http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 179

இதழ் 179
[ ஜூலை 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்பெரும் விழா அழைப்பிதழ்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
பெருவேளூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 75 (பனித்துளியன்ன உறுதிமொழி)
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 4
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
இதழ் எண். 179 > இலக்கியச் சுவை
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
மு. சுப்புலட்சுமி
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com
வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி

தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை…

தமிழக வரலாற்றில், சைவம் தழைத்த காலம் என்றும் சைவ மறுமலர்ச்சிக் காலம் என்றும் பத்திமை காலத்தை ஆய்வாளர்கள் குறிப்பர். அவ்வாறெனில், சிவனை வழிபடும் வழக்கம் பத்திமை காலத்துக்கு முன்பே இருந்தது தெரிகிறது. தொல்காப்பியக் காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களும் முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்ற நிலத்திற்குரிய கடவுள்களும் முறையே இருந்ததை அறிவோம். சங்க இலக்கியங்கள், தமிழ் மண்ணில் தொன்றுதொட்டு வணங்கப்பட்ட முதன்மைத் தெய்வங்களான கொற்றவையைப் பழையோள் என்றும் முருகனைப் பழையோள் குழவி என்றும், திருமால் மற்றும் பலராமனைச் சிறப்புற்ற தெய்வங்களாகவும் காட்டுகின்றன.


கொற்றவை, கூகூர்

அகநானூறு ‘முக்கண்செல்வன்’ என்றும், சிறுபாணாற்றுப்படை ‘ஆலமர்செல்வர்’ என்றும், புறநானூறு ‘ஆலமர்கடவுள்’ என்றும் ஆலமர நிழலில் அமர்ந்து அருள்பாலிக்கும் தென்முகக் கடவுளைச் (தட்சிணாமூர்த்தி) சுட்டக் காணலாம். சங்க இறுதிகாலப் படைப்பாகக் கருதப்படும் கலித்தொகையில்தான் சிவபெருமான்- ஆதிரையான், ஆனேற்றுக் கொடியோன், ஈர்ஞ்சடை அந்தணன், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன் என்று பலவாறாகப் போற்றப்படுகிறார்.

பிறவாயாக்கைப் பெரியோன் என்று சிலம்பிலும், நுதல்விழி நாட்டத்துப் பெரியோன் என்று மணிமேகலையிலும் சிவபெருமான் வணங்கப் பெற்றாலும், சங்ககாலம்தொட்டுக் காப்பியக்காலம்வரையில் சிவன் என்ற பெயரால் அவர் அழைக்கப்படவில்லை, என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம் ‘சைவசமயம்’ நூலில் கூறுகிறார்.

‘சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்’ (5ஆம் தந்திரம்.15.1) என்று திருமூலரும், ‘சிவகதி சேர்ந்தின்பம் எய்துவதைக்’ (மூத்ததிருப்பதிகம் 11) காரைக்கால் அம்மையாரும், பத்திமை காலத் தொடக்க ஆண்டுகளில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அவரைத் தொடர்ந்து திருநாவுக்கரசர், ‘சிவனெனும் ஓசையல்லது அறையோ உலகில்’ (4.008.01) என்று சைவத்தின் தலைமகனைப் பாடுவதோடு, திருச்செம்பொன்பள்ளியில் தந்தையும் தாயுமான ஞானமூர்த்தி சிந்தையுள் சிவம் அதுஆனார்(4.029.04) என்று உருகுகிறார். உமையால் ஞானப்பால் தந்தருளப் பெற்ற திருஞானசம்பந்தரோ, ‘தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்தீயானவன் சிவனெம்மிறை’ (1.011.05) என்று உமையொருபாகனைப் பாடுகின்றார்.

காலனை உதைத்தும் காமனை எரித்ததுமான எட்டு வீரச்செயல்கள் புரிந்தவரும் ஐஞ்சபைகளில் ஆடவல்லாருமான சிவபெருமானின் பேராற்றலை, காப்பியக் காலத்துக்குப் பிந்தைய தமிழகம் வியந்து போற்றும்பொருட்டுத் தம் வாழ்வையே வரலாறாக அளித்தவர்கள் சிவனடியார்கள். ‘அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்’ என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப எல்லையில்லா அன்பின் வெளிப்பாடே பத்திமை என்று உணர்த்திய உயர்வாழ்வு அவர்களுடையது. இசையால் தொண்டு செய்த நீலகண்ட யாழ்ப்பாணரும் (யாழ்) ஆனாயநாயனாரும் (குழல்); மனதால் கோயில் கட்டி வழிபட்ட பூசலாரும் வாயிலார் நாயனாரும்; காலம் கடந்து நிற்கும் இறைவனின் வழிபாட்டுத் தலங்கள் அமைத்த கோச்செங்கணானும் காரிநாயனாரும் காட்டியது அன்பில் ஒரு வகை. தம் கண்ணையே இடந்து இலிங்கத் திருமேனியில் அப்பிய கண்ணப்பரும், மகனை அறுத்து உணவு படைத்த சிறுதொண்டரும், உதிரத்தால் விளக்கெரித்த கலியநாயனாரும், தந்தையின் காலை வெட்டிய சண்டேசரும் காட்டியது எண்ணுதற்கப்பாற்பட்ட இறையன்பு. இறையன்புக்கென வாழ்ந்த அறுபத்துமூவரில் பதிகம் பாடியோர் எழுவரே.

சிவனைப் பாடிப் பரவிய நாயன்மார் பதிகங்களை ஆழமாகப் படித்தால் கிடைக்கும் புதையல்களுள் முதன்மையாகக் கொள்ளத்தக்கது இறைவன் விரும்பும் அன்புமொழி தமிழென்பது. இறைவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன், தன்மேல் மட்டற்ற அன்புகொண்டோரை என்றும் காப்பவன் என்பதை வலியுறுத்தப் பிறந்தது பத்திமை இயக்கம் எனில், தாய்மொழியாம் தமிழ்மொழியில் இறைவனைப் பாடுவதும் தமிழ்வழியே அவனருளை நாடுவதும், இறையருளாம் பேரின்பத்தை அடையும் வழிகள் என்பதே பத்திமை இலக்கியத்தின் சாரம்.



தேவார மூவருக்கும் முன்னர், பதிகமும் அந்தாதியும் இரட்டை மணிமாலையும் பாடிய காரைக்கால் அம்மை, ‘காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ்ப் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே’ (11.002.11) என்று பாடியது இதைத்தான். அருந்தமிழால் இறைவனைப் பாடிய அடியாருள்ளும், சலம் பூவொடு தூபம் இருப்பினும் ‘தமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத’ அப்பரை, ‘செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கு அரசு’ (12.027.74) என்று தமிழை விரும்பிய சிவபெருமானே சிறப்புப் பெயரிட்டு வாழ்த்தினார். இக்கருத்தையே சேக்கிழாரும், ‘அன்பு பெருகிய சிறப்புமிகு அருச்சனை- பாட்டேயாகும்’ என்று சுந்தரருக்கு அறிவுறுத்திய சிவபெருமான், 'ஆதலான் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக’ (12.தடுத்தாட்கொண்டபுராணம்.216) என்று கூறுமிடத்தில் உறுதி செய்கிறார்.

தேவார மூவர் குறித்துச் சொல்கையில், இறைவன் சம்பந்தரைப் பாலைக் காட்டியும் அப்பரைச் சூலை காட்டியும் சுந்தரரை ஓலை காட்டியும் ஆட்கொண்டருளினார் என்று நயம்படச் சொல்வார்கள். சம்பந்தரின் பசி போக்கியவர், சுந்தரருக்குப் புதிய வாழ்வளித்தவர், அப்பருக்குத் தந்ததோ சூலை நோயை. சிவனவன் சிந்தையில் நின்றதனால், அவனருளாலே நோய் தீர்ந்த பின்னும் தொடர்ந்த சோதனைகளை என்னவென்று சொல்ல?

சுண்ணாம்பு அறையிலிட்டும், நஞ்சு கலந்த உணவளித்தும், யானையால் இடரச் செய்தும், கல்லைப் பூட்டிக் கடலில் எறிந்தும், சமணர் சொல் கேட்டுப் பல்லவ மன்னர் இழைத்த பலப்பலக் கொடுமைகளைத் தாங்கியவர் அப்பர். தாங்கொணா இன்னல்களைக் கடந்தும் போராடி நின்று, சைவ மறுமலர்ச்சிக்கும் பெரும் சமூக மாற்றத்திற்கும் வித்திட்ட ஆளுடைய அரசர் அவர். சிவன்பால் கொண்ட பத்திமை உணர்வால் பட்டை தீட்டப்பெற்ற வைரம்போல மிளிரும் அப்பரின் வாழ்வு- மனதை உருக்கும் அன்பும், அறமும்; நெறிகள் நிறைந்த பணிவும், பொறையும்; உடலை வருத்தும் வலியும் உழைப்பும் நிறைந்தது. வியக்கவைக்கும் இப்பண்புகளால் அறுபத்து மூவரில் தனித்தொளிர்கிறார் திருநாவுக்கரசர்.

திருமுறை பாடிய ஒவ்வொருவர் எழுத்திலும் பலவித உணர்வுகளுண்டு. அவர்களுள், அப்பருடைய பாடல்களில் வாழ்வில் கண்ட சோதனைகளின் வலியும், துடிப்பும், குழைவும், நெகிழ்வும் நிறைந்திருக்கும். பதிகங்கள் மூலம், தம் வாழ்வுப் பாதையையும் இறைத்தொண்டின் ஆழத்தையும் வயது முதிர்ந்தாலும் ஆற்றலோடு இயங்கச் செய்யும் பத்திமையின் வலிமையையும் காட்டுபவர் அவர். நம் இல்லத்துப் பெரியவர்போலக் கைப்பிடித்துக் கோயில்களுக்குக் கூட்டிச்சென்று, கோயிலின் பெருமை, உள்ளுறையும் இறைவனின் பெருமை, கோயிலின் பின்னுள்ள புராணக்கதை, ஊரின் சிறப்பு, அதில் வாழும் மக்கள் சிறப்பு, ஆடலும் பாடலும் பிறகலைகளும் தழைத்த நிலை, அக்காலத்தே புழக்கத்தில் இருந்த இசைக்கருவிகள் என்னென்ன, சுற்றியுள்ள விலங்குகள் பறவைகள் மலர்கள், என்று பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தேர்ந்த இறையுணர்வோடு கலந்தளிப்பவர்.

படிப்போரைக் கரைந்துருகச் செய்யும் அவர் பாடல்களால் நாம் அறிவது ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமயச் சூழலை மட்டுமல்ல, சமூகச் சூழலையும்தான். அப்பருடையது சைவ சமய வரலாற்றில் மிகவும் முக்கியமான காலம். அவர் காலத்தில், தமிழகத்தின் பெரும்பான்மைப் பகுதியை ஆண்ட பல்லவர்கள் சமணப் பற்றாளர்களாக இருந்தனர். களப்பிரர் காலம் தந்த தொய்வுக்குப்பின், மன்னர் சிம்மவிஷ்ணுவின் திறத்தால் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் மறுபடி கோலோச்சினர். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மரின் காலம்- மொழி, அரசியல், சமயம், கோயில்கள், கலைகள் என்ற பல பரிமாணங்களில் தமிழகத்தின் மறுமலர்ச்சிக் காலமெனப் போற்றப்படுகிறது. மகேந்திரரின் சமகாலத்தவரான அப்பர், மகேந்திரரால் பல கொடுமைகளுக்கு ஆளாகிப்பின் அதே மகேந்திரரைச் சைவத்திற்கு மாறச்செய்தது, சமயமாற்றம் மட்டுமல்ல, மிகப்பெரிய சமூகமாற்றமும்கூட. தந்தை சிம்மவிஷ்ணுவால் அரசியல் எழுச்சியும் மகன் மகேந்திரரால் கலை எழுச்சியும் கண்ட தமிழகத்தில் பெரும் சமய எழுச்சியும் சமூக மறுமலர்ச்சியும் இணைந்தது திருநாவுக்கரசர் என்னும் அந்தச் சைவப் பற்றாளரால்.

அப்பரும் சம்பந்தரும் சமகாலத்தவர் எனினும், சம்பந்தரினும் அப்பர் மூத்தவர்; நாவுக்கரசருக்கு ‘அப்பரே’ என்று அன்புடனும் மதிப்புடனும் பெயரிட்டவரும் அவரே. இவ்வகையில், களப்பிரருக்கு முந்தைய சிவவழிபாட்டிற்கும் திருத்தலங்களுக்கும் – சைவம் ஓங்கி நிலைபெற்ற மகேந்திரர்காலச் சிவவழிபாட்டிற்கும் இடையிலான வரலாற்றுப் பாலமாகத் தொடர்ச்சியைக் காட்டுபவை அப்பரின் பாடல்கள். பதிகம் பாடும் முறையிலும் ஒரு நெறிமுறை வகுத்துச் செய்தியளிப்பது அவர் சிறப்புக்களுள் மற்றொன்று. தமக்கு முந்தைய நாயன்மார்களுள் ஐவரை அடையாளம் காட்ட திருக்குறுக்கை வீரட்டானப் பதிகம்; இராவணனை மட்டுமே முழுமையாக இணைத்துப் பாடும் திருமறைக்காடு மற்றும் திருக்கயிலாயத்துப் பதிகங்கள்; ‘இரக்கமாயென் உடலுறு நோய்களைத் துரக்கனைத் தொண்டனேன் மறந்துய்வனோ’ என்று நோயையும் வினைகளையும் தீர்த்தமைக்கு நன்றி கூறத் திருவண்ணாமலைப் பதிகம் என்று அடுக்கிப்போகப் பட்டியல் மிக நீண்டது. அவற்றில் இரண்டு செய்திகளை இங்கு காண்போம்.

திருக்கழுக்குன்றத்துப் பழங்கோயில்

விஜயாலயருக்குப் பின் வந்த ஆதித்த சோழருடைய திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டு, கழுக்குன்றத்துக் கோயில் பெருமானுக்குக் கந்தசிஷ்ய பல்லவர் (பொதுக்காலம் 436-460) நிலம் அளித்ததாகவும் அதை நரசிம்மவர்மர் தொடர்ந்து நடத்தியதாகவும் குறிக்கிறது. (K.A.N. Sastri, Cholas, பக். 111)

நாயன்மார்களின் பாடல் பெற்றதால்தான் நூற்றாண்டுகளாய் வழிபாட்டில் இருந்த திருத்தலங்கள் அடையாளம் காணப்பட்டன. சைவ மறுமலர்ச்சிக்கு முன்னிருந்த கழுக்குன்றத்துக் கோயிலை அப்பர்-

பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன்றன்னைக்
காவலனைக் கழுக்குன்றம மர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே (6.092.01)

என்று பாடுவதோடு தம் பாக்களால் மறுஅறிமுகம் செய்கிறார். திருவதிகை வீரட்டானத்தில் தொடங்கிய தம் சைவநெறி வாழ்வின் நீண்ட பயணத்தைத் திருப்புகலூரில் திருவடிப்பேறு பெற்று நிறைவுசெய்த அப்பர், திருப்புகலூர் திருப்பதிகத்திலும் கழுக்குன்றத்துக் கடவுளைக் ‘கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே’ (6.099.07) என்று குறிப்பிடத் தவறவில்லை.

சிவனருள் பெற்ற கோச்செங்கணான்

அடுத்தது, அப்பருக்கு முந்தைய அடியார் 17 பேருள் ஒருவரான கோச்செங்கணான் பற்றியது. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கணான் 70 கோயில்கள் கட்டினார் என்று திருமங்கையாழ்வார் பாடும் முன்பே, திருத்தண்டலையையும் திருவைகல் மாடக்கோயிலையும் செம்பியன் கோச்செங்கணான் கட்டியதாகக் குறிக்கிறார் சம்பந்தர். ஆனால், சிவனுக்குப் பல கோயில்கள் அமைத்த செங்கணான் குறித்து அப்பருடைய திருக்குறுக்கை வீரட்டானத்துப் பதிகம் வழங்கும் செய்தி ஆர்வத்தைத் தூண்டுவது.

சிலந்தியு மானைக்காவிற் றிருநிழற் பந்தர்செய்து
உலந்தவ ணிறந்தபோதே கோச்செங் கணானுமாகக்
கலந்தநீர்க் காவிரீசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள்
குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே (4.049.04)

திருவானைக்காவில் சிவபெருமானுக்குத் திருநிழல் பந்தலமைத்த சிலந்தியை, மறுபிறப்பில் காவிரி சூழ்ந்த சோழர்குலத்தில் கோச்செங்கணானாகப் பிறக்கச் செய்தார் குறுக்கை வீரட்டனார், என்று திருவானைக்கா கோயிலின் தலபுராணத்தை முதன்முதலில் சொல்பவர் அப்பரே. அதையே, நான்கு நூற்றாண்டுகள் கழித்து, முதலாம் இராஜேந்திரரும் தம் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பதிவு செய்கிறார். செப்பேட்டின் வடமொழிப் பகுதியில் சோழ அரசர் மரபு வரிசையில், சிவனருளால் சிலந்தியாய்ப் பிறந்த பிறப்பு நீங்கிவிட்டவரெனக் கோச்செங்கணான் சுட்டப்படுகிறார்.

இறைப்பற்றில் பொதிந்திருக்கும் அன்பை வெளிப்படுத்த மொழி தேவையில்லை; ஏனெனில், அன்பொன்றே பத்திமையின் மொழி. ஆனால், பயன்படுத்தும் மொழி தமிழாக இருப்பின், அது தரும் சுவையே தனி. பதிகம் பாடிய அப்பரின் நோக்கம் சிவனைப் பாடிப் பரவுவதுதான். ஆனால், நாவுக்கரசர் இல்லையா? சமூகம் சார்ந்த கலை, வரலாறையும்; நம்பிக்கை சார்ந்த புராணக் கதைகளையும்; மொழி சார்ந்த உவமை, பழமொழிகளையும்; உணர்வு சார்ந்த மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சியையும் இணைத்துத் தம் பாடல்களில் வாரிவாரி வழங்கி எண்ணியெண்ணி வியக்கச் செய்கிறார். இது, ‘கரும்புதரு கட்டியை இன்னமிர்தைத் தேனைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக்குன்றை’ என்று அப்பர் குழைந்துருகிய குழகரின் அருள் மட்டுமல்ல, சங்ககாலந்தொட்டு மண்ணையும் மொழியையும் நேசிக்கும் தமிழ்ப் படைப்பாளர்களுக்குத் தமிழன்னை அளித்த கொடை.

துணைநூல்பட்டியல்

1. டாக்டர் மா. இராசமாணிக்கனார், சைவ சமயம்
2. டாக்டர் மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு
3. டாக்டர் மா. இராசமாணிக்கனார், பெரியபுராண ஆராய்ச்சி
4. டாக்டர் மா. இராசமாணிக்கனார், கால ஆராய்ச்சி
5. டாக்டர் இரா. கலைக்கோவன், அப்பர் எனும் அரிய மனிதர், பகுதி 1,2,3; வரலாறு.காம்
6. KAN Sastri, Cholas
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.