http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 57

இதழ் 57
[ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

அழிவின் விளிம்பில் தொல்லோவியங்கள்
Killing - with a difference
திருமுன் நிற்கும் திருமலை
திரும்பிப்பார்க்கிறோம் - 29
Thirumeyyam - 4
கங்கையின் மறுவீட்டில் - 3
கழுகுமலை பயணக் கடிதம் - 2
அவர் - பகுதி 9
Silpi's Corner-09
தாமிர சாஸனம்
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 2
எரிகிறதடி நெஞ்சம்! எங்கே அவர்?
இதழ் எண். 57 > தலையங்கம்
அழிவின் விளிம்பில் தொல்லோவியங்கள்
ஆசிரியர் குழு
பண்டைய இந்தியாவில் பழங்கற்கால(Paleolithic - 2.5 Millon to 200000 BC), இடைக்கற்கால(Mesolithic) மற்றும் புதிய கற்கால மனிதர்கள் (Neolithic - 4500 BC to 2000 BC) மிக அதிகமாகப் புழங்கிய இடங்களுள் தமிழகமும் ஒன்று. அம்மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எச்சங்களாகக் கற்காலப் பாறை ஓவியங்களும், மூத்தோர் நினைவுச் சின்னங்களும், கல்திட்டைகளும் (Dolmens), ஆயுதங்கள் முதலான பயன்பாட்டுப் பொருட்களும் ஆங்காங்கே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் கற்கால ஓவியங்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளதென்கிறது ஒரு செய்தித்தாள் குறிப்பு. இதுவரை கணக்கெடுக்கப்பட்ட இடங்களில் தருமபுரி மாவட்டத்திற்குத்தான் முதல் இடம் - இங்கு கிட்டத்தட்ட 70 இடங்களில் கற்கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. மற்றபடி வேலூர் பகுதிகளில் 25 இடங்களிலும், நீலகிரியில் 10 இடங்களிலும் விழுப்புரம் பகுதிகளில் 8 இடங்களிலும் மற்ற பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிகத் தொன்மையான காலகட்டத்திலிருந்தே மனித இனம் நமக்குப் பரிச்சயமான இந்தப் பகுதிகளில் புழங்கத் துவங்கிவிட்டன என்பது இதனால் தெளிவாக நிரூபணமாகிறது.

இவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட/ பதிவாக்கப்பட்ட இடங்களைத் தவிர, தனிப்பட்ட ஆய்வாளர்களின் முயற்சியால் புதிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களும் ஆய்வுலகிற்கு அவ்வப்போது அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, டிசம்பர் 2008ல் திருமலை, முதலைக்குளம், கீழ்வளைவு, கொங்கர் புளியங்குளம் முதலான இடங்களில் புதிய ஓவியங்களை ஆய்வாளர் கே.டி. காந்திராஜன் கண்டறிந்துள்ளார் (The Hindu dt.Jan 10 2009). சென்ற மாதம் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா.இராஜன் குழுவினர் பழனியில் சில கோட்டோவியங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்திரா காந்தி கலை மையத்தின்(Indira Gandhi Centre for Arts) சார்பில் மேற்கொள்ளப்பட்ட பதிவாக்க முயற்சியின்போதுதான் திரு. இராஜன் அவர்களின் கண்டறிதல் நிகழ்ந்துள்ளது. இவற்றைத்தவிர பழனியருகே குதிரையாறு அணைக்கு மேல் சில பழங்கற்காலத் கற்திட்டைகளும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பேராசிரியர் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளன(Dinamalar dt 27 Feb 2009). இவ்வாறாகக் கடந்த மூன்று நான்கு மாதங்களில் மட்டும் இத்தகைய பல முக்கியத் தரவுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த ஓவியங்கள் கிடைக்கும் மலை - குகைப்பாறைகளுள் பல, பண்டைய தமிழ்க் கல்வெட்டுக்களையும் சில சமயங்களில் ஜைனத் துறவிகளின் படுகைகளையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாகத் திருமலையின் மலை உச்சியில் முதலாம் நூற்றாண்டிற்குரியதாகக் கணிக்கப்படும் இரண்டு பழந்தமிழ்க் கல்வெட்டுக்களும் பல ஜைனக் கற்படுகைகளும் அமைந்துள்ளன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் ஓரிரண்டைத் தவிர வேறு எவையும் பாதுகாகக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்படவேயில்லை. அப்படி அறிவிக்கப்பட்ட இடங்களிலும் கூட கடனுக்கு ஒரு அறிவிப்புப்பலகை தொங்குகிறதேயொழிய அந்த இடத்தைச் சிதைவிற்குள்ளாகாமல் தடுக்கும் மிகச்சிறிய முயற்சிகளைக்கூடக் காணமுடியவில்லை. மத்திய நிர்வாகம், மாநில நிர்வாகம், மாவட்டம், வட்டம் என்று நூறாயிரம் நிர்வாகங்களும் மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மற்றும் தமிழகக் தொல்லியல்துறை என்று இரு பெரும் நிறுவனங்களும் இருந்தும் இக்கற்கால எச்சங்களை உரிய முறையில் பாதுகாக்க நாதியில்லை. விளைவு? மிச்சமிருக்கும் ஒரு சில எச்சங்களும் பேரழிவிற்கும் உள்ளாகிக்கொண்டிருக்கின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்களின் தயவில் பெரும்பணம் கொழிக்கும் கிரானைட் கல்லுடைக்கும் தொழிலால் இயற்கை வளமும் வரலாற்று வளமும் வாய்ந்த பல மலைப்பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன - அல்லது வெட்டியெடுக்கப்படுகின்றன. பல ஓவியங்கள் மற்றும் பழங்கல்வெட்டுக்களின் மீது நவநாகரீகக் கல்வெட்டுக்களான காதல் வாசகங்களையும் இதர அசிங்கங்களையும் எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. சென்னைக்கருகில் கும்மிடிப்பூண்டியில் ஒரு காலத்தில் அமைந்திருந்த பழங்கற்காலக் கற்திட்டைகள் இன்று காணாமற்போய்விட்டன. இவற்றையெல்லாம் உரிய முறையில் உடனடியாகப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பல மிக அரிய வரலாற்றுத் தடங்களை நிரந்தரமாக இழக்க வேண்டி வரும் என்று பல தொல்லியல் மூதறிஞர்கள் பலர் தொண்டை வறளக் கதறியும் யாதொரு பயனும் ஏற்படவில்லை. பொதுவாகவே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் கடைபிடிக்கப்படும் மிக மிக அலட்சியமான மனோபாவம் இதிலும் தொடர்கிறது.

அழிந்துகொண்டிருக்கும் இத்தொல்லோவியங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஒரு சிறிய கூக்குரல் கூட எந்தச் சாராரிடமிருந்தும் எழாது. காரணம் இவற்றால் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்லை.

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றி மூத்த குடி எனும் பிரகடனம் மட்டும் நமக்கு மிக அவசியம் தேவை. ஏனெனில் நமது பழைய நாகரீகத்தைப் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியும் அதன் கலாச்சார மேன்மை பற்றியும் அன்றாடம் அடுத்தவர்களிடம் வெட்டித் தம்பட்டமடித்துக்கொண்டாக வேண்டுமல்லவா?

அன்புடன்
ஆசிரியர்குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.