http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 179
இதழ் 179 [ ஜூலை 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 契りおきし させもが露を いのちにて あはれ今年の 秋もいぬめり கனா எழுத்துருக்களில் ちぎりおきし させもがつゆを いのちにて あはれことしの あきもいぬめり ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் மொத்தோதொஷி காலம்: கி.பி 1060-1142. முந்தைய பாடலின் ஆசிரியர் அறிமுகப்படுத்திய புதிய பாவகையை விமர்சித்தார் என்று பார்த்தோமல்லவா? அவர்தான் இப்பாடலின் ஆசிரியர். சமகாலத்தில் சிறந்த புலவராக மதிக்கப்பட்டுப் பல்வேறு கவிதைப்போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்திருக்கிறார். அரண்மனையில் அமைச்சராக இருந்த தொஷிய்யே என்பவரின் மகனாகவும் அரசுப்பணியிலும் இருந்தாலும் தனது கவிதை ஆர்வத்தாலோ என்னவோ உயரிய பொறுப்புகளுக்குச் செல்லும் விருப்பின்றி இருந்தார். கி.பி. 1138ல் தனது 80வது வயதில் கக்குஷின் என்ற பெயரில் புத்தத்துறவியானார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக இவரது தனிப்பாடல் திரட்டு ஒன்றும் 105 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. காலத்தால் பிற்பட்ட சிறந்த 36 புலவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். பாடுபொருள்: அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேறாமல் வருந்துதல் பாடலின் பொருள்: என்னை நம்பு; நிறைவேற்றுகிறேன் என்றீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் பனிகாலத்தில் புற்களின்மேல் அமரும் பனித்துளிகள் விரைவில் மறைவதுபோல் மறைந்து இவ்வாண்டும் இலையுதிர்காலம் வந்துவிட்டது. இப்பாடலுக்கு ஒரு சுவையான பின்புலம் உள்ளது. இப்பாடலாசிரியரின் சமகாலத்தில் அரண்மனையில் மிகவும் வலிமைவாய்ந்த அமைச்சராக இருந்தவர் ததாமிச்சி என்பவர். அவரிடம் இவர் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். நரா என்னுமிடத்திலிருந்த கொஃபுகுஜி என்ற கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர்காலத்தில் யூய்மா என்றொரு திருவிழா நடைபெறும். இது மகாயான புத்தமதத்தின் விமலகீர்த்தி எனும் திருவிழாவாகும். இதில் எல்லா நாட்களும் மாலையில் கதாகாலட்சேபம் நடத்தப்படும். அதில் கதைசொல்லியாக வாய்ப்புப்பெற அறிஞர்களுக்குள் மிகப்பெரிய போட்டியே நடக்கும். அந்த ஆண்டு நடைபெறும் விழாவில் தனது மகனைக் கதைசொல்லியாக நியமிக்க அமைச்சர் ததாமிச்சியிடம் இப்பாடலாசிரியர் வேண்டுகோள் வைக்கிறார். ததாமிச்சியும் தன்னை நம்பினோர் கைவிடப்படார் என்ற தொனியில் உறுதியளிக்கிறார். ஆனால் நிறைவேற்றவில்லை. அந்த வருத்தத்தால் இப்பாடலை இயற்றினார். நினைவூட்டல் என்றும் கூறுகிறார்கள். நீர்மேல் எழுதிய எழுத்துபோல் உறுதிமொழி பொய்யானதைப் பகலவன் வரும்வரை புல்லின் நுனியில் பனித்துளிகள் அமர்ந்திருந்து பின்னர் மறைவதை ஒப்பிடுகிறார். இங்கு புல் என்பதற்கு ஆர்ட்டெமிசியா என்ற வகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிப்பிடுகிறார். இத்தாவரம் ஏற்கனவே இத்தொடரின் 51வது பாடலிலும் (வலிவிடு தூது) இடம்பெற்றிருக்கிறது. வெண்பா: நம்புவாய் என்றதும் நம்பினேன் ஆயினும் வெம்புதல் மட்டுமே மீதமாய்ச் - செம்பரிதி கண்டிடில் மாயமாய் மாய்ந்திடும் புல்மேல் பனித்துளி ஒத்ததும் வாக்கு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |