http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 179
இதழ் 179 [ ஜூலை 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
மணக்கால் ஐயம்பேட்டை என்று அறியப்படும் பெருவேளூர் திருவாரூர் மாவட்டம் குடவாயில் வட்டத்தில் திருவீழி மிழலைக்கு அருகில் உள்ளது.1 தேவாரப் பதிகம் பெற்ற2 இவ்வூர்க் கோயில் இறைவன் பிரியாநாதர்3 என்றும் இறைவி ஏலவார்குழலி என்றும் பத்திமையுடன் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் நுழைவாயில் கோபுரம் முத்தளங்கள் பெற்றுக் குறைவான சுதையுருவங்களுடன் திகழ்கிறது. கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள கோபுரக் கீழ்த்தளத்தின் பெருஞ்சாலைப் பத்தி எண்முக அரைத்தூண்களின் அணைப்பில் புறந்தள்ளியுள்ளது. கருங்கல் கட்டுமானமான இதன் மேலுள்ள ஆரஉறுப்புகளும் பிற தளங்களும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல்லால் ஆனவை. கோபுர வாயிலில் வடக்கிலும் தெற்கிலும் பக்கத்திற்கொன்றாக ஊரக ஆடற்சிற்பங்கள்.
சுற்று வாயிலை அடுத்து விரியும் சுற்றில் கிழக்கில் கொடிமரம், பலித்தளம், நந்திமண்டபம் அமைய, வடகிழக்கில் மதிலொட்டி நீளும் மாளிகைப்பத்தியில் இலிங்கத்திருமேனிகளும் கொற்றவை, சூரியன், சனீசுவரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், அப்பர் சிற்பங்களும் இரண்டு சேத்ரபாலர் திருமேனிகளும் இடம்பெற்றுள்ளன. வண்டிக்கூடு கூரை பெற்றுள்ள இம்மாளிகைப் பத்தியின் முன்னால் ஒன்பான்கோள்களின் மேடையும் அடுத்து வெற்றறை ஒன்றும் உள்ளன. வாயிலின் இடப்புறம் உள்ள மூன்று அறைகளில் தென்கோடி அறை மடைப்பள்ளியாகப் பயன்படுகிறது. பிற இரண்டு அறைகளும் வெறுமையாக உள்ளன. நாயுடன் காட்சிதரும் பைரவர் முன்கைகளில் முத்தலை ஈட்டியும் தலையோடும் அமைய, பின்கைகளில் உடுக்கையும் பாசமும் கொண்டுள்ளார். தொடைகளைப் பாம்பு பின்னியுள்ளது. செவிகளில் மகர, பனையோலைக் குண்டலங்கள். கழுத்தில் சரப்பளி, வாய்க்கடையில் கோரைப்பற்கள். நாய் வாகனமின்றி நிர்வாணியாய்க் காட்சிதரும் சேத்ர பாலர்களுள் பலகைச் சிற்பமாகக் காட்சிதருபவர் முகப்பில் மண்டையோடு பெற்ற சுடர்முடி, மகர, பனையோலைக் குண்டலங்கள், கோரைப்பற்கள், சரப்பளி, மண்டையோட்டு முப்புரிநூல் இவற்றுடன் வலக்கைகளில் நீளமான முத்தலை ஈட்டியும் பாசமும் கொண்டு, இடக்கைகளில் தலையோடு, மழு ஏந்தியுள்ளார். பொதுவாக சேத்ரபாலர் திருமேனிகள் மழு கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இட முன் கையைத் தலை கொண்டு தாங்கும் பாம்பு இடுப்பைச் சுற்றி வலத்தொடையில் முடிகிறது. தனித்து நிற்கும் சேத்ரபாலரின் முன் கைகளில் முத்தலைஈட்டியும் தலையோடும் உள்ளன. பின்கைகளில் இடப்புறம் அக்கமாலை. வலப்புறம் உடுக்கை. சுடர்முடி, சரப்பளி, உதரபந்தம், மண்டையோட்டு முப்புரிநூல் கொண்டுள்ள அவரது இடச்செவியில் பனையோலைக் குண்டலம். வலச்செவி வெறுஞ்செவியாக உள்ளது. சுற்றின் தென்மேற்கில் அடுத்தடுத்துள்ள முகமண்டபத்துடனான ஒருதள வேசர விமானங்களில் பிள்ளையாரும் தேவியருடன் வைகுந்த நாராயணப் பெருமாளும் இடம்பெற்றுள்ளனர். கரண்டமகுடம், சரப்பளி கொண்டு மோதகத்துடன் இடம்புரியாக உள்ள பிரதான விநாயகரின் பின்கைகளில் அங்குசமும் பாசமும் அமைய, முன்கைகளில் தந்தமும் மோதகமும் உள்ளன. சுகாசனத்தில் உள்ள பெருமாளும் தேவியரும் குடிகொண்டிருக்கும் விமானம் துணைத்தளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், சதுரப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் பெற்று அமைந்துள்ளது. சுவரின் முப்புறத்தும் வெறுமையான கோட்டப்பஞ்சரங்கள். கிரீடமகுடம், பட்டாடை அணிந்துள்ள பெருமாளின் வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை கடகத்தில் உள்ளது. பின்கைகளில் சங்கு, சக்கரம். ஒரு கையில் மலரேந்தி மறு கையை ஆகூயவரதத்தில் அமைத்துள்ள திருமகளும் நிலமகளும் கரண்டமகுடம், பட்டாடை அணிந்து காட்சியளிக்கின்றனர். விமானத்தின் முன்னுள்ள முகமண்டபத்தில் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார், இராமானுஜர் சிற்பங்கள் உள்ளன. சிவபெருமானுக்கான மாடக்கோயிலில் சுற்றாலைக் கோயில்களுள் ஒன்றாய் விஷ்ணுவின் திருமுன் அமைந்துள்ளமையை இங்கும் சிக்கல், தலைச்சங்காடு, பண்டாரவாடைக் கோயில்களிலும் காணமுடிகிறது. மேற்கிலுள்ள ஒருதள நாகர விமானத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளியுள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, பட்டாடையுடன் பின்கைகளில் சக்தி, வஜ்ரம் ஏந்தி, முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புக் காட்டும் முருகப் பெருமானின் இருபுறத்தும் உள்ள தேவியர் ஒரு கையை நெகிழ்த்தி, மறு கையில் மலரேந்தியுள்ளனர். அவர்தம் தலையைக் கரண்டமகுடமும் இடையைப் பட்டாடையும் அலங்கரிக்கின்றன. முருகன் திருமுன்னுக்குப் பின் மதிலையெhட்டி அமைந்துள்ள ஒருதளச் சாலை விமானத்தில் யோக சண்டேசுவரர் இடம்பெற்றுள்ளார். வேறெந்த மாடக்கோயிலிலும் காணப் பெறாத இவ்விறைவடிவம் மகாராஜலீலாசனத்தில் சற்றே வலச்சாய்வான முகத்துடன் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், கடக, கை வளைகள் கொண்டு இணையற்ற அழகுடன் காட்சிதருகிறது. வலக்கை முழங்கால் மீதமர்ந்த கடகமாக அமைய, இடக்கையில் நீளமான மழு. தோளில் சாய்க்கப்பட்டுள்ள மழுவின் தண்டுப்பகுதியின் கீழ்முனை தொடையைத் தொட்டவாறுள்ளது. சுற்றின் மேற்குப் பகுதியில் முருகன் திருமுன்னுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடைப்பட்டு அமைந்துள்ள சிறிய ஒருதள நாகரத் திருமுன்னில் இருகைகளிலும் மலரேந்தி இரு கால்களையும் கீழிறக்கிய நிலையில் அமர்ந்துள்ள திருமகளின் தலையில் கரண்டமகுடம். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். இடையில் பட்டாடை. அம்மன்கோயில் சுற்றின் வடமேற்கில் அமைந்துள்ள ஏலவார்குழலியின் கோயில் ஒருதள வேசர விமானம், முகமண்டபம், பெருமண்டபம் பெற்று அமைந்துள்ளது. துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப்போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் கொண்டுள்ள விமானத்தின் கிரீவகோட்டங்களில் நாற்புறத்தும் இறைவியின் அமர்நிலைச் சுதையுருவங்கள் காட்சிதருகின்றன. சுவர்க் கோட்டங்கள் முப்புறத்தும் வெறுமையாக உள்ளன. அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. துணைத்தளம் அற்ற நிலையில் விமானம் ஒத்த கட்டமைப்புப் பெற்றுள்ள பெருமண்டபத்தின் கிழக்கு முகத்தில் வாயிலை அடுத்து இருபுறத்தும் சாளரங்கள் உள்ளன. மண்டபத் தென்சுவரிலும் சிறிய அளவிலான சாளரம் காணப்படுகிறது. கனமான நான்முக அரைத்தூண்கள் தாங்கும் வண்டிக்கூடு கூரையுடன் உள்ள பெருமண்டபம் வெறுமையாக உள்ளது. கீர்த்திமுக வளைவு பெற்றுள்ள முகமண்டப வாயிலின் இரு புறத்தும் உள்ள சுதையாலான காவற்பெண்டுகள் ஒரு கையால் அச்சுறுத்தி, மறு கையை உருள்பெருந்தடியின் மீது இருத்தி யுள்ளனர். கருவறையில் ஏலவார்குழலி சடைமகுடம், மகர குண்டலங்கள், பட்டாடை, கழுத்தணிகள், கையணிகள் இவற்றுடன் சுகாசனத்தில் உள்ளார். பின்கைகளில் அக்கமாலையும் தாமரையும் விளங்க, முன்கைகள் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் உள்ளன. வடக்கிலுள்ள ஒருதள வேசர விமானத்தில் தென்பார்வையாய்த் தாமரை மீது சுகாசனத்தில் இருக்கும் சண்டேசுவரரின் வலக்கை மழுவேந்த, இடக்கை தொடைமீது இருத்தப்பட்டுள்ளது. சடைப்பாரம், சிற்றாடை பெற்றுள்ள சண்டேசுவரரின் இடப்புறம் மட்டும் கவரி காட்டப்பட்டுள்ளது. வெற்றுத்தளம் 4. 41 மீ. உயரமுடைய வெற்றுத்தளம் வளாகத்தின் நடுப் பகுதியில் அமைந்து இறைவன் விமானம், முகமண்டபம், பெருமண்டபம் இவற்றையும் இவற்றிற்குத் தெற்கிலுள்ள படிநடை மண்டபம், சோமாஸ்கந்தர் விமானம், முகமண்டபம் இவற்றையும் தாங்குகிறது. தெற்கில் சோமாஸ்கந்தர் விமானம் வரையிலான பகுதி, வடக்கிலும் கிழக்கிலும் இறைவன் திருமுன் பெருமண்ட பம் இவற்றைத் தாங்கும் வெற்றுத்தளம் கலப்புக் கட்டுமானமாய் உள்ளது. பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், சதுரப் போதிகைகள், கூரையுறுப்புகள், கபோதம் பெற்றுள்ள இவ்வெற்றுத்தளத்தின் முத்திசைகளிலும் கோட்டங்கள் உள்ளன. பஞ்சர அமைப்பிலான கிழக்குக் கோட்டங்களில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். தெற்கிலுள்ள மகரதோரணத் தலைப்பிட்ட இரண்டு கோட்டங்களுள் ஒன்று சோமாஸ்கந்தர் விமானத்திற்கான பகுதியில் தென்கோட்டமாக இடம்பெற்றுள்ளது. மற்றொன்று நடைமண்டபத்திற்கான வெற்றுத்தளப் பகுதியில் உள்ளது. வடபுறத்தே மேலுள்ள ஆடவல்லான் திருமுன்னிற்கான புறந்தள்ளிய பகுதியில் கோட்டப்பஞ்சரமும் அதன் இருபுறத்தும் உள்ள பகுதிகளில் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இப்புறந்தள்ளலை எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. சோமாஸ்கந்தர் விமானத்திற்கான வெற்றுத்தளத்தின் மேற்குப் பகுதியிலும் ஒரு கோட்டம் உள்ளது. இக்கோட்டங்கள் அனைத்தும் வெறுமையாக உள்ளன. இறைவன் விமானம், முகமண்டபம் இவற்றிற்கான வெற்றுத் தளம் ஜகதி, உருள்குமுதம், பிரதிவரி பெற்ற பிரதிபந்தத் தாங்கு தளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளுடனான கபோதம், பூமிதேசம் அனைத்தும் பெற்றுக் கருங்கல் கட்டுமானமாக உள்ளது. விமானத்திற்கான பகுதியில் முத்திசைகளிலும் கோட்டங்கள் உள்ளன. மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக அமைய, தெற்குக் கோட்ட ஆலமர்அண்ணல் முன்னிழுப்பாக ஒருதள நாகர விமானம் பெற்றுள்ளார். வீராசனத்திலுள்ள அவரின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராக முனிவர்கள் உள்ளனர். பிறை பெற்ற சடைப்பாரமும் மகர, பனையோலைக் குண்டலங்களும் உதரபந்தம், முப்புரிநூல் இவையும் பெற்றுள்ள இறைவனின் பின்கைகளில் வலப்புறம் பாம்பும் அக்கமாலையும். இடப்புறம் தீச்சுடர். முன்கைகளில் வலக்கை சின்முத்திரையில் அமைய, இடக்கை சுவடி ஏந்தி முழங்காலின் மேல் உள்ளது. இறைவன் அமர்ந்துள்ள கோட்டத் தின் மேற்பகுதியில் விளங்கும் மரத்தின் வலக்கிளையில் துண்டும் இடக்கிளையில் இலிங்கத்திருமேனியும் இடம்பெற்றுள்ளன. ஆலமர்அண்ணல் சிற்பத்தொகுதியின் மரக்கிளையில் இலிங்கம் காணப்பெறுவது இதுவே முதல் முறை எனலாம். தூண்களின் மாலைத்தொங்கல்கள் அழகிய ஆடல் சிற்பங்களையும் இசைக்கலைஞர்களையும் பெற்றுள்ளன. கூடுகளில் பல்வேறு கோலங்களில் பூதங்கள். வடக்குக் கோட்டத்தின் மேலே காட்டப்பட்டுள்ள நீர்வழி கருவறையிலிருந்து வரும் முழுக்காட்டு நீரை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலே அமர் சிம்மம் ஒன்று கபோதம் தாங்கியாய் உள்ளது. கபோதத்திற்கு மேல் உள்ள பூமிதேசம் இங்கு மட்டும் சற்று முன்னிழுப்பாக அமைந்து முகப்பில் கைகளை உயர்த்திய பூதத்தைப் பெற்றுள்ளது. அதற்கு நேர் கீழே தாங்குதளப் பிரதிவரியிலும் சிம்மம் காட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்திற்கான வெற்றுத்தளப் பகுதியின் வடக்கில் இடம்பெற்றுள்ள மகிடாசுரமர்த்தனி பிற்காலச் சிற்பமாகும். வெற்றுத்தளத்தின் தென்கிழக்குப் பகுதியில் மேலுள்ள திருமுன்களுக்குச் செல்ல வாய்ப்பாகப் பதினேழு படிகள் அமைந்துள்ளன. அப்படிகளின் முடிவில் நடைமண்டபமும் அதற்குப் பின் சோமாஸ்கந்தர் விமானம், முகமண்டபம் இவையும் அமைய, வடபுறத்தே உள்ள படிகள் இறைவன் திருமுன் வளாகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இரண்டு திருமுன்களுக்கும் இடையில் சுற்றிவர வாய்ப்பாக நடைமேடை உள்ளது. சோமாஸ்கந்தர் விமானம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் இவற்றுடன் ஒருதள வேசரமாய் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானமும் அதே கட்டமைப்பில் உள்ள அதன் முகமண்டபமும் முற்றிலும் செங்கல் கட்டுமானங்களாய் உள்ளன. விமானச் சுவர்களில் முப்புறத்தும் உள்ள மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. முகமண்டபத்தின் தென்சுவரில் சிறு சாளரம். விமானத்தின் கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் காட்சிதரும் ஆலமர்அண்ணல் பின்கைகளில் பாம்புச் சுற்றிய உடுக்கையும் தீச்சுடரும் கொண்டுள்ளார். வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கை முழங்காலின் மீது இருத்தப்பட்டுள்ளது. மேற்குக் கோட்டத்தில் பட்டாடையுடன் சுகாசனத்தில உள்ள விஷ்ணு பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு முன்கைகளைக் காப்பு, அருள் முத்திரைகளில் அமைத்துள்ளார். வடகோட்டம் வெறுமையாக உள்ளது. நடைமண்டபத்தின் புறச்சுவர் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்றுத் தென்புறத்தே திறப்புடன் காரைக் கட்டடமாக உள்ளது. சோமாஸ்கந்தரின் முகமண்டபம், கருவறை இரண்டும் வெறுமையாக உள்ளன. சோமாஸ்கந்தர் சோமாஸ்கந்தர் தொகுதி இறைவன் திருமுன் பெருமண்டபத்தில் உள்ள ஆடவல்லான் அறையில் உள்ளது. இத்தொகுதியில் சுகாசனத்தில் உள்ள சிவபெருமான் பின்கைகளில் மான், மழு ஏந்தி வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம் அணிந்து வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இட முன் கையைக் கடகத்தில் வைத்துள்ளார். இடப்புறத்தே சுகாசனத்தில் உள்ள உமை வலக்கையில் மலரேந்தி, இடக்கையைத் தளத்தின் மீது இருத்தியுள்ளார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, ஸ்வர்ணவைகாக்ஷம், குறங்குசெறி அணிந்து இடையில் நிற்கும் முருகனின் வலக்கையில் மலர். இடக்கை நெகிழ்ந்துள்ளது. தொகுதியின் வலப்புறம் நிற்கும் தனி உமை கரண்டமகுடம், பட்டாடை அணிந்து வலக்கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். இறைவன் விமானம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்று ஒருதள வேசரமாய் அமைந்துள்ள இறைவன் விமானச் சுவர்களில் முப்புறத்தும் உள்ள கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தூண்களின் மாலைத்தொங்கல்கள் அலங்கரிப்புப் பெற்றுள்ளன. கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணல் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கையும் தீச்சுடரும் ஏந்தி, வல முன் கையைச் சின்முத்திரையில் இருத்தி, இட முன் கையில் சுவடி கொண்டுள்ளார். மேற்கில் பட்டாடையுடன் சுகாசனத்தில் உள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகள் காக்கும், அருட்குறிப்பில் உள்ளன. பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் கொண்டு, முன்கைகளை தியானமுத்திரையில் வைத்துள்ள நான்முகன் வடகோட்டத்தை அலங்கரிக்கிறார். 5. 41 மீ. பக்கமுள்ள சதுரமாக அமைந்துள்ள விமானத்தின் முன் உள்ள முகமண்டபம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உயரமான நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரை யுறுப்புகள் பெற்றுள்ளது. கோட்டங்களற்ற அதன் வடசுவரில் சிறு சாளரம். முன்னால் அமைந்துள்ள பெருமண்டபத்தின் புறச்சுவர் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளத்துடன் கூரையுறுப்புகள் பெற்ற காரைக் கட்டுமானமாக அமைந்துள்ளது. அதன் கிழக்கு முகத்தில் காட்டப்பட்டுள்ள திறப்பு கபோதமும் சாலை சிகரமும் பெற்றுச் சிறந்துள்ளது. நாகபந்தம் பெற்ற முச்சதுர, இருகட்டுத் தூண்கள் தாங்கும் பெருமண்டபத்தின் வடபுறத்தே உள்ள மூன்று அறைகளுள் இரண்டு வெறுமையாக உள்ளன. ஆடவல்லான் திருமுன்னான நடு அறையில் சோமாஸ்கந்தர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். நந்தி இடம்பெற்றுள்ள இம்மண்டபத்தில் முப்புறத்தும் உள்ள மேடைகள் வெறுமையாக உள்ளன. தென்புறத் தூணொன்றின் இடைச் சதுரத்தில் இருபுறத்தும் நான்முகத் தூண்கள் அணைக்க அவற்றின் மேலிருந்து எழும் அலங்கார வளைவு திருவாசியென அமைய, இடைப்பட்ட சிறு கோட்டத்தில் இடப்பாதத்தைத் தரையிலிருத்தி, வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரமாக்கியவராய் ஆடல் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். அவரது தலையைக் கரண்டமகுடம் அணிசெய்கிறது. பின்கைகளில் வலப்புறம் அங்குசம் அமைய, இடக்கை அர்த்தரேசிதமாக வீசப்பட்டுள்ளது. தோள், கை வளைகள், உதரபந்தம், சிற்றாடை, தண்டை அணிந்து இடம்புரியாக உள்ள அவரது வல முன் கை கடகமாய் அமைய, இடக்கையில் மோதகம். துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. முகமண்டப வாயிலின் இருபுறத்தும் இடம்பெற்றுள்ள காவலர்கள் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ளபோதும் நேர் முகத்தினராய் உள்ளனர். சடைமகுடம், பறவைக் குண்டலங்கள், சரப்பளி, கீர்த்திமுகத் தோள்வளைகள், கைவளைகள், கோரைப் பற்கள், உதரபந்தம், சிற்றாடை, சலங்கைகள் பெற்றுள்ள அவர் களுள், வலக்கையை வியப்பிலிருத்தி, இடக்கையை உருள் பெருந்தடிமேல் நெகிழ்த்தியுள்ள வடக்கரின் சடைமகுடம் கீர்த்திமுக முகப்புப் பெற்றுள்ளது. இடப்பாதம் மழுவின் கத்திப் பகுதி மேல் இருத்தப்பட்டுள்ளது. சடைக்கற்றைகளை இருபுறத்தும் விரித்துள்ள தெற்கர் கனத்த முப்புரிநூலும் சிறுமணிகள் கோத்த மாலையும் கொண்டு வலக்காலை மரக்கிளையின் மேல் இருத்தியுள்ளார். அவரது வலக்கை அச்சுறுத்த, இடக்கை கிளையின் மீது நெகிழ்ந்துள்ளது. செவிகளில் பறவைப் பெருங்குண்டலங்கள். அகலமான முகமண்டபம் வெறுமையாக அமைய, கருவறை யில் இறைவன் சதுர ஆவுடையாரும் உருளைப்பாணமுமாய்ப் பிரியாநாதர் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார். கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்து நான்கு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன. 4 அவற்றுள் மூன்று மூன்றாம் குலோத்துங்கர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டுள்ளன. ஒன்று சடையவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தது. மூன்றாம் குலோத்துங்கசோழரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு நுளம்பாதராயரின் பரிந்துரையை ஏற்று அரசர் பிறப்பித்த ஆணையாக அமைந் துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் தேர்தலில் நிற்காதவரும் நாற்பது வயதைக் கடந்தவரும் மட்டுமே குலோத்துங்க சோழ வளநாட்டு வேளாநாட்டு இராஜேந்திரசோழச் சதுர்வேதி மங்கலத்து சபைத் தேர்தலில் நிற்கமுடியும் என இதன் வழிப் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கரின் முப்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வறட்சியால் குத்தகையாளர்களிடமிருந்து விளைச்சல் பங்கைப் பெறுவதில் நிலவிய குழப்பம், தொல்லை காரணமாக ஊரவை செய்த சில புதிய ஏற்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலத்து சபை, ஊரார் நிலங்களைத் தகுதி உடையவருக்குச் சில சலுகைகளுடன் குத்தகைக்கு விடுவது தொடர்பாகப் புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு ஊர் வாரியமான உறுப்புட்டூர் அடிகள் நம்பி பட்டன், ஊர்க் கணக்கான சேற்றூர் கருணாகரப்பிரியன் ஆகிய இருவருக்கும் உத்தரவிட்டது. மூன்றாம் குலோத்துங்கரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு இராஜேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்து சபைக்கும் உலகமுழுதுடைச் சதுர்வேதிமங்கலத்து சபைக்கும் அவ்விரு ஊர்களைச் சேர்ந்த வேளாண் குத்தகைதாரர்களுக்கும் விளைவுப் பங்கீடு, சலுகைகள் தொடர்பாக அமைந்த ஒப்பந்தம் பற்றிப் பேசுகிறது. விழாக்களின்போது இறைத்திருமேனியை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்காக நிலத்துண்டுகளைப் பெற்றுத் தோட்டம் அமைக்கப்பட்டதாகச் சுந்தரபாண்டியரின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. பெருமண்டபக் கிழக்கு வாயில் மேல்நிலையிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு நாயக்கச் செட்டியார் அக்கோயிலில் நாளும் வழிபட்டிருந்த தகவலைத் தருகிறது.5 குறிப்புகள் 1. இக்கோயிலை அறிமுகப்படுத்தியவர் திரு. பால. பத்மநாபன். உடனிருந்து உதவிய அறங்காவலர் திரு. ர. இராமகிருஷ்ணன், வை. அகத்தீசுவர குருக்கள் இவர்களுக்கு உளமார்ந்த நன்றி. ஆய்வு நாட்கள்: 23, 24. 10. 2009. 2. 3: 62; 4: 45. 3. ‘மடவாளை ஒரு பாகம் பிரியாத பெருமானார்’ என்றும் ‘பெருவேளூர் பிரியாரே’ என்றும் அமைந்துள்ள சம்பந்தரின் பாடலடிகள் நினைந்து இன்புறத்தக்கன. 4. ARE 1927-28: 112-115. 5. இக்கல்வெட்டு பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |