http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 5
இதழ் 5 [ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
சங்க காலமென்று கொள்ளப்படும் கி.மு. 300க்கும் கி.பி. 200க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சமணம் கால்கொண்டிருந்தது. தென் தமிழ்நாட்டில் பரவலாகவும், வடபகுதியில் ஆங்காங்கேயும் கிடைக்கும் தமிழ்க்கல்வெட்டுகளும் பாறைப்படுக்கைகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. மக்களிடையே செல்வாக்குப் பெறத்தொடங்கிய இச்சமயம், களப்பிரர் ஆட்சிக்காலத்தே தென் தமிழ்நாட்டிலும், அதே காலகட்டத்தில் பல்லவர்-களப்பிரர்-பல்லவர்-சோழர்-பல்லவர் என மாறிமாறியமைந்த அரசமரபினர் ஆட்சியின் கீழ் வடதமிழ்நாட்டிலும் எத்தகு இடத்தைப் பெற்றிருந்தது என்பதறிய இலக்கியச் சான்றுகள் கிடைத்துள்ள அளவிற்குப் பிறவகைச் சான்றுகள் போதுமான அளவில் இல்லை.
தமிழ்நாட்டின் பல்வேறு குன்றுகளில் சிற்பங்களாகவும் கல்வெட்டுகளாகவும் கிடைக்கும் பதிவுகளும், ஊரகப்பகுதிகளில் வழிபாட்டிலிருக்கும் அல்லது புறக்கணிக்கப்பட்ட நிலையிலுள்ள சிற்பங்களும் கோயிற் கல்வெட்டுகளும் கி.பி. 550ல் இருந்து கி.பி.1200 வரையில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கை உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் செழிக்கத் தொடங்கிய சமணம், புத்தம் இரண்டில், சைவ, வைணவ சமயங்களின் வலிய எதிர்ப்பிற்குப் பிறகும், சமணம் தொடர்ந்து வளர்நிலையில் இருந்தமைக்கு, அது வணிக மக்களின் சமயமாக இருந்தமை ஒரு முக்கியமான காரணமாகும். கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் துணைகொண்டும், இம்மாவட்டத்தில் கிடைத்திருக்கும் சிற்பங்களின் வாயிலாகவும் இலக்கியம் சார்ந்தும் அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி, இம்மாவட்டத்திலிருந்த சமண முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உறையூர், வெள்ளனூர், பழநாகப்பள்ளி, அமுதமொழிப்பெரும்பள்ளி, புலிவல்லம், அமண்குடி, பழையசங்கடம், சீயாலம், குத்தாலம், வீரப்பட்டி, ஜம்புகேசுவரம், திருமலைவாடி, பெரியம்மாபாளையம், அம்பாபுரம், ஜயங்கொண்டசோழபுரம், வண்ணம், லால்குடி, மகாதானபுரம், சிவாயம், சுண்டைக்காப்பாறை, வெட்டுவாந்தலை ஆகிய இருபத்தோரிடங்களைத் தம் நூலில் (சமணமும் தமிழும், 1970, பக். 126-130) குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் உறையூர், சிலப்பதிகாரத்திலும் நீலகேசியிலும் காணப்படும் தரவுகளின் துணையுடன் சமணர் கோயிலிருந்த இடமாகக் காட்டப்படுகிறது. வெள்ளனூர், பழையசங்கடம், குத்தாலம், வீரப்பட்டி, பெரியம்மாபாளையம், அம்பாபுரம், ஜயங்கொண்டசோழபுரம், வண்ணம், லால்குடி, மகாதானபுரம், சிவாயம், சுண்டைக்காப்பாறை, வெட்டுவாந்தலை ஆகிய பதின்மூன்று இடங்கள் சமணச் சிற்பங்கள் இருக்கும் இடங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. இப்பதின்மூன்று இடங்களில் மகாதானபுரமும் பழையசங்கடமும் நூலாசிரியரால் ஒரே இடத்தின் இரு பகுதிகள் போலச் சுட்டப்பட்டுள்ளன. இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதுடன், பழசங்கடம் எனும் பழைய ஜயங்கொண்டத்தையே நூலாசிரியர் பழைய சங்கடமாகக் குறிப்பிட்டுள்ளாரென்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கன. எஞ்சிய பதினோரிடங்களில் குத்தாலம் தென்காசி