http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 5
இதழ் 5 [ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
நேயர்களுக்கு வணக்கம்.
காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது ! இப்போதுதான் வரலாறு ஆரம்பித்ததுபோல் இருக்கிறது - அதற்குள் ஒரு அரையாண்டு கொழுக்கட்டை மாதிரி வந்து நிற்கிறது. வரலாறு இணைய இதழின் அரையாண்டு நிறைவையொட்டி ஒரு சிறப்பிதழ் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். வழக்கமாக வரும் ஜனவரி 15ம் இதழைத் தாண்டி ஜனவரி 30ம் தேதியன்று இந்த இதழ் வெளியிடப்பெறும். இந்த சிறப்பிதழ் பற்றி வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அதற்கடுத்த இதழில் விரிவாகப் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். ஆக இந்த சிறப்பிதழின் படைப்புக்களை படிக்கும் நேயர்கள் சிரமம் பார்க்காமல் நமது புதிய முயற்சி பற்றிய பரவலான எண்ணங்களையும் இன்னும் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பதான யோசனைகளையும் பின்னூட்டப் பகுதி (Feedback section) வாயிலாகத் தெரிவிக்குமாறு கோருகிறோம். வரலாறு இணைய இதழ் ஒரு சில கரங்களின் தனி முயற்சி. இந்தச் செடிக்கு உங்கள் கருத்துக்கள்தான் உரம். ஆக விரிவாக உங்கள் கருத்துக்களை எழுதக் கோருகிறோம். தேர்ந்தெடுக்கப்படும் அத்தனை கருத்துக்களும் பிப்ரவரி 15 இதழில் வெளிவரும். சிறப்பிதழை வெளியிடும் பொருட்டு ஒரு சிறிய விழாவும் தஞ்சையில் ஏற்பாடு செய்யவும் உத்தேசம். இது பற்றிய குறிப்பான தகவல்களை அடுத்த இதழில் எதிர்பார்க்கலாம். எதற்கும் ஜனவரி 30 அன்று தஞ்சைக்கு இப்போதே ஒரு டிக்கெட் போட்டு வைத்து விடுங்கள் ! அரையாண்டிதழுக்கு என்ன மாதிரியான சிறப்பிதழ் கொண்டுவரலாம் என்று யோசித்தபோது நமது குழு நண்பர்கள் அனைவரும் முழுமனதாக ஒப்புக்கொண்ட கரு இராஜராஜீஸ்வரம். தஞ்சை பெரியகோயில். பழந்தமிழர்களின் ஒரு பொறியியல் கனவு போல - ஒரு மகத்தான மன்னனின் / மனிதனின் வானளாவிய எண்ணங்களைப்போல - ஒரு காலகட்டத்தின் ஒட்டு மொத்த கலாச்சாரத்தை தேக்கி நிற்கும் ஒரு அணைபோல - வாழ்வின் ஆசீர்வாதங்களுக்காக வானத்தை யாசித்து நிற்கும் கூப்பிய கரங்களைப்போல - ஓங்கி உலகளந்து நிற்கும் அந்தக் கருங்கல் விமானமும் அதனைச் சுற்றியமைந்த கோயிலும் கலையார்வலர்களுக்கு அறுசீர் விருந்து. வரலாற்றாய்வாளர்களுக்கோ அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷப் பெட்டி. எழுத்தாளர்களுக்கு தெவிட்டாத கற்பனை ஊற்று. கவிஞர்களுக்கு அது ஒரு காதலி. உலக மானுட இனத்திற்கு அது ஒரு பண்பாட்டு / கலாச்சார மையம். நமது நண்பர் சற்று செல்லமாகக் குறிப்பிடுவார் - "அது ஒரு கள்ளுக்கடைங்க - அந்தப் பக்கம் போயிடாதீங்க !" உண்மைதான். ஞான போதையை தேக்கி நிற்கும் இந்தக் கலைக்கோயில் ஒரு கள்ளுக் கடைதான். முழுக்க முழுக்க இந்தக் கடையைப் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி மலர இருக்கின்றது நமது சிறப்பிதழ். கட்டிடக் கலையாகட்டும்... கல்வெட்டுக்களாகட்டும்... சிற்ப அற்புதங்களாகட்டும்... எல்லாவற்றிலும் ஒரு புதுமை, ஒரு மலர்ச்சி என்று ஒவ்வொரு இயலிலும் பல்வேறு முகம் காட்டும் இந்தப் பழங்கோயிலின் பல புதுமைகளை உங்கள்முன் படைக்க இருக்கின்றோம். பெரிய கோயில் பற்றி பல்வேறு அறிஞர்களும் பரவலாக எழுதியுள்ளனர். பல ஆய்வுக் கட்டுரைகளும் மலர்ந்துள்ளன. இருந்தாலும் இன்னமும் பெரிய கோயில் பற்றி எழுதுவதற்கும் ஆராய்வதற்கும் விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன ! இதுவும்கூட ஒரு ஆச்சரியம்தான். முதல்பார்வையில் அந்தக் கோயிலின் பிரம்மாண்டம் ஏற்படுத்துவது ஒரு வகையான வியப்பென்றால் நெருங்கி நின்று நுணுகி ஆராயும்போது நாம் புரிந்து கொள்ளக்கூடியதைவிட புரியாத விஷயங்கள் மலைபோலக் குவிந்து கிடப்பதைக் கண்டுணர்வது வேறு வகையான வியப்பு ! பெரியகோயில் நம்மைப் பொறுத்தவரை ஒரு கட்டிடம். ஆனால் அந்தக் கால மக்களுக்கோ அது ஒரு இயக்கம் ! பெரியகோயிலுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆடல்பெண்டுகள்...அவர்களின் தலைவியராக விளங்கிய தலைக்கோல் மகளிர்... அவர்களுக்கு ஆடல் கற்றுக்கொடுத்த நட்டுவனார்.... இறைவனுக்கு பாடலிசைத்த பிடாரர்கள்.. பல்வேறு இசைக்கருவிகளில் வித்தகர்களாய் விளங்கிய வாத்திய மாராயர்கள்... சிற்ப சாத்திரத்தின் உச்சி முனையை விரல் நுனியில் வைத்திருந்த பெருந் தச்சர்கள்... கோயிலில் வேதம் ஓதிக்கொண்டிருந்த சட்டர்கள்... சண்டீசப் பெருமானின் பெயரில் கோயில் சொத்துக்களை வாங்கி விற்று அதனைக் கணக்கெழுதி வைத்த கணக்கர்கள்... நாள் கோள் கண்டு நற்பலனுரைத்த கணியர்... பெரியகோயிலுக்கால பல்வேறு ஊர்களிலிருந்து அரிசி பருப்பு நெய்யிலிருந்து வாழைத்தார் என்று அத்தனை பொருட்களையும் கொண்டுவந்த விவசாயப் பெருமக்கள்... கோயிலின் சாவா மூவாப் பேராடு காத்த மன்றாடிகள்... நிவந்தங்கள் கொடுத்து தங்களைப் பெருமைப்படுத்திக்கொண்ட வணிகர்கள் வணிகக் குழுக்கள்... கோயிலின் காவலர்களாக பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த காவல் வீரர்கள்... இத்தனை பெரிய கூட்டத்தை திறமையாக நிர்வகித்த கோயில் ஸ்ர்காரியம் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளார்... இப்படியொரு கோயிலை மனதில் பல ஆண்டுகளாக தேக்கி நிறுத்தி அதனைக் கட்டி முடிக்கும் வல்லமையும் இறையருளும் ஒருங்கே வாய்த்த பேரரசர் சிவபாதசேகரரான மும்முடிச்சோழர் உடையார் ஸ்ர் இராஜராஜதேவர்.... அப்பப்பா ! எத்தனை விரிந்து பரந்த இயக்கம் அது ! இந்தப் பிரம்மாண்டத்தின் ஒரு துளி அணுவை எங்களால் அணுகி அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தாலும் அது பெருமைக்குரிய விஷயமே. எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம். இந்த நல்முயற்சியில் இறை ஆசியும் உங்கள் வாழ்த்துக்களும் எங்களுடன் இணை நிற்கட்டும். வணக்கங்களுடன் ஆசிரியர் குழு.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |