![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 57
![]() இதழ் 57 [ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
இந்த ஆனந்த தாண்டவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். அந்தப்பேறு பெற்றவர்கள் பக்கச் சுவர்களில் இடம்பெறுகிறார்கள். சந்திரனும், சூரியனும், மயில்மேல் ஏறிய வேலனும், மூஷிகவாகனனும், மேலும் மத்தளம் இசைக்கும் நந்திகேஸ்வரரும், ஏன் அந்த ரிஷபமும்கூடத் தலைதிருப்பிப் பார்க்கிறது. அதன்மேல் ஒயிலாகச் சாய்ந்தபடியே உமையும் பெருமிதத்துடன் நோக்க, பூதகணங்கள் மத்தளம் வாசிக்க, காரைக்கால் அம்மை பாட, எங்கெங்கும் ஆனந்த உற்சவம் புதுமழையாய்ப் பொழிந்து மனதை நனைக்கிறது. இவர்களை அல்லாமல் அஷ்டபுஜகாளி இந்தச் சிற்பத் தொகுடியில் இடம்பெறுகிறார். மற்றொரு சிற்பத்தை என்னால் யூகிக்க இயலவில்லை. அப்பப்பா. ஆனந்த அழகா, உன்னைப் படைத்த அந்தப் பிரம்ம சிற்பியே உன்னை வடித்தபின் கைகூப்பி வணங்கி இருப்பான். டாக்டரின் அமரத்துவ வரிகள் நினைவிற்கு வந்தன. "ஆணைகளாலும் வழிகாட்டலாலும் அரவணைப்பதாலும் மட்டுமே இத்தகு சிற்ப அற்புதங்களை விளைத்துவிடமுடியுமென்று நம்புகிறாயா? முடியாது வாருணி. ஒருக்காலும் முடியாது. அதற்கெல்லாம் ஆசை வேண்டும்; கனவுகள் வேண்டும்; உயர, உயர என்ற வேட்கை வேண்டும்; உனக்காக, உனக்காக என்று உருகும் காதல் வேண்டும். அப்படிக் குழையும் நெஞ்சம் மட்டுமே உன்னதக் கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்". என்மனம் ஏனோ என்னையறியாமல் பரவை நங்கையிடம் சென்றது. கொடுத்து வைத்தவள் அவள். இராஜேந்திரன், பரவை நங்கை காதலை மனம் அசைபோட்டது. இராஜேந்திரா, உன் பிள்ளைகளும் உன் காதலைப் போற்ற உலகிலேயே பேறு பெற்றவன் நீ ஒருவனே. சொற்களின் சிறப்பிற்கும் அப்பார்ப்பட்ட ஒரு தந்தை உனக்கு. உன் காதலை வாழ்த்திக் கொண்டாட்கும் உன்னதப் பிள்ளைகள். வரலாற்றின் ஏடுகளும் பெருமை கொள்ளும் இந்தக் காதலைப் போற்றி எழுத அருமையான கதைக்களம் கிடைத்தது எனக்கு. உயரிய உன்னதக் காதல். சோழ மன்னர்கள் எல்லோருமே நற்பண்புகளின் உறைவிடம். மீண்டும், மீண்டும் பிறந்து ஜென்மங்கள் தோறும் சோழமண்ணில் வாழவேண்டும். கால்கள் நகர மறுத்தன. பெருமுயற்சி எடுத்து விடைபெற்றேன் அந்த சோழ அழகனிடமிருந்து. பயணங்களில்தான் வாழ்க்கையின் ருசி புரிகிறது. ஒரு முடிவற்ற தேடல் தொடங்குகிறது. அடுத்த கோட்டத்தில் இருந்த ஹரிஹரனை வணங்கிவிட்டு, தென்முக அண்ணலிடம் சென்றேன். அவரோ பயங்கர பிஸி. அவர் எதிரிலும் ஒரு நீண்ட வரிசை. ஆதலால் ஒரு ஹாய் மட்டும் சொல்லிவிட்டுப் பக்கச்சுவர்களை நோட்டம் விட்டேன். ரிஷிகள், பெண்கள், பூதகணங்கள், சூரியர், தேவர்கள் ஏன் அகத்திய மகரிஷி கூட இடம்பெற்றிருந்தார். ![]() தாயும், தந்தையும் ஆன அண்ணல் திரிபங்கியாய் நின்ற கோலத்தில் அம்மையப்பர் காட்சியளித்தார். வலப்புற மேற்கரம் பரசு ஏந்த, கீழ்க்கரமோ ரிஷபத்தின் தலையைக் கருணையுடன் வருடிய வண்ணம் இருந்தது. இடதுகரம் ஒரு மலரை ஏந்தியவண்ணம் உள்ளது. வலதுபுறம் தலையில் ஜடாமகுட அலங்காரம், இடப்புறமோ கேசபந்தம். ஒரே முகத்தில் ஆண்மையின் கம்பீரமும், பெண்மையின் நளினமும் ஒருசேரக் காணக்கிடைப்பது அரிது. இச்சிற்பத்தில் கம்பீரமும், நளினமும் கலந்த வசீகரப் புன்னகை நம்மை வியப்பில் மலைக்க வைக்கிறது. சோழச் சிற்பிகளின் கைகளில் விளையாடிய உளிகளைத் தேவலோகத்து மயன் செய்தானோ? அடுத்ததாய் வலதுகாலைத் தூக்கிய வண்ணம் ஆடிடும் நர்த்தன விநாயகர், அவரைக் கம்பிச் சிறைக்குள் பூட்டி வைத்திருந்தனர். விமானத் தளங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் அருட்கோலங்கள். சில கடவுளர்களை அடையாளம் காண முடியவில்லை என்னால். வினோத விமானம்: தென்புறமிருந்து விமான எழிலை இரசித்தேன். சதுரமாகத் தொடங்கி, போகப்போக நடுவில் எண்பட்டை வடிவம் கொள்கிறது. பிறகு வட்டமாக இறுதி வடிவம் கொள்கிறது. விமான அமைப்பின் தனித்துவம் வேறெங்கும் காணவியலாது. இது சோழக் கட்டடக்கலை இயலின் அற்புதம். சோழப் பொறியியல் திறத்தின் எடுத்துக்காட்டு. எந்த விமானப் பாணியின் கலவை இதுவோ? பொள்ளல் வகை, மூன்றடுக்குச் சாந்தாரம், சுவரைக் குறுக்கி என்றெல்லாம் என்னால் விரிவாகச் சொல்லமுடியாது. ஏனெனில், நான் மேல்தளம் ஏறி ஆராயவில்லை. (அடுத்த பயணத்தில் விரிவாகக் காணலாம்). ![]() கங்கைகொண்ட சோழீசர் திருகோயிலின் ஒவ்வொரு அங்கத்திலும் இராஜேந்திர சோழனின் தனித்துவ முத்திரை அமரத்துவமாய்ப் பதிந்துள்ளது. ஒப்பீடுகள் வேண்டாமே! திருக்கோயிலைச் சுற்றி நாற்புறமும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. அடுத்ததாய் நான் நுழைந்தது அம்மையைக் காண. கங்கைகொண்ட சோழீஸ்வரி ஏன் இப்படி அழைக்கக்கூடாது நம் பெரியநாயகி அம்மையை? இங்கும் ஒரு நீண்ட க்யூ வரிசை என்னைப் பொறுமை இழக்கச் செய்தது. பெருவுடையார் கோயில் திருச்சுற்றுச் சிற்பங்கள் இங்கும் அமையப்பெற்றுள்ளன. பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பைரவர், அர்த்தனாரி என சிவக்கோலங்கள் உருவில் சிறியனவாக அமைகின்றன. ஆளுயரப் பெண்ணாக, பட்டு உடுத்திப் பேரெழில் அன்னையாக அருள்பாலித்தாள் கங்கைகொண்ட சோழீஸ்வரி. நிலமடந்தை, வெற்றிமடந்தை, போர்மடந்தை மூவரின் கலவை இவளே. அன்ன அலங்கார தரிசனம் அன்ன அலங்காரம் காலை 11 மணியளவில் தொடங்கிவிட்டது. தெற்குப்புற வாயிலின் வழியே 'ஹரஹரசங்கர, சிவசிவசங்கர' என்ற கோஷத்துடன் பெரிய கொப்பரைகளில் வடித்த வெண்ணரிசிச் சோற்றைப் பயபக்தியுடன் கூடைகளில் நிரப்பி வரிசையாய் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சிவாச்சாரியார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பிரதட்சணம் செய்து பொது தரிசன வரிசையில் நின்றேன். நுழைவாயிலில் ஆளுயர துவாரபாலகர்கள் ஒரு விறைப்புடன் பார்க்க, சரி நமது புகைப்படக் கருவிக்குள் சிறையெடுக்கலாம் என்று நினைக்கையில் துவாரபாலகர் அருகே துவாரபாலகியாய் ஒரு காக்கி தேவதை. ம்... சரி வேறு நாள் ஆள் அரவமற்ற தருணங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று கோவிலினுள்ளே நுழைந்தேன். மகாமண்டபத்தில் இருமருங்கிலும் எண்ணெய் விளக்குகளின் கண் சிமிட்டல்கள். கி.பி. 10ம் நூற்றாண்டா அல்லது கி.பி. 21ம் நூற்றாண்டா என்ற சந்தேகமும் தோன்றவே செய்தது. பலதரப்பட்ட காவற்படையினரின் கார்வார் அதிகம் இருந்தது. புகைப்படம் எடுக்கமுடியவில்லை. கண்ணைக் கட்டமுடியவில்லையே. அர்த்த மண்டபத்தில் நுழைய அனுமதி கிடையாது. வி.ஐ.பிகளுக்கு மட்டும்தான் அனுமதி. நல்லவேளை, இதெல்லாம் பின்னாளில் அரங்கேறும் என்று உத்தேசித்துத்தானோ மிகப்பெரிய பிரமாண்ட சிவலிங்கங்களை ஸ்தாபித்தார்களோ அப்பாவும் பிள்ளையும். என் நன்றிகள் பல மதுராந்தகனான இராஜேந்திர சோழனுக்கு, எங்கு நின்று நோக்கினாலும் நன்றாகவே காட்சியளித்தார். அன்ன அலங்காரத்தில் கங்கைகொண்டசோழீசர். மிகப் பிரம்மாண்ட சிவலிங்கம். திவ்யமாய் ஒரு தரிசனம். அன்ன அலங்காரத்தில் வெள்ளைச் சிவலிங்கக் காட்சி. பனிலிங்கமோ எனத் தோன்றச் செய்தது. அந்தப் பிரம்மாண்டத்தின்முன் என்னால் எதுவும் சேவிக்க முடியவில்லை. காட்சி மயக்கத்தில் என்னை மறந்தேன். மயக்கத்திலிருந்து விடுபட்டபின் மனதில் இப்பாடல் வலம் வந்தது. வான்முகில் வழாதுபெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |