளக்குகளுக்கு 32 நாழி எண்ணெய் செலவிடப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இவ்விழாவிற்கென வாழைக்குருத்துக் கொணரப்பட்டதாகவும் சொல்கிறது. பொதுவாகக் கோயில் விழாக்களைப் பற்றிப் பேசும் கல்வெட்டுகளில் வாழைக்குருத்து இடம்பெறுவதில்லை. இராஜேந்திரரின் இந்தக் கல்வெட்டு, வாழைக்குருத்தைச் சிறப்பித்துக் கூறியிருப்பது பைஞ்ஞீலிக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துமாறு அமைந்தமை கண்டு நானும் நளினியும் வியந்தோம். ‘இராத்திருவிழா’, ‘இராப்பூசை’ எனக் கல்வெட்டுகளில் வழங்குமாறு போலவே ‘இராப்பூசல்’ என்ற பெயரில் ஒரு சிற்றூர் விளங்குவதைச் சென்ற வாரம் சிற்றண்ணல்வாயில் சென்றபோது அறியமுடிந்தது. ‘இரா’, ‘இரவு’ எனும் இந்த இரண்டு சொல் வழக்குகளையும் ஆராயும் அவாவும் அப்போது ஏற்பட்டது. நளினி கண்டறிந்த இராஜாதிராஜரின் கல்வெட்டொன்று பைஞ்ஞீலிக் கோயில் இறைவிக்குச் செக்கொன்றையும் அடியாட்கள் எண்மரையும் இரண்டு கரை நாட்டு வாணியர் ஸ்ரீதனமாகத் தந்த தகவலைப் பகிர்ந்துகொண்டது. ‘ஆரண்ய விடங்கர்’ என்ற பெயரால் அக்காலத்தே வழங்கிய முகத்தலளவை பற்றியும் கல்வெட்டு வெளிச்சமிட்டது. இந்த ‘ஆரண்ய விடங்கர்’ என்னும் சொல்லாட்சி சுந்தரருக்குரியதாகும். பைஞ்ஞீலிப் பதிகத்தின் இறுதி அடிகளில் சுந்தரர் கையாளும் இந்தப் பெயரைச் சோழர் காலத்து முகத்தலளவை கொண்டுள்ளது எனில், மக்கள் பதிகங்களோடு எந்த அளவிற்கு ஒன்றியிருந்தனர் என்பதைத் தெளியலாம். மூன்றாம் இராஜராஜரின் மெய்க்கீர்த்தியோடு விளங்கிய கல்வெட்டு, மிகச் சிறந்த நிலவிலை ஆவணமாகத் திகழ்ந்தது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆவணங்கள் எழுதப்பட்ட முறைக்கும் ஆவணங்களில் கையாளப்பட்ட தமிழ்நடைக்கும் இக்கல்வெட்டுச் சிறந்த சான்றாக மிளிர்ந்தது. அதற்கு முன் இது போல் ஆவணக் கல்வெட்டுகளைப் படித்திருந்தபோதும், இக்கல்வெட்டில் செய்திகள் சொல்லப்பட்டிருக்கும் அமைப்பு எங்களைப் பெரிதும் ஈர்த்தது. முற்சோழர் கால நிலவிலை ஆவணங்களுக்கும் பிற்சோழர் கால நிலவிலை ஆவணங்களுக்கும் பல வேறுபாடுகளைக் காணமுடிந்தது. முனைவர் திரு. சு. இராஜகோபால் தம்முடைய முனைவர் பட்ட ஆய்விற்கு இந்த நிலவிலை ஆவணங்களையே கொண்டார் என்பதைத் திரு. அப்துல் மஜீது வழி அறிந்தபோது மகிழ்ந்தேன். நளினி கண்டறிந்த மூன்றாம் இராஜராஜர் கால நிலவிலை ஆவணக் கல்வெட்டுகளுள் ஒன்று, ஆறு வேலி கார் மறு நிலத்திற்கு 15000 காசு விலையென்றது. மற்றொரு கல்வெட்டு 40 வேலி புன்செய் நிலத்தை 10300 காசுக்கு விற்றதாகக் கூறியது. மற்றொரு கல்வெட்டு ஆயிரம் குழிப் புன்செய்யின் விலையை ஐந்நூறு காசு எனக் காட்டியது. ஒரே காலகட்டத்தில் நிலவிய இந்த விலை வேறுபாடுகள் குறித்தும் விரிவான அளவில் ஆய்வு செய்யும் எண்ணம் எழுந்தது. நன்செய், புன்செய், நீர்நிலம், திடல், களர்நிலம் என நிலங்களின் தன்மைக்கேற்பவும் விளைதிறனுக்கேற்பவும் விலை அமைந்திருந்தமையை எங்களின் எளிய ஆய்வுகள் புலப்படுத்தின. பெரிய அளவில் இத்தகு ஆய்வுகளைக் கொண்டு செல்லக் கருதியிருந்தோம். ஆனால், அதற்குள் அடுக்கடுக்கான பணிகள் வந்து சேர்ந்தமையால், நிலவிலை ஆய்வு அப்படியே நின்றுவிட்டது. நளினி கண்டறிந்த புதிய கல்வெட்டுகளுள் ஒன்று, ‘திருத்தொண்டத்தொகை நல்லூர்’ என்னும் பெயரில் அமைந்திருந்த ஊரொன்றை அடையாளப்படுத்தியது. சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தொண்டத்தொகையின் பெயரால் பைஞ்ஞீலிக்கு அருகே ஒர் ஊர் விளங்கியமை அளவற்ற மகிழ்வைத் தந்தது. இலக்கியங்களின் பெயரேற்று விளங்கும் ஊர்கள் தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாகும். கோயில் திருமடைப்பள்ளியில் கிடைத்த கல்வெட்டு அம்மடைப்பள்ளியைக் கட்டியவராகக் ‘கிளைவாழ வாழ்ந்தான்’ என்பாரைச் சுட்டியது. அவர் பெயரே அவர் பண்புகளை விளக்குமாறு இருந்தமை கண்டு வியந்தோம். திருப்பணிகளால் சிதறடிக்கப்பட்டிருந்த பல துண்டுக் கல்வெட்டுகளையும் நளினியின் களஆய்வுகள் வெளிக்கொணர்ந்தன. அவற்றால் ஒய்சளர்கள் இக்கோயிலுக்கு ஆற்றியிருந்த பணிகளையும் அறங்களையும் அறியமுடிந்தது. ஆய்வேட்டைக் காலத்தில் முடிக்க அரும்பாடுபட்டோம். களஆய்வுகளே பல திங்கள்களை விழுங்கிவிட்டதால், எழுதுவதற்குக் குறைந்த அளவு காலமே கிடைத்தது. என்றாலும், நளினியின் முயற்சியும் உழைப்பும் காலத்தே ஆய்வேடு முடியக் காரணமாயின. ஏறத்தாழ மூன்று திங்கள் உழைப்பிற்குப் பிறகு உருவான ஆய்வேட்டை மஜீதிடம் தந்து படித்துக் கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தோம். அவர் முழுவதும் படித்துவிட்டு நளினியின் உழைப்பையும் ஆய்வேடு அமைந்திருக்கும் பாங்கையும் உளமாரப் பாராட்டினார். பட்டயத் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய நளினியின் ஆய்வேட்டை அது போழ்து தொல்லியல்துறையின் இயக்குநராக விளங்கிய திரு. கு. தாமோதரன் பெரிதும் பாராட்டினார். விரைவிலேயே அந்த ஆய்வேட்டைத் தொல்லியல்துறையின் வெளியீடாக நூல்வடிவில் கொணரவிருப்பதாகவும் கூறினார். அவருக்குப் பிறகு பலர் வந்தும் ஆய்வேடு தரப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திருப்பைஞ்ஞீலி தொல்லியல்துறை வெளியீடாக மலரவில்லை. நளினிக்குப் பின்னால் வந்த பல ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகள் நூல்களாகிவிட்டபோதும் நளினியின் ‘திருப்பைஞ்ஞீலி’ அச்சுக்கூடம் செல்லவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள்! பல நேரங்களில் அதே காரணங்கள்! மனித மனங்களின் கீழ்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டி அதற்குச் சில வரிகளைப் பலியிடுவதினும் நல்லவற்றையே திரும்பிப்பார்ப்போம் என்று தடம் மாறுகிறேன் வாருணி. 1989 ஆகஸ்டுத் திங்களில் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து மடலொன்று வந்தது. அதில் 10. 9. 1089 அன்று மணமேற்குடியில் குலச்சிறையார் விழா நடைபெற இருப்பதாகவும் அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றவேண்டும் என்றும் அடிகளார் கேட்டிருந்தார். உடன் இசைவளித்து மடலனுப்பினேன். விழா அழைப்பிதழ் வந்த போதுதான் தவத்திரு அடிகளார் அவ்விழாவில் எனக்குக் ‘குலச்சிறையார் விருது’ அளித்துச் சிறப்பிக்கவிருப்பது அறிந்து நெகிழ்ந்தேன். அவரது பேருள்ளத்தில் என் பணிகளுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்வளித்தது. விழாவில் வானொலி நண்பர் திரு. இளசை சுந்தரமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. ச. முத்துக்குமரனும் கலந்துகொண்டனர். விழா மேடையில் அடிகளாரின் திருக்கைகளால் இரண்டாம் முறையாகப் பொன்னாடை போர்த்தப்பெறும் பேறு பெற்றேன். ‘குலச்சிறையார் விருது’ வழங்கிச் சிறப்பித்ததுடன், ‘கலைக்குரிசில்’ என்ற பட்டத்தையும் அளித்துப் பெருமைப்படுத்தினார்கள். நடிகர் திலகம் திரு. சிவாஜிகணேசனுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய அந்தப் பட்டம் எப்படியோ எனக்கும் வந்து சேர்ந்தது. அடிகளாரின் இனிய புன்னகையும் என் பணிகளை உள்வாங்கித் தக்கமுறையில் வெளிப்படுத்தி என்னை ஊக்குவித்த சொற்பெருக்கும் நெஞ்சில் அவரை ஆழப் பதியவைத்தன. ஒரு தந்தையின் நிலையிலிருந்து அவர் மகிழ்ந்தார். ஒரு மகனின் நிலையிலிருந்து நான் பெருமிதமுற்று நெகிழ்ந்தேன். தமிழ்நாடு முழுவதும் கண்வீச்சும் கருத்துவீச்சும் கொண்ட அப்பெருந்தகையின் அன்பிற்கு எல்லையேது என நினைத்து நிறைந்தேன். அந்த விழாவில் கலந்துகொண்ட துணைவேந்தர் திரும்பும்போது தம்முடன் வருமாறு அழைத்தமையால், நானும் சுந்தரமும் அவருடன் பயணித்தோம். என் பணிகளைப் பற்றியெல்லாம் நன்கு கேட்டறிந்த துணைவேந்தர், அடிகளார் உள்ளத்தில் நான் இடம்பெற்றிருப்பது குறித்துப் பாராட்டி வாழ்த்தினார். அந்தப் பயணம் முழுவதும் நானும் அவரும் சுந்தரமும் நிறையப் பேசினோம். துணைவேந்தரின் அன்பு வட்டத்தில் இணைய அப்பயணம் வழியமைத்தது. அந்தப் பயணத்தின்போதுதான் ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சூழலியல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கக் கையேட்டை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்ப்படுத்தலாம் என்ற கருத்தினைத் துணைவேந்தர் பகிர்ந்துகொண்டார். தமிழில் அறிவியல் வளம் பெருக வேண்டுமென்ற அவரது சிந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வரலாறு, தமிழ் இரண்டிலும் ஒத்த ஆர்வம் கொண்டிருந்த அப்பெருந்தகை எனக்குள் பெரும் கிளர்ச்சியை உருவாக்கினார். அவரது முயற்சிகள் அனைத்திலும் உடனிருந்து உழைக்கும் பேரார்வத்திற்கு ஆளானேன். சிந்தனைக் கீற்றுகளோடு எதையும் நிறுத்திக்கொள்ளும் வழக்கமற்ற துணைவேந்தரின் அருமுயற்சியால் ‘சூழலியல்’ பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கக் கையேட்டை வெளிக்கொணரத் துறைசார்ந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இணையத் துணைவேந்தர் உளம் கொண்டது என் பேறு. சூழலியல் சார்ந்து ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ஓர் அருமையான காலாண்டு இதழில், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தனியார், அரசு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலியல் தொடர்பான ஆய்வுகளைப் பற்றிய கட்டுரைகளின் சுருக்கங்கள் பல்வேறு துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுத் தரப்பட்டிருந்தன. முதன்முதலில் அந்த இதழைப் பார்த்தபோது வியந்துபோனேன். இந்தியாவின் அறிவியல் ஆய்வுகள் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளனவா என்று வியக்குமளவிற்கு ஆய்வுக்கட்டுரைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் பெருகி இருந்தன. ஒவ்வொரு காலாண்டு இதழும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் சுருக்கத் தொகுப்பாக விளங்கியது. முதல் பார்வையில், இவற்றையெல்லாம் தமிழில் ஒழுங்குபட மொழிபெயர்த்திட முடியுமா என்ற தயக்கமே மேலோங்கி நின்றது. ஆனால், முதல் குழுக் கூட்டத்திலேயே துணைவேந்தரின் தொடக்கவுரை என் தயக்கத்தைப் பேரளவிற்கு நீக்கியது. இந்த ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்க இதழைத் தமிழ்ப்படுத்துவதன் நோக்கம், தமிழ்ப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் என அனைத்தும் பற்றிய அவரது உரை ஒரு கண்திறப்பாக விளங்கியதென்றே கூறலாம். மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவக்கூடிய அகரமுதலிகள், களஞ்சியங்கள் இவற்றின் பெயர்களையும் அவரே தந்து உதவினார். தமிழ்மொழியின் வளம் கூட்டும் இம்முயற்சிக்கு மொழியறிவு கொண்ட அனைத்து அறிவியலாளர்களும் துணைநிற்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டபோது அந்தக் குழுவிலிருந்த அனைவரும் உளம் பூரித்தோம். பேராசிரியர் சீனிவாசன் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். இந்த அருமையான திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பெருமையும் அவருடையதே. முதல் இதழிற்கான மொழிபெயர்ப்புகளை உருவாக்க ஒரு குழுவையும் அந்த மொழிபெயர்ப்புகளைச் சரிபார்க்க ஒரு குழுவையும் அமைக்கவேண்டியிருந்தது. தமிழறிஞர்கள் ஒரு புறமும் அறிவியல் அறிஞர்கள் ஒரு புறமும் இருந்தாலும், இரண்டிலும் வல்லவர்களைத் தேடியறிவது துன்பமான செயலாகவே இருந்தது. பல்துறை சார்ந்த இருபது மருத்துவர்களின் பெயர்களைத் தரும் பொறுப்பு என்னிடம் ஒப்புவிக்கப்பட்டது. தமிழ்மொழியில் வளமுடைய பல மருத்துவர்களை அறிந்திருந்தமையால் என் பணி எளிதாக முடிந்தது. தஞ்சாவூர் அறுவை வல்லுநர் சு. நரேந்திரன் என் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். மருத்துவர் சு. பழனியாண்டி சிறந்த தமிழ் ஆர்வலர். அவருடைய அநுமதியுடன் அவர் பெயரையும் முன்மொழிந்திருந்தேன். சிராப்பள்ளியில் நாங்கள் நெடுங்காலம் நடத்தி வந்த மருத்துவச் சொற்பொழிவுகள் வழி மொழி வளம் மிக்க மருத்துவ நண்பர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்திருந்ததால் எல்லாம் இனிதே முடிந்தது. அந்தக் குழுவிலேயே துணைவேந்தரிடம் பெயர்ப்பட்டியலை அளித்த முதல் உறுப்பினர் நானாக இருந்ததில் எனக்குப் பெரும் நிறைவு ஏற்பட்டது. துணைவேந்தரும் சிராப்பள்ளி மருத்துவர்களில் பலர் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கியமை கண்டு மகிழ்ந்தார். 1989ன் இறுதியில் ஒருவாறாக இரண்டு குழுக்களும் உருவாக்கப்பட்டன. இரண்டு குழுக்களிலும் என் பெயர் இருந்தமை துணைவேந்தருக்கு என்மீதிருந்த நம்பிக்கையை உணர்த்தியது. தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க உழைக்கும் அந்த மாமனிதருக்கு இயன்ற வகையில் எல்லாம் துணைநிற்க உறுதிகொண்டேன். மொழி வளம் பெருக்க வெற்றுரைகளை வீசி, மேடையிலிருந்து இறங்கியதும் அனைத்தும் மறக்கும் அறிஞர் கூட்டத்திடையே அவர் தனித்துத் தெரிந்தார். அவருடைய தமிழுணர்வு உண்மையானது. ஆங்கில மொழியில் அவருக்கிருந்த ஆளுமையையும் நான் அறிவேன். என்றாலும் தமிழில் பேசுவதையே அவர் விரும்பினார். தவிர்க்கமுடியாத கூட்டங்களில் மட்டுமே ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அவருடைய சொல்லும் செயலும் ஒன்று போல இருந்ததை உடனிருந்த ஆறாண்டுகளிலும் கவனித்துவந்திருக்கிறேன். 1989 ஆகஸ்டில் எங்கள் மையத்தில் நிகழ்த்தப்பட்ட திங்கள் பொழிவிற்குத் துணைவேந்தர் ச. முத்துக்குமரனே தலைமையேற்றார். ‘என் அண்மைக் கால ஆய்வுகளின் நினைவோட்டம்’ என்ற தலைப்பில் என். சேதுராமன் உரையாற்றினார். இரண்டாம் பேரரசுப் பாண்டியர்களைப் பற்றிய அவரது ஆய்வே உரைப்பொருளாக அமைந்தது. வானியல் குறிப்புகளின் அடிப்படையில் பாண்டிய அரசர்களைக் காலவரிசைப்படுத்தியிருந்தார். பல்வேறு கல்வெட்டியல் மாநாடுகளில் ஆற்றியிருந்த உரைகளின் தொகுப்பாக விளங்கிய அந்நிகழ்வில், அவருடைய ஆய்வுநூல்களை மையத்திற்கு அளித்து மகிழ்ந்தார். செப்டம்பர்த் திங்களில் நடந்த பொழிவிற்கு மருத்துவரும் தேர்ந்த பாடகருமான தே. நாராயணன் தலைமையேற்றார். ‘பழந்தமிழர் இசை பற்றிய கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பில் அறிஞர் வீ. ப. கா. சுந்தரனார் சிறந்ததோர் ஆய்வுரை நிகழ்த்தினார். தம்மோடு கொண்டு வந்திருந்த புல்லாங்குழல், பறை இவற்றை முழக்கிப் பல்வேறு பண்களை இசைத்துக் காட்டினார். எண்ணற்ற அறிஞர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கேள்விகளும் பலவாக எழுந்தன. அக்டோபர்த் திங்களில் சிராப்பள்ளி வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஈ.ச.சுந்தரமூர்த்தி தலைமையில் தொல்லியல்துறை பதிவு அலுவலர் நண்பர் கி. ஸ்ரீதரன் உரையாற்றினார். ‘கல்வெட்டில் கோயில் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் அமைந்த அவருடைய தொகுப்புரை, சோழர்களின் பங்களிப்பை வெளிச்சமிட்டுக் காட்டியது. திரு. ஸ்ரீதரன் நல்ல உழைப்பாளி, அமைதியானவர். தேவைப்படும் உதவிகளைச் செய்யத் தயங்காதவர். எல்லோருடனும் இனிமையாகப் பழகியவர். அவருடைய பணிக்காலத்தில் எங்கள் மையமும் தொல்லியல்துறையும் இணைந்து பல ஆய்வுப்பணிகளையும் சீரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். பழுவூர், பெருங்குடிக் கோயில்களின் அருகே இருந்த தகவல் அறிக்கைப் பலகைகளின் பிழைகளை அறவே அகற்றிப் புதிய பலகைகளைப் பொருத்திய பெருமை அவரையே சாரும். சிற்பி திரு. இராமனும் அவரும் இணைந்து பல சீரிய பணிகளைச் சிராப்பள்ளிக் கோட்டத்தில் மேற்கொள்ள, இயன்றதைச் செய்த நிறைவு எனக்குண்டு. 1989 இறுதியில் பைஞ்ஞீலிக் களஆய்வின்போது வெளிக்கோபுரத்தின் அருகில் மண்ணில் புதையுண்டிருந்த சிற்பம் ஒன்றை நளினி கண்டறிந்தார். சிவபெருமானின் பிச்சையுகக்கும் தோற்றமாக அமைந்திருந்த அதை உள்ளூர் மக்களின் உதவியோடு அகழ்ந்து வெளிப்படுத்தினோம். நெடுங்காலமாக மண்ணில் புதையுண்டிருந்ததால் சிற்பம் நன்றாகவே இருந்தது. கழுவித் தூய்மை செய்த பிறகே அது சோழர் காலச் சிற்பம் என்பதை அறியமுடிந்தது. திருப்பணி ஒன்றின்போது கோயில் வளாகத்திலிருந்து அச்சிற்பம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதினோம். ஊரின் புறத்தே தோட்டமொன்றில் கல்வெட்டுப் பலகையொன்று கிடப்பதாக அறிந்ததும் அதையும் ஊரார் உதவியுடன் கோயில் வளாகத்திற்குக் கொணர்ந்தோம். பைஞ்ஞீலி இறைவனுக்குத் துறையூர் வட்டம் கோட்டத்தூரில் வாழ்ந்த காசி ரெட்டியார் மகன் அருணாசல ரெட்டியார் இலுப்பைத் தோப்பொன்றைக் கொடையாகத் தந்த செய்தியை அக்கல்வெட்டின் வழி அறியமுடிந்தது. கோயில் வளாகத்திலேயே புதைந்திருந்த சிற்பமொன்றையும் வீரசோமேசுவரரின் கல்வெட்டையும் திரு. ஆறுமுகத்தின் உதவியுடன் அகழ்ந்தெடுத்து வெளிச்சுற்றில் வருவார் பார்க்குமாறு இருத்தினோம். வீரசோமேசுவரரின் வடமொழிக் கல்வெட்டு, அவருடைய பல்வேறு விருதுகளை வெளிப்படுத்தியது. சிற்பம் யாரைக் குறிக்கிறதென்பதை அறியக்கூடவில்லை. அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |