http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 179

இதழ் 179
[ ஜூலை 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்பெரும் விழா அழைப்பிதழ்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
பெருவேளூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 75 (பனித்துளியன்ன உறுதிமொழி)
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 4
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
இதழ் எண். 179 > கலையும் ஆய்வும்
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகிலுள்ளது தக்கோலம். சோழ அரசரான முதல் பராந்தகரின் தலைமகனும் பட்டத்து இளவரசருமான இராஜாதித்தர் இங்கு நிகழ்ந்த பெரும் போரில்தான் கங்கமன்னர் பூதுகனால் யானை மீதிருந்த நிலையில் கொல்லப்பட்டார். அவரது மறைவு இப்பகுதியைச் சில காலம் இராட்டிரகூடர் ஆட்சியில் இருத்தியது. சோழர் வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற இவ்வூரில்தான் தேவார மூவரால் பாடப்பெற்ற திருவூறல் திருக்கோயில்1 பல்லவர் காலத்தில் கற்றளியாக்கப்பட்டு இன்றளவும் எழிலுடன் காட்சிதருகிறது.

சிற்பவளம் நிறைந்த இக்கோயிலிலிருந்து 1897இல் 19 கல்வெட்டுகளும் 1921இல் 31 கல்வெட்டுகளும் நடுவணரசின் கல்வெட்டுத்துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன.2 1897இல் பதிவான கல்வெட்டுகளின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5இல் வெளியாகியுள்ளன.3 கோயில் தாங்குதளத்திலிருந்து பின்னாளில் கண்டறியப்பட்ட பல்லவ அரசர் அபராஜிதரின் 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே இக்கோயிலைப் பல்லவர் கட்டுமானமாய் உறுதிப்படுத்துகிறது.4 கோயிலுக்கான நிலக் கொடை பேசும் இக்கல்வெட்டுடன் சேர்த்து இவ்வாளகத்துள் ளவை 51 கல்வெட்டுகள்.

அவற்றுள் சோழமரபைத் தொண்டைமண்டலத்தில் தொடங்கி வைத்த ஆதித்தசோழரின் கல்வெட்டுகள் இரண்டு. அவர் மகனும் பெருவீரருமான முதல் பராந்தகரின் 14 கல்வெட்டுகள் இங்குள்ளன.5 மன்னர் பெயரற்ற இராஜகேசரியின் 6, 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும் பரகேசரியின் 4, 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும் கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவரின் கல்வெட்டொன்றும் வீரபாண்டியன் தலை கொண்ட பார்த்திவேந்திரவர்மரின் கல்வெட்டுகள் நான்கும் இங்குள்ளன.6

முதல் இராஜராஜரின் கல்வெட்டுகள் ஐந்தும்7 முதல் இராஜேந்திரரின் பதிவுகள் இரண்டும் முதல் இராஜாதிராஜர் பதிவு ஒன்றும் அமைய,8 முதற் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளாக ஐந்து உள்ளன.9 மூன்றாம் இராஜராஜர், சதாசிவராயர், விஜயகண்டகோபாலன் தலைக்கு இரு பதிவுகள் கொள்ள,10 தேவராயர், சம்புவரையர் காலக் கல்வெட்டுகள் தலைக்கு ஒன்றாக உள்ளன.11 இரண்டாம் குலோத்துங்கர் காலத்ததாகக் கொள்ளத்தக்க கல்வெட்டொன்றும் விமலாதித்தர் கல்வெட்டொன்றும் இங்குள்ளன.12 பாடல் வடிவில் ஒரு கல்வெட்டு அமைய, மற்றொன்று வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியாக உள்ளது.13

தக்கோலம் - திருவூறல்

ஆதித்தசோழர் கல்வெட்டில் சம்பந்தரின் பதிகச் சுட்டலை ஒட்டியே திருவூறல் என்றழைக்கப்படும் இவ்வூர், முதல் பராந்தகரின் 19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் மணையில் கோட்டத்துத் திருவூறல்புறமாகவும் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் பன்மா நாட்டுத் திருவூறல்புறமாகவும் குறிக்கப்படுகிறது. கண்டராதித்தர் கல்வெட்டில் மணையிற் கோட்டத்துப் புரிசை நாட்டுத் திருவூறல்புறமாக அழைக்கப்படும் இவ்வூர், விமலாதித்தர் காலத்தில்தான் தக்கோலமான திருவூறல்புறமாக அறிமுகமாகிறது. முதல் இராஜராஜர் கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து நகரம் தக்கோலமான சத்திரியசிகாமணிபுரத்துத் திருவூறலாக இவ்வூரைப் பதிவுசெய்துள்ளது. முதல் இராஜேந்திரர் கல்வெட்டு இவ்வூரைப் பன்மா நாட்டு நகரமாகச் சுட்ட, முதல் இராஜாதிராஜரின் கல்வெட்டு பகைமேச்சிகந்த கோட்டத்துப் பன்மாநாட்டு நகரமான இரட்டபாடி கொண்ட சோழபுரமாகத் தக்கோலத்தைக் குறிக்கிறது.

முதல் குலோத்துங்கரின் தொடக்கக் காலக் கல்வெட்டு, பன்மா நாட்டு நகரமான வல்லவபுரமாக இதைக் குறிக்க, பிற்காலக் கல்வெட்டுகள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணையிற் கோட்டத்துப் பன்மாநாட்டு நகரம் தக்கோலமான குலோத்துங்கசோழபுரமாகப் பதிவுசெய்துள்ளன. விஜயநகர அரசர் சதாசிவர் கல்வெட்டு, இவ்வூரை ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணையிற் கோட்டத்துப் பாசாலிநாட்டுத் தக்கோலமான வடமுடிகொண்ட சோழபுரம் என்று அழைக்கிறது. இவ்வளாகத்திலிருந்து கிடைத்த கல்வெட்டுகளில் இதுவே காலத்தால் பிற்பட்டதென்பதால் ஊரின் பெயர் பொ. கா. 1557க்குப் பிறகு எப்படி இருந்தது என்பதை அறியக்கூடவில்லை.

பல்லவர், சோழர்கள், கன்னரதேவர், பார்த்திவேந்திரர், கீழைச் சாளுக்கிய விமலாதித்தர், கண்டகோபாலர், இராஜநாராயண சம்புவரையர், விஜயநகர அரசர்கள் எனப் பல மரபு அரசர்களின் பதிவுகளைக் கொண்டிருக்கும் இக்கோயிலில் பாண்டியர் கல்வெட்டுகள் இடம்பெறாமை குறிக்கத்தக்கது.

ஆதித்தசோழர்

முதல் ஆதித்தரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அபராஜிதச் சதுர்வேதிமங்கலத்து சபையார் கொடையாளி ஒருவரிடமிருந்து தாம் பெற்ற 30 கழஞ்சுப் பொன்னை முதலாகக் கொண்டு கோயிலில் நந்தாவிளக்கேற்ற இசைந்தமை கூற, அவரது 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மாரமரையர் மகன் பிரதிபதி, ‘ஆனித் தலைப்பிறையால் தீண்டின’ சூரியகிரகணத்தன்று இறைவனுக்கு 317 கழஞ்சு நிறையுடைய வெள்ளிக்கெண்டியை வழங்கியமை தெரிவிக்கிறது. இப்பிரதிபதியை திருப்புறம்பியப் போரில் உயிர்துறந்த முதல் பிருதிவீபதியின் பெயரனான இரண்டாம் பிருதிவீபதியாக ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.14

முதல் பராந்தகர்

இங்குள்ள முதல் பராந்தகரின் 14 கல்வெட்டுகளில் அவரது 7ஆம் ஆட்சியாண்டுப் பதிவு ஊர்ப் பெரிய ஏரியில் ஓடம் இடப் பெண்ணொருவர் பொன் அளித்தமை கூறுகிறது. அந்த ஓடத்தின் செலவினங்களுக்காகப் பஞ்சவார நெல்லில் 150 காடி அளிக்கும் பொறுப்பைப் பருந்தூர் ஊரவை ஏற்றது.15 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தேவதான ஊரான பருந்தூரிலிருந்து வரும் பஞ்சவார நெல் 1125 மரக்காலை, இராஜகேசரி நாழியால் 7 நாழி 1 உரி நெல் கொள்ளும் மரக்காலால் அளந்து கோயிலுக்களிக்கத் திருவூறல் சபையார் இசைந்தமை தெரிவிக்கிறது.16

19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, சோழநாட்டுத் தென் கரைநாட்டுக் கோவத்தக்குடி வாழ் சிங்கன்பாழி, போந்தைப்பாக்கம் சபையாரிடம் எண்ணாழிக் காலால் அளக்கப்பெற்ற 800 காடி நெல்லளித்துக் கோயிலில் அறக்கட்டளை அமைத்தமை பேசுகிறது. காடிக்கு ஆண்டுக்கு நான்கு நாழி வட்டியென 100 காடி நெல் அளக்க ஒப்பிய சபையார் நெல் பெற வருபவருக்கு நாளும் இரண்டு சோறு தரவும் இசைந்தனர்.17 20ஆம் ஆட்சியாண்டில் சோழநாட்டுத் தென்கரைநாட்டு மேல்செங்கிளிநாட்டு விசலூரைச் சேர்ந்த பராந்தகப் பல்லவரையனான அரையன் விளக்கன் 90 ஆடுகள் தந்து கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றினார்.18

21ஆம் ஆட்சியாண்டில், இறைவனுக்கு ஆண்டுவரை அறு நாழிக் காலால் அளக்கக் கடவ புரவு நெல் 300 காடியுடன் ஆட்டுக் கறை, தொக்கைக்குன்றி உள்ளிட்ட சில்ஆயங்கள் அடங்கலாக வாசியேற்றிக் கயத்தூர் ஊரார் தரக் கடவ பொன் இரண்டரைக் கழஞ்சாக அமைந்தது. இப்பொன்னும் நெல்லும் இறையாக ஆண்டுதோறும் இறுப்பதாக ஊரார் உறுதியளித்தனர்.19 அதே ஆட்சியாண்டிலான மற்றொரு கல்வெட்டு, அருளன் மகள் சவரி கோயிலில் நந்தாவிளக்கேற்ற ஆடுகள் அளித்தமை கூறுகிறது.20 மன்னரின் 24ஆம் ஆட்சியாண்டில் கோயிலில் அமைந்திருந்த இலிங்கத்திருமேனிக்குக் கொள்கை என்றழைக்கப்பெற்ற கவசம் அணிவிக்கக் கொடையாளி ஒருவர் 455 கழஞ்சுப் பொன் அளித்தார்.21 28ஆம் ஆட்சியாண்டில் தலமகாதேவர் மகன் எச்சன் சோழன் 100 ஆடுகள் தந்து ஒரு நந்தாவிளக்கேற்றினார்.22

29ஆம் ஆட்சியாண்டில், சோழநாட்டுப் பாம்புணிக்கூற்றத்துத் தேவன்குடிக் கிழவர் வீரசோழ விழுப்பேரரையர் 135 ஆடுகள் தந்து ஒன்றரை விளக்கேற்றினார்.23 அரசரின் 31ஆம் ஆட்சியாண்டில் அமைந்த மூன்று கல்வெட்டுகளுள் இரண்டு, மன்னரின் மகளும் கோவிந்த வல்லவரையரின் தேவியுமான வீரமாதேவி கோயிலில் நந்தாவிளக்கேற்ற அளித்த கொடைகளைக் குறிக்கிறது. தாமர்கோட்டத்துச் சம்புழாலைக் குடிகளும் மணையிற் கோட் டத்துப் புரிசைநாட்டு ஊராடகம் மக்களும் அக்கொடைகளை நிருவகிக்கும் பொறுப்பேற்றனர்.24 மற்றொன்று, பாண்டிநாட்டு வையைக்கரைத் தேனூரைச் சேர்ந்தவர் நந்தாவிளக்கேற்ற 90 ஆடு கள் தந்தமை கூறுகிறது.25

பராந்தகரின் 35ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயிலில் விளக்கேற்றும் பொறுப்பை ஏற்றிருந்த அணைக்கரைப்புதூர் குடிகளுக்கு மணையிற் கோட்டத்துப் பாசாலிநாட்டுப் பாசாலிக் கிழவர் நிலம், வீட்டுமனை, சில உரிமைகள் அளித்தமை தெரிவிக்க, ஆட்சியாண்டற்ற அவரது கல்வெட்டு, கோயிலில் நந்தாவிளக்கேற்ற மதுராந்தகப் பல்லவரையரின் பணிமகன் 90 ஆடுகள் அளித்தமை சொல்கிறது.26

இராஜகேசரி, பரகேசரி

மன்னர் பெயரற்ற இராஜகேசரியின் 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மணையிற் கோட்டத்துப் புரிசை நாட்டுப் புரிசை வாழ் குடிகள் திருவூறல் கோயிலாரிடமிருந்து பெற்ற 20 கழஞ்சுப் பொன்னுக்கு உரிய ஆண்டுவட்டியாக நெல்லளிக்க இசைந்தமை கூறுகிறது. இராஜகேசரியின் 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மணையிற் கோட்டத்துப் புரிசை நாட்டுத் திருவூறல்புறத்து அபராஜிதச் சதுர்வேதிமங்கல சபை திருவூறல் கோயிலாரிடம் தாங்கள் பெற்ற தர்மகட்டளைக்கல்லால் அளக்கப்பட்ட பொன் எண்பது கழஞ்சிற்கு ஆண்டு வட்டி கழஞ்சிற்கு அரைக்காலாகப் பொன் பதின்கழஞ்சினை ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் கோயில் பண்டாரத்தில் செலுத்த இசைந்த தகவலைத் தருகிறது. இந்த ஆவணத்தை ஊர் மத்தியஸ்தர் குமிழூர்ப் பொன்னப்புறவன் இருநூற்றைம்பதின்ம மங்கலோத்தமன் எழுதியுள்ளார்.27 இவ்விரு கல்வெட்டுகளுக்குமுரிய இராஜகேசரியாகக் கண்டராதித்தரைக் கொள்ளலாம்.

மன்னர் பெயரற்ற பரகேசரிவர்மரின் 4ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, சோழநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்துப் புலியூரைச் சேர்ந்த நாரத்துங்கப் பேரையன் இறைவன் முன் நந்தாவிளக்கெரிக்க ஆடுகள் அளித்தமை பகிர, அவரது 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, நெல்வேலியைச் சேர்ந்த நரதுங்கப் பல்லவரையனான எறநந்தி 90 ஆடுகள் தந்து நந்தா விளக்கேற்றியதைக் கூறுகிறது. பல்லவரையனுக்காக உழக்கு நெய் கொண்டு விளக் கேற்றும் பொறுப்பைத் திருக்கோயில் ஆராய்வாரும் பதியும் பாதமூலத்தாரும் தக்கோல நகரத்தாரும் ஏற்றனர்.28

கன்னரதேவர், பார்த்திவேந்திரர்

கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவரின் 27ஆம் ஆட்சியாண்டில் திருவூறல் மடமுடைய விஜ்ஞான க்ஷேம படாரர் மகன் வாசஸ்பதி படாரர் இக்கோயிலில் நந்தாவிளக்கேற்ற அளித்த 90 ஆடுகளை மும்மலை மன்றாடி ஏற்று, அதற்கான நெய் வழங்க இசைந்தார்.29 ஆதித்த கரிகாலர் காலத்தவரான வீரபாண்டியன் தலை கொண்ட பார்த்திவேந்திரரின் கல்வெட்டுகள் நான்கில்,30 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருவூறல் இறைவனுக்கு மன்னரின் தேவி அருமொழிநங்கை பள்ளிக்கட்டில் வழங்கியமை கூறுகிறது. ஆண்டுக்கு 9 மஞ்சாடி வட்டி வருமாறு தக்கோல நகரத்தார் இந்த அறக்கட்டளைக்குப் பொன்னளித்தனர். மன்னரின் 4ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மாராயப்பாடி தாழக்கொட்டிக் காமுண்டசாமி மகன் கேசுவையனான பல்லவன் பிரம்மாதராயன் கோயிலுள் இருக்கும் துர்காபிடாரிக்கு நந்தாவிளக்கேற்ற 96 ஆடுகள் அளித்ததாகவும் மதுராந்தகக் கடுத்தலை மன்றாடி மகன் குமரனான வீரஅணுக்க மன்றாடி ஆடுகளுக்குப் பொறுப் பேற்று நெய்யளக்க இசைந்ததாகவும் கூற, 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தேவனார் மகள் நந்திரி நங்கையின் மகளான குமரடி நங்கை நந்தாவிளக்கேற்றத் தந்த 96 ஆடுகளைப் பெற்ற மன்றாடி பையன் திருவூறல் நாளும் உழக்கெண்ணெய் அளிக்க இசைந்தமை பகிர்கிறது.

மன்னரின் 10ஆம் ஆட்சியாண்டில், இக்குமரடிநங்கை இறைவனின் இரணசிங்கவீரர் பள்ளிக்கட்டில் மண்டபத்தில் தாம் எழுந்தருளுவித்த கலிகைவிடங்கருக்கு அமுதளிக்க மணையிற் கோட்டம் திருவூறல்புறத்துத் தன்கூறான இராஜமார்த்தாண்ட சதுர்வேதிமங்கல சபையாரிடம் 92 கழஞ்சுப் பொன்னளித்தார். அதை முதலாகக் கொண்டு, கவராமொழி மரக்காலால் அளக்கப்பெற்ற 92 காடி நெல்லை 3 கூறாக அளிக்க சபையார் இசைந்தனர். திருச்சென்னடைக்கும் சபையாரே நெல்லளந்ததாகவும் பஞ்சவார நெல்லும் கவராமொழியால் அளக்கப்பட்டதாகவும் கல்வெட்டுக் கூறுகிறது.

குறிப்புகள்
1. முதல் திருமுறை: 106; ஆறாம் திருமுறை: 7, 70; ஏழாம் திருமுறை: 31.
2 ARE 1897: 1 - 19; 1921: 243 - 273.
3. SII 5: 1364 - 1382.
4. T. V. Mahalingam, Inscriptions of the Pallavas, Ins. No. 345. இக்கல்வெட்டைக் கூ.ரா.சீனிவாசனும் தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ப. 101.
5. ARE 1921: 260; SII 5 : 1368; SII 5: 1371 - 75; ARE 1921: 245, 246, 248, 249, 251 - 254, 261.
6. SII 5: 1369; SII 13: 168; ARE 1921: 244, 250; SII 5: 1365, 1367, 1370, 1376, 1377.
7. SII 5: 1366; ARE 1921: 247, 257-259
8. SII 5: 1378; ARE 1921: 256, 262.
9. SII 5: 1379, 1381; ARE 1921: 243, 263, 268.
10. ARE 1921: 264 - 267, 269, 272.
11. ARE 1921: 270, 271.
12. SII 5: 1380, 1364.
13. ARE 1921: 273; SII 5: 1382.
14. SII 13: 294; SII 5: 1368. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், பக். 205-206. இந்த 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் குறிப்பிடும் சூரியகிரகணம் பொ. கா. 894 அல்லது 895இல் நிகழ்ந்ததாகக் கொண்டு ஆதித்தர் ஆட்சிக்கு வந்த ஆண்டை 870 அல்லது 871ஆக வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். K. A. Nilakanta Sastri, The Colas, p. 112.
15. ARE 1921: 252.
16. ARE 1921: 261.
17. SII 5: 1371.
18. SII 5: 1374.
19. SII 5: 1375.
20. SII 5: 1373.
21. ARE 1921: 251. தஞ்சாவூர் மாவட்டம் திருவெண்காட்டிலுள்ள முதல் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இது போன்றதொரு பொன்னாலான கொள்கை செம்பியன் மாதேவியாரால் வழங்கப்பட்டமை குறிக்கிறது. 1500 கழஞ்சு நிறையுடனிருந்த அதன் சிகரத்திலும் நான்கு முகங்களிலும் இடம்பெற்ற மாணிக்கம் 5, வைரம் 52 முத்து 3261. SII 13: 144
22. SII 5: 1372.
23. ARE 1921: 249.
24. ARE 1921: 245, 246.
25. ARE 1921: 248.
26. ARE 1921: 254, 253.
27. ARE 1921: 244; SII 13: 168.
28. SII 19: 104; ARE 1921: 1360.
29. SII 5: 1365.
30. SII 5: 1370, 1377, 1367, 1376.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.