![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 5
![]() இதழ் 5 [ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
மகேந்திரர் நாடகங்கள்
<துறவி> : (வாடை பிடித்துக்கொண்டு) ஆ! அந்த உபாசகன்; வணிகன் தனதாசனின் திவ்விய தானம் எல்லா வீட்டுத் தானங்களையும் மிஞ்சிவிட்டது. அவன் தந்த தானம், என்ன அருமையான நிறமும் குணமும் சுவையும் கொண்டு மீனும் இறைச்சியுமாக அருமையான உணவு எனக்கு. ராஜவிஹாரத்திற்குத் திரும்பிச் செல்லுவேன்.
(தனக்குள்ளே பேசிக்கொண்டு திரும்பிச் செல்லுகிறான்) ஆகா! மாளிகை வாசம், மெத்தையுறக்கம், காலை உணவுக்குப்பின் மாலை சுவைமிக்க பானங்கள். பஞ்ச மணத் தாம்பூலம், அழகு ஆடைகள் முதலிய வசதிகள் - இரக்கம் நிறைந்த புனிதமான புத்தர் பெருமான் சங்கத்துத் துறவிகளுக்கு இவற்றையெல்லாம் அனுமதித்து விட்டு மதுவையும் மாதையும் மட்டும் ஏன் விலக்கி விட்டார்? இந்த உதவாத, கையாலாகாத பெரியவர்கள் இளைஞர்கள் மேல் பொறாமை கொண்டு மதுவையும் மாதுவையும் அனுமதிக்கிற விதிகளை பிடக புத்தகத்திலிருந்து மறைத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். சிதைக்கப்படாத மூலபாடம் எங்கே கிடைக்கும்? புத்தருடைய போதனைகளை முழுமையாக வெளியிட்டு பௌத்தர்களுக்கு உதவலாமே. (திரும்பிப் போகிறான்) <தேவசோமா> : ஆண்டவனே பாரும். சிவப்பு ஆடை அணிந்த அந்த நபரை. கூனிக் குறுகி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு இந்த ராஜவீதியில் அப்பாவி மக்கள் கூட்டத்தினூடே சந்தேகக்குறியோடு வருகிறான். <கபாலி> : நீ சொல்வது சரிதான் அன்பே. மேலும் அவன் கையிலும் எதையோ வைத்து மறைத்துக் கொண்டு போகிறான். <தேவசோமா> : ஆண்டவனே, அவனை விடாமல் பிடித்து விசாரிக்கலாம். <கபாலி> : பெண்ணே, அப்படியே செய்வோம்... ஓய் சாமியாரே நில்லும். <துறவி> : நம்மை அப்படி அழைப்பது யார்? (திரும்பிப் பார்க்கிறார்) ஓ... அந்த ஏகாம்பரர் கோயில் துஷ்ட கபாலி. அவனுடைய குடிச்சேட்டைகளுக்கு நாம் ஆளாகக் கூடாது. (விரைந்து செல்கிறார்) <கபாலி> : அன்பே வா, எனது கபாலவோடு கிடைத்து விட்டது. என்னைக் கண்டதும் பயந்து ஓடுகிறான். அவனுடைய திருட்டுக்கு இதுவே சாட்சி. (அவர் முன்னால் வேகமாகச் சென்று இடைமறித்து) ஆ! வீணனே, இப்போது எங்கே போவாய்? <துறவி> : சகோதரனே, கபாலி, வேண்டாம், இப்படி நடந்து கொள்ள வேண்டாம். என்ன இது? (தனக்குள்) ஆகா... சகோதரி என்ன அழகு! <கபாலி> : ஓ... சாமியாரே உடனே காட்டிவிடு. உன் ஆடைக்குள்ளே மறைத்து உன் கையில் நீ வைத்திருப்பது என்ன? நான் பார்க்க வேண்டும். <துறவி> : அங்கே என்ன இருக்கிறது? வெறும் பிச்சைப் பாத்திரந்தான் அது. <கபாலி> : அதுதான், அதை நான் பார்க்கவேண்டும் என்கிறேன். <துறவி> : சகோதரனே, இப்படி நடந்து கொள்ள வேண்டாம். இதை மறைத்துத்தான் கொண்டுபோகவேண்டும். <கபாலி> : ஆமாம். நிச்சயமாக பொருட்களை மறைப்பதற்காகத்தானே இப்படி ஆடைகளை அணியும்படி புத்தர் விதித்திருக்கிறார். <துறவி> : அது உண்மைதான். <கபாலி> : அதுதான் மறைக்கப்பட்ட உண்மை. மெய்யான உண்மையைக் கேட்க விரும்புகிறேன். <துறவி> : கிண்டல்கள் போதும். யாசகத்திற்கு நேரமாகிறது. நான் போகவேண்டும். (அவர் புறப்படுகிறார்) <கபாலி> : ஏய் துஷ்டனே, எங்கே போகிறாய்? எனது கபாலவோட்டைக் கொடு. (துறவியின் ஆடை முனைப்பை இழுக்கிறான்) <துறவி> : புத்தன் திருவடி நாளும் போற்றி. <கபாலி> : 'களவு நுணுக்கத்தைக் கற்றுக்கொடுத்த கரபதனைப் போற்றி' என்று நீ சொல்லவேண்டும். ஏனென்றால்: மாபாரதத்தின் கருவும் வேதாந்தத்தின் கருத்தும் அந்தணர் அயர்ந்திட்ட காலை கொண்டொரு அறநெறி செய்தார். <துறவி> : பாவத்தை மன்னியும், பாவத்தை மன்னியும். <கபாலி> : ஒழுக்கந் தவறாத ஒரு பெரிய தபசி ஏன் மன்னிக்கப்படமாட்டார்? <தேவசோமா> : ஆண்டவனே, நீர் சோர்ந்து காணப்படுகிறீர். கபாலவோட்டைப்பெற எளிதான வழி ஒன்றுமில்லை. அதனால் பசுவின் கொம்பிலேயே இந்த மதுவைக் குடித்துக் கொண்டு புதுத் தெம்போடு தர்க்கத்தைத் தொடருங்கள். <கபாலி> : அப்படியே. (தேவசோமா கபாலிக்கு மதுகொடுக்க) <கபாலி> : (குடித்துக்கொண்டு) அன்பே, நீயுங்கூட களைப்பாற்றிக் கொள்ளவேண்டும். <தேவசோமா> : ஆகட்டும் ஆண்டவனே. (அவள் குடிக்கிறாள்) <கபாலி> : இந்தப்பயல் நம்மைத் தாக்கி விட்டான். என்றாலும் நமது கொள்கை பகிர்ந்து உண்பதை வலியுறுத்துகிறது. எஞ்சியதை இந்த முனிபுங்கவருக்குக் கொடு. <தேவசோமா> : ஆண்டவன் ஆணைப்படி. ஐயனே இதை ஏற்றுக்கொள்ளுங்கள். <துறவி> : (தனக்குள்) என்ன எளிதாகக் கிடைத்து விட்டது அதிர்ஷ்டம். ஆனால் சிக்கல் இதுதான். மக்கள் கவனிப்பார்கள். (சப்தமாக) வேண்டாம். யாம் இந்தக் காரியம் செய்யக்கூடாது. (தனது உதட்டோரங்களை நாவால் வருடிக் கொள்கிறார்) <தேவசோமா> : நாசமாய்ப்போக. இந்த யோகம் வேறு உமக்கு எங்கே கிடைக்கும்? <கபாலி> : அன்பே, இவனுடைய உளறல் பேச்சே இவனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. <துறவி> : உனக்குக் கருணையே கிடையாதா? <கபாலி> : எனக்குக் கருணையிருந்தால் ஆசையிலிருந்து எப்படி விடுபட முடியும்? <துறவி> : ஆசையிலிருந்து நீ விடுபட்டால் கோபத்திலிருந்தும் விடுபட்டிருப்பாய். <கபாலி> : எனக்குரியதை எனக்குத் தந்து விட்டாலே நான் கோபத்திலிருந்து விடுபட்டு விடுவேன். <துறவி> : உன்னுடைய எதை? <கபாலி> : கபாலவோட்டை. <துறவி> : என்ன கபாலவோடு? <கபாலி> : அவன் சொல்லுகிறான் 'என்ன கபாலவோடு'? ஒருவேளை அதுதான் சரியோ? மாபெரும் நிலங்கடல் மலையெனும் மறைவில் வனவே மாய மாகையில் மறைப்பவர் மகன்நீ சிறுசிரவோட்டை மறைத்தல் என்பது ஆகாவொன்றே? <தேவசோமா> : அயோக்கியனே, நீ செத்தாய். (அவள் அவனது தலைமயிரை எட்டிப்பிடிக்கப் போகிறாள். கையில் ஒன்றும் அகப்படாததால் கீழே விழுகிறாள்) <துறவி> : (தனக்குள்) தலையை மழிக்கும்படி விதித்த புத்தரது யுக்தி வாழ்க. (சப்தமாக) எழும்பு, எழும்பு, சகோதரியே எழும்பு. (தேவசோமா எழும்ப உதவுகிறார்) <கபாலி> : பாருங்கள் மகேசுவரர்களே, தன்னைத் துறவியென்று சொல்லிக்கொண்டும் என்னுடைய அன்புக்குரியவளின் கையைப் பிடிக்கும் இந்த நாகசேனனைப் பாருங்கள்! <துறவி> : ஆ! சகோதரனே, வேண்டாம், வேண்டாம். துயரத்தில் விழுந்து விடுகிற ஒருவருக்கு இரக்கம் காட்ட வேண்டுவது எங்கள் கடமை. <கபாலி> : உண்மையிலேயே அது அந்த புத்தபிரான் விதித்த கட்டளையோ? நல்லது. முதலில் நான் விழவில்லையா? கிடக்கட்டும், இப்பொழுது உனது தலையிலுள்ள கபால ஓடே எனக்குப் பிச்சைக் கபாலம் ஆகப்போகிறது. (எல்லோரும் மோதுகிறார்கள்) <துறவி> : இம்சை, இம்சை! <கபாலி> : மகேசுவரர்களே, பாருங்கள், இங்கே தன்னை யோகி என்று அழைத்துக்கொள்ளும் ஓர் அயோக்கியன் எனது பிச்சைப் பாத்திரத்தைத் திருடிக்கொண்டு கூச்சலிட்டு ஒப்பாரி வைக்கிறான். இருக்கட்டும், நானும் கூச்சலிடுகிறேன். இது பார்ப்பன வதை, இது பார்ப்பன வதை. (அப்பொழுது பாசுபதன் ஒருவன் வருகிறான்) (தொடரும்) 'Mattavilasa Angatham' ('Mattavilasa Prahasanam') A Translation into Tamil by E. John Asirvatham Of King Mahendravarman's Sanskrit Farce Published by The Christian Literature Society (copyright 1981 by Michael Lockwood), which, in turn, was Based on the Edition and Translation in English Of Mahendravarman's original Sanskrit Text By Michael Lockwood and A. Vishnu Bhat Published by The CLS (copyright 1981 by Michael Lockwood) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |