http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 179

இதழ் 179
[ ஜூலை 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்பெரும் விழா அழைப்பிதழ்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
பெருவேளூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 75 (பனித்துளியன்ன உறுதிமொழி)
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 4
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
இதழ் எண். 179 > கலையும் ஆய்வும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி
மக்கள்

வலஞ்சுழிக் கோயிலுக்குக் கொடையளித்தவர்களுள் மிகச் சிலரே வலஞ்சுழியைச் சேர்ந்தவர்கள். வலஞ்சுழிக் கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் முந்நூற்றுப் பதின்மூன்று ஊர்களில் வாழ்ந்த இனம், தொழில் சார்ந்த மக்கள் பிரிவுகளாக அந்தணர், வேளாளர், செட்டிமார், நகரத்தார், வேட்கோவர், இடையர், தட்டார், தச்சர், உவச்சர்கள், தேவரடியார்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலான கல்வெட்டுகள் பிரமதேயங்கள் அளித்த கொடைகளைத் தழுவி நிற்பதால், அந்தணர் குடும்பங்களைப் பற்றிய தகவல்கள் பரவலாகக் கிடைத்துள்ளன. வழிவழிச் சொத்துரிமை, பெண்களுக்கும் சொத்துரிமை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை, கூட்டுச் சொத்துரிமை கொண்டிருந்த அந்தணக் குடும்ப உறுப்பினர்கள் தங்களைக் குறிக்கும்போது, சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் அந்தணர் தொடர்பான கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை.

ஊர்த் தொடர்புடைய குடும்பங்களாய் அந்தணர்கள் சேர்ந்து வாழ்ந்தமையைச் சில கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இராயூர், ஆதனூர், மாங்களூர், வங்கிபுறம், குரவசேரி, கோமடம் ஆகிய ஊர்கள் பெரும்பான்மையான அந்தணக் குடும்பங்களின் பிறப்பிட ஊர்களாக அமைந்திருந்தன. அனைத்து அந்தணர்களுமே தங்கள் பெயரின் பின்னொட்டாக பட்டன், பட்டஸ்ய எனும் இனக்குறிப்புச் சொல்லைக் கொண்டிருந்தனர். கோயிலில் பூசை மேற்கொண்டிருந்த அந்தணர்கள் தங்களை, ‘சிவபிராமணர்கள்’ என்று அழைத்துக் கொண்டனர். அவர்களுள் ஒருவரான சிவபிராமணன் திருவெண்காடன் செட்டி பெரியான் தம் பெயரின் பின்னொட்டாகச் செட்டி எனும் பெயரைக் கொண்டிருந்தமையின் பொருள் புலப்படவில்லை.1

அரசு நிர்வாகத்தில் அந்தணர்கள் பெரும் பொறுப்பு வகித்தமைக்கு அரசாணைகள் சான்று பகர்கின்றன. கிருஷ்ணன் இராமனான இராஜேந்திரசோழ பிரமமாராயர், மும்முடிச்சோழ பிரமமாராயர், தாமோதிர பட்டர், பூவத்த பட்டர், பரமேசுவர பட்ட சர்வ கிருதுயாÍ, பட்டன் கூத்தாடி ஆகியோர் திருமந்திர ஓலை நாயகம், நடுவிருக்கை போன்ற மிக உயர்ந்த பதவிகளில் இருந்தனர்.

கல்வெட்டுகளில் அந்தணர்களை அடுத்து அதிக அளவில் இடம்பெற்றுள்ள வேளாளர்களும் அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகித்தவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட பிரமமாராயர் பட்டம் போல, வேளாளர்களுக்கும், ‘மூவேந்த வேளார்’ என்ற சிறப்புப் பெயர் தரப்பட்டுள்ளது. முதல் குலோத்துங்கரின் திருமந்திர ஓலைகளுள் ஒருவராகச் சரணாலய மூவேந்த வேளாரும் முதல் இராஜராஜர், முதல் இராஜேந்திரர் காலத் திருமந்திர ஓலைநாயகங்களாக முறையே மதுராந்தக மூவேந்த வேளாரும், தீர்த்தகரனான வில்லவன் மூவேந்த வேளாரும் பணிபுரிந்தனர். சோழர் காலப் புரவுவரித் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களுள் பெரும்பாலோர் வேளாளர்களே என்பதும் இங்கு அறியத்தக்கதா கும். அந்தணர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் தங்கள் ஊர்ப் பெயரை முன்னொட்டாகக் கொண்டாற் போல், வேளாளர்கள் தங்களுக்கு நில உரிமை இருந்த ஊர்களின் பெயரை, ‘உடைமை’ என்ற சொல்லுடன் இணைத்து, ‘உடையான்’ என்று முன்னொட்டாகக் கொண்டனர்.

வேட்கோவர், தச்சர், தட்டார் முதலிய தொழில் சார்ந்த மக்களும் சமுதாயத்தில் உரிய மதிப்புடன் வாழ்ந்தனர். ஆவணங்கள் சிலவற்றிற்கு அவர்களும் சான்றாளர்களாக இருந்து கையெழுத் திட்டுள்ளனர். அவரவர்தம் தொழில் திறமைக்கு ஏற்ப இத்தொழில் வல்லுநர்கள் பெருந்தட்டான், தச்சாச்சாரியன் எனும் சிறப்புப் பட்டங்களையும் பெற்றிருந்தனர். அகிலநாயகன் கடைத் தெருவிலும் ஆளுடைய பிள்ளையார் திருமடைவிளாகத்திலும் வாணியகுடிமக் கள் வாழ்ந்திருந்தனர். நங்கத்தார் தளியைத் தம் ஆளுகையில் கொண்டிருந்த நகரத்தார் பிற ஊர்களிலும் ஆங்காங்கே இருந்தனர்.

நகரத்தார், வாணியர் தவிர வியாபாரிகள் சிலர் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்து வாழ்ந்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுள்ளது. அந்தணர்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். மகாதேவ பட்டன், சுந்தரத் தோளுடையான் பட்டன் ஆகிய இருவரும் வெள்ளைப் பிள்ளையார் திருமுன் வாழைப்பழம் விற்றதாக மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டொன்று எடுத்துரைக்கிறது.2

மக்கள் பெயர்கள்

நூற்றுக்கணக்கான பெயர்களைத் தரும் வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் பெரும்பான்மையான மக்கள் பெயர்கள் வடமொழிப் பெயர்களாகவே அமைந்துள்ளன. மன்றத்துள் ஆடிய பெருமாள், எதிரிலாப்பெருமாள், மலைக்கினிய நின்றான், பன்னிருவன், காலிலுங் கண்ணுடையான், நீலன், பெரிய நம்பிப் பிள்ளை, அழகிய வில்லி, வல்லங்கிழையான், திருநீற்றுச்சோழன், கூத்தாடுவான், திருவீதிநம்பி, பொய்யாத தமிழூரன், காடுவெட்டி, சேக்கிழான் கலியன், பெருங்காடன், ஆவின் கன்று, பாம்பன், கிழக்கடைய நின்றாள், ஆட்கொண்டான் தேவும் திருவும் உடையாள், அரையன் கூத்தாழ்வி, பாலொத்த மென்மொழியாள், பரிஞ்சுரைப்பாள், கிழாநடி, உய்யவந்த நாச்சி, சோலையாள்வி, பெற்றாள்வி என்று மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்ப் பெயர்கள் உள்ளன.

கல்வி

பிரமதேய ஊர்களில் சபை உறுப்பினராவதற்குரிய தகுதிகளில் ஒன்றாய் வேதஅறிவு குறிப்பிடப்படுவதால் அந்நாளில் வேதம் பயில்வது இயல்பாகவே நன்னிலையில் இருந்தது. கொடை ஆவணங்கள் எழுதப்பட்டுள்ள நேர்த்தியும் அவ்ஆவணங்களின் வகைப்பாடும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லாட்சிகளும் தொடர்களும் கணக்கியல் கூறுகளும் அக்கால மக்களின் நிர்வாகத் திறத்திற்கும் அவர்தம் சட்ட, கணித அறிவிற்கும் சான்றுகளாகின்றன.

அரசாணைகள் திருமுகங்களாகி உரியவர்களால் சரிபார்க்கப்பட்டு நிவந்தங்கள் நிறைவேற்றப்பட்ட பாங்கும் வருவாய்த்துறையின் பல்வேறு அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து திறம்படச் செயற்பட்ட முறையும் அங்கிருந்த பதிவேடுகளின் பதிவாக்க அமைப்பும் சோழர் கால அலுவல் ஆளுமைக்குச் சான்றுகளாக மிளிர்கின்றன.

வேளாண்மை

மக்களுக்கு உணவு வழங்கும் தொழிலாக இருந்த வேளாண்மை, அரசுக்கும் பிற நிர்வாக அமைப்புகளுக்கும் வருவாய் வழங்கும் முதன்மைத் தொழிலாகவும் அமைந்தது. பாசன வசதிகளின் அடிப்படையில் நிலங்கள் நீர்நிலம், நன்செய், புன்செய் என வகைப்படுத்தப்பட்டிருந்தன. நிலத்தின் விளைதிறன் அதைத் தரமிட உதவியது. ஒரு முறை தரநிர்ணயம் செய்யப்பட்ட நிலம் நெடுங்காலத்திற்கு அத்தரத்திலேயே கொள்ளப்பட்டமையை, ‘இந்நிலத்துக்கு இவ்வாண்டு இட்ட தரமே என்றும் தரமாவதாகவும்’ என்ற தொடர் நிறுவுகிறது.3

பயிர் செய்ய வாகாய் இருந்த நிலம் விளைநிலம் என்றும் பயிர் செய்ய வகையின்றிக் கிடந்த நிலம் களர், தரிசு, திடல், பாழ் என்றும் அழைக்கப்பட்டன. விளைந்தறியா நிலங்களான இவை தரமிலி நிலங்களாகவும் கருதப்பட்டன. இவற்றைப் பண்படுத்தி, நீர்வரத்திற்கு உட்படுத்தித் திருத்தி விளைநிலமாக்கும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டமைக்கு வலஞ்சுழிக் கல்வெட்டுகளும் சான்றுகளாய் நிற்கின்றன.

ஓடையும் உடைப்பும் தரமிலி களர்ப் பாழுமாக இருந்த நிலத்தை, ‘திருத்தப் பெறாது அபோவனமாய்க் கிடந்த’ நிலமாகக் குறிக்கும் முதல் குலோத்துங்கரின் கல்வெட்டு, ‘இந்நிலம் திருத்திப் பயிர்செய்து கொள்ளுமிடத்து’ தரமிடப்படும் என்பதையும் சுட்டுகிறது. இப்படித் திருத்திய நிலங்களைப் பயிரேற்றி அனுபவித்து இறை இறுக்குமாறு அவற்றின் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பது பழுத்த நாகரிகத்தின் பண்பாட்டு வெளிப்பாடாக அமைந்துள்ளது. இத்தகு நிலப் பண்படுத்தல்களை அக்காலத்தில் வயக்கல், மயக்கல் எனும் கலைச்சொற்களால் குறித்தமையைப் பிரப்பங்குடி மசக்கல் நிறுவுகிறது. பண்படுத்தப்பட்ட நிலம் விளாகம் என்றழைக்கப்பட்டதைத் தீனசிந்தாமணி விளாகம் தெரிவிக்கிறது. இத்தகு முயற்சிகளால் விளைநிலங்களின் பரப்பு மிகுதியாகி விளைச்சல் பெருகியது.4

தனியார் நிலம், பொதுநிலம் என நிலம் இருவகை உரிமைகளின் கீழ் இருந்தது. ஊர் நிர்வாக அமைப்புகளிடமிருந்த பொதுநிலத்தின் சில பகுதிகள் தேவைக்கேற்ப தனியாருக்கோ நிறுவனங்களுக்கோ விற்கப்பட்டன. தனியார் நிலங்கள் தனியர் உரிமை உடைய நிலங்களாகவும் குடும்ப உறுப்பினர்கள் பலர் சேர்ந்து கூட்டுரிமை கொண்டாடிய நிலங்களாகவும் இருந்தன. ஒவ்வோர் ஊர் நிலமும் விளைநிலம், ஊரிருக்கை நிலம், மனைநிலம், திடல், களர் எனப் பயன்பாட்டிற்கும் தரத்திற்குமேற்ப பெயரேற்றிருந்தன. இந்நிலங்களை அளக்கப் பல கோல்கள் பயன்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இக்கோயில் வளாகத்தின் இரண்டாம் சுற்று மேற்குச் சுவரிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்டது.

பாசன வாய்ப்புகளுக்கும் விளைதிறனுக்கும் ஏற்ப நிலங்களில் ஒருபோக, இருபோகச் சாகுபடி செய்யப்பட்டது. ஒருபோக நிலங்கள் ஒரு பூ நிலமென்றும் இருபோக நிலங்கள் இரு பூ நிலமென்றும் அறியப்பட்டன. விளைச்சல் கார், பசானம் என இரண்டு காலங்களில் அமைந்ததால் வரியினங்களும் அதற்கேற்ப பெறப்பட்டன. விளைபொருளுக்கு ஏற்பவும் உரிமையாளர்களைக் கொண்டும் கொடையாகத் தரப்பட்ட காரணங்களை ஒட்டியும் நிலங்கள் பெயரேற்றிருந்தன. குவளைச்செய், முருக்கஞ்செய், மாஞ்செய், பாகல் தோட்டம் எனப் பயிர் நிலங்களும் குசக்குழி, தட்டான்செய் எனத் தொழிலர் நிலங்களும் பெயரேற்றிருந்தன.

வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் வளையவரும் நிலத் துண்டுகளுள் பெரும்பான்மையன நாராயணன் வீரட்டன் நிலம், நாராயணன் மாறன் நிலம், அரங்கன் குமரன் நிலம், மாராயன் தடி என்று உரிமையாளர் பெயர் கொண்டே அழைக்கப்பட்டுள்ளன. சில நிலத்துண்டுகள், அவற்றின் மேல் உடைமையாளருக்கு இருந்த உரிமையை வெளிப்படுத்துமாறு போல, ‘நாராயணன் இராமதேவன் ஆள்கின்ற’, ‘நீலகண்டன் மாந்தன் ஆள்கின்ற’ என்று குறிக்கப்பட்டுள்ளன. மாதேவன் நீளெருமான், கோத்தாரம், பரவை துடவை, சுமைதாங்கிச் செய், தீட்டுச்செய், பெரிய அரைக்கால், பகவதி நிலம், குளநிலம் என்றெல்லாமும் சில நிலத் துண்டுகளுக்குப் பெயர்கள் இருந்தன. அவற்றுள் குளநிலம், குளஞ் சார்ந்திருந்த நிலப்பகுதியாகும். விற்பனையின் போது, ‘விளைநிலமும் குளமும் கரையும்’ என அனைத்தும் சேர்த்து விற்பனை செய்தமையைக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. மனைநிலம் விற்பனையானபோது, அதிலிருந்த பயன் மரங்களும் சேர்த்து விற்கப்பட்டதை, ‘மனையும் மனையில் நின்ற தெங்குகளும்’ எனும் தொடர் நிறுவுகிறது.5

நிலவுரிமை வழிவழி உரிமையாகவும் கொடையாகவோ அல்லது விலைக்குப் பெற்றோ ஆளப்படுவதால் வரும் உரிமையா கவும் அமைந்தது. ‘தானத்தாலும் விலையாலும் பெற்றுடையேனாய்’ என்றும், ‘இவர் அபாவத்து என்னுதாய் நான் அனுபவித்து வருகிற’ என்றும் உரிமைச் சான்று வழங்கும் தொடர்களைக் காணமுடிகிறது. கணவன் மறைவிற்குப் பின் மனைவியும் தந்தையின் மறைவிற்குப் பின் மகன்களும் மகள்களும் நிலஉரிமை பெறும் முறை வழக்கி லிருந்தமையை, ‘பிதாக்கள் பக்கல் கூற்றாலும் அபாவத்தாலும் பெற்று உடையோமாய் நாங்கள் அனுபவித்து வருகிற நிலம்’, ‘இவன் அபா வத்து இவன் பாரியை’, ‘எங்கள் பிதாக்கள் அபாவத்து என் மாதா அனுபவித்துவரும்’ எனும் தொடர்களால் அறியமுடிகிறது.6

குடும்ப நிலங்களை விற்பனை செய்யும்போது, விற்பனையாளர் சார்பில் முன்னின்று அவ்விற்பனையை மேற்கொண்டு விலைப் பொருளைப் பெற்று நில உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பொறுப் பேற்றவர்கள், ‘முதுகண்’ என்றழைக்கப்பட்டனர். வலஞ்சுழி நில விற்பனைகளில், அந்தணக் குடும்பங்களில் மனைவிக்குக் கணவரும் மாமியாருக்கு மருமகனும் தாய்க்கு மகனும் சகோதரிக்குச் சகோதரனும் மகளுக்குத் தந்தையும் முதுகண்ணாக நின்று நிலம் விற்றுப் பொருள் பெற்றுத் தந்தமையைக் காணமுடிகிறது. ஒன்றிரண்டு விற்பனைகளில் மகனுக்குத் தந்தை முதுகண்ணாக இருந்தமையையும் உறவுகள் இல்லாத நிலையில், நன்கறியப்பட்ட உள்ளூர்க்காரர் முது கண்ணாக விளங்கியமையையும்கூடப் பார்க்கமுடிகிறது.7 ஆனால், வேளாளர் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்துண்டுகளை முதுகண் உதவியுடன் மட்டுமன்றித் தாங்களே நேரிடையாக நின்றும் விற்றுள்ளமையைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.8

குறிப்புகள்
1. பு.க. 11.
2. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 236.
3. பு.க. 11.
4. மு. நளினி, ‘விளாகம்’, Kaveri-Studies in Epigraphy, Archaeology and History, Panpattu Veliyittakam, 2001, pp.679-684.
5. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 210. பதிப்பில், ‘மனை . . தெங்கு’ என்று மட்டுமே உள்ளது. ஆனால், கல்வெட்டில், ‘மனையில் நின்ற தெங்குகளும் உள்பட’ என்று தெளிவாக உள்ளது.
6. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 196, 229, 223. பதிப்பில், ‘இவன் அபாவத்து இவன் பாரியை’ எனும் தொடர் இடம்பெறவில்லை. ஆனால், கல்வெட்டில் இத்தொடர் காணப்படுகிறது.
7. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 199, 203, 219, 223, 224, 229.
8. SII 8 : 215.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.