வட்டத்திலும், வீரப்பட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலும் திருமலைவாடி போளூர் வட்டத்திலும் உள்ள இடங்களாகும். இவற்றையும் நீக்கினால் ஒன்பதிடங்களே சமணச் சான்றுகள் கிடைக்கும் இடங்களாக எஞ்சுகின்றன. கல்வெட்டுகளின் அடிப்படையில் பழநாகப்பள்ளி, அமுதமொழிப்பெரும்பள்ளி, புலிவல்லம், அமண்குடி, சீயாலம், ஜம்புகேசுவரம் ஆகிய ஆறு இடங்களை சமணத் தலங்களாக மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் புலிவல்லம் கல்வெட்டிலும் பேச்சுவழக்கிலும் புலிவலம் என்றே அழைக்கப்படுகிறது. குளித்தலைத் தாலுகாவில் சமணச் சான்றுகள் உள்ள இடமாக நூலாசிரியரால் குறிப்பிடப்படும் சுண்டைக்காப்பாறையே, மீண்டுமொருமுறை சீயாலமாக இடம்பெற்றுள்ளது. இதை நீக்கிவிட்டால் எஞ்சும் ஐந்து இடங்களில் அமண்குடி, புலிவலம் இரண்டும் பெயராலும் கல்வெட்டாலும் சமணர் வாழிடங்களாகக் கொள்ளத்தக்கன. பழநாகப்பள்ளி, அவ்வூரிலுள்ள மகாபலீசுவரர் கோயிற் கல்வெட்டுகளில் நாகன்பள்ளி என்று தொடக்கத்திலும் (இராஜகேசரிக் கல்வெட்டு, 257:1930-31) பழநாகப்பள்ளி என்று பிற்சோழர் காலத்தும் (மூன்றாம் குலோத்துங்கர் கல்வெட்டு, 258:1930-31) அழைக்கப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. கல்வெட்டுச் சான்றுகளோ, கட்டடச் சான்றுகளோ, சிற்பச் சான்றுகளோ இல்லாத நிலையில், வெறும் 'பள்ளி' எனும் பெயர் மட்டுமே கொண்டு இங்குச் சமணக்கோயில் இருந்ததாக அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பதும் கருதத்தக்கது. திருவானைக்கா, ஜம்புகேசுவரத்திலுள்ள மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டொன்று (32:1937-38) இராஜராஜன் கூற்றங்குடியிலிருந்த, அமண்பள்ளியாகக் கவிராஜப் பெரும்பள்ளியைச் சுட்டுகிறது. கீழாற்றூரென்றும் அறியப்பட்ட இவ்வூர்ப் பாச்சில் கூற்றத்தில் இருந்தது, கவிராஜப் பெரும்பள்ளியைக் குறிப்பிடும் நூலாசிரியர், அது இருந்த ஊரைச் சுட்டாமல் கல்வெட்டு இருக்கும் ஜம்புகேசுவரத்தின் பெயரை 'சமணத் திருப்பதிகள்' பட்டியலில் தந்திருப்பது, கவிராஜப் பெரும்பள்ளியிருந்த இடமாக ஜம்புகேசுவரத்தையே சுட்டுவது போலுள்ளது. அமுதமொழிப் பெரும்பள்ளி பொய்கை நாட்டிலிருந்த திருவிடைக்குடி எனும் ஊரிலிருந்தது. இதைச் சுட்டும் மூன்றாம் இராஜராஜரது கல்வெட்டு அன்பில் விக்னேசுவரர் கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளது (198/8). அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி பட்டியலில் இடம்பெறாத சமணப் பள்ளியொன்றைத் திருவானைக்கா ஜம்புகேசுவரத்திலுள்ள மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டொன்றைப் (37/1937-38) படித்தபோது கண்டறியமுடிந்தது. பாச்சில் கூற்றம் வாளாடியிலிருந்த இப்பள்ளி, ஜனநாதப் பெரும்பள்ளியென்று அழைக்கப்பட்டது. பள்ளியின் பெயர் கொண்டு, அது முதலாம் இராஜராஜர் காலத்திலிருந்து இயங்கி வந்தமையை உணரலாம். தமிழ்நாட்டளவில் வழிபாடிழந்து, சுவடழிந்துபோன சமணக் கோயில்களை அடையாளம் காண இதுநாள்வரையிலும் கல்வெட்டுகளும் தனிச்சிற்பங்களுமே கிடைத்துள்ளன. முதல் முறையாகக் கட்டடச் சான்றுகளைச் சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது. பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருநெடுங்களம் சிராப்பள்ளித் தஞ்சாவூர்ச் சாலையில், துழாய்க்குடிக்கு (தற்போது துவாக்குடி) வடக்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு நடந்த திருப்பணியின்போது ஆய்விலீடுபட்ட வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள் செல்வியர் மு.நளினி, சோ.மாலதி, சு.முத்துலட்சுமி, ப.அங்கவை, கோ.சங்கீதா, திருமதி அர.அகிலா ஆகியோர் படியெடுக்கப்படாத பழங்கல்வெட்டுகள் பதினாறைக் கோயில் கட்டமைப்பின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டறிந்து வெளிப்படுத்தியதுடன், சமணப்பள்ளியொன்றின் சிதைந்த கட்டடச் சான்றுகளையும் வெளிக்கொணர்ந்தனர். கட்டடமொன்றின் உத்திரமாகக் கொள்ளத்தக்க 2.42 மீ நீளமும் 48 செ.மீ அகலமும் உள்ள கல்லமைப்பொன்று கோயிலுக்கு வெளியிலுள்ள மண்டபத்தருகே நிலத்தை அகழ்ந்தபோது கிடைத்தது. இதன் முகப்பில் கண்டப்பகுதியும், பட்டிகையும் கம்பும் வெட்டப்பட்டுள்ளன, கண்டப்பகுதியின் நடுவில் சமண தீர்த்தங்கரரின் அர்த்தபத்மாசனத் திருக்கோலம் கல் தளமொன்றொன் மீது இருக்குமாறு வடிக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரரின் தலைக்குப்பின் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. இதற்கு மேலிருக்குமாறு முக்குடையமைப்புச் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரரின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவரென இரு ஆடவர்கள் காட்டப்பட்டுள்ளனர். இவர்களை அரக்கர்களின் தலைவராகவும், இயக்கர்களின் தலைவராகவும் கொள்வதுண்டு (வை. கணபதி ஸ்தபதி, சிற்பச் செந்நூல், பக்.227) தீர்த்தங்கரரின் வலப்புறத்தே அர்த்தபத்மாசனத்தில் யானைத்திருமகளின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அம்மையின் கைகள் சிதைந்துள்ளன. அவரின் இருபுறத்துமுள்ள நீண்ட தந்தங்களைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளில் புனித நீர்க்குடங்கள். அவை அந்நீரால் அம்மையைத் திருமஞ்சனமாட்டுகின்றன. தீர்த்தங்கரரின் இடப்புறத்தே இயக்கியொருவர் உயர்ந்த கல் தளத்தின் மீது சுகாசனத்தில் உள்ளார். வலக்கை அபயத்திலிருக்க, இடக்கை இட முழங்காலின் மீது அமர்த்தப்பட்டுள்ளது. கச்சற்ற மார்பகங்களுடன் தொடையளவு சுருக்கப்பட்ட இடையாடை கொண்டமர்ந்திருக்கும் இவ்வியக்கியின் வடிவம் பொரிந்துள்ளது. கோயிலின் நந்தி மண்டபத்துத் தளத்துடன் வைத்துக் கட்டப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடு கொண்ட பழந்தூண் ஒன்றை அகழ்ந்து வெளியிலெடுத்துத் தூய்மை செய்து ஆராய்ந்தபோது, அது கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டுக் கலையமைப்பில் இருப்பதை அறியமுடிந்தது. தொங்கல், மாலைக்கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி எனும் உறுப்புகளோடு அமைந்திருந்த இவ்வெண்முகத்தூணின் மாலைக்கட்டுப் பகுதியில், கல்தளத்தில் அர்த்தபத்மாசனத்தில் உள்ள சமண முனிவரின் சிற்பச் செதுக்கல் உள்ளது. இவர் தலையின் இருபுறத்தும் கவரிகள் காட்டப்பட்டுள்ளன. பக்கங்களில் பக்கத்திற்கொன்றாக இரு நீண்ட குத்துவிளக்குகள் தலைக்குமேல் முக்குடை. இரண்டாவது சிற்பம், இடக்கை இடுப்பிலிருக்க, வலக்கையைப் பதாகத்தில் நிறுத்தி மண்டல நிலையில் ஆடும் ஒரு பெண்ணைக் காட்டுகிறது. உடன் தோலிசைக் கருவியொன்றை இசைத்தபடி ஆண்கலைஞர். இத்தூண், உத்திரம் இரண்டும் இங்கிருந்து அழிந்த சமணப் பள்ளியைச் சேர்ந்தவை எனக் கொள்ளமுடியும். நெடுங்களம் கோயிலில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளுள் இரண்டு சமணத் தொடர்புடையவை. இவை சமணக் குடியிருப்பிருந்த ஊர்ப்பகுதியை ஸ்ர்புறக்குடிப்பள்ளி என்று அறிவிக்கின்றன. இக்கல்வெட்டுகளுள் ஒன்று, இவ்வூர்ச் சித்திரைத் திருவிழாவிற்கும் பள்ளியிலிருந்த தேவர் இயக்கி பூசைக்குமாக இவ்வூரைச் சேர்ந்த கனகசேனன் நூறு ஈழக்காசுகளைக் கொடையளித்ததாகக் கூறுகிறது. இக்காசுகளைப் பெற்றுக்கொண்ட இதே ஊரைச் சேர்ந்த வீரன், இக்காசின் வழி மலரும் வட்டியான இருநூறு கலம் நெல் கொண்டு சித்திரைத் திருவிழாவையும் பூசைகளையும் சந்திரனும் சூரியனும் உள்ளவரை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். நெடுங்களம் கோயிலின் சுற்றுமாளிகைக் கூரையிலிருந்து மீட்கப்பட்ட, பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள இக்கல்வெட்டுப் பலகை சிதைந்திருப்பதால் முழுத் தகவலையும் அறியக்கூடவில்லை. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கொள்ளத்தக்க மற்றொரு கல்வெட்டு, 'ஸ்ர்புறக்குடிப்பள்ளி சேந்தன் குழுவினார் காவல். இது காத்தார் அடி மேலன கையும் தலையும்' என்கிறது. இச்சேந்தன் குழுவினர் வணிகக் குழுவொன்றின் காவற்படையாகலாம். இக்கல்வெட்டுள்ள பலகையின் மேற்பகுதியில் இரண்டு வீச்சரிவாள்கள், துரட்டி போன்ற படைக்கலன்களும் குத்துவிளக்குகளும் செதுக்கப்பட்டிருப்பது இக்கருத்திற்கு வலிமை சேர்க்கிறது. இக்கல்வெட்டின் இரண்டாம் வரி சிறப்புக்குரியது. 'இது காத்தவர் திருவடிமேல் எங்கள் கையும் தலையும்' எனுமாறு அமைந்திருக்கும் இச்சொற்றொடர் அமைப்புப் பின்னாளைய கல்வெட்டுகளில் 'அடியென் தலைமேலன' (8/12), 'ஸ்ர்பாதம் என் தலைமேலன' (16/12) என மாறிவருவது நோக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இதுநாள்வரையிலும் வெளிப்படுத்தப் பட்டிருக்கும் தமிழ்க்கல்வெட்டுகளில், 'திருவடி மேல் எங்கள் கையும் தலையும்' எனும் தொடரமைப்பைக் காணமுடியவில்லை என்பதும் இங்கு நினைவிலிருத்த வேண்டிய தரவாகும். ஸ்ர்புறக்குடிப்பள்ளியின் கண்டுபிடிப்பு, அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமியின் சிராப்பள்ளி மாவட்ட சமணத் தலங்கள் வரிசையைப் பிழைகள் நீக்கிச் சரிசெய்யப் பயன்பட்டிருப்பதுடன், ஜனநாதப் பெரும்பள்ளியைக் கண்டறியவும் உதவியுள்ளது. இதனால் ஸ்ர்புறக்குடிப்பள்ளியையும் சேர்த்துச் சிராப்பள்ளி மாவட்டத்தில் சோழர் காலத்தில் நான்கு அமணப் பெரும்பள்ளிகள் செழித்திருந்தமை உணரப்படும். சிராப்பள்ளியின் முன்னொட்டாக நிற்கும் 'சிரா' எனும் பெயர், இவ்வூர்க் குன்றின் குகைத்தளத்திலுள்ள கற்படுக்கைகளின் தலையணைப்பகுதி ஒன்றில் வெட்டப்பட்டிருப்பதாக இந்தியக் கல்வெட்டறிக்கையில் (பக்.78/1937-38) கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பெயர், அதே அறிக்கையில் இக்குகைத்தளத்தில் கண்டறியப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில் (பக். 21-22, 1937-38) இடம்பெறவில்லை. கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் குழுவினருள் ஒருவராகச் சென்று இக்குகைத்தளத்தில் ஆய்வு மேற்கொண்ட மைய ஆய்வாளர் மு.நளினி இப்படியொரு பொறிப்பு அக்குகைத்தளத்தில் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். முந்து கண்டுபிடிப்புகள், அறிவிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குறியாவது உணர்க. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |