http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 179

இதழ் 179
[ ஜூலை 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்பெரும் விழா அழைப்பிதழ்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
பெருவேளூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 75 (பனித்துளியன்ன உறுதிமொழி)
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 4
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
இதழ் எண். 179 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
わたの原
こぎ出でてみれば
久方の
雲ゐにまがふ
冲つ白波

கனா எழுத்துருக்களில்
わたのはら
こぎいでてみれば
ひさかたの
くもゐにまがふ
おきつしらなみ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அமைச்சர் ததாமிச்சி

காலம்: கி.பி 1097-1164.

முந்தைய பாடலின் ஆசிரியர் தனது மகனைக் கதைசொல்லியாக ஆக்க ஒருவரிடம் பரிந்துரை கோரினார் என்று பார்த்தோமல்லவா? அவர்தான் இப்பாடலின் ஆசிரியர். பேரரசர் கோஷிராகவாவின் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்த இவர் ஜப்பானிய வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றவர். ஹோகென் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியதில் இவரது பங்கு மகத்தானது.

கி.பி 1123ல் பேரரசர் தொபாவும் கி.பி 1142ல் தொபாவின் மகன் பேரரசர் சுதொகுவும் அரசபதவியைத் துறந்த பின்னரும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைப் புதிய மன்னருக்கு அளிக்காமல் தங்களுடனேயே வைத்திருந்தனர். பேரரசர் தொபா தனது இன்னொரு மனைவியின் மகனான கொனோயேவுக்குப் பட்டம் சூட்டவிரும்பி சுதொகுவைப் பதவியிறங்கக் கூறினார். சுதொகுவும் தந்தையின் சொல்லை மதித்துக் கொனோயேவுக்குப் பின்னர் தன் மகன் முடிசூடவேண்டும் என்ற நிபந்தனையுடன் பதவியைத் துறக்கிறார். கி.பி 1155ல் கொனோயே நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். சுதொகு தன் மகனுக்குப் பட்டம் சூட்டக் காத்திருக்கையில் தொபாவின் இன்னொரு மகன், சுதொகுவின் தம்பி கோஷிராகவா பட்டத்துக்கு உரிமை கோருகிறார். சுதொகுவுக்கும் கோஷிராகவாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. அரச குடும்பத்துடன் மண உறவு பூண்ட வம்சங்களான ஃபுஜிவாரா, மினாமொதோ, தாய்ரா ஆகிய வம்சங்கள் இரண்டாகப் பிரிந்து இருவர் பக்கமும் நின்றன. கோஷிராகவாவுக்குப் பக்கபலமாக இருந்தவர்தான் இப்பாடலின் ஆசிரியர் ததாமிச்சி.

இவரது தம்பி யொரிநாகா சுதொகுவுக்கு ஆதரவாக இருந்தார். சுதொகுவின் பாசறையில் ஆலோசனையின்போது இரவில் எதிரிகள் உறங்கும்போது அவர்களைத் தாக்கி அழிக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் யொரிநாகா இது முறையற்ற செயல் என்றுகூறி அதை நிராகரித்துவிட்டார். ஆனால் அதே ஆலோசனை கோஷிராகவாவின் பாசறையில் கூறப்பட்டபோது ததாமிச்சி எந்தத் தயக்கமுமின்றி அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். அன்றிரவு கோஷிராகவாவின் படை சுதொகுவின் அரண்மனையைத் தாக்கியது. இரவில் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை எனினும் தீரத்துடன் போரிட்டு முறியடிக்கும் நேரத்தில் இன்னொரு புறமிருந்து அரண்மனைக்குத் தீ வைக்கப்பட்டது. ஒருபக்கம் படை, இன்னொரு பக்கம் நெருப்பு என சுதொகுவின் படை நிலைகுலைந்து தோல்வியடைந்தது. கோஷிராகவா மன்னராக முடிசூடிக்கொண்டார். ததாமிச்சியின் உதவிக்குப் பரிசாகத் தலைமை அமைச்சர் பதவி கிடைத்தது. ஹோகென் கலவரம் அடங்கினாலும் இது மினாமொதோ வம்சத்துக்கும் தாய்ரா வம்சத்துக்கும் இடையில் சில மனக்கசப்புகளை உருவாக்கியிருந்தது. உள்ளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருந்த நெருப்பு சில ஆண்டுகளில் ஹெய்ஜி கலவரமாக வெடித்தது. இந்த ஹெய்ஜி கலவரம்தான் ஜப்பானில் மன்னராட்சி ஒழிந்து சாமுராய்களின் ஆட்சி மலரக் காரணமாக இருந்தது.

இப்பாடலாசிரியர் ததாமிச்சி அமைச்சர் பதவியிலிருந்தாலும் சிறந்த கவிஞராகவும் சிறந்த எழுத்து வரைகலை நிபுணராகவும் சீனமொழியில் புலமை பெற்றவராகவும் விளங்கினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக இவரது சீனமொழியில் ஒன்று, ஜப்பானிய மொழியில் ஒன்று என இரு தனிப்பாடல் திரட்டுகளும் பிற இலக்கியங்களில் 58 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: கடலலையின் அழகை வியத்தல்

பாடலின் பொருள்: ஆழ்கடலில் படகைச் செலுத்தும்போது தூரத்தில் எழும் பேரலையின் வெண்மை மேகமோ எனக் கருதத் தூண்டுகிறது.

இயற்கையை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பேரரசர் சுதொகுவும் இவரும் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இயற்றியதாகச் சொல்கிறார்கள். இத்தொடரின் 11வது பாடலும் (என் நிலை உரைப்பார் யாரோ?) இதே போன்ற கடல்பயணத்தின்போது இயற்றப்பட்டதுதான். ஆனால் இரு கவிஞர்களின் மனநிலையும் வெவ்வேறானவை. இத்தொடரின் 33வது பாடலைப் (சக்குராவின் சலனம்) போன்றே இப்பாடலிலும் ஹிசாகதா என்றொரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சொர்க்கம், கதிரவன், நிலவு, மேகம், ஒளி எனப் பல பொருள்கள் உள்ளன. 33வது பாடலில் ஒளி என்ற பொருளிலும் இப்பாடலில் மேகம் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெண்பா:

தெள்ளிய முந்நீர்ப் பயணம் தொலைவினில்
ஞெள்ளலில் மேவும் சிறப்புறு - வெள்ளலை
கண்டிடும் போதில் களிகொள் மனதை
மதிமயக்கம் செய்யும் முகில்

முந்நீர் - கடல்
ஞெள்ளல் - இறக்கம், பள்ளம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.