http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 179
இதழ் 179 [ ஜூலை 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி! சங்க இலக்கியம், ஊர் மக்களின் துணிகளைத் துவைத்துத் தூய்மையாக்கி, கஞ்சியிட்டுப் பொலிவேற்றித் தந்த பணியைத் தொழில்முறையாகப் பெண்கள் செய்ததைக் காட்டுகிறது. அப்பெண்கள் புலைத்தியர் என்றழைக்கப்பட்டனர். நான் கண்டவரையில், பணிபுரியும் இடத்திலிருந்து நேரடியாகப் புலைத்தியைச் சங்கப் பாடல்கள் படம்பிடித்துக் காட்சிப்படுத்தவில்லை. எனினும் அகம்புறமென்று சூழல்வேறுபாடின்றி பல்வேறு இடங்களில், புலைத்தியும் துணிகளுக்கு அவள் பயன்படுத்திய கஞ்சியும் ஒப்புநோக்கப்படுகின்றன; அவளுடைய நற்பண்புகளும் பசை தோய்ந்த விரல்களும் நினைவுகூறப்படுகின்றன. ‘கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பது, உள்ளத் தூய்மையோடு உடல் தூய்மையை வலியுறுத்திய தமிழர் பண்பாட்டைச் சுட்டும் பழமொழி. குளித்து உடலைத் தூய்மையாக்கியபின் உடுத்தும் உடை துவைக்காத அழுக்காடையாக இருக்கலாமா? குளிப்பதற்கு நீர்த்துறைக்குச் சென்று, குளித்துக் கரையேறும்போதே துணிகளைத் துவைத்துக் கொணருவது பண்டை நாகரிகங்களில் இயல்பானது. பலதரப்பட்டோர் பற்பல தரங்களில் துணிகளைப் புழங்கிய வளர்ந்த சமூகங்களில்மட்டுமே, துணி துவைக்கும் பணி தொழில்முறையாக நடைபெற்றிருக்கவியலும். சங்க காலத் தமிழ்ச்சமூகம், நாகரிகமும் பன்னாட்டு வணிகமும் செழித்த பண்பட்ட ஒன்றென்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே. ஊர்தோறும் விளைந்திருந்தன பருத்தி மரங்கள். பருத்திக் காய்களிலிருந்து வெளிப்பட்ட பஞ்சினையெடுத்து வில்லடித்துக் கொட்டை நீக்கி நூலாக நூற்று, பல்வகைத் துணிமணிகள் நெய்து வணிகமும் செய்துவந்தனர் சங்கத் தமிழர். ‘சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து’ (புறம் 326:5-6), என்று இரவு வேளையில் பருத்தியிலிருந்து காய்ந்த பகுதிகளைப் பிரித்துப் பஞ்சாக்கியதும் பெண்களே என்பதும் சங்க இலக்கியம் உணர்த்தும் செய்தி. சங்கப் புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், தம் பெயராலேயே துணிவாணிபம் செய்ததை உணர்த்துகிறார். ‘வில் எறி பஞ்சியின் வெண்மழை தவழும்’ (அகம் 133:6) - 'வில்' அடித்துக் கொட்டை நீக்கப்பட்ட பஞ்சு வெண்மேகம் போலக் காணப்பட்டது என்று அகநானூற்றுப் பாடலொன்று சொல்கிறது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடிய இந்தப் புறநானூற்றுப் பாடலில், அரசரிடம் பரிசில் வேண்டி நிற்கும் புலவர், தம் வறுமையை விளக்குகிறார். தம்முடைய பெரிய சுற்றத்தாருக்காக அவர் வேண்டுவது என்ன? கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, வெண் நிண மூரி அருள நாளுற ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும் என் 15 தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப், போது விரி பகன்றைப் புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇச், செல்வமும் கேடு இன்று நல்குமதி பெரும! (புறம், 393:12-19) “அரசனே! பசியால் வாடியிருக்கும் எனக்கும் என் சுற்றத்தாருக்கும் நல்ல இறைச்சியுடன்கூடிய உணவைப் பரிமாறச் சொல்லுங்கள். அந்த இறைச்சி எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? கோடைக்காலத்துப் பருத்தியைக் கொட்டைநீக்கி, வில்லடித்து வீட்டில் மூடைகளில் நிறைத்து வைத்திருப்பார்கள். அப்படி நிறைத்துவைத்த பஞ்சினைப் போலிருக்கும் வெண்கொழுப்புடன்கூடிய இறைச்சியை எங்களுக்குத் தரவேண்டும். நாங்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகளெல்லாம், புதிய முட்டையிட்ட பாம்பின் நாக்கைப்போல் கிழிந்து இற்றுப்போய்விட்டன. அவற்றை நீக்கிவிட்டு, மொட்டுக்கள் விரிந்த புதிய பகன்றை மலர்களைப்போன்று பலமடிப்புகளையுடைய அகன்ற ஆடைகளும் செல்வமும் நீ வழங்கவேண்டும்”, என்று வேண்டுகிறார் புலவர். சங்க காலத்தைத் தொடர்ந்துவரும் காப்பியக் காலத்தில், சிலம்பு காட்டும் மதுரையின் அறுவை வீதியிலோ, நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் (சிலம்பு 205-207) என்று, பருத்தி நூலாலும் எலி மயிராலும் பட்டு நூலாலும் நெய்யப்பட்ட துணிகள், நூறுநூறாகப் பலநூறு கட்டுகளாகக் கடைகளில் அடுக்கப்பட்டிருந்ததைக் காணமுடிகிறது. தமிழ்நாட்டில், பன்னாட்டு வணிகர் தம் பொருட்களைக் கொணர்ந்தும் இங்கிருந்து பொருட்களைக் கொண்டுசென்றும் வாணிபம் செய்தனர். இப்படி ஊரகப் பண்பாட்டோடு விரிவடைந்த நகரமயமாக்கலால் வளர்ந்த பொருளாதாரமாகச் செழித்திருந்த தமிழகத்தில், மக்களுடைய ஆடைகளைத் துவைத்து வெளுத்துக் கஞ்சியிட்டு மெருகூட்டித் தரும் தொழிலைப் பற்றிக்கொண்டு உழைத்துப் பொருளீட்டினர் சங்கப் பெண்கள். சங்கப்பாடல்களுக்கேயுரிய போக்கில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு மற்றும் கலித்தொகையில் சுவையான காட்சிகளினூடே புலைத்தியின் பணிபற்றிய பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. அஞ்சில் அஞ்சியாரின் நற்றிணைப் பாடல்- ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், ஓர் பான்மையின் பெருங்கை தூவா, வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கம் (நற்றிணை 90;1-4) வறன் இல் புலைத்தி - வறுமையில்லாத புலைத்தி என்றுரைக்கிறது. ஆடல் கலைஞர்கள் ஆடி மகிழ்வூட்ட விழாக்கோலம் பூண்டிருக்கும் மூதூரில், கை ஓயாமல் வெளுத்துப் பணிபுரிவதால் வறுமையறியாதவளாக இருந்தாள் புலைத்தி. அவள் தரமான மெல்லிய துணிகளை இரவெல்லாம் அரிசி கஞ்சியில் தோய்த்து வைத்துப் பின் துவைத்துத் தருவாளாம். கழார்க் கீரனெயிற்றியனாரின் குறுந்தொகைப் பாடல், தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழிக்குக் கூறியதாக அமைந்தது. இங்கு, ‘நலத்தகைப் புலைத்தி’யை- அழகும் நற்பண்புகளும் நிறைந்த புலைத்தியைக் காண்கிறோம். ‘இனிமையான கடுங்கள்ளைப் போல இந்த மாலை நேரத்தில் பெரிய இலைகளையுடைய பகன்றை மலர்களிலும் மணமில்லை. தலைவனைப் பிரிந்து வாடும் எனக்கு இந்த மாலைக் காலமும் தனிமையும் மிகுந்த துன்பத்தைத் தருகின்றன,’ என்கிறாள் அவள். பகன்றை மலர் பெரிய இலைகளோடு சுருக்கங்கள் நிரம்பக் கொண்டது. இப்படி, பகன்றையைச் சொன்னவுடன் புலவருக்கு ஏன் புலைத்தியின் நினைவு வந்தது? நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்தெடுத்துத் தலைப்பு உடை போக்கித் தண் கயத்து இட்ட நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும், பேரிலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ (குறுந்தொகை 330: 1-4) அழகும் நற்பண்புகளும் கொண்ட புலைத்தி, துணியைக் கஞ்சியிலே தோய்த்து வைத்துப் பின் குளத்திலே குளிர்ந்த நீரில் முக்கித் துவைத்து, நீரைப் போக்க நன்கு பிழிந்ததால் அத்துணியில் ஏற்பட்ட முறுக்கைப்போல் இருந்ததாம் பகன்றை மலரின் சுருக்கம். மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல்கள் இரண்டில், துணிகளுக்குக் கஞ்சியிட்டதால் அவள் விரல்களில் பசை தோய்ந்திருந்தது சுட்டப்படுகிறது. முதல் பாடலில் (அகம் 34) மனைவியைக் காண விரைந்துவரும் தலைவன், தேரோட்டியிடம் தேரை வேகமாகச் செலுத்தச் சொல்கிறான். தனக்காகக் காத்திருக்கும் தலைவியை நினைக்கையில் வீட்டில் துணையுடன் விளையாடி மகிழும் அன்னத்தின் நினவு அவனுக்கு வருகிறது. பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி துறை விட்டன்ன தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில் (அகம் 34:11-13) பசை தோய்ந்த மெல்லிய விரலும் பெருந்தோளும் கொண்ட புலைத்தி, துணிகளைத் துவைக்கையில் நீரில்விட்ட வெள்ளைநிறக் கஞ்சியைப் போலிருந்ததாம் அந்தப் பறவையின் தூயவெள்ளைச் சிறகு. அடுத்த பாடலில், தலைவனைப் பிரிந்தால் தலைவியின் நிலை என்னவாகும் என்று தலைவனுக்கு வருந்தியுரைக்கிறாள் தோழி. அழகுடைய ஆடைகள் அணிந்திருக்கும் அவள் மேனியெழில் கெடுமென்கிறாள். அந்த ஆடை எப்படிப்பட்டது? ‘பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்தூட்டிய பூந்துகில்’ அது. இப்பாடலில் நமக்குக் கிடைக்கும் கூடுதல் செய்தி, அவள் இளம் பணியாளர்களோடு துணிகளைத் தூய்மையாக்கும் பணி செய்தாள் என்பது. உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு அவ்வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் 5 பசை விரல் புலைத்தி (அகம் 387: 406) என்கிறது பாடல். ஈரப்பதமில்லா உப்புக்காற்றால் புண்கள் நிறைந்த தலையுடைய சிறுவர்களோடு சேர்ந்து, துணிகளின் கறை நீக்கிக் கஞ்சியிட்டு வெளுத்துத் தருகிறாள் அவள். புறநானூற்றுப் பாடல்கள் இரண்டில் புலைத்தி குறிக்கப்பட்டாலும் ஒன்றில், ‘முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல’ (புறம் 259: 5) என்று அவள்மேல் முருகன் ஏறியதை மட்டுமே காண்கிறோம். ஒளவையாரின் பாடலில் (புறம் 311), மலர்மாலையணிந்து வீரன் ஒருவன் போருக்குச் செல்கிறான். அவனுடைய தூய வெள்ளையாடைப் புழுதியில் மாசுபட்டது. அந்த ஆடை எப்படிப்பட்டது? களர்ப்படு கூவல் தோண்டி, நாளும் புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை (1-2) உவர்நிலத்திலுள்ள கிணற்றிலிருந்து நீரிறைத்து, அதில் புலைத்தி துவைத்துக் கொடுத்த தூவெள்ளாடையாம் அது. போர்க்களத்திலும் புலைத்தியின் பணி நினைவுகூரப்படுவது வியப்புதான். மருதன் இளநாகனாரின் மருதக்கலி காட்டும் புலைத்தி, தலைவனுக்காகத் தூது செல்கிறாள். அதற்காகக் காமக்கிழத்தியின் இடிச்சொல்லையும் பெறுகிறாள். நாடி நின் தூது ஆடித் துறைச் செல்லாள் ஊரவர் ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி (கலித்தொகை 72: 13-14) “ஊரவர் ஆடையை வெளுத்துத் துவைக்கும் புலைத்தி, நீர்த்துறைக்குச் சென்று பணி செய்யாமல் உனக்குத் தூதாக மற்ற பெண்களிடம் செல்கிறாளா?,” என்று சினம் கொள்கிறாள் அப்பெண். சங்கப் பாடல்களில் கஞ்சியிட்ட ஆடைக்குச் சிறப்பிடம் தரப்பட்டது தெரிகிறது. அதனால்தான் மதுரைக் காஞ்சியில், சந்தனச் சாந்து பூசி வடமாலையணிந்து தேனீக்கள் மொய்க்கும் மலர்மாலையோடு காட்சியளிக்கும் மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம் உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ (மதுரைக் காஞ்சி 721-722)) காலையில் விழித்தெழுந்ததும் கஞ்சியிட்ட ஆடையுடுத்தி, உடையின்மேல் அணிகலன்கள் குறைவின்றி அணிந்து, சிற்பக்கலையில் வல்லவன் செய்த முருகனின் சிற்பம்போல் அழகிய வடிவுடன் இருந்த வண்ணனையில் கஞ்சியிட்ட உடைக்குத் தனியிடம் தரப்பட்டுள்ளது. இரவில் துணிகளைக் கஞ்சியில் ஊறவைத்து, காலையில் நீர்நிலையில் துவைத்து முறுக்கிப் பிழிந்து காயவைத்து, தூய்மையாக ஆடையை ஊராருக்குத் தரும் புலைத்தியரின் பணியில், பெண்மைக்குரிய மெல்லிய விரல்களும் எழிலுடைக் கைகளும் தொலைந்தேபோயின. அயராது பணிபுரியும் இப்பெண்களின் உழைப்பை நோக்கின், மனதில் நிற்பதெல்லாம் பசைதோய்ந்த விரல்களும் வலிமையான கைகளும் திண்மையான தோள்களும்தான். மக்களின் அன்றாட வாழ்வோடு, தான் வெளுக்கும் துணிகளைப் போலவே பின்னிப் பிணைந்திருக்கிறாள் சங்க காலப் புலைத்தி. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